search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    எடப்பாடி பழனிசாமி மனநிலையை அறிந்து கொள்ள சென்ற செல்லூர்ராஜூ
    X

    எடப்பாடி பழனிசாமி மனநிலையை அறிந்து கொள்ள சென்ற செல்லூர்ராஜூ

    • எடப்பாடி பழனிசாமியின் சில முடிவுகளை ஓ.பன்னீர்செல்வத்திடம் தம்பிதுரை விளக்கமாக கூறினார்.
    • ஆனால் எந்த விளக்கத்தையும் ஓ.பன்னீர் செல்வம் ஏற்கவில்லை. இதனால் தம்பிதுரை மேற்கொண்ட முயற்சிக்கு வெற்றி கிடைக்கவில்லை.

    சென்னை:

    ஒற்றை தலைமை வேண்டும் என்று எடப்பாடி ஆதரவாளர்கள் சொல்கிறார்கள்.

    இல்லை இரட்டை தலைமை நீடிக்க வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் ஆவேசத்துடன் உள்ளனர்.

    ஒற்றைத்தலைமையா? அல்லது இரட்டை தலைமையா? என்பது அ.தி.மு.க.வின் தொண்டர்கள் ஒவ்வொருவரிடமும் எதிரொலிக்கத் தொடங்கி உள்ளது. இந்த விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் இருவரும் பிடிவாதமாக உள்ளனர்.

    இருவரும் சமரசம் ஆகி விடுவார்கள் என்று முதலில் கருதப்பட்டது. ஆனால் இரு தரப்பிலும் தங்களது முடிவில் தீவிரமாக உள்ளனர். இது அ.தி.மு.க. மூத்த தலைவர்களிடம் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது.

    எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் இருவருக்கும் பொதுவான மூத்த தலைவர்கள் சமரச முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர். நேற்று முன்தினம் எடப்பாடி பழனிசாமியை தம்பிதுரை சந்தித்து பேசினார். பிறகு அவர் நேற்று சென்னை வந்து ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்தார்.

    எடப்பாடி பழனிசாமியின் சில முடிவுகளை ஓ.பன்னீர்செல்வத்திடம் தம்பிதுரை விளக்கமாக கூறினார். ஆனால் எந்த விளக்கத்தையும் ஓ.பன்னீர் செல்வம் ஏற்கவில்லை. இதனால் தம்பிதுரை மேற்கொண்ட முயற்சிக்கு வெற்றி கிடைக்கவில்லை.

    இந்த நிலையில் தம்பிதுரையை தொடர்ந்து செல்லூர் ராஜூ இரு தரப்பினரையும் சமரசம் செய்யும் தூதராக மாறி உள்ளார். நேற்று அவர் ஓ.பன்னீர் செல்வத்துடன் கலந்து பேசினார். இன்று காலை அவர் ஓ.பன்னீர் செல்வத்தின் சார்பாக எடப்பாடி பழனிசாமியை சந்திக்க சென்றார்.

    எடப்பாடி பழனிசாமியின் வீட்டில் இந்த சந்திப்பு நடந்தது. அப்போது எடப்பாடி பழனிசாமியிடம், செல்லூர் ராஜூ சமரச முயற்சி மேற்கொண்டார். ஒ.பன்னீர்செல்வத்தின் மன நிலையை தெள்ளத்தெளிவாக எடப்பாடி பழனிசாமியிடம் எடுத்துக்கூறினார்.

    அதற்கு எடப்பாடி பழனிசாமி சில விளக்கங்கள் அளித்தார். இதையடுத்து எடப்பாடி பழனிசாமியிடம் இருந்து விடைபெற்ற செல்லூர் ராஜூ இன்று பகல் ராயப்பேட்டை தலைமை கழகத்திற்கு வந்தார். அங்கு ஓ.பன்னீர் செல்வத்துடன் தனியாக ஆலோசனை நடத்தினார்.

    எடப்பாடி பழனிசாமியின் மனநிலையை அவர் ஓ.பன்னீர்செல்வத்திடம் தெளிவுபடுத்தினார். ஆனால் எடப்பாடி பழனிசாமியின் விளக்கம் மீண்டும் ஓ.பன்னீர் செல்வத்துக்கு திருப்தி கொடுக்கவில்லை. அவர் சில கருத்துக்களை வெளியிட்டார்.

    அந்த கருத்துக்களை எடப்பாடி பழனிசாமியிடம் தெரிவிப்பதற்காக செல்லூர் ராஜூ தலைமை கழகத்தில் இருந்து புறப்பட்டு சென்றார். செல்லூர் ராஜூ செய்யும் சமரச முயற்சிக்கு வெற்றி கிடைக்குமா? என்பது இன்று பிற்பகல் தெரியும்.

    Next Story
    ×