search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அ.தி.மு.க. பொதுக்குழு 11-ந்தேதி நடக்குமா?: ஐகோர்ட்டில் நாளை விசாரணை
    X

    அ.தி.மு.க. பொதுக்குழு 11-ந்தேதி நடக்குமா?: ஐகோர்ட்டில் நாளை விசாரணை

    • ஓ.பன்னீர்செல்வம் இன்று சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள தனது வீட்டில் வக்கீல்களுடன் ஆலோசனை நடத்தினார்.
    • இந்த ஆலோசனையில் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்களான வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன், தர்மர் எம்.பி. ஆகியோரும் ஈடுபட்டனர்.

    சென்னை:

    அ.தி.மு.க.வில் ஒற்றை தலைமை வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி தரப்பினர் வற்புறுத்தினர். ஆனால் அதை ஓ.பன்னீர் செல்வம் ஏற்றுக்கொள்ளாததால் பிரச்சினை எழுந்தது.

    கடந்த மாதம் 23-ந்தேதி பொதுக்குழு கூட்டம் நடத்தப்பட்டது. அந்த கூட்டத்தில் ஒற்றை தலைமை பற்றி தீர்மானம் நிறைவேற்ற முடிவு செய்திருந்தனர். இதனால் ஓ.பன்னீர் செல்வம் ஐகோர்ட்டில் வழக்கு போட்டார்.

    தீர்ப்பு சாதகமாக வராததால் மேல்முறையீடு செய்தார். மேல்முறையீட்டு வழக்கை விடிய விடிய விசாரித்த ஐகோர்ட்டு டிவிசன் பெஞ்ச் பொதுக்குழுவில் ஏற்கனவே விவாதிக்கப்பட்ட 23 தீர்மானங்களை மட்டும் நிறைவேற்றலாம். புதிய தீர்மானங்கள் எதுவும் நிறைவேற்றக்கூடாது என்று உத்தரவிட்டது.

    பரபரப்பான சூழ்நிலையில் நடந்த அந்த பொதுக்குழுவில் ஒற்றைத் தலைமை பற்றி தீர்மானம் கொண்டு வர முடியாததால் ஒட்டுமொத்தமாக தீர்மானங்கள் நிராகரிக்கப்பட்டது. அதற்கு பதிலாக ஒற்றை தலைமை பற்றி விவாதிக்க மீண்டும் 11-ந்தேதி பொதுக்குழு கூட்டம் கூட்டப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

    மொத்தம் உள்ள 2,660 பொதுக்குழு உறுப்பினர்களில் 2,400 பேருக்கு மேலாக எடப்பாடி பழனிசாமியை ஆதரிக்கிறார்கள். எனவே 11-ந்தேதி நடைபெறும் பொதுக்குழுவில் ஒற்றை தலைமை பற்றி முடிவு செய்யவும் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை தேர்வு செய்யவும் ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.

    இந்த நிலையில் 23-ந் தேதி நடைபெற்ற பொதுக்குழுவில் கோர்ட்டு உத்தரவை மீறிவிட்டதாக கூறி ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்த கோர்ட்டு அவமதிப்பு வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது.

    அப்போது 11-ந்தேதி நடைபெறும் பொதுக்குழுவுக்கு தடை கேட்டும் முறையிட்டனர். ஆனால் பொதுக்குழுவுக்கு தடை கேட்டு டிவிசன் பெஞ்சில் வழக்கு தொடர முடியாது. சம்பந்தப்பட்ட தனி நீதிபதியிடம் முறையிடலாம் என்று நீதிபதிகள் அறிவுறுத்தினார்கள்.

    இந்த நெருக்கடிகளுக்கு இடையேயும் 11-ந்தேதி பொதுக்குழுவை திட்டமிட்டபடி நடத்துவதற்கான ஏற்பாடுகளை எடப்பாடி பழனிசாமி தரப்பினர் மும்முரமாக செய்து வருகிறார்கள். அதேநேரம் சட்ட நடவடிக்கை மூலம் அதை முடக்குவதற்கான வேலைகளில் ஓ.பி.எஸ். தரப்பினர் தீவிரம் காட்டி வருகிறார்கள்.

    பொதுக்குழுவுக்கு தடை கேட்டு தனி நீதிபதியை அணுகுவது தொடர்பாக நேற்று இரவு சட்ட நிபுணர்களுடன் ஓ.பன்னீர்செல்வம் விவாதித்தார். அப்போது மீண்டும் வழக்கு தொடர முடிவு செய்யப்பட்டது.

    அதன்படி நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி முன்பு பொதுக்குழுவுக்கு தடை கேட்டு இன்று வழக்கு தாக்கல் செய்தனர். அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் என்று குறிப்பிட்டே ஓ.பி.எஸ். தனது மனுவை தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    கட்சியின் ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் 11-ந்தேதி பொதுக்குழுவை கூட்டுவதற்கு என்னிடம் அனுமதி பெறவில்லை. பொதுக்குழு கூட்டம் தொடர்பாக எனக்கு நேற்று மாலையில் தான் அழைப்பிதழ் கிடைத்துள்ளது. பொதுக்குழு கூட்டத்துக்கு 15 நாட்களுக்கு முன்பே அழைப்பு விடுக்க வேண்டும் ஆனால் 11-ந்தேதி பொதுக்குழுவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. எனவே உரிய முறைப்படி கூட்டப்படாத இந்த பொதுக்குழுவுக்கு தடை விதிக்க வேண்டும்.

    இவ்வாறு அந்த மனுவில் கூறி உள்ளார்.

    ஓ.பன்னீர்செல்வம் சார்பில் ஆஜரான சுப்ரீம் கோர்ட்டு மூத்த வக்கீல் குரு கிருஷ்ணகுமார், இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்று முறையிட்டார்.

    அதை ஏற்றுக்கொண்ட நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி நாளை (6-ந்தேதி) விசாரிக்கப்படும் என்று அறிவித்தார்.

    ஐகோர்ட்டில் வழக்கு விசாரணைக்கு வருவதால் 11-ந்தேதி நடைபெற உள்ள பொதுக்குழுவுக்கு தடை வருமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. இது கட்சியினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

    இந்த நிலையில் ஓ.பன்னீர்செல்வம் இன்று சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள தனது வீட்டில் வக்கீல்களுடன் ஆலோசனை நடத்தினார்.

    இந்த ஆலோசனையில் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்களான வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன், தர்மர் எம்.பி. ஆகியோரும் ஈடுபட்டனர்.

    Next Story
    ×