என் மலர்
சிவகங்கை
சிவகங்கை:
சிவகங்கை மாவட்டத்தில் நாளை அம்மா திட்ட முகாம்கள் நடக்கிறது.
இதுகுறித்து மாவட்ட கலெக்டர் மலர்விழி விடுத்துள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:–
காரைக்குடி வட்டம் புரண்டி, திருப்புவனம் வட்டம் செம்பூர், தேவகோட்டை வட்டத்தில் புளியால், மானாமதுரை வட்டத்தில் செங்கட்டியேந்தல், திருப்பத்தூர் வட்டத்தில் செவ்வூர், சிவகங்கை வட்டத்தில் பெரியகோட்டைபட்டி, இளையாங்குடி வட்டத்தில் பெரும்பாலை, காளையார்கோவில் வட்டத்தில் பி.உடையரேந்தல் ஆகிய கிராமங்களில் நாளை (வெள்ளிக்கிழமை) அம்மா திட்ட முகாம் நடக்கிறது.
அம்மா திட்ட முகாமில் பொதுமக்கள் ஆவணங்களுடன் மனுக்கள் வழங்கி பயன்பெறலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
காரைக்குடியில் உள்ள தலைமை தபால் நிலைய சேமிப்பு கணக்குகளில் பல லட்ச ரூபாய் மோசடி நடந்ததாக எழுந்த புகாரின் பேரில் அஞ்சலக பெண் முகவர் வீட்டில் சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை நடத்தி முக்கிய ஆவணங்களை பறிமுதல் செய்தனர்.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் சில மாதங்களுக்கு முன்னர் தலைமை தபால் நிலையத்தில் அஞ்சலக சேமிப்பு கணக்கு வைத்திருக்கும் பல்வேறு நபர்களின் ரகசிய குறியீட்டு எண்ணை பயன்படுத்தி அவர்களின் கணக்குகளில் இருந்த பல லட்சக்கணக்கான ரூபாய் பணத்தை வெவ்வேறு கணக்குகளுக்கு மாற்றம் செய்து மோசடி நடந்து இருப்பது தெரியவந்தது.
இதுகுறித்து எழுந்த புகாரின்பேரில் தபால்துறை உயர் அதிகாரிகள், காரைக்குடி தலைமை தபால் நிலையத்தில் உள்ள அஞ்சலக சேமிப்பு கணக்குகளை ஆய்வு செய்தனர்.
மேலும் இதுதொடர்பாக அந்த துறையில் வேலை பார்த்த ஒரு பெண்ணிடம் விசாரணை நடத்த அதிகாரிகள் முடிவு செய்தனர். இதனை அறிந்த அந்த பெண் திடீரென தலைமறைவாகி விட்டார்.
இந்த நிலையில் காரைக்குடி சர்ச் 2-வது வீதியில் வசிக்கும் அஞ்சலக முகவர் லலிதா என்பவரின் வீட்டிற்கு நேற்று 7 பேர் கொண்ட சி.பி.ஐ. அதிகாரிகள் குழுவினர் வந்தனர். அவர்கள் வீட்டினுள் அதிரடியாக நுழைந்ததும், அங்கு இருந்தவர்களின் செல்போன்களை பறிமுதல் செய்தனர். வீட்டின் தொலைபேசி இணைப்பு துண்டிக்கப்பட்டது.
இதைதொடர்ந்து சி.பி.ஐ. அதிகாரிகள் சுமார் 8 மணி நேரம் அவரது வீட்டில் தீவிர சோதனை நடத்தினர். மேலும், லலிதாவிடம் அவர்கள் விசாரணையும் நடத்தியதாக தெரிகிறது. சோதனையின்போது, சி.பி.ஐ. அதிகாரிகள் அவரது வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்ட பல்வேறு முக்கிய ஆவணங்களை எடுத்துச் சென்றனர்.
மதுரை வண்டியூர் பகுதியைச் சேர்ந்தவர் செல்வம் (வயது 45). கொத்தனார். சம்பவத்தன்று இவர் திருப்பாச்சேத்தி அருகே உள்ள விளத்தூரில் கொத்தனார் வேலை பார்த்து விட்டு மதுரை வண்டியூருக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது, திருப்புவனம் போலீஸ் சரகம் கழுகேர்கடை விலக்கு பகுதியில் சென்ற கொண்டிருந்த போது மதுரையில் இருந்து ராமேசுவரம் நோக்கி வந்த அரசு பஸ், மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இந்த விபத்தில் பலத்த காயமடைந்த செல்வம் மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் நேற்று செல்வம் சிகிச்சை பலனின்றி இறந்தார்.
