என் மலர்tooltip icon

    சிவகங்கை

    காரைக்குடி அருகே குடும்ப பிரச்சினையில் மனைவி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். அவரை காப்பாற்ற சென்ற கணவரும் உடல் கருகி இறந்தார்.

    சிவகங்கை:

    சிவகங்கை மாவட்டம் காரைக்குடி தாலுகா சாக்கோட்டை வடக்கு தெருவை சேர்ந்தவர் கணபதி (வயது36). கொத்தனாரான இவருக்கு கற்பகம் (30) என்ற மனைவியும், 3 வயது ஆண் குழந்தையும், 2 வயதில் பெண் குழந்தையும் உள்ளனர்.

    மது பழக்கத்திற்கு அடிமையான கணபதி அடிக்கடி மது குடித்துவிட்டு மனைவியிடம் பிரச்சினை செய்து வந்ததாக கூறப்படுகிறது.

    இந்நிலையில் அப்பகுதியில் கோவில் திருவிழா தொடங்கியதையடுத்து நேர்த்திக்கடன் செலுத்துவதற்காக குழந்தைகளுக்கு காப்பு கட்டி விரதம் இருந்து வந்தார்.

    நேற்று கணபதி வழக்கம் போல் மது குடித்துவிட்டு போதை தலைக்கேறிய நிலையில் வீட்டிற்கு வந்தார். அப்போது மனைவி காப்பு கட்டி இருக்கும் நேரத்தில் ஏன் மது குடித்தீர்கள் என்று கேட்டுள்ளார். இதனால் 2 பேருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.

    இதனால் மனமுடைந்த கற்பகம் திடீரென வீட்டிலிருந்து மண்எண்ணையை எடுத்து தனது உடலில் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். இதை எதிர்பாராத கணபதி அதிர்ச்சி அடைந்து உடனே மனைவியை காப்பாற்ற முயன்றார். இதில் 2 பேரும் உடல் கருகினர். வலியால் அலறி துடித்த 2 பேரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே கணபதி, கற்பகம் ஆகிய 2 பேரும் பரிதாபமாக இறந்தனர்.

    இந்த சம்பவம் குறித்த சாக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தேவகோட்டை அருகே வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இவருக்கு 2 குழந்தைகள் உள்ளனர். 2 குழந்தைகளும் சரியான மூளை வளர்ச்சி இன்றி பிறந்துள்ளதால் மனம் உடைந்து இந்த முடிவு எடுத்துள்ளார்.
    தேவகோட்டை:

    சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை, தெற்கு செய்யானேந்தல் பகுதியைச் சேர்ந்தவர் பீட்டர் (வயது 36). இவருக்கு 2 குழந்தைகள் உள்ளனர். 2 குழந்தைகளும் சரியான மூளை வளர்ச்சி இன்றி பிறந்துள்ளனர்.

    இதனால் மனம் உடைந்த நிலையில் இருந்த அவர் சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத போது தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதுகுறித்து தேவகோட்டை தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    சிவகங்கை மாவட்டத்தில் அரசு இ.சேவை மையங்களில் மின் கட்டணம் செலுத்தலாம் என்று கலெக்டர் அறிவித்துள்ளார்.

    சிவகங்கை:

    சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மாவட்ட மின் ஆளுமை சங்கம் மூலமாக மொத்தம் 331 அரசு இ–சேவை மையங்கள் இயங்கி வருகின்றன. அவற்றில் 16 மையங்கள் தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் மூலமாக வட்டாட்சியர் அலுவலகங்களிலும், 5 மையங்கள் தமிழ்நாடு மின்னணு நிறுவனம் மூலமாக மாவட்ட கலெக்டர் அலுவலகங்கள் மற்றும் இதர இடங்களில் செயல்பட்டு வருகின்றன.

    இதுதவிர, கிராம ஊராட்சிகளில் 129 மையங்கள் வேளாண்மை கூட்டுறவு கடன் வழங்கும் சங்கங்கள் மூலமாகவும், 181 மையங்கள் கிராம வறுமை ஒழிப்பு சங்கங்கள் மூலமாகவும் சேவைகள் வழங்கி வருகின்றன. இச்சேவை மையங்கள் மூலமாக வருவாய்த்துறை சான்றிதழ்கள், சமூகநலத்துறை திருமண நிதி உதவி திட்டம் போன்ற பல்வேறு சேவைகள் வழங்கப்பட்டு வருகின்றன.

    தற்போது, அரசு இ–சேவை மையங்களின் மூலமாக மின்கட்டணமும் செலுத்த வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதன் விளைவாக, நுகர்வோர் மின் கட்டணம் செலுத்த மின்சார வாரிய அலுவலகங்களுக்கு நீண்டதூரம் செல்லாது, தங்களது இல்லத்திற்கு அருகாமையில் உள்ள அரசு இ–சேவை மையத்தின் சேவையை பயன்படுத்தி தங்களது மின்கட்டணத்தை செலுத்தலாம்.

    பொதுமக்கள் மேற்கண்ட அரசு இ–சேவை மையங்களை மின்கட்டணம் செலுத்த பயன்படுத்திக் கொள்ளுமாறு மாவட்ட கலெக்டர் மலர்விழி தெரிவித்துள்ளார்.

    தேவகோட்டை அருகே விவசாயி வீட்டில் இருந்த பீரோவை உடைத்து வெள்ளிப்பொருட்கள் திருடிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.

    தேவகோட்டை:

    தேவகோட்டை அருகே தாழையூர் முத்துபெரிய நாயகி நகரில் விவசாயி செல்வராஜ் என்பவர் வசித்து வருகிறார்.

    இவர் குடும்பத்துடன் மதுரையில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளார். திரும்பி வந்து வீட்டை திறக்கும் போது வீட்டின் பின்பக்க கதவு உடைத்து பீரோ உடைக்கப்பட்டு கிடந்தது.

    பீரோவில் வைத்திருந்த அரைக்கிலோ மதிப்புள்ள வெள்ளி சாமான்கள் திருடு போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்பு ஆறாவயல் போலீசுக்கு தகவல் தெரிவித்தார். அங்கு வந்த போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரனை செய்து வருகிறார்கள்.

    இதேபோல சம்பவங்கள் இப்பகுதியில் அடிக்கடி நடப்பதால் அப்பகுதில் குடியிருப்போர் அச்சத்துடன் வாழ்ந்து வருகிறனர்.

    தேவகோட்டையில் வாலிபர் கழுத்து அறுத்து கொடூரமாக கொலை செய்யப்பட்டார்.

    தேவகோட்டை:

    ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே உள்ள திருவெற்றியூரை சேர்ந்தவர் சதாசிவம் (வயது35). ஆசாரியான இவர் சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் தங்கி இருந்து வேலைபார்த்து வந்தார்.

    இந்நிலையில் சதாசிவம் தனது நண்பர்கள் திருவெற்றியூரை சேர்ந்த கருப்பையா, தேவகோட்டையை சேர்ந்த குமார் உள்பட 3 பேருடன் தேவகோட்டை பஸ் நிலையத்திற்கு வந்தார். அங்குள்ள டாஸ்மாக் கடை அருகே கள்ளத்தனமாக மது வாங்கினர். பின்னர் 4 பேரும் கடையின் முன்பு வாசலில் அமர்ந்து மது குடித்துள்ளனர்.

    போதை தலைக்கேறிய நிலையில் சதாசிவத்துக்கும், 3 பேருக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. உடனே அப்பகுதி மக்களும் சமாதானம் செய்து வைக்க முயன்றுள்ளனர். ஆனாலும் 4 பேர் சண்டை போடுவதை நிறுத்தவில்லை.

    அப்போது ஆத்திர மடைந்த கருப்பையா, குமார் உள்பட 3 பேர் சதாசிவத்தை படுக்க வைத்து மதுபாட்டிலால் கழுத்தை அறுத்தனர். வலியால் அலறி துடித்த அவர் ரத்த வெள்ளத்தில் சிறிது நேரத்தில் பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து தகவல் அறிந்த தேவகோட்டை டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சதா சிவத்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார். இச்சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து அப்பகுதியில் பதுங்கி இருந்த குமாரை கைது செய்தனர். கருப்பையா உள்பட 2 பேரை தேடி வருகின்றனர்.

    பட்டப்பகலில் ஆள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் நடந்துள்ள இந்த கொலை சம்பவம் தேவகோட்டை மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    சிவகங்கை பகுதியில் குழாய்கள் சீரமைக்கபடுவதால் 6,7–ந் தேதிகளில் குடிநீர் விநியோகம் நிறுத்தப்படும் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.

    சிவகங்கை:

    சிவகங்கை பகுதியில் குழாய்கள் சீரமைக்கபடுவதால் 6,7–ந் தேதிகளில் குடிநீர் விநியோகம் நிறுத்தப்படும் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து சிவகங்கை மாவட்ட கலெக்டர் மலர்விழி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:–

    சிவகங்கை நகராட்சி, மதுரை– தொண்டி தேசிய நெடுஞ்சாலை, புதிய மேம்பாலம் மற்றும் சுரங்க பாதைகள் அமைக்கப்பட்டு வருகிறது.

    இந்த இடத்தில் ராமநாதபுரம் கூட்டுக்குடி நீர் திட்டத்தின் கீழ் (காவேரி ஆற்று நீர்) சுரங்க சாலையின் நடுவே பதிக்கப்பட்டுள்ள 350 மி.மீ சிமெண்ட் குழாய்களை மாற்றி சாலை ஓரமாக மாற்று இரும்பு குழாய்கள் பதிக்கும் பணிகள், புதிய குழாய்களை பழைய குழாய்களுடன் இணைக்கும் பணிகள் நடைபெற உள்ளது.

    இதனால் சிவகங்கை நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் ராமநாதபுரம் கூட்டுக்குடிநீர் திட்டத்தின் மூலம் வழங்கப்படும் குடிநீர் வரும் 6, 7–ந் தேதி ஆகிய இரண்டு தினங்கள் நிறுத்தப்படும்.

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    காரைக்குடியில் கேபிள் ஆப்டிக்கல் வயரை சேதப்படுத்தி ஒளி பரப்பை தடுத்த 2 கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள் கைது செய்யப்பட்டனர்.

    காரைக்குடி:

    காரைக்குடி அழகப் பாபுரத்தை சேர்ந்தவர் தமிழ்மணி (வயது 41), செக்காலையை சேர்ந்தவர் முத்துக்குமார் (41). ஏரியா கேபிள் டி.வி. ஆபரேட்டர் களான இவர்கள் அரசுக்கு செலுத்த வேண்டிய கேபிள் கட்டணத்தை செலுத்த வில்லை என கூறப்படு கிறது.

    இதையடுத்து அரசு கேபிள் ஆபரேட்டர் பழனிச் சாமி (33), 2 பேர்களின் ஏரியாவில் கேபிள் டி.வி. ஒளிபரப்பை நிறுத்தி வைத்தார்.

    இதனால் ஆத்திரமடைந்த தமிழ்மணி, முத்துக்குமார் ஆகிய 2 பேர் காரைகுடி சுப்பிரமணியபுரத்தில் உள்ள கேபிள் ஆப்டிக்கல் பைபர் லயன் வயரை தேசப்படுத்தினர். இதனால் காரைக்குடி நகர் முழுவதும் கேபிள் டி.வி. ஒளிபரப்பு தடைப்பட்டது.

    இதுகுறித்த புகாரின் பேரில் காரைக்குடி வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் பிச்சை பாண்டியன் வழக் குப்பதிவு செய்து தமிழ்மணி, முத்துக்குமாரை கைது செய்தனர்.

    மானாமதுரை பகுதியில் தொடர் மழையால் விவசாய பணிகள் மும்முரம் அடைந்துள்ளன.

    மானாமதுரை:

    கடந்த 16–ந்தேதியில் இருந்து தமிழகம் முழுவதும் தொடர் மழை 2 நாட்கள் பெய்தது. அதை தொடர்ந்து வெயிலும் கொளுத்தியது. மீண்டும் கடந்த 3 நாட்களாக சூறாவளி காற்றுடன் மானாமதுரை பகுதியில் 1 மணி நேரம் விட்டு விட்டு மழை பெய்தது. திடீர் சூறாவளி காற்றால் மேலப்பசலை, மேலநெட்டூர், குறிச்சி, செய்களத்தூர், கள்ளர்வலசை ஆகிய பகுதியில் ஏராளமான வாழை மரங்கள் சாய்ந்தது.

    திடீர் மழையால் மகிழ்ச்சி அடைந்த விவசாயிகள் தற்போது விவசாய பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். மானாமதுரை அருகே உள்ள அன்னியேந்தல், முத்தனேந்தல், மேட்டுமடை, பெரும்பச்சேரி, கொம்புக் காரனேந்தல், கட்டிகுளம், முல்லைகுளம், குவளை வெளி பகுதியில் விவசாய பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது.

    மழை நீடிக்கும் என்பதால் நிலங்களை உழுதும் தயார் செய்து வருகின்றனர்.

    கூடுதல் வரதட்சணை கேட்டு இளம்பெண்ணை சித்ரவதை செய்ததாக கணவர் உள்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    காரைக்குடி:

    காரைக்குடியை அடுத்து உள்ள இலுப்பக்குடி கலை மணி நகரைச் சேர்ந்தவர் ஷீலா சில்வியா (வயது25). இவருக்கும், தேவகோட்டை ராம்நகரைச் சேர்ந்த பிரவீன் (32) என்பவருக்கும் கடந்த 2014–ம் ஆண்டு திருமணம் நடந்தது. அப்போது 35 பவுன் நகை, ரூ.1 லட்சம் ரொக்கம் வரதட்சணையாக கொடுக்கப்பட்டது.

