என் மலர்
திருவண்ணாமலை
- பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடந்தது
- முன்னாள் ராணுவவீரர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை திருவூடல் தெருவில் ஒரு தனியார் திருமண மண்டபத்தில் திருவண்ணாமலை மாவட்ட ஒருங்கிணைந்த முன்னாள் ராணுவவீரர்கள் நலச்சங்கம் சார்பில் கார்கில் போர் 23-ம் ஆண்டு வெற்றி விழா நேற்று கொண்டாடப்பட்டது.
விழாவிற்கு மாவட்ட தலைவர் பி.கருணாநிதி தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளர்களாக மாவட்ட நீதிபதி (ஓய்வு) கிருபாநிதி, ஓய்வு பெற்ற ராணுவ வீரர்கள் பிரிக்.ரவி முனுசாமி, கர்னல் சி.டி.அரசு, ருசிகேசவன், சுரேஷ் நாராயணன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.
விழாவையட்டி கார்கில் போரின் வெற்றிவிழாவை கொண்டாடும் வகையில் பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது.
திருவண்ணாமலை மாவட்ட முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குநர் அலுவலக கண்காணிப்பாளர் கு.கண்ணகி, அப்துல்கலாம் நல அறக்கட்டளை ஆர்.நடராஜன், சங்க மாவட்ட துணைத் தலைவர் எல்.அந்துராஜ், சிஎஸ்டி மேலாளர் சுப்பிரமணி உள்பட திருவண்ணாமலை, கண்ணமங்கலம், போளூர், செய்யாறு, கீழ்பென்னாத்தூர், செங்கம், வேட்டவலம், கலசபாக்கம், ஆரணி, வந்தவாசி, கேளூர் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த சங்க நிர்வாகிகள், முன்னாள், இன்னாள் ராணுவவீரர்கள், அவர்களது குடும்பத்தினர் கலந்து கொண்டனர். விழாவில் கார்கில் போரில் ஊனமுற்ற, வீரமரணமடைந்த முன்னாள் ராணுவவீரர்கள் மற்றும் அவரது குடும்பத்தை சார்ந்தவர்களுக்கும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
முடிவில் சங்கத்தின் மாவட்ட செயலாளர் ஏ.சகாதேவன் நன்றி கூறினார்.
- 100-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் பங்கேற்பு
- நிலத்தடி நீரை பாதுகாக்க
வந்தவாசி:
வந்தவாசி அருகே இயற்கை வளம் காக்க களம் இறங்கிய மாலையிட்டான்குப்பம் கிராம இளைஞர்கள், அந்த கிராம ஏரியில் 5 ஆயிரம் பனை விதைகளை நடும் பணியை தொடங்கினர்.
கற்பகத்தரு என அழைக்கப்படும் பனை மரமானது நுங்கு, பனைவெல்லம், பனங்கற்கண்டு, பனங்கிழங்கு, பனம்பழம் என உடலுக்கு குளிர்ச்சி தரும் பொருட்களை அள்ளித் தருவதாகும். மேலும் நிலத்தடி நீரை பாதுகாப்பதில் பனைமரங்களுக்கு முக்கிய இடமுண்டு.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன் ரியல் எஸ்டேட் தொழில் சூடுபிடிக்க தொடங்கியபோது பல ஏக்கர் விளைநிலங்கள் வீட்டுமனைகளாக மாறின. இதற்காக அந்த விளைநிலங்களிலிருந்த பனை மரங்கள் வேரோடு வெட்டப்பட்டன.
தமிழர் வாழ்வுடன் பின்னிப் பிணைந்த இந்த பனைமரங்கள் ஆயிரக்கணக்கில் வெட்டி சாய்க்கப்பட்டதின் தாக்கத்தை கடும் கோடைக் காலங்களின்போது மக்கள் உணரும் நிலை ஏற்பட்டது. ஆனாலும் பனைமரங்களை வெட்டுவதை தடுக்கவோ, புதிய மரங்களை வளர்க்கவோ முயற்சி பெருமளவில் எடுக்கப்படவில்லை என்றே கூறலாம்.
