என் மலர்
சிவகங்கை
தமிழ் மாநில காங்கிரசின் மாநில செயலாளரும், சங்கராபுரம் ஊராட்சி மன்ற தலைவருமான மாங்குடி தலைமையில் 100-க்கும் மேற்பட்ட த.மா.கா.வினர் முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் முன்னிலையில் காங்கிரசில் இணைந்தனர்.
மேலும் அ.தி.மு.க.வைச் சேர்ந்த கிளை செயலாளரும் ஊராட்சி மன்ற உறுப்பினருமான ராஜேஷ் கண்ணன், சங்கராபுரம் ஊராட்சி மன்ற அ.தி.மு.க. உறுப்பினர்கள் வெள்ளையம்மாள், அமுதா அடைக்கண் ஆகியோரும் காங்கிரசில் இணைந்து கொண்டனர்.
இவர்களை வரவேற்று பேசிய முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம், நீங்கள் காங்கிரசிற்கு வந்துள்ளது புதிய தெம்பையும், மகிழ்ச்சியையும் அளிக்கிறது. எனக்கு உங்களிடம் வேறுபாடு கிடையாது. 30 ஆண்டுகளாக சிவகங்கை மாவட்டம் என்னை தாங்கி பிடித்துள்ளது. கட்சி வலிமை அடைய வேண்டுமென்றால் எம்.எல்.ஏ., எம்.பி. பதவிகளை விட உள்ளாட்சி அமைப்புகளில் அதிகம்பேர் வெற்றி பெற்றாக வேண்டும் என்றார்.
காரைக்குடி அருகே உள்ள புதுவயல், கல்லல் ஆகிய பகுதியில் உள்ள துணை மின்நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன.
எனவே, நாளை (27-ந்தேதி) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை புதுவயல், கண்டனூர், கோட்டையூர், ஸ்ரீராம்நகர், மணச்சை, மித்ராவயல், பெரியகோட்டை, சாக்கோட்டை, பீர்களைக்காடு, வீரசேகரபுரம், கல்லல், வெற்றியூர், பனங்குடி, பாகனேரி, மரிங்கிபட்டி, செவரக்கோட்டை மற்றும் அதனை சுற்றி உள்ள கிராமப் பகுதிகளுக்கு மின்வினியோகம் நிறுத்தப்படும் என்று காரைக்குடி உதவி செயற்பொறியாளர் செல்லத்துரை தெரிவித்துள்ளார்.
திருப்பத்தூர்:
திருப்பத்தூர் ஓன்றியம் வஞ்சினிபட்டி ஊராட்சி மன்ற தலைவராக இருப்பவர் கண்ணன். இவர் 2 முறை இக்கிராமத்தில் தலைவராக உள்ளார்.
இவருக்கும் அதே ஊரைச் சேர்ந்த வெள்ளைச்சாமி, அவரது மகன் சுப்புராம் ஆகியோருக்கும் சுற்று சுவர் எடுப்பதில் ஏற்கனவே தகராறு இருந்துள்ளது.
இந்நிலையில் நேற்று இருவருக்கும் ஏற்பட்ட வாய் தகராறு கைகலப்பாக மாறியது. இதில் ஊராட்சி மன்ற தலைவர் கண்ணன் காயங்களுடன் திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு முதலுதவி சிகிச்சை பெற்றார். பின்பு மேல் சிகிச்சைக்கு மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
இச்சம்பவம் குறித்து கண்டவராயன்பட்டி போலீசார் வெள்ளைச்சாமி, அவரது மகன் சுப்புராம் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
மானாமதுரை போலீஸ் நிலையத்தில் ஏட்டாக பணிபுரிபவர் பூபதி. இவர் சாக்கோட்டை தேரோட்ட நிகழ்ச்சி பாதுகாப்பு பணிக்கு செல்வதற்காக மானாமதுரையில் இருந்து சிவகங்கைக்கு பஸ்சில் வந்தார். பின்னர் மதுரை முக்கி ரோட்டில் இறங்கிய பூபதி சாக்கோட்டை செல்லும் பஸ்சில் ஏறுவதற்காக நடந்து வந்தார்.
அப்போது அந்த வழியாக வந்த கார் ஒன்று அவர் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த ஏட்டு பூபதியை சிவகங்கை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.
இது தொடர்பாக சிவகங்கை நகர் போலீசார் விசாரணை நடத்தி காரை ஓட்டி வந்த இடைய மேலூரைச் சேர்ந்த ரகுபதிராஜன் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
காரைக்குடி:
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியை சேர்ந்த தனியார் பள்ளியில் 10–ம் வகுப்பு படித்து வந்தவர்கள் பாலாஜி (வயது14), விக்னேஷ் (14), சஞ்சய் ராமசாமி (14), சிவபாலன் (14).
இவர்கள் 4 பேரும் கடந்த 21–ந்தேதி காலை வீட்டில் இருந்து வழக்கம் போல் பள்ளிக்கு புறப்பட்டு சென்றனர். ஆனால் அவர்கள் பள்ளிக்கு வரவில்லை என தலைமையாசிரியர் மாணவர்களின் பெற்றோருக்கு தகவல் கொடுக்க பரபரப்பு ஏற்பட்டது.
