search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கட்சி தலைமை ஒரு குடும்பத்திடம் இருப்பதே வாரிசு அரசியல்- வானதி சீனிவாசன் கடும் தாக்கு
    X

    கட்சி தலைமை ஒரு குடும்பத்திடம் இருப்பதே வாரிசு அரசியல்- வானதி சீனிவாசன் கடும் தாக்கு

    • ஸ்டாலின் தி.மு.க. தலைவரானதும், அவர் வகித்த இளைஞரணி தலைவர் பதவி, மகன் உதயநிதிக்கு வந்துவிட்டது.
    • 4 முறை, 3 முறை தொடர்ந்து எம்.எல்.ஏ.வாக இருக்கும், திறமையான பலர் இருந்தும், எம்.எல்.ஏ.வாகி ஒன்றரை ஆண்டுகளிலேயே உதயநிதி அமைச்சராகி விட்டார்.

    கோவை:

    பா.ஜ.க. தேசிய மகளிரணி தலைவியும், கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ.வுமான வானதி சீனிவாசன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    அரை நூற்றாண்டு காலம் தி.மு.க. தலைவராக இருந்த கருணாநிதியின் பேரனும், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் மகனுமான உதயநிதி ஸ்டாலின் தற்போது அமைச்சராகி உள்ளார்.

    இந்திய வரலாற்றில் மட்டுமல்ல, உலக வரலாற்றிலேயே தொடர்ந்து 54 ஆண்டுகள் ஒரு அரசியல் கட்சி, ஒரு குடும்பத்தின் கட்டுப்பாட்டில் இருப்பது தமிழகத்தில்தான். அந்த பெருமை தி.மு.க.வுக்கு மட்டும்தான்.

    முதல்-அமைச்சர் ஸ்டாலினின் மகன் என்பதால்தான் இப்படி குறுகிய காலத்தில் இந்த உயரத்தை உதயநிதி ஸ்டாலினால் எட்ட முடிந்துள்ளது என்பதை யாராலும் மறுக்க முடியாது. தி.மு.க.வில் நடக்கும் இந்த வாரிசு அரசியலை சுட்டிக்காட்டினால், தி.மு.க.வில் மட்டும்தான் வாரிசு அரசியல் இருக்கிறதா?, பா.ஜ.க.வில் இல்லையா? என, தி.மு.க.வினர் எதிர்கேள்வி கேட்கிறார்கள்.

    மேம்போக்காக பார்த்தால் இந்த கேள்வியில் நியாயம் இருப்பது போல தோன்றும். ஆனால், அதில் எந்த நியாயமும் இல்லை. குடும்பத்தில் தந்தையோ, தாயோ அரசியலில் இருந்தால், அவர்களது வாரிசுகள் அரசியலுக்கு வரக்கூடாது என்றில்லை.

    ஆனால், வாரிசு அரசியல் என்பது ஒரு கட்சியின் தலைமை ஒரு குடும்பத்திடம் மட்டுமே இருப்பது.

    காங்கிரசில் நேரு, அவரது மகள் இந்திரா காந்தி, அவரது மகன் ராஜீவ், அவரது மனைவி சோனியா, அவரது மகன் ராகுல், இப்போது ராகுலின் சகோதரி பிரியங்கா என ஒரு குடும்பமே கட்சியை கட்டுப்படுத்துகிறார்கள்.

    வேறு ஒருவர் கட்சி தலைவராக இருந்தாலும், காங்கிரஸை நேரு குடும்பத்தினர் தான் வழிநடத்துகிறார்கள்.

    இதுபோன்ற நிலைதான் தி.மு.க.விலும் உள்ளது. 49 ஆண்டுகள் தி.மு.க. தலைவராக இருந்த கருணாநிதி மறைந்ததும், ஸ்டாலின் தலைவரானார். இதுதான் வாரிசு அரசியல். இது பெரும் சமூக அநீதி. அதனை தான் பா.ஜ.க. எதிர்க்கிறது.

    ஸ்டாலின் தி.மு.க. தலைவரானதும், அவர் வகித்த இளைஞரணி தலைவர் பதவி, மகன் உதயநிதிக்கு வந்துவிட்டது. 4 முறை, 3 முறை தொடர்ந்து எம்.எல்.ஏ.வாக இருக்கும், திறமையான பலர் இருந்தும், எம்.எல்.ஏ.வாகி ஒன்றரை ஆண்டுகளிலேயே உதயநிதி அமைச்சராகி விட்டார்.

    பா.ஜ.க.வில் தலைமை பொறுப்புக்கு, ஒரு குடும்பத்தை சேர்ந்தவர்கள் வருவது கிடையாது. தேசிய தலைமை மட்டுமல்ல, எந்தவொரு மாநில தலைமையிலும் வாரிசுகள் இல்லை. இதனை எப்படி வாரிசு அரசியல் என்று சொல்ல முடியும்.

    எனவே, தங்கள் மீதான வாரிசு அரசியல் விமர்சனத்தை திசைதிருப்பும் நோக்கத்தில் அனைத்து கட்சிகளிலும், பா.ஜ.க.விலும் வாரிசு அரசியல் இருப்பதாக அவதூறு பரப்புவதை தி.மு.க. நிறுத்திக் கொள்ள வேண்டும்.

    மகனை அமைச்சராக்கி உள்ள முதல்-அமைச்சர் ஸ்டாலின், பட்டியலினத்தை சேர்ந்த ஒருவரை துணை முதல்வராக்கியிருக்கலாம். அல்லது பட்டியலினத்தை சேர்ந்த ஒருவருக்காவது முக்கிய துறைகளை கொடுத்திருக்கலாம். அப்படி செய்திருந்தால் தி.மு.க. அரசை சமூக நீதி அரசு என பாராட்டலாம்.

    இனியாவது பட்டியலினத்தை சேர்ந்த ஒருவரை துணை முதல்வராக்க வேண்டும். முக்கிய துறைகளை ஒடுக்கப்பட்ட சமூகத்தினருக்கு ஒதுக்க வேண்டும். சமூக நீதி, சமத்துவம் என்பதை பேச்சில் மட்டுமல்லாது, செயலிலும் காட்ட முதல்-அமைச்சர் ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×