    இந்த நிலையில் ஷீலா சில்வியா காரைக்குடி அனைத்து மகளிர் போலீசில் ஒரு புகார் கொடுத்துள்ளார். அதில், கூடுதல் வரதட்சணை கேட்டு கணவர் பிரவீன் சித்ரவதை செய்து வருகிறார். இதற்கு உடந்தையாக மாமியார் ஜேம்ஸ்மேரி (52), நாத்தனார் தேன்மொழி (27), அவரது கணவர் ஆண்டனி ஜெயக்குமார் ஆகியோர் உள்ளனர்.

    புகாரின்பேரில் காரைக்குடி மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராதுராஜூ விசாரணை நடத்தி பிரவீன் உள்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளார்.

    மானாமதுரை பகுதியில் கன மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    மானாமதுரை:

    சிவகங்கை மாவட்டம் மானாமதுரை பகுதியில் கடந்த சில நாட்களாக வெயில் கொளுத்தியது. 2 நாட்களாக பலத்த காற்றும் வீசியது. திடீர் என்று மழை பெய்தது. மழை பெய்ய தொடங்கியபோது சுமார் 5 நிமிடம் ஆலங்கட்டி மழையாக பெய்தது.

    ரோடுகளில் பணி துளி தெறித்து ஒடியது. பின் தொடர் மழையால் மானாமதுரை, சிவகங்கை சாலையில் மழைநீர் தேங்கி குளம்போல் காணப்பட்டது. சிப்காட் தொழிற்பேட்டை பகுதியில் புதிதாக அமைக்கப்பட்ட சாலைகளில் மழைநீர் முழங்கால் அளவு ஓடியது.

    மழைநீர் செல்லும் கால்வாய்களில் அடைப்பு ஏற்பட்டதால் ரோடுகளில் தண்ணீர் பெருக்கு எடுத்து ஓடியது. கன மழையால் மானாமதுரை பகுதி குளிர்ச்சி அடைந்து காணப்பட்டது. விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்தனர்.

    காளையார்கோவிலில் கடந்த 23-ந்தேதி மர்ம நபர்களால் வாலிபர் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் அண்ணன், தம்பி கைது செய்யப்பட்டனர்.
    காளையார்கோவில்:

    காளையார்கோவில் கிழக்கு ஒத்தவீடு பகுதியைச் சேர்ந்தவர் குட்டுலு என்ற கார்த்திக்(வயது26). இவர் கடந்த 23-ந்தேதி மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் குறித்து காளையார்கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

    இந்தநிலையில் இந்த கொலையில்  சம்பந்தப்பட்ட காளையார்கோவில் அருகே உள்ள வளையம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ஜான்சன் என்பவருடைய மகன் சார்லி(24). அவரது தம்பி பிரபாகரன்(21) ஆகிய 2 பேரை போலீசார் பிடித்தனர்.

    அவர்கள் 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. இதில், மானாமதுரை தாலுகா அளவில் குட்வில் மெட்ரிகுலேசன் பள்ளி மாணவ-மாணவிகள் முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளனர்.
    மானாமதுரை:

    எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவுகள் நேற்றுமுன்தினம் வெளியிடப்பட்டன. இதில், மானாமதுரை தாலுகா அளவில் குட்வில் மெட்ரிகுலேசன் பள்ளி மாணவ-மாணவிகள் முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளனர். இந்த பள்ளியைச் சேர்ந்த மாணவன் நவீன், மாணவி அம்ரிதா ஆகியோர் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் 500-க்கு 495 மதிப்பெண்கள் பெற்று தாலுகா அளவில் முதல் இடம் பிடித்துள்ளனர்.

    இதேபோல் இந்த பள்ளியில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு எழுதிய 28 மாணவர்கள் 450 மதிப்பெண்களுக்கு அதிகமாகவும், 49 மாணவர்கள் 400 மதிப்பெண்களுக்கு அதிகமாகவும் பெற்றுள்ளனர்.

    பள்ளியின் 100 சதவிகித தேர்ச்சிக்கு உழைத்த ஆசிரியர்கள், சாதனை படைத்த மாணவர்கள் ஆகியோரை பள்ளி தாளாளர் பூமிநாதன் வாழ்த்தினார்.
    ×