இந்த நிலையில் பனைமரத்தின் அவசியத்தை உணர்ந்த மாலையிட்டான்குப்பம் கிராம இளைஞர்கள் அந்த கிராம ஏரியில் 5 ஆயிரம் பனை விதைகளை நடுவது என முடிவெடுத்து அதற்கான ஏற்பாடுகளை செய்தனர்.
இதையடுத்து 100-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் ஏரியில் பனை விதைகளை நடும் பணியை தொடங்கினர். அப்போது விதை நடும் பணியை பார்க்க வந்த கிராம மக்களுக்கு பணங்கற்கண்டு, பனைவெல்லம் ஆகியவற்றை கொடுத்து அவர்கள் வரவேற்றனர். இயற்கை வளம் காக்கும் இளைஞர்களின் முயற்சியை கிராம மக்கள் வெகுவாக பாராட்டினர்.
- மழை நீரில் பைக்குகளை சுத்தப்படுத்தும் வாகன ஓட்டிகள்
- கமண்டல நதிவரை கால்வாய் அமைக்க வலியுறுத்தல்
கண்ணமங்கலம்:
கண்ணமங்கலம் அடுத்த படவேடு பகுதியில் வீரகோயில் சாலையில் மழை பெய்யும் போது அதிக அளவில் மழைநீர் வெளியேற வழியில்லை. இதனால் சாலையிலேயே மழை நீர் தேங்கி நிற்கிறது.
சாலையில் தேங்கிய நீரில் பைக்குக்கு வாட்டர் வாஷ்
தேங்கி நிற்கும் மழை நீரில் வாகன ஓட்டிகள் சிலர் தங்கள் பைக்குகளை ஓரமாக நிறுத்தி வாட்டர் வாஷ் செய்கின்றனர். இச்சாலையில் மழைநீர் வெளியேற போதிய வடிகால் இல்லை என்பதால் இது போன்ற நிலை உள்ளது என அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.எனவே படவேடு ஊராட்சி நிர்வாகம் இச்சாலையில் மழைநீர் மற்றும் கழிவு நீர் வெளியேற போதிய கால்வாய் அமைத்து வடிகால் வசதி செய்து தர வேண்டும் என அப்பகுதி மக்கள் உள்பட பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இச்சாலையின் சற்று தொலைவிலேயே படவேடு கமண்டல நதி ஓடுகிறது. இந்த மழைநீரை வெளியேற அருகே செல்லும் கமண்டல நதிவரை கால்வாய் அமைத்தால் தண்ணீர் தேங்காது என அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.
- நிழற்கூடம் அமைக்க வலியுறுத்தல்
- உயர் கோபுர மின் விளக்கு பணிகளை முடிக்க கோரிக்கை
கண்ணமங்கலம்:
கண்ணமங்கலம் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ளது. இங்கிருந்து சுமார் 2 கிமீ தூரம் கண்ணமங்கலம் கூட்ரோடு உள்ளது.
இந்த கூட்ரோடில் ஆரணி, வேலூர், திருவண்ணாமலை மார்க்கமாக செல்லும் அனைத்து பஸ்களும் நின்று செல்கின்றன. இதனால் இந்த கூட்ரோடில் ஏராளமான பயணிகள் தினமும் பஸ் பிடித்து வெளியூர்களுக்கு சென்று வருகின்றனர்.
ஆனால் பஸ்சுக்காக காத்திருக்கும் பயணிகளுக்கு போதிய நிழற்கூடம் இல்லை என்பதால் பயணிகள் வெயில் மழையில் காத்திருக்கும் அவலநிலை உள்ளது.