இதுகுறித்து திருப்புவனம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சேசு வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார்.
காரைக்குடி:
சிவகங்கை மாவட்டம் திருக்கோஷ்டியூர் அருகே உள்ள சுன்னங்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் அழகப்பன் (வயது 32) திருமணமாகி 1 வருடம் ஆகிறது. சிங்கப்பூரில் வேலை பார்த்து வந்தார்.
ஒருமாத விடுமுறையில் கடந்த 9–ந் தேதி ஊருக்கு வந்த அழகப்பன், நேற்று மாலை புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தில் உள்ள நண்பரை பார்ப்பதற்காக மோட்டார் சைக்கிளில் புறப்பட்டார்.
ராமேசுவம் – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சேத்தம்பட்டி, புதுக்குடியிருப்பு அருகே சென்று கொண்டிருந்த போது எதிரே வந்த கார், மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டதில் படுகாயம் அடைந்த அழகப்பனை 108 ஆம்புலன்ஸ் மூலம் காரைக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். எனினும் சிகிச்சை பலனின்றி சிறிது நேரத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து அழகப்பனின் மனைவி சத்யா கொடுத்த புகாரின் பேரில், குன்றக்குடி காவல் நிலைய ஆய்வாளர் ரவீந்திரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
தேவகோட்டை நகர் ஆலம்பட்டார் வீதியை சேர்ந்தவர் மூர்த்தி. இவரது மனைவி சுமத்ரா (வயது 25). சம்பவத்தன்று இவர் வீட்டில் இருந்து அந்த பகுதியில் உள்ள கடைக்கு நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது எதிரே வந்த சுமார் 25 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் சுமத்ராவை வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டி அவர் அணிந்திருந்த 3¾ பவுன் தாலிச்சங்கிலியை பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றார். இது குறித்த புகாரின் பேரில் தேவகோட்டை நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
மானாமதுரையில் இருந்து மணக்குடிக்கு மினி பஸ் புறப்பட்டது. இந்த பஸ்சை கண்ணன் என்பவர் ஓட்டி சென்றார். பஸ்சில் பயணிகள் கூட்டமும் அதிகமாக இருந்தது.
மணக்குடி விலக்கு அருகே பஸ் வந்தபோது எதிர்பாராதவிதமாக டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது. அதே வேகத்தில் சாலையோரம் இருந்த பனை மரத்தில் பஸ் மோதியது.
இந்த விபத்தில் பஸ்சில் பயணம் செய்த குழந்தைகள், பெண்கள் உள்பட 16 பேர் காயம் அடைந்தனர். அவர்கள் சிகிச்சைக்காக சிவகங்கை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.
விபத்து தொடர்பாக பஸ் உரிமையாளர் கதிர்வேல், மானாமதுரை போலீசில் புகார் கொடுத்தார். சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
சிவகங்கை மாவட்டம் படமாத்தூரில் தனியாருக்கு சொந்தமான பெட்ரோல் பங்க் உள்ளது. இங்கு ஊழியராக இருப்பவர் செல்வம் (வயது32). இரவு காவலராக பணியாற்றுபவர் அங்கமுத்து (60).
நேற்று இரவு இவர் காவல் பணியில் இருந்தார். செல்வம் பங்க் அலுவலகத்தில் இருந்தார். அப்போது அங்கு 3 பேர் ஒரே மோட்டார் சைக்கிளில் வந்தனர்.
வாகனத்தை ஓட்டி வந்தவன் ஹெல்மெட் அணிந்திருக்க மற்றவர்கள் சாதாரணமாகத்தான் இருந்துள்ளனர். வாகனத்தை கண்டதும் செல்வம் பெட்ரொல் போட எழுந்து வந்துள்ளார்.
