என் மலர்
உள்ளூர் செய்திகள்
திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவிலில் எடப்பாடி பழனிசாமி தரிசனம்
- அ.தி.மு.க. நிர்வாகிகள், ஆயிரக்கணக்கான தொண்டர்கள் சார்பிலும் எடப்பாடி பழனிசாமிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
- கோவில் நிர்வாகம் சார்பில் எடப்பாடி பழனிசாமிக்கு பூரண கும்ப மரியாதை வழங்கப்பட்டது.
தூத்துக்குடி:
அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், முன்னாள் முதலமைச்சரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி இன்று திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்காக வந்தார். இதற்காக அவர் விமானம் மூலம் சென்னையில் இருந்து தூத்துக்குடியிக்கு காலை 7.30 மணிக்கு வந்தார்.
விமான நிலையத்தில் அவருக்கு தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளர் சண்முகநாதன், வடக்கு மாவட்ட செயலாளர் கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ. ஆகியோர் தலைமையில் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
நிகழ்ச்சியில் அமைப்பு செயலாளர்கள் கருப்பசாமி பாண்டியன், சின்னத்துரை, முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் மோகன், சின்னப்பன், எம்.ஜி.ஆர். மன்ற இணை செயலாளர் ஆறுமுக நயினார், முன்னாள் அமைச்சர் சி.த. செல்லபாண்டியன், மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் சுதாகர், அவைத்தலைவர் திருப்பாற்கடல், மற்றும் அ.தி.மு.க.வினர் கலந்து கொண்டனர். விமான நிலையத்தில் அ.தி.மு.க.வினர் சிலருக்கிடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் சிறிது நேரம் அங்கு சலசலப்பு ஏற்பட்டது.
அ.தி.மு.க. பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி பொறுப்பேற்ற பின்னர் முதல் முறையாக தூத்துக்குடி மாவட்டம் வருவதையொட்டி தெற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் திருச்செந்தூரில் மாவட்டச் செயலாளர் சண்முகநாதன் தலைமையில் கட்சி நிர்வாகிகள் பிரமாண்டமான வரவேற்பு கொடுத்தனர். அதனைத் தொடர்ந்து ஆறுமுகநேரி, ஆத்தூர், முக்கானி, பழைய காயல் முத்தையாபுரம், தூத்துக்குடி 3-ம் மைல் பைபாஸ் மேம்பாலம் உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் அ.தி.மு.க. நிர்வாகிகள், ஆயிரக்கணக்கான தொண்டர்கள் சார்பிலும் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
பின்னர் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு சென்ற எடப்பாடி பழனிசாமிக்கு கோவில் நிர்வாகம் சார்பில் பூரண கும்ப மரியாதை வழங்கப்பட்டது. தொடர்ந்து அவர் சுவாமி மூலவர், சண்முகர், சத்ருசம்கார மூர்த்தி மற்றும் பரிவார தெய்வங்களை வழிபட்டார்.