எனவே இப்பகுதியில் பயணிகள் வசதிக்காக உடனடியாக பெரிய அளவில் நிழற்கூடம் அமைத்து தரவேண்டும் என அனைத்து தரப்பு மக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அத்துடன் இரவு நேரத்திலும் பயணிகள் வசதிக்காக உயர் கோபுர மின் விளக்குகள் அமைக்கும் பணிகள் பாதியில் நிறுத்தப்பட்டுள்ளது.எனவே உடனடியாக உயர் கோபுர மின் விளக்குகள் அமைக்கும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- செய்யாறில் வரலாற்று ஆய்வு விழா நடந்தது
- துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி தகவல்
செய்யாறு:
திருவண்ணாமலை மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவம் சார்பில் தொல்லியல் புகைப்பட கண்காட்சி, புத்தகம் வெளியீடு, விருது வழங்குதல் மற்றும் கருத்தரங்கு இருநாள் நிகழ்ச்சி தொடக்க விழா செய்யாறில் நடைபெற்றது.
செய்யாறு பகுதியில் வரலாற்றில் அத்தி, பிரம்மதேசம், கூழமந்தல், குரங்கணில் முட்டம், சீயமங்கலம், வந்தவாசி பகுதியில் வெண்குன்றம், எறும்பூர் ஆகிய 7 நூல்களை தமிழக சட்டமன்ற துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி வெளியிட்டு தொல்லியல் ஆய்வாளர் வீரராகவன், நூல் ஆய்வாளர் விளாரிப்பட்டு ச.கிருஷ்ணமூர்த்தி ஆகியோருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கினார்.
நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:-
வரலாற்று ஆய்வுகள் நமது நாட்டின் கலை, கலாச்சாரம், வாழ்க்கை முறை, வாணிபம் உள்ளிட்ட அரிய தகவல்களை மக்களுக்கு எடுத்துக் கூறும் பெரிய தொண்டாகும். வரலாற்று ஆய்வாளர்களின் உழைப்பினை நாம் தலைவணங்கி பாராட்டிட வேண்டும்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் இருக்கும் ஜவ்வாது மலையில் குள்ளர் குகை 2000 ஆண்டுகளுக்கு பழமையானது வரலாற்று ஆய்வுகளினால்தான் நாம் அறிய முடிகிறது. செய்யாறு அருகே வெம்பாக்கம் தாலுக்காவில் பிரம்மதேசத்தில் ராஜேந்திர சோழன் இறுதி காலத்தில் வாழ்ந்ததை வரலாறுகளின் மூலம் நாம் அறிகிறோம்.
திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவில் செய்யாறு திருவத்தூர் வேதபுரீஸ்வரர் கோவில்களில் உள்ள கல்வெட்டுகளில் பல அரிய வரலாற்று தகவல்களை அறிய முடிகிறது.
ஆக்ராவில் இருக்கும் தாஜ்மஹாலின் பெருமைகளை நாம் வியந்து பார்க்கிறோம். ஆனால் அருகில் இருக்கும் செஞ்சி கோட்டையின் வரலாற்றினை பார்ப்பதில்லை. செஞ்சி கோட்டை பகுதியில் ரோப் கார் வசதியினை தமிழக முதல்வர் உடனடியாக அமைக்க உரிய கவனம் செலுத்தி ரோப் வசதி ஏற்படுத்தி தருவார் என குறிப்பிட்டார்.
விழாவில் வாழ்த்துரை வழங்கிய ஒ.ஜோதி எம்.எல்.ஏ. பேசுகையில்:-
செஸ் ஒலிம்பியாட் விழாவில் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் தமிழகத்தில் தான் செஸ் போட்டி தோன்றியது என பிரதமரே சுட்டிக்காட்டி பெருமைப்படுத்தினார் என்றால் வரலாற்று ஆய்வுகளினால்தான் நாம் இவைகளை அறிய முடிகிறது என்றார்.
