search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தண்ணீர் கேட்பது போல் நடித்து மூதாட்டியை தாக்கி நகை பறித்த பெண் உட்பட 2 பேர் கைது
    X

    கைது செய்யப்பட்ட சுபாஷ்- மோனிஷா



    தண்ணீர் கேட்பது போல் நடித்து மூதாட்டியை தாக்கி நகை பறித்த பெண் உட்பட 2 பேர் கைது

    • ஏத்தாப்பூரில் உள்ள முத்துமலை முருகன் கோவில் நுழை வாயில் பகுதியில் ஏதாப்பூர் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.
    • வீட்டில் இருக்கும் முதியோர்களிடம், இதுபோன்று அடையாளம் தெரியாத நபர்களிடம் பேச்சு கொடுக்கவோ, வீட்டுக்குள் அனுமதிக்கவோ கூடாது என அறிவுறுத்த வேண்டும்.

    ஆத்தூர்:

    சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே புத்தரகவுண்டன்பாளையம் பஸ் நிறுத்தம் அருகில் மளிகை கடை நடத்தி வருபவர் விஜயா (வயது 78). இவர் கடந்த மார்ச் மாதம் வீட்டில் தனியாக இருந்தபோது, அடையாளம் தெரியாத ஒரு ஆணும் பெண்ணும் தண்ணீர் கேட்பது போல் வீட்டுக்குள் நுழைந்தனர்.

    தண்ணீர் எடுக்க விஜயா சென்றபோது, திடீரென அவரது வாயை பொத்திய இருவரும், விஜயாவை தாக்கி அவர் அணிந்திருந்த தங்க செயின், வளையல்கள் உள்ளிட்ட 7 சவரன் நகைகளை பறித்துக் கொண்டு இருசக்கர வாகனத்தில் தப்பினார்.

    இதுகுறித்து விஜயா அளித்த புகாரின் பேரில், வழக்கு பதிவு செய்த ஏத்தாப்பூர் போலீசார், தனிப்படை அமைத்து இருசக்கர வாகனத்தில் வந்த மர்மநபர்கள் யார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வந்தனர்.

    இந்நிலையில் ஏத்தாப்பூரில் உள்ள முத்துமலை முருகன் கோவில் நுழை வாயில் பகுதியில் ஏதாப்பூர் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த நபரை மடக்கி பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.

    முன்னுக்குப்பின் முரணாக அந்த நபர் பதில் அளித்ததை தொடர்ந்து, அவரையும் அவருடன் வந்த பெண்ணையும் போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர். இதில், அந்த நபர் விழுப்புரம் மாவட்டம் திருமலை பட்டுவை சேர்ந்த சுப்பன் மகன் சுபாஷ் என்பதும், அவருடன் வந்த பெண் சுபாஷின் சித்தியான, கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூரைச் சேர்ந்த சாமுவேல் மனைவி மோனிஷா என்பதும் தெரிய வந்தது.

    இவர்கள்தான் விஜயாவிடம் நகை பறித்தது தெரிய வந்தது. இவர்கள் கோவையில் இருசக்கர வாகனத்தை திருடிக் கொண்டு புத்தரகவுண்டன்பாளையம் வந்து நகை பறிப்பில் ஈடுபட்டதும் தெரிய வந்தது. மேலும் இவர்கள் குடும்பத்தோடு சென்னையில் பானிபூரி கடை வைத்திருப்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

    இருவரையும் கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து 7 சவரன் நகை, இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர்.

    இதுகுறித்து வாழப்பாடி டி.எஸ்.பி ஹரிசங்கரி கூறும்போது, மூதாட்டி விஜயா வீட்டில் தனியாக இருந்ததை நோட்டமிட்டு, தண்ணீர் கேட்பது போல் நடித்து நகை பறிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

    இதற்காக தனிப்படை அமைக்கப்பட்டு, சி.சி.டி.வி கேமிரா காட்சிகளின் அடிப்படையில் குற்றவாளிகளை தேடி வந்த நிலையில், வாகன தணிக்கையின்போது இருவரும் சிக்கினர்.

    வீட்டில் இருக்கும் முதியோர்களிடம், இதுபோன்று அடையாளம் தெரியாத நபர்களிடம் பேச்சு கொடுக்கவோ, வீட்டுக்குள் அனுமதிக்கவோ கூடாது என அறிவுறுத்த வேண்டும்.

    வெளியூர் செல்வதாக இருந்தால் போலீஸ் நிலையத்தில் தகவல் தெரிவிக்க வேண்டும். அளவுக்கு அதிகமான நகைகள் இருந்தால் வங்கி லாக்கரில் வைக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

    Next Story
    ×