search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணி தர்மத்தை கடைபிடிக்கவில்லை- கே.எஸ்.அழகிரி குற்றச்சாட்டு
    X

    ஈரோட்டில் காங்கிரஸ் கட்சி மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி பேட்டி அளித்த போது எடுத்த படம். அருகில் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் உள்ளார்.

    ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணி தர்மத்தை கடைபிடிக்கவில்லை- கே.எஸ்.அழகிரி குற்றச்சாட்டு

    • திருமகன் ஈவெரா தொகுதிக்கு பல்வேறு திட்டங்களை நிறைவேற்றியுள்ளார்.
    • 18 மாதத்திற்குள் நகராட்சி துறை மூலம் ரூ.165 கோடி மதிப்பில் முடிவுற்ற பணிகளை நிறைவேற்றி உள்ளார்.

    ஈரோடு:

    ஈரோட்டில் இன்று காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பாக ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிடுகிறார். குமரி ஆனந்தனுக்கு பிறகு மூத்த தலைவராக இளங்கோவன் உள்ளார். அவர் போட்டியிடுவது பெருமையாக உள்ளது.

    தேர்தல் அறிவித்த உடனே முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மீண்டும் ஈரோடு கிழக்கு தொகுதியை காங்கிரசுக்கு ஒதுக்கினார். இதுதான் கூட்டணி தர்மம். நட்புக்கு சிறந்த எடுத்துக்காட்டு இதுதான். ஆனால் எதிர்க்கட்சியில் நடந்தது என்ன.

    கடந்த முறை தமிழ் மாநில காங்கிரசுக்கு இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டதை இந்த முறை ஜி.கே.வாசனிடம் இருந்து எடப்பாடி பறித்துக் கொண்டார். இளங்கோவனுக்கு எழுச்சி பெருகி உள்ளது. தி.மு.க. அமைச்சர்கள் தீவிரமாக பணியாற்றி வருகிறார்கள்.

    திருமகன் ஈவெரா இந்த தொகுதிக்கு பல்வேறு திட்டங்களை நிறைவேற்றியுள்ளார். 18 மாதத்திற்குள் நகராட்சி துறை மூலம் ரூ.165 கோடி மதிப்பில் முடிவுற்ற பணிகளை நிறைவேற்றி உள்ளார். இது கற்பனை செய்ய முடியாத வரலாற்று சாதனை.

    இதேபோல் ரூ.207 கோடி மதிப்பில் பணிகள் நடந்து வருகிறது. மேலும் 3-வது கட்டமாக ரூ.600 கோடி மதிப்பில் பணிகள் நடந்து வருகின்றன. இவ்வளவு திட்டங்களையும் குறுகிய காலத்தில் திருமகன் நிறைவேற்றியுள்ளார்.

    அவர் விட்டு சென்ற பணிகளை அவரது தந்தை நிறைவேற்றுவார். சாலை திட்ட பணிக்காக ஒரு நாள் இரவு முழுவதும் அமர்ந்து வேலைகளை முடித்துக் கொடுத்தவர் திருமகன்.

    முதல்-அமைச்சர் தனி கவனம் செலுத்தி தேர்தலில் பணியாற்றி வருகிறார். உலகில் சிறந்த முதல்வர்களில் அவர் தலை சிறந்த முதல்வராக திகழ்ந்து வருகிறார். அவருக்கு எனது பாராட்டுக்கள்.

    பாரதிய ஜனதா கட்சி இந்த தேர்தலில் ஒரு சிரமமான நிலையில் உள்ளது. முதலில் பிளவு பட்ட அ.தி.மு.க.வை சரி செய்ய முயன்றது. எடப்பாடி பா.ஜ.க.விடமிருந்து விலகி தேர்தலை சந்திப்போம் என்றார்.

    இதை ஏன் அவர் அறிவித்தார். பாரதிய ஜனதா படம், மோடி படமோ இருந்தால் தொகுதிக்குள் மக்கள் விட மாட்டார்கள் என கருதி அவ்வாறு அறிவித்தார். தேர்தல் முடிந்ததும் மீண்டும் இணைந்து விடுவார். இது ஒரு நாடகம் தான்.

    நாங்கள் இந்த தேர்தலில் மக்களோடு பணியாற்றி வருகிறோம். இது ஒரு ஜனநாயக நாடு. யாரையும் அடைத்து வைக்க முடியாது. அன்பால் அரவணைத்து வருகிறோம். எங்கள் கூட்டணி லட்சிய கூட்டணி. அவர்கள் கூட்டணி சந்தர்ப்பவாத கூட்டணி. கூட்டணி தர்மபடி எங்களுக்கு மீண்டும் போட்டியிட முதல்-அமைச்சர் வாய்ப்பளித்தார்.

    ஆனால் எதிர்க்கட்சி தரப்பில் கூட்டணி தர்மத்தை அவர்கள் கடைப்பிடித்தார்களா? இதிலிருந்தே யார் கூட்டணியை மதிக்கிறார்கள் என்பது உங்களுக்கே தெரியும்.

    சொத்து வரி உயர்வு, மின் கட்டண உயர்வால் இந்த தேர்தலில் எந்த ஒரு விளைவும் ஏற்படாது. சில திட்டங்களை முதலில் தொடங்கும் போது கசப்பாக தான் இருக்கும். ஆனால் அதன் மூலம் வரும் வருவாய் மூலம் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்த முடியும்.

    பேனா சின்னம் வைக்கும் விவகாரத்தில் எதிர்க்கட்சியினர் வயிற்று எரிச்சல் அடைகிறார்கள். உலகில் எல்லா இடத்திலும் இது போன்று நினைவுச் சின்னம் வைக்கப்பட்டு வருகிறது.

    பிரபாகரன் உயிரோடு இருப்பதாக சொல்வதை வைகோ, திருமாவளவன் , சீமான் போன்றவர்கள் ஏற்கவில்லை. அவர் உயிரோடு இருந்தால் எங்களுக்கு மகிழ்ச்சி தான். புதுக்கோட்டை சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் நிச்சயமாக தண்டிக்கப்படுவார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×