4 மாணவர்கள் ஒரே நேரத்தில் மாயமானதால் அவர்கள் கடத்தப்பட்டார்களா? அல்லது வேறு எங்காவது சேர்ந்து சென்றார்களா? என தெரியாமல் பல்வேறு பகுதிகளிலும் பெற்றோர் தேடினர். இருப்பினும் அவர்களை பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை.
இதனை தொடர்ந்து காரைக்குடி வடக்கு போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் பிச்சைப்பாண்டியன் வழக்குப்பதிவு செய்து மாயமான 4 மாணவர்களையும் தேடி வந்தார். இந்த சூழலில் மாணவர்கள் பெங்களூருவில் இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.
மாயமான 4 மாணவர்களும் பெங்களூரு சென்றுள்ளனர். அங்கு அவர்கள் சுற்றி திரிந்தபோது மாணவன் பாலாஜியின் உறவினர் கண்ணில் பட்டு விட்டனர். அவர் 4 மாணவர்களையும் மீட்டு பெற்றோருக்கு தகவல் கொடுத்துள்ளார்.
இதன் அடிப்படையில் மாணவர்களின் பெற்றோரும், போலீசாரும் பெங்களூரு விரைந்துள்ளனர். அவர்கள் வந்த பிறகே மாணவர்கள் பெங்களூரு சென்றது எப்படி என்பது குறித்த விவரம் தெரியவரும்.
மாணவர்கள் மாயமான பள்ளியில் படித்து வந்த 12–ம் வகுப்பு மாணவி ஒருவரும், கடந்த 13–ந்தேதி முதல் மாயமாகி இருப்பது தற்போது தெரியவந்துள்ளது. வீட்டில் இருந்து மாயமான அவர் ஆந்திர மாநிலம் ஹைதராபாத்தில் இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. அவரை மீட்க காரைக்குடி போலீசார் ஹைதராபாத் சென்றுள்ளனர்.
சிவகங்கை மாவட்ட வருவாய் அலுவலர் இளங்கோவிடம் இளையான்குடி தாலுகா சூராணம், ஏனாதி, உதயனூர் ஆகிய கிராம மக்கள் காலிக்குடங்களுடன் வந்து அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-
சூராணம், உதயனூர், ஏனாதி ஆகிய கிராமங்களில் ஆதிதிராவிடர் மக்கள் வசிக்கும் இடங்களில் பாதுகாக்கப்பட்ட குடிநீர் கிடைப்பது இல்லை. கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இந்த கிராம மக்கள் குடிநீருக்கு அந்த பகுதியில் உள்ள ஊருணியை பயன்படுத்தி வந்தனர். ஆனால், தற்போது, இந்த ஊருணியில் உள்ள தண்ணீர் தரமற்றதாக மாறி உள்ளது. எங்கள் பகுதிகளில் ஆழ்குழாய் கிணறுகள் அமைத்து அதன் மூலம் வழங்கப்படும் குடிநீர் உப்பு நீராக உள்ளது. இதனால், அதனை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது.
எனவே, தற்போது நாங்கள் குடிநீரை விலைக்கு வாங்கி பயன்படுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது. எங்கள் கிராமத்தின் வழியாகத்தான் காவிரி கூட்டு குடிநீர் திட்ட குழாய்கள் செல்கின்றன. எனவே, இந்த 3 கிராமங்களுக்கும் காவிரி கூட்டுக் குடிநீர் திட்டத்தில் இருந்து குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் கூறியுள்ளனர்.
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர், நெற்குப்பை அருகே உள்ள பரியாமருதுபட்டியில் பிரசித்தி பெற்ற சேவுகப்பெருமாள் கோவில் உள்ளது. ஆண்டுதோறும் இங்கு ஆனித்திருவிழா சிறப்பாக நடைபெறும். இந்த ஆண்டு கடந்த சில தினங்களுக்கு முன் கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கியது. இந்த திருவிழாவையொட்டி ஆண்டுதோறும் மஞ்சுவிரட்டு நடத்தப்படுவது வழக்கம் என்ற நிலையில் கோர்ட்டு தடையை மீறி மஞ்சுவிரட்டு நடக்காமல் இருக்க போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டு இருந்தனர்.
இந்தநிலையில் நேற்று பரியாமருதுபட்டியை சுற்றி உள்ள துவார், கருப்புக்குடி, நெற்குப்பை, புரந்தனன்பட்டி, கருமிச்சான்பட்டி, செல்லியம்பட்டி, பிரான்மலை, சிங்கம்புணரி, ஆலம்பட்டி, பொன்னமராவதி ஆகிய பகுதிகளில் இருந்து சுமார் 200-க்கும் மேற்பட்ட காளைகள் கொண்டு வரப்பட்டு அந்த பகுதியில் தடையை மீறி மஞ்சுவிரட்டு நடத்தப்பட்டது.
அங்கு திரண்டு இருந்த வாலிபர்களும், கிராம மக்களும் காளைகளