என் மலர்
உள்ளூர் செய்திகள்

வடவள்ளி சோமையம்பாளையத்தில் தூய்மை பணியாளர்கள் திடீர் போராட்டம்
- நடப்பு மாதத்துக்கான சம்பளம் வழங்காததால் ஊராட்சி செயலரை கண்டித்து தர்ணா
- பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்
வடவள்ளி,
கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் ஒன்றியத்திற்கு உட்பட்ட சோமையம்பாளையம் ஊராட்சியில் 30 பேர் தூய்மை பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களுக்கு ஒவ்வொரு மாதமும் தாமதமாக சம்பளம் வழங்கப்பட்டு வந்தது.
நடப்பு மாதத்துக்கான சம்பளம் இதுவரை வழங்கப்படவில்லை. எனவே அவர்கள் இது குறித்து ஊராட்சி செயலரிடம் முறையிட்டனர். அவர் முறையான பதில் அளிக்கவில்லை என்று தெரிகிறது.
இந்த நிலையில் தூய்மை பணியாளர்கள் சோமையம்பாளையம் ஊராட்சி அலுவலகம் முன்பு இன்று காலை காலை 7 மணியளவில் ஊராட்சி செயலரை கண்டித்து ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். இது 10 மணி வரை நீடித்தது.
அப்போது மாதம் 5-ந்தேதிக்குள் சம்பளம் வழங்க வேண்டும், வேலை செய்ய உபகரணங்கள் அளிக்க வேண்டும். தூய்மை பணியாளர்களை அலுவலகத்திற்குள் அனு மதிக்க வேண்டும், அரசு சலுகைகள் அனைத்தும் தர வேண்டும்.பல ஆண்டு களாக வேலை செய்யும் தூய்மை பணிய்ளர்களை நிரந்தரப்படுத்த வேண்டும், வங்கியில் செலுத்திய சம்பள பணத்தில் கணிசமான தொகையை திரும்ப கேட்க கூடாது என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.
இது குறித்து தகவல் அறிந்த ஊராட்சி தலைவர் ரங்கராஜ், ஊராட்சி செயலர் செழியன் மற்றும் வடவள்ளி போலீசார் சம்பவ இடத்துக்கு வந்திருந்து போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து, தூய்மை பணியாளர்கள் கோரிக்கையை மனுவாக எழுதி கொடுத்து விட்டு போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.






