search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆட்டோ மீது லாரி மோதி தாய்-மகன் உள்பட 3 பேர் பலி
    X

    ஆட்டோ மீது லாரி மோதி தாய்-மகன் உள்பட 3 பேர் பலி

    • விபத்தில் பயணிகள் ஆட்டோ லாரியின் அடியில் சிக்கிக் கொண்டது.
    • இறந்தவர்கள் உடலை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி உள்ளனர்.

    ஜீயபுரம்:

    காரைக்காலில் இருந்து சேலம் மாவட்டம் மேச்சேரிக்கு தாது மணல் ஏற்றிக்கொண்டு ஒரு டிப்பர் லாரி புறப்பட்டது. இந்த லாரியை கரூர் மாவட்டம் குளித்தலை பகுதியைச் சேர்ந்த வெள்ளி ராஜா (வயது 42) என்பவர் ஓட்டி சென்றார்.

    இந்த லாரி நேற்று நள்ளிரவு 11.30 மணி அளவில் திருச்சி மாவட்டம் பட்டவாய்த்தலை சக்தி நகர் பகுதியில் வந்த போது அதன் பேரிங் பழுதானது.

    இதனால் டிரைவர் கட்டுப்பாட்டை இழந்த அந்த லாரி தாறுமாறாக ஓடி வலது புறம் எதிரே வந்த ஆட்டோ மீது பயங்கரமாக மோதி அங்குள்ள அய்யன் வாய்க்கால் ஓரம் கவிழ்ந்தது.

    இந்த கோர விபத்தில் பயணிகள் ஆட்டோ லாரியின் அடியில் சிக்கிக் கொண்டது. அதில் பயணம் செய்த திருச்சி திருப்பராய்த்துறை அணலை கீழத் தெருவை சேர்ந்த சுசீலா (60 ), அவரது மகன் சரவணன் (38), ஆட்டோ டிரைவர் அரவிந்த் (34) ஆகிய 3 பேரும் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பலியாகினர்.

    இதில் லாரி டிரைவர் அதிர்ஷ்டவசமாக எந்த காயமும் இன்றி உயர் தப்பினார். விபத்து நடந்து சிறிது நேரம் கழித்து தான் லாரியின் அடியில் ஆட்டோ சிக்கி இருப்பது தெரியவந்தது.

    லாரியின் ஓரம் ஆட்டோவின் ஒரு சக்கரம் மட்டும் வெளியே தெரிந்தது. அதை வைத்துத்தான் லாரிக்கு அடியில் ஆட்டோ சிக்கியது தெரியவந்தது. இது பற்றி தகவல் அறிந்த பெட்டவாய்த்தலை போலீசார் சம்பவ இடம் விரைந்தனர். பின்னர் ஜே.சி.பி. எந்திரம் மூலம் லாரியை தூக்கினர். பலியான 3 பேர் உடல்களை மீட்க முயற்சித்தனர்.

    ஆனாலும் உடல்களை முழுமையாக மீட்பதில் சிக்கல் ஏற்பட்டதால் 2 ராட்சத கிரேன்கள் வரவழைக்கப்பட்டு இறந்தவர்கள் உடலை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி உள்ளனர்.

    இறந்த சுசீலாவுக்கு நேற்று இரவு திடீர் உடல்நல குறைவு ஏற்பட்டுள்ளது. உடனே அவரது மகன் சரவணன் தாயே திருப்பராய்த்துறையில் இருந்து ஒரு ஆட்டோவில் பெட்டவாய்த்தலையில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார்.

    பின்னர் அதே ஆட்டோவில் வீடு திரும்பிய போது விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

    Next Story
    ×