search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ராஜபாளையம் அருகே மின்வேலியில் சிக்கி காவலாளி பலி
    X

    ராஜபாளையம் அருகே மின்வேலியில் சிக்கி காவலாளி பலி

    • மின் வேலியில் சிக்கி மாரியப்பன் இறந்து கிடந்ததை பார்த்த அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர்.
    • தோட்டத்து காவலாளி மின்வேலியில் சிக்கி பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    ராஜபாளையம்:

    விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள கணபதி சுந்தரராஜபுரம் பகுதியை சேர்ந்தவர் மாரியப்பன் (வயது38). இவருக்கு மகேஷ் என்ற மனைவியும், இன்பராஜ், அழகுராஜா என்ற 2 மகன்களும் உள்ளனர்.

    மாரியப்பன் ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் ஆறாவது மைல் நீர்த்தேக்கம் பகுதியில் உள்ள ஒரு மாந்தோப்பில் காவலாளியாக வேலை பார்த்து வந்தார். நேற்று இரவும் வழக்கம் போல் வேலைக்கு சென்றிருந்தார்.

    மாரியப்பன் வேலை பார்க்கக்கூடிய மாந்தோப்புக்கு அருகில் மற்றொரு நபரின் தோட்டம் இருக்கிறது. அந்த தோட்டத்தில் வனவிலங்குகள் பயிர்களை சேதப்படுத்துவதை தடுப்பதற்காக, தோட்டத்தின் உரிமையாளர் மின்வேலி அமைத்திருந்ததாக தெரிகிறது.

    இதனை அறியாத மாரியப்பன், அந்த தோட்டத்திற்குள் இரவு நேரத்தில் சென்றதாக தெரிகிறது. அப்போது அந்த தோட்டத்தில் அமைக்கப்பட்டிருந்த மின்வேலியில் மாரியப்பன் தெரியாமல் மிதித்து விட்டதாக தெரிகிறது.

    இதனால் அவர் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே பலியானார். மின்வேலியில் சிக்கி மாரியப்பன் இறந்து கிடந்ததை இன்று காலை தோட்டத்துக்கு சென்றவர்கள் பார்த்தனர். அதிர்ச்சியடைந்த அவர்கள், அது குறித்து ராஜபாளையம் வடக்கு போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

    இதையடுத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ் கண்ணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். மின் வேலியில் சிக்கி மாரியப்பன் இறந்து கிடந்ததை பார்த்த அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர்.

    இதையடுத்து அவரது உடலை போலீசார் அங்கிருந்து மீட்டு, பிரேத பரிசோதனைக்காக விருதுநகர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மாரியப்பன் இறந்து கிடந்த தோட்டத்தில் உரிமையாளர் அனுமதி பெற்று மின்வேலி அமைத்திருந்தாரா அல்லது அனுமதியில்லாமல் சட்டவிரோதமாக அமைத்து உள்ளாரா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அதே நேரத்தில் மாரியப்பன், தான் வேலை பார்த்த தோட்டத்திலிருந்து அருகில் உள்ள தோட்டத்திற்கு இரவு நேரத்தில் சென்றது ஏன்? என்றும் போலீசார் விசாரணை நடத்துகின்றனர். தோட்டத்து காவலாளி மின்வேலியில் சிக்கி பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×