search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பர்கூர் சாலையில் லாரி கவிழ்ந்து விபத்து: தமிழகம்-கர்நாடகா இடையே 10 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு

    • கனரக வாகனங்கள் அதிக அளவில் இந்த மலைப்பாதை வழியாகத் தான் சென்று வருகின்றன.
    • தமிழகம்-கர்நாடகா இடையே சுமார் 10 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    அந்தியூர்:

    ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்த பர்கூர் மலைப்பாதை வழியாக மைசூருக்கு செல்லக்கூடிய பிரதான சாலை உள்ளது.

    இந்த சாலை வழியாக கர்நாடகாவிற்கு மிகக்குறைந்த தொலைவில் செல்ல முடியும் என்பதால் வாகன ஓட்டிகள் அதிக அளவில் இந்த மலைப்பாதையை பயன்படுத்தி வருகின்றனர்.

    கனரக வாகனங்கள் அதிக அளவில் இந்த மலைப்பாதை வழியாகத் தான் சென்று வருகின்றன. இதனால் கடந்த சில நாட்களாக பர்கூர் மலைப்பாதை வழியாக வரும் கனரக வாகனங்கள் கவிழ்ந்து விபத்துக்குள்ளாவது தொடர் கதையாக உள்ளது.

    சத்தியமங்கலம்-திம்பம் மலைப்பாதை வழியாக செல்லும் வாகனங்கள் அவ்வப்போது கவிழ்வதும். வண்டி பழுதாகி நிற்பதும் அடிக்கடி நிகழ்வதால் பல மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு வருவதை தொடர்ந்து வாகன ஓட்டிகள் இந்த வழித்தடத்தை பயன்படுத்தி வருகின்றனர்.

    இந்த நிலையில் அங்கு ஏற்படும் அதே நிலை தற்போது பர்கூர்மலை பாதையிலும் நிகழ்ந்து வருகிறது. நேற்று அதிகாலை 4 மணி அளவில் கர்நாடகாவில் இருந்து கிரானைட் ஏற்றி வந்த லாரி மலைப்பாதையில் 2-வது வளைவில் திரும்பும் பொழுது லாரியிலிருந்து ராட்ச கிரானைட் கல் சாலையின் ஓரமாக விழுந்தது. அதிகாலை நேரம் என்பதால் விபத்து தவிர்க்கப்பட்டது.

    இதனைத்தொடர்ந்து லாரி டிரைவர் சாலையின் ஓரமாக வண்டியை நிறுத்திவிட்டு வண்டியின் உரிமையாளருக்கு தகவல் தெரிவித்தார். இதனால் பின்னால் வரும் வாகனங்கள் அனைத்தும் வளைவுகளில் மிகுந்த சிரமத்திற்கு இடையே ஆபத்தான நிலையில் வாகனத்தை ஓட்டி வந்தனர்.

    அந்த வளைவில் கனரக வாகனங்கள் முன் சக்கரத்தில் பெரிய கற்களையும் பின் சக்கரத்தில் பெரிய கற்களையும் வைத்து மிகவும் சிரமப்பட்டு திருப்பி செல்லும் நிலை ஏற்பட்டது.

    இந்த நிலையில் நேற்று மாலை மீண்டும் அதே இடத்தில் கர்நாடக மாநிலம் குடகில் இருந்து சேலத்துக்கு மரம் ஏற்றி வந்த லாரி ராட்சத கிராணைட் கல் விழுந்த அதே இடத்தில் கவிழ்ந்து விபத்தானது. இதனால் வரட்டு பள்ளம் அணைப்பகுதியிலிருந்து மலை பாதைக்கு செல்லக்கூடிய வாகனங்கள் அனைத்தும் நிறுத்தி வைக்கப்பட்டது.

    இதே போல் பர்கூர் சோதனை சாவடியிலிருந்து அந்தியூர் வரக்கூடிய வாகனங்கள் அனைத்தும் நிறுத்தி வைக்கப்பட்டது. இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    மேலும் நேற்று அதிகாலை விழுந்த கிரானைட் கல் 2 பொக்லைன் எந்திரங்கள் வரவழைக்கப்பட்டு இரவு 9 மணிக்கு அப்புறப்படுத்தும் பணி தொடங்கி அதிகாலை 5 மணி அளவில் நிறைவடைந்தது. இதனால் தமிழகம்-கர்நாடகா இடையே சுமார் 10 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் மலைப்பாதையில் வாகன ஓட்டிகள் விடிய, விடிய தவித்தனர்.

    Next Story
    ×