search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சாலைகள் தோண்டப்பட்டுள்ளதால் வாகன ஓட்டிகள் அவதி - நீதிமன்றத்தை நாட பொதுமக்கள் முடிவு
    X

    ஒரே சாலையில் எதிரும், புதிருமாக செல்லும் வாகனங்களை படத்தில் காணலாம்.

    சாலைகள் தோண்டப்பட்டுள்ளதால் வாகன ஓட்டிகள் அவதி - நீதிமன்றத்தை நாட பொதுமக்கள் முடிவு

    • குடிநீர் குழாய் பதிப்பு, சாக்கடை கால்வாய் வசதி ஏற்படுத்துவதற்காக சாலைகள் தோண்டப்பட்டு உள்ளன.
    • ஒரே சாலையில் எதிரும், புதிருமாக வாகனங்கள் செல்ல வேண்டிய நிலை உள்ளது.

    திருப்பூர் :

    திருப்பூர் மாநகர பகுதிகளில் ஸ்மார்ட் சிட்டி உள்ளிட்ட பல்வேறு பணிகளின் காரணமாக மாநகர பகுதிகளில் சாலைகள் அமைக்க, சாக்கடை கால்வாய் அமைக்க, குடிநீர் திட்ட பணிகளுக்காக குழாய் அமைக்க என பல்வேறு பணிகள் நடந்து வருகிறது. இந்த பணிகள் பல பகுதிகளில் சரியான முறையில் திட்டமிடப்படாமல் மேற்கொள்வதால், பொதுமக்கள் பல்வேறு இன்னல்களை சந்தித்து வந்து கொண்டிருக்கிறார்கள். அந்த வகையில் அனுப்பர்பாளையத்தில் இருந்து 15 வேலம்பாளையம், சோழிபாளையம் செல்லும் பிரதான சாலையில் குடிநீர் குழாய் பதிப்பு, சாக்கடை கால்வாய் வசதி ஏற்படுத்துவதற்காக சாலைகள் தோண்டப்பட்டு உள்ளன.

    இதன் காரணமாக அந்த பகுதியில் ஒரு வழி சாலையை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. இதனால் ஒரே சாலையில் எதிரும், புதிருமாக வாகனங்கள் செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதன் காரணமாக பெரிய வாகனங்கள் அந்த சாலையில் வரும் போது, போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மேலும், எதிரெதிரே வாகனங்கள் செல்வதால் வாகன ஓட்டிகளுக்கு இடையே அவ்வப்போது தகராறும் ஏற்படுகிறது. விபத்துகளும் நடந்து வருகின்றன.

    இதுபோல் அந்த பகுதிகளில் போக்குவரத்து போலீசாரும் இல்லாமல் இருப்பதால், வாகன ஓட்டிகள் கடும் சிரமத்தை சந்தித்து வருகிறார்கள். இதுபோல் மாநகராட்சி மற்றும் போக்குவரத்துத்துறை சார்பில் சாலையில் செல்ல முடியாது என்பதை தெரிவிக்கும் வகையில் விளம்பர பதாகைகள் கூட வைக்கப்படவில்லை. இதனால் பலரும் சாலையில் சென்று விட்டு பாதை இல்லாததால் திரும்பி வரும் நிலையும் உள்ளது. திருப்பூருக்கு தமிழக முதல்-அமைச்சர் வரும் போது, அந்த பகுதியில் வேலை செய்யப்பட்டது. இதன் பின்னர் மீண்டும் பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளன. இந்த சாலையை சீரமைக்கக்கோரி பலரும் போராட்டங்களையும் நடத்தினர். இருப்பினும் இதற்கு தீர்வு இன்னமும் கிடைக்கவில்லை. இதனால் நீதிமன்றத்தை நாடுவதற்கு அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் முடிவு செய்துள்ளனர்.

    Next Story
    ×