- ஒருவர் கைது
- போலீசார் விசாரணை
போளூர்:
சென்னை ராயபுரத்தில் இயங்கும் டிரான்ஸ்போர்ட் மூலம் ஆந்திர மாநிலத்தில் ஸ்ரீ சிட்டி என்ற ஊரில் இருந்து 607 கார் டயர்களை ஏற்றிக்கொண்டு கோவைக்கு கண்டெய்னர் லாரி ஒன்று சென்றது. லாரியை திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அருகே உள்ள குப்புசாமி என்ற டிரைவர் ஓட்டி வந்தார்.
கடந்த 25-ந் தேதி இரவு போளூர் பைபாஸ் சாலை அருகே உள்ள பாக்மார்பேட்டை கூட்ரோட்டில் ஒரு ஓட்டலில் சாப்பிட்டு விட்டு லாரியில் குப்புசாமி படுத்து தூங்கினார்.
மறுநாள் காலை எழுந்து பார்த்த போது லாரி பின்புறம் கதவின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் 96 டயர்களை திருடி சென்றது தெரியவந்தது. இதன் மதிப்பு சுமார் ரூ.5 லட்சமாகும்.
இதுகுறித்து குப்புசாமி டிரான்ஸ்போர்ட் நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்தார். உடனே அவர் போளூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர்.
இன்ஸ்பெக்டர் ஜெயஸ் பிரகாஷ், ஐயப்பன், சப்- இன்ஸ்பெக்டர் சிவகுமார், சிறப்பு உதவி ஆய்வாளர் சங்கர், மற்றும் காவலர் சரவணன் ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இந்த நிலையில் நேற்று காலை இன்ஸ்பெக்டர் ஜெயபிரகாஷ் தலைமையிலான போலீசார் போளூர் அருகே பஸ் கூட் ரோட்டில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு வேகமாக வந்த லாரியை மடக்கி சோதனை செய்த போது அதில் 96 டயர்கள் இருந்தன.
விசாரணை செய்ததில் லாரியை ஓட்டி வந்த சென்னை திருவொற்றியூரை சேர்ந்த பழனிச்சாமி (வயது 46) என்பது தெரியவந்தது. குப்புசாமி ஓட்டி வந்த லாரியில் இருந்த டயர்களை திருடியதை அவர் ஒப்புக்கொண்டார்.
அவரை போலீசார் கைது செய்து 96 டயர்களையும் பறிமுதல் செய்தனர் அவர் ஓட்டி வந்த லாரியையும் பறிமுதல் செய்தனர்.
பழனி சாமிக்கு உதவியாக இருந்ததாக சென்னையைச் சேர்ந்த டேவிட், முத்து ஆகிய 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.கைதான பழனிச்சாமி மீது ஏற்கனவே 2 வழக்கு நிலுவையில் உள்ளது.
- 5 பெண்களின் 25 பவுன் தாலி பறிபோனது
- 2 பெண்களிடம் போலீசார் விசாரணை
ஆரணி:
நதிருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே இரும்பேடு ஊராட்சிக்குபட்ட ஏ.சி.எஸ்.நகரில் ஏழுமலையானுக்கு புதியதாக கோவில் கட்டப்பட்டு கடந்த மாதம் கும்பாபிஷேகம் நடந்தது.
இதையடுத்து கோவில் எதிரே உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் திருப்பதி தேவஸ்தானம் சார்பில் நேற்று இரவு திருக்கல்யாணம் நடந்தது. நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். திருக்கல்யாணத்தில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு தேவஸ்தானம் சார்பில் இலவசமாக லட்டு பிரசாதம் வழங்கப்பட்டது.லட்டு பெறுவதற்காக ஏராளமான பக்தர்கள் முண்டியடித்து சென்றனர்.
இதனை சாதகமாக பயன்படுத்திக் கொண்ட மர்ம நபர்கள் 5 பெண்கள் கழுத்தில் அணிந்திருந்த தாலி செயினை பறித்துச் சென்றனர். இதனால் அதிர்ச்சி அடைந்த பெண்கள் சாமி திருக்கல்யாணம் பார்க்க வந்த இடத்தில் தங்களது மாங்கல்யம் பறிபோனதால் கதறி அழுதனர்.மஞ்சள் கயிறு எடுத்து வந்து கழுத்தில் கட்டிக் கொண்டனர்.
இது குறித்து போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து சந்தேகத்தின் பேரில் 2 பெண்களை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையின் போது 2 பெண்களும் பெயரையும் ஊரையும் மாற்றி மாற்றி கூறுவதால் அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கடந்த மாதம் மஹா கும்பாபிஷேம் நடந்தது
- ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு
ஆரணி:
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே இரும்பேடு ஊராட்சிக்குபட்ட ஏ.சி.எஸ்.நகரில் புதியதாக ஸ்ரீ வெங்கடஜலபதி கோவில் கட்டப்பட்டது. கடந்த மாதம் மஹா கும்பாபிஷேம் வெகுவிமர்கையாக நடைபெற்றது.
நேற்று மாலை ஆரணி ஸ்ரீ வெங்கடஜலபதி கோவில் எதிரில் உள்ள ஏ.சி.எஸ் பொறியியல் கல்லூரி வளாகத்தில் திருமலை திருப்பதி தேவஸ்தான ஸ்ரீனிவாச கல்யாண வைபவம் ஸ்ரீ வெங்கடஜலபதி திருக்கல்யாணம் வெகுவிமர்சையாக நடைபெற்றது.
மேலும் திருப்பதி திருமலையிலிருந்து வாகனங்களில் அழைத்து வரப்பட்ட உற்சவ மூர்த்திக்கும் ஸ்ரீதேவி பூதேவி சுவாமிக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது. இதனை பக்த கோடிகள் நேரில் கண்டுகளித்து வழிபட்டனர். பக்தர்கள் கோவிந்தா கோவிந்தா என விண்ணொலி கோஷம் எழுப்பினார்கள்.
இதில் முன்னாள் அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் நகர மன்றத் தலைவர் ஏ.சி மணி நகர்மன்றத் துணைத் தலைவர் பாரி பாபு, அதிமுக சார்பில் ஒன்றிய செயலாளர்கள் வக்கீல் சங்கர் திருமால், நகரமன்ற உறுப்பினர்கள் திமுக சார்பில் ஒன்றிய செயலாளர்கள் மோகன் அன்பழகன் துரை.மாமது மாவட்ட இலக்கிய அணி அமைப்பாளர் விண்ணமங்கலம் ரவி, வக்கீல் ரேணுகா கங்காதரன் உள்ளிட்ட 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்றனர்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஏ.சி.எஸ் கல்வி குழுமம் மற்றும் திருமலை திருப்பதி தேவஸ்தானம் ஏற்பாடு செய்து இருந்தது.
- போலீசார் விசாரணை
- கார் டிரைவரை தேடிவருகின்றனர்
ஆரணி:
ஆரணி டவுன் கொசப்பாளையம் சின்ன சாய்க்க தெருவை சேர்ந்தவர் லோகநாதன் (வயது32). இவர் தனியார் வங்கியில் வங்கி கடன் வசூல் செய்யும் பணி செய்து வந்துள்ளார்.
மேலும் பணி சம்பந்தமாக கண்ணமங்கலம் பகுதியில் கடன் வசூல் செய்ய தனது பைக்கில் ஆரணிலிருந்து கண்ணமங்கலம் நோக்கி சென்று கொண்டிருந்தார்.
ஆரணி வேலூர் சாலையில் குன்னத்தூர் கூட்டு ரோடு அருகே சென்று கொண்டிருந்த போது எதிரே வந்த சைக்கிள் மீது மோதாமல் இருக்க தனது பைக்கை வலது பக்கம் திருப்பிய போது பின்னால் மின்னல் வேகத்தில் வந்த கார் பைக் மீது மோதி விபத்துகுள்ளானது.
