search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மடத்துக்குளம் அருகே கல்குவாரி லாரிகளை சிறைபிடித்த பொதுமக்கள்
    X

    போராட்டத்தில் ஈடுபட்டவர்களை படத்தில் காணலாம்.

    மடத்துக்குளம் அருகே கல்குவாரி லாரிகளை சிறைபிடித்த பொதுமக்கள்

    • கல் குவாரியில் அதிக அளவில் விதிமீறல்கள் உள்ளதாக பொதுமக்கள் தொடர்ந்து புகார் தெரிவித்து வருகின்றனர்.
    • பொதுமக்கள் துங்காவி பகுதிக்கு வந்து உடுமலை-தாராபுரம் நெடுஞ்சாலையில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    உடுமலை :

    மடத்துக்குளம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஏராளமான கல் குவாரிகள் செயல்பட்டு வருகிறது. இதில் பல கல் குவாரிகளில் விதி மீறல்கள் இருப்பதாக பொதுமக்கள் தொடர்ந்து புகார் தெரிவித்து வருகின்றனர்.இந்த நிலையில் மடத்துக்குளத்தையடுத்த துங்காவி மலையாண்டிபட்டினம் பகுதியில் செயல்பட்டு வரும் கல் குவாரியில் அதிக அளவில் விதிமீறல்கள் உள்ளதாக பொதுமக்கள் தொடர்ந்து புகார் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்று காலை கல்குவாரிக்கு சென்ற 2 லாரிகளை பொதுமக்கள் சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.ஆனால் சம்பவ இடத்துக்கு அதிகாரிகள் யாரும் வராததால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் துங்காவி பகுதிக்கு வந்து உடுமலை-தாராபுரம் நெடுஞ்சாலையில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது:- கல் குவாரியில் கற்களை உடைக்க, விதிகளை மீறி அதிக சக்தி வாய்ந்த வெடி வைக்கப்படுகிறது.மேலும் அனுமதியற்ற பகுதிகளிலும் தொடர்ச்சியாக அதிக ஆழத்தில் கற்கள் எடுக்கப்பட்டு வருகிறது.மேலும் இரவு பகலாக கனரக வாகனங்கள் தொடர்ந்து அதிக வேகத்தில் இயக்கப்படுகிறது.குறிப்பாக இரவு நேரத்தில் அதிக எண்ணிக்கையில் வாகனங்கள் இயக்கப்பட்டு வருகிறது.இதனால் ரோடு முழுவதும் சேதமடைந்து குண்டும் குழியுமாக மாறி விட்டது. மேலும் லாரிகளில் அதிக அளவில் கற்கள் ஏற்றப்பட்டு கொண்டு செல்லப்படுகிறது.மேடு பள்ளங்களில் லாரி ஏறி இறங்கும்போது கற்கள் ரோட்டில் விழுகிறது.

    இதனால் ரோட்டில் செல்லும் பொதுமக்களுக்கு உயிருக்கு உத்தரவாதமற்ற சூழல் நிலவுகிறது.இதுவரை கற்கள் விழுந்து பலர் காயமடைந்துள்ளனர்.தோள்பட்டையில் கல் விழுந்து பலத்த காயமடைந்தவரைப் பற்றி நிர்வாகத்தினரிடம் கூறிய போது,தோளில் தானே விழுந்தது.தலையில் விழவில்லையே என்று அலட்சியமாக பதில் சொல்கின்றனர். விதிமீறல்கள் குறித்து தாசில்தார்,ஆர்டிஓ, கலெக்டர், கனிமவளத்துறை என அனைத்து அதிகாரிகளுக்கும் புகார் தெரிவித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தற்போது தண்ணீர் லாரியை ஓட்டி வந்த டிரைவர்,பிரேக் பிடிக்கலை என்று கூச்சலிட்டு எதிரே வருபவர்களை விலகச் சொல்லியபடியே வந்திருக்கிறார். அப்போது எதிரில் மோட்டார் சைக்கிள் ஓட்டி வந்த ஒருவர் முட்புதருக்குள் வண்டியை விட்டதால் உயிர் தப்பினார்.இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் லாரிகளை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    ஆனால் பல மணி நேரம் காத்திருந்தும் அதிகாரிகள் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வரவில்லை.எனவே வேறு வழியில்லாமல் சாலை மறியலில் ஈடுபட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.எனவே கல் குவாரியில் ஆய்வு செய்து விதி மீறல்களைத் தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.பழுதடைந்த ரோட்டை உடனடியாக சீரமைக்க வேண்டும்.கல் குவாரிக்கு இயக்கப்படும் வாகனங்களை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்.பொதுமக்களின் பாதுகாப்புக்கு உறுதியளிக்க வேண்டும்'என்று பொதுமக்கள் கூறினர்.சம்பவ இடத்துக்கு தாசில்தார் உட்பட உயர் அதிகாரிகள் யாரும் வராத நிலையில் வருவாய் ஆய்வாளர் மற்றும் சப் இன்ஸ்பெக்டர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.இதனால் ஆவேசமடைந்த பொதுமக்கள் அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.பின்னர் விரைவில் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததைத் தொடர்ந்து பொதுமக்கள் போராட்டத்தைக் கைவிட்டு கலைந்து சென்றனர்.

    Next Story
    ×