என் மலர்
உள்ளூர் செய்திகள்

திருவண்ணாமலை மாவட்டத்தில் மருத்துவ படிப்பில் சேர்ந்த அரசு பள்ளி மாணவர்கள் 25 பேரை, கலெக்டர் பாராட்டினார்.
திருவண்ணாமலையில் மருத்துவ படிப்பிற்கு தேர்வான அரசு பள்ளி மாணவர்கள் 25 பேருக்கு கலெக்டர் பாராட்டு
திருவண்ணாமலை மாவட்டத்தில் மருத்துவ கல்வியில் சேர்ந்த அரசு பள்ளி மாணவர்கள் 25 பேரை கலெக்டர் பாராட்டினார்.
திருவண்ணாமலை,
தமிழகம் முழுவதும் மருத்துவ கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ். மற்றும் பி.டி.எஸ்.மருத்துவ படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நடந்தது.
அதில் அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத சிறப்பு இட ஒதுக்கீட்டின் கீழ் மாநிலம் முழுவதும் இந்த ஆண்டு 541 அரசு பள்ளி மாணவர்கள் எம்.பி.பி.எஸ். மற்றும் பி.டி.எஸ்.படிப்பில் சேர்ந்துள்ளனர்.
இதில் திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த அரசு பள்ளிகளில் படித்த 5 மாணவர்கள், 20 மாணவிகள் உள்பட மொத்தம் 25 பேர் மருத்துவக் கல்வியில் சேர்ந்துள்ளனர்.
அதில் 18 பேர் எம்.பி.பி.எஸ். மற்றும் 7 பேர் பி.டி.எஸ். படிப்பை தேர்வு செய்துள்ளனர்.
அரசு பள்ளி மாணவர்களுக்கான நீட் தேர்வு மதிப்பெண்ணில் திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த பிரகாஷ் ராஜ் மாநில அளவில் இரண்டாம் இடத்தைப் பிடித்தார்.
மேலும் அதிக எண்ணிக்கையில் அரசு பள்ளி மாணவர்கள் மருத்துவ கல்வியில் சேர்ந்த பட்டியலில் திருவண்ணாமலை மாவட்டம் மாநில தரவரிசையில் 5-வது இடத்தைப் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது மருத்துவ படிப்பில் சேர்ந்துள்ள மாணவர்களின் பெற்றோர் விவசாயம் மற்றும் கூலி தொழிலாளர்கள் என்பதும், கடுமையான வறுமை நிலையிலிருந்து பல மாணவர்கள் மருத்துவ கல்வியில் சேர்ந்து இருப்பதும் சிறப்பானது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் இருந்து மருத்துவக் கல்வியில் சேர்ந்துள்ள 25 மாணவ-மாணவிகளுக்கும் நேற்று கலெக்டர் அலுவலக அரங்கத்தில் பாராட்டு விழா நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அருள்செல்வம் தலைமை தாங்கினார். உதவி கலெக்டர் (பயிற்சி) கட்டா ரவிதேஜா முன்னிலை வகித்தார்.
நிகழ்ச்சியில் மருத்துவக் கல்வியில் சேர்ந்து உள்ள மாணவ&மாணவிகளுக்கு மருத்துவ சீருடை, ஸ்டெத்தாஸ் கோப் மற்றும் பாராட்டு சான்று, பரிசு ஆகியவற்றை கலெக்டர் முகேஷ் வழங்கினார். அப்போது அவர் பேசியதாவது:-
மருத்துவ கல்லூரியில் சேர வேண்டும் என்பது பெருமையான மாணவர்களின் விருப்பமாகும். அந்த வாய்ப்பு உங்களுக்கு கிடைத்திருக்கிறது.
அதற்கு காரணமான ஆசிரியர்கள் மற்றும் பெற்றோருக்கு எப்போது நன்றியோடு இருக்க வேண்டும். எதிர்காலத்தில் சிறந்த மருத்துவராகி மக்களுக்கு சேவையாற்ற வேண்டும் என்றார்.
இதைத்தொடர்ந்து இணைய வழியில் நடந்த மகிழ் கணிதம் சிறப்பு பயிற்சியில் பங்கேற்ற அரசு பள்ளி ஆசிரியர்கள் 9 பேருக்கு பாராட்டு சான்றிதழ்களை கலெக்டர் முருகேஷ் வழங்கினார்.
Next Story