இதில் லோகநாதன் சம்பவ இடத்திலேயே பலியானார். தகவலறிந்து வந்த ஆரணி தாலுகா போலீசார் லோகநாதன் பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இச்சம்பவம் குறித்து லோகநாதனின் சகோதரி புவனேஸ்வரி கொடுத்த புகாரின் பேரில் தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு தப்பியோடிய கார் டிரைவரை தேடிவருகின்றனர்.
- 2 முறை சோதனை செய்தனர்
- 21 வயது முழுமையாகாத டிரைவர்கள் நீக்கம்
ஆரணி:
ஆரணி வட்டார போக்குவரத்து அலுவலகம் உட்கோட்டத்தில் ஆரணி சேத்துப்பட்டு, போளுர் உள்ளிட்ட பகுதிகளில் இயங்கி வரும் சுமார் 42 தனியார் பள்ளிகளில் உள்ள 286 பஸ்களை ஆரணி வட்டார போக்குவரத்து அலுவலகம் பின்புறத்தில் உள்ள மைதானத்தில் ஆரணி உதவி-கலெக்டர் தனலட்சுமி தலைமையில் வட்டார போக்குவரத்து அலுவலர் சரவணன் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் உதவி-கலெக்டர் தனலட்சுமி கூறியதாவது:-
தனியார் பள்ளி வாகனங்கள் ஆய்வு மேற்கொண்டதில் சிறிய, சிறிய குறைகள் உள்ளன என தெரிவித்த போது செய்தியாளர்கள் இதுசம்மந்தமாக நடவடிக்கை எடுக்கப்படுமா என்ற கேள்விக்கு பதிலளிக்க மறுத்துவிட்டார்.
பின்னர் மீண்டும் அனைத்து வாகனங்களையும் ஆய்வு செய்து முதலுதவி, தீயணைப்பான், உள்ளிட்ட உபகரணங்கள் உள்ளதா என ஆய்வு செய்தார்.
மேலும் அரசின் போக்குவரத்து நடைமுறைகளை பின்பற்றவும் இந்த ஆய்வில் அறிவுறுத்தபட்டன.
மேலும் இந்த ஆய்வில் 21 வயது முழுமையாகாத ஓட்டுனர்களை நீக்கம் செய்தும் தகுதியில்லாத 2 பள்ளி வாகனங்களை மீண்டும் சரி செய்து ஆய்விற்கு உட்படுத்த உதவி-கலெக்டர் தனலட்சமி உத்தரவிட்டார்.
இந்த ஆய்வின்போது போக்குவரத்து ஆய்வாளர் முருகேசன் தாசில்தார் பெருமாள் இன்ஸ்பெக்டர் கோகுல்ராஜ் போக்குவரத்து சப்-இன்ஸ்பெக்டர் செல்வகுமார் உள்ளிட்டோர் இருந்தனர்.
- 2 நிறுவனங்கள் மீது வழக்கு
- 18 நிறுவனங்களுக்கு அபராதம்
ராணிப்பேட்டை:
வேலூர் தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) தே.ஞானவேல் தலைமையில் தொழிலாளர் துணை ஆய்வாளர்கள் மற்றும் தொழிலாளர் உதவி ஆய்வாளர்கள் வேலூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டத்தில் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் சிகரெட் லைட்டர்கள் மற்றும் எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ் பொருசட்டமுறை எடையளவு (பொட்டல பொருட்கள்) விதிகளின் கீழ் முறையான எந்த அறிவிப்பும் இல்லாமல் விற்பனை செய்வதாக புகார்கள் பெறப்பட்டது. அதன்பேரிலும், இரும்பு வியாபாரம் மற்றும் வேஸ்ட் பேப்பர் வியாபாரம் ஆகிய கடைகளில் பயன்படுத்தப்படும் தராசுகள் குறித்தும் பல்வேறு நிறுவனங்களில் ஆய்வுகள் செய்யப்பட்டது.