அப்போது வாகனத்தில் வந்த 3 பேரும் திடீரென செல்வத்தை தாக்கினர். இதில் அவர் நிலை குலைந்ததும் பணப்பையை பிடுங்க முயன்றனர். இதனை கண்ட இரவு காவலர் அங்கமுத்து அங்கு ஓடிவர அவரையும் 3 பேர் கும்பல் தாக்கியது. பின்னர் அந்த கும்பல் கத்திமுனையில் 2 பேரையும் மிரட்டி பணப்பையை பறித்தது. மேலும் அவர்கள் 2 பேரின் செல்போன்களையும் பிடுங்கி சென்றது.
பின்னர் அவர்கள் மோட்டார் சைக்கிளில் ஏறி மதுரை சாலையில் வேகமாக சென்றுவிட்டனர். இந்த சம்பவத்தால் அதிர்ச்சி அடைந்த பெட்ரோல் பங்க் ஊழியர்கள் பூவந்தி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். அப்போது பணப்பையில் ரூ.22 ஆயிரம் வரை இருக்கலாம் என ஊழியர்கள் என கூறினர்.
தாக்குதலில் காயம் அடைந்த செல்வம் மற்றும் அங்கமுத்து சிகிச்சைக்காக சிவகங்கை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். இன்று அதிகாலை நடைபெற்ற இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பெட்ரோல் பங்க் ஊழியர்களை தாக்கி பணம் பறித்து சென்றவர்கள் யார்? என்பது குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.
சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் அருகே உள்ள திருக்கோஷ்டியூரை சேர்ந்தவர் கருப்பையா. இவரது மகன் அழகுபாண்டியன் (வயது 32). வெளிநாட்டில் வேலை பார்த்து வந்த இவருக்கு கடந்த 2 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.
இந்நிலையில் நேற்று அழகுபாண்டியன் வேலை நிமித்தமாக திருப்பத்தூருக்கு மோட்டார் சைக்கிளில் சென்றார். திருப்பத்தூர் ரோட்டில் உள்ள தாணிப்பட்டி விலக்கு அருகே சென்றபோது மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து முன்னால் சென்ற மோட்டார் சைக்கிள் மீது பலமாக மோதியது. இதில் 2 மோட்டார் சைக்கிள்களும் ரோட்டில் கவிழ்ந்தன.
இந்த விபத்தில் படுகாயம் அடைந்த அழகு பாண்டியன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்த திருப்பத்தூரை சேர்ந்த அல்லா பிச்சை படுகாயமடைந்தார்.
இந்த விபத்து குறித்து திருக்கோஷ்டியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணமான 2 மாதத்தில் வாலிபர் விபத்தில் சிக்கி இறந்தது உறவினர்களிடையே சோகத்தை ஏற்படுத்த உள்ளது.
தே.மு.தி.க. மாநில பிரமுகர் இல்ல திருமண விழா காரைக்குடியில் இன்று நடைபெற்றது. விழாவில் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த், மனைவி பிரேமலதாவுடன் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்.
பின்னர் விஜயகாந்த் பேசியதாவது:-
விஜயகாந்த், பத்திரிகையாளர்களை பார்த்து பயப்படுவதாக கூறுகிறார்கள். நான் யாருக்கும் பயப்படமாட்டேன். என்னை பார்த்துதான் பத்திரிகையாளர்கள் பயப்படுகிறார்கள். சாம்பலில் இருந்து விழித்தெழும் பீனிக்ஸ் பறவை போல் தே.மு.தி.க. உயிர்த்தெழும்.
இவ்வாறு அவர் பேசினார்.
விழாவில் பிரேமலதா விஜயகாந்த் பேசியதாவது:-
சினிமாவில் கேப்டன் முதலில் வில்லன்களிடம் அடிவாங்குவார். அதன் பின்னர் அவர்களை அடித்து நொறுக்கி வெற்றி பெறுவார். அதுபோல தேர்தலில் தோல்வியடைந்தாலும் தே.மு.தி.க. மீண்டும் ஜெயிக்கும்.
கால்பந்து போட்டியில் பந்து பலரது காலில் உதைபட்டு அதன்பின்னரே கோலாக மாறும். அதுபோல தே.மு.தி.க.வும் வெற்றி பெறும்.
இவ்வாறு அவர் கூறினார்.
காரைக்குடி:
காரைக்குடி அண்ணா நகரை சேர்ந்தவர் சகாயம் எட்வின்ராஜ் (வயது36). இவரது மனைவி தேவ சங்கீதா (29). கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இவர்களுக்கு திருமணம் நடந்தது. அப்போது 28 பவுன் நகை, சீர்வரிசை பொருட்கள் வர தட்சணையாக கொடுக்கப்பட்டன.
தற்போது இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு 2 பேருக்கும் ஏற்பட்ட பிரச்சினையில் தேவசங்கீதா கோபித்து கொண்டு தாய் வீட்டிற்கு சென்று விட்டார்.
இந்நிலையில் தேவசங்கீதா காரைக்குடி அனைத்து மகளிர் போலீசில் ஒரு புகார் செய்துள்ளார். அதில் கடந்த 4–ந்தேதி நான் என்னுடைய கணவர் வீட்டிற்கு சென்றபோது கணவர் சகாயம் எட்வின் ராஜ், அவரது தம்பி குழந்தை ராஜன் ஆகியோர் கூடுதல் வரதட்சணை கேட்டு துன்புறுத்தியதோடு கொலை மிரட்டலும் விடுத்ததாக தெரிவித்துள்ளார்.
இதன்பேரில் சப்–இன்ஸ் பெக்டர் சீதாலட்சுமி விசாரணை நடத்தி சகாயம் எட்வின்ராஜ் உள்பட 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே உள்ள வெட்டளிவயலை சேர்ந்தவர் சுந்தர்ராஜன். இவரது மகன் ராஜதுரை (வயது24). என்ஜினீயரிங் முடித்துள்ள இவர் வேலை தேடி வந்தார்.
நேற்று இவரும், அதே பகுதியை சேர்ந்த நண்பர் மனோகரன் ஆகிய 2 பேரும் மதுரைக்கு மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தனர். சிவகங்கை மாவட்டம் திருப்பத்துதூர் எஸ்.எஸ்.கோட்டை அருகே உள்ள கொல்லுக்குடிபட்டி விலக்கு அருகே வந்து கொண்டிருந்தபோது அடையாளம் தெரியாத வாகனம் மோட்டார் சைக்கிளில் மீது மோதிவிட்டு சென்றது.
இதில் 2 பேரும் தூக்கி வீசப்பட்டனர். ரத்த வெள்ளத்தில் படுகாயமடைந்த ராஜதுரை சம்பவ இடத்திலேயே பலியானார். உயிருக்கு போராடிக் கொண்டிருந்த மனோகரனை அந்த வழியாக வந்தவர்கள் மீட்டு திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
இந்த விபத்து குறித்து எஸ்.எஸ்.கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவண ரவி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை தாலுகா கோட்டவயல் கிராமத்தில் அமைந்து அருள்பாலித்து வரும் மிகவும் பிரசித்தி பெற்ற ஆலயம் ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயம். 40 வருடங்களுக்கு முன்பாக கட்டப்பட்ட இந்த கோயிலானது பராமரிப்பு செய்யப்பட்டு கும்பாபிஷேகம் நடத்த கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னர் கிராமத்தாரால் முடிவு செய்யப்பட்டது.
இதனை தொடர்ந்து கடந்த மூன்று மாதங்களாக கோவிலை பராமரிப்பு செய்து கும்பாபிஷேகத்திற்கான பணிகள் நடைபெற்று வந்தது. வெள்ளிக்கிழை காலை முதல் காலயாகபூஜை தொடங்கப்பட்டது.
இதனை தொடர்ந்து கோ பூஜை, பூர்ணாகுதி தீபாரதானை காட்டப்பட்டு கடம்புறப்பாடு நடைபெற்று 9.50 மணியளவில் மேல தாளங்கள் முழங்க பக்தர்கள் கூடிநிற்க கோபுரத்தில் புனித நீர் ஊற்றப்பட்டது. தொடர்ந்து முத்துமாரியம்மனுக்கு சிறப்பு பூஜைகளும் அபிஷேக ஆராதனைகளும் நடைபெற்றது.
இந்த கும்பாபிஷேகத்தை காண தேவகோட்டை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராள மான பொதுமக்கள் கலந்து கொண்டு முத்துமாரியம்மன் அருள் பெற்று சென்றனர். விழாவிற்கான ஏற்பாடுளை கோயில் நிர்வாகத்தினர் மற்றும் ஊர்மக்கள் செய்திருந்தனர்.






