search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பா.ஜ.க.வின் செயல் திட்டங்களை பார்த்து தி.மு.க., எதிர்க்கட்சியினர் பயப்படுகிறார்கள்- சி.டி.ரவி
    X

    பா.ஜ.க.வின் செயல் திட்டங்களை பார்த்து தி.மு.க., எதிர்க்கட்சியினர் பயப்படுகிறார்கள்- சி.டி.ரவி

    • நாளுக்கு நாள் பா.ஜ.க. தமிழகத்தில் வளர்ந்து கொண்டிருக்கிறது.
    • அண்ணாமலையை பார்த்து எல்லோரும் பயப்படுகின்றனர். அவருடைய நடவடிக்கைகள், செயல் திட்டங்களை பார்த்து தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் பயப்படுகிறார்கள்.

    திருச்சி:

    பா.ஜ.க. தேசிய பொதுச்செயலாளரும், தமிழக மேலிட பொறுப்பாளருமான சி.டி‌.ரவி திருச்சி விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    பா.ஜ.க.வின் இலக்கு என்பது இந்தியாவை வல்லரசு ஆக்குவதாகும். அதற்காக பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இந்தியா வலிமையுடன் முன்னேறி சென்று கொண்டிருக்கிறது. பா.ஜ.க.வில் உள்ள ஒவ்வொருவரின் கடமையும், ஒவ்வொரு இந்திய குடிமகனின் வளர்ச்சி தான்.

    அண்ணாமலை தலைமையின் கீழ் நாங்கள் எல்லா மக்களின் கைகளைப் பிடித்து நடந்து கொண்டிருக்கின்றோம். மக்கள் சேவை மட்டும்தான் எங்களது ஒரே நோக்கம். நாளுக்கு நாள் பா.ஜ.க. தமிழகத்தில் வளர்ந்து கொண்டிருக்கிறது. அண்ணாமலையை பார்த்து எல்லோரும் பயப்படுகின்றனர். அவருடைய நடவடிக்கைகள், செயல் திட்டங்களை பார்த்து தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் பயப்படுகிறார்கள்.

    இதன் அடிப்படையில் பா.ஜ.க. தமிழகத்தில் வலுவாக இருக்கிறது. வருகிற சட்டமன்ற தேர்தலில் ஆட்சியை பிடித்து வலிமையான தமிழகத்தை உருவாக்குவோம். முன்னாள் பிரதமர் நேரு ஒரு முறை சொன்னார், நாலு பேரை வைத்துக்கொண்டு பா.ஜ.க. இயங்கி கொண்டிருக்கிறது. ஆனால் தற்போது மொத்த நாடும் எங்களுக்கு பின்னால் உள்ளது.

    5ஜி ஸ்பெக்ட்ரம் ஏலத்தில் ஊழல் நடைபெற்று இருப்பதாக தி.மு.க., காங்கிரஸ் குற்றம் சாட்டுகின்றது. 5ஜி ஸ்பெக்ட்ரம் ஏலத்தில் ஊழல் நடைபெற்றதற்கான ஆதாரம் இருந்தால் காட்டச் சொல்லுங்கள். தி.மு.க., காங்கிரசின் நோக்கம் அவர்களது குடும்பத்தை வளர்ப்பது தான்.

    தி.மு.க., காங்கிரஸ் கட்சிகளின் முழு நேர வேலையே ஊழல் செய்வது மட்டும்தான். ஆனால் எங்களுடைய வேலை மக்களுக்கான திட்டம், திட்டம், திட்டம் தான்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    2024 பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க., பா.ஜ.க. கூட்டணி ஏற்படுமா என்ற கேள்விக்கு பதில் அளிக்க மறுத்த அவர், நாங்கள் கட்சியை வலுப்படுத்திக் கொண்டிருக்கின்றோம்.

    ஒவ்வொரு இடத்திலும் பா.ஜ.க.வை நிலைநிறுத்திக் கொண்டிருக்கின்றோம் என்று கூறிவிட்டு அங்கிருந்து அவர் புறப்பட்டு சென்றார்.

    Next Story
    ×