என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நில ஒருங்கிணைப்பு சட்டத்தை திரும்ப பெற வேண்டும்- கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் மனு

    • விவசாயிகளின் உரிமை, உள்ளாட்சி அமைப்புகளின் நிர்வாக அதிகாரம் பறிபோகும் நிலை உள்ளது.
    • கரீம்நகரில் கடந்த 14-ந் தேதி சிறுவன் ஒருவன் கிணற்றில் மூழ்கி உயிரிழந்தான்.

    நெல்லை:

    நெல்லை மாவட்ட பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. இதில் மாவட்டம் முழுவதிலும் இருந்து ஏராளமானோர் வந்து மனு கொடுத்தனர்.

    விவசாயிகள் சங்கம்

    தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு மாவட்ட தலைவர் ஆபிரகாம் தலைமையில் விவசாயிகள் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    நில ஒருங்கிணைப்பு சட்டத்தை தமிழக அரசு கடந்த ஏப்ரல் மாதம் சட்டமன்றத்தில் நிறைவேற்றி உள்ளது. இதன் மூலம் விவசாயிகளின் விளைநிலங்கள், ஏரி, குளம், நீர்நிலைகளின் நீர்வழிப்பாதை ஆகியவற்றை தனியார் நிறுவனங்கள் தங்களின் விரும்பத்திற்கு ஏற்ப அபகரிக்க வழி உள்ளது.

    இதனால் விவசாயிகளின் உரிமை, உள்ளாட்சி அமைப்புகளின் நிர்வாக அதிகாரம் பறிபோகும் நிலை உள்ளது. எனவே முதல்-அமைச்சர் இதில் உடனடியாக தலையிட்டு நில ஒருங்கிணைப்பு சட்டத்தை திரும்ப பெற வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    நிதி உதவி

    மனிதநேய மக்கள் கட்சி மேலப்பாளையம் பகுதி தலைவர் முகம்மது யூசுப் சுல்தான் தலைமையில் நிர்வாகிகள் கொடுத்த மனுவில், மேலப்பாளையம் கரீம்நகரில் கடந்த 14-ந் தேதி சிறுவன் ஒருவன் கிணற்றில் மூழ்கி உயிரிழந்தான். அவனது குடும்பம் ஏழ்மை நிலையில் உள்ளது. எனவே முதல்-அமைச்சர் நிவாரண நிதியில் இருந்து நிவாரண தொகை வழங்க வேண்டும் என கூறப்பட்டிருந்தது.

    நெல்லை மாவட்ட தனியார் பள்ளிகள் சங்கத் தலைவர் முத்துமணி தலைமையில் செயலாளர் சுரேஷ், பொருளாளர் லூர்துசாமி மற்றும் பல்வேறு பள்ளிகளின் உரிமையாளர்கள் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    கட்டாய கல்வி சட்டம்

    கட்டாய கல்வி உரிமைச்சட்டத்தின் கீழ் 25 சதவீத மாணவர்களுக்கு இடமளிக்கப்படுகிறது. இவர்களுக்காக மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்து வருகிறது. அந்த வகையில் 2021-22 கல்வி ஆண்டு ஒதுக்கிய தொகையை மாநில அரசு இன்னும் விடுவிக்காமல் உள்ளது. இதனால் ரூ. 36 கோடி நிலுவையில் இருக்கிறது.

    நெல்லை மாவட்டத்தில் 118 நர்சரி பள்ளிகள், 20 மெட்ரிக் பள்ளிகளில் இந்த திட்டத்தின் கீழ் 3,500 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.

    எனவே மாநில அரசு இந்த தொகையை உடனடியாக விடுவிக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×