அதில் 18 நிறுவனங்களின் உரிமையாளர்கள் மீது இணக்க கட்டண அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
மேலும், குழந்தைகள் காப்பகம் வசதி, குறைந்தபட்ச ஊதியம், மகப்பேறு விடுப்பு, கடைகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கு அமருவதற்கான வசதி ஏற்படுத்தி தருதல் ஆகிய விதிகளை பின்பற்றாத உணவு நிறுவனங்கள், மோட்டார் போக்குவரத்து நிறுவனங்கள் மற்றும் பீடி நிறுவனங்கள் ஆகிய 74 நிறுவனங்கள் மீது ஆய்வு மேற்கொள்ளப்பட்டு 7 நிறுவனங்கள் மீது கேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
2 நிறுவனங்கள் மீது நீதிமன்ற வழக்கு தொடரப்பட்டு தொழிலாளர் துறை அலுவலர்களால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தொழிலாளர் நலச்சட்டங்களை பின்பற்றாத நிறுவனங்களின் உரிமையாளர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என வேலூர் தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) தே.ஞானவேல் தெரிவித்துள்ளார்.
- ஆசிரியரை தோல்மேல் தூக்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்
- போராட்டத்தின் போது சில மாணவர்கள் மயங்கி விழுந்தனர்
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை மாவட்டம், துரிஞ்சாபுரம் ஒன்றியம் சொரக்குளத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் கடந்த 10 ஆண்டு காலமாக உடற்கல்வி ஆசிரியராக பணியாற்றி வந்த பாபு என்ற ஆசிரியர் பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.
இதனால் ஆத்திரமடைந்த அந்த பள்ளி மாணவ, மாணவிகள் வகுப்புக்களை புறக்கணித்து பள்ளியின் நுழைவு வாயில் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது உடற்கல்வி ஆசிரியர் இப்பள்ளிக்கு மீண்டும் வரவேண்டும் என்று மாணவர்கள் கோஷமிட்டனர். தகவல் அறிந்து விரைந்து வந்த கல்வி அதிகாரி பேச்சுவார்த்தை நடத்தினார்.
இருப்பினும் உடற்கல்வி ஆசிரியர் வந்த பின்னரே நாங்கள் பள்ளிக்குள் நுழைவோம் என்று பிடிவாதமாக போரா ட்டத்தில் மாணவர்கள் ஈடுபட்டனர். இதையடுத்து அதிகாரிகள் பொதுமக்கள் மற்றும் ஆசிரியர்களிடம் ஆலோசனை நடத்தி உடற்கல்வி ஆசிரியர் பாபுவை மீண்டும் சொரகுளத்தூர் மேல்நிலைப் பள்ளியில் வந்து சேருமாறு அறிவுறுத்தினர்.
இதனைத் தொடர்ந்து உடற்கல்வி ஆசிரியர் வந்து பள்ளியில் சேர்ந்ததும் உற்சாகமடைந்த மாணவர்கள் ஆசிரியரை தங்கள் தோல் மேல் தூக்கி அழைத்து வந்து மாணவர்கள் கண்ணீர் மல்க வரவேற்று அவரை கண்டு மகிழ்ச்சியடைந்தனர். பின்னர் மாணவர்கள் அனைவரும் தங்கள் வகுப்பறைக்கு சென்றனர்.
இந்த போராட்டத்தால் 2 மணி நேரத்திற்கும் மேலாக பள்ளி வளாகத்தின் முன்பு பரபரப்பு காணப்பட்டது. நீண்ட நேரமாக ஆவேசமாக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் ஒரு சில மாணவர்கள் மயங்கி விழுந்தனர்.
அவர்களுக்கு உடனடியாக மருத்துவ உதவிகள் வழங்கப்பட்டன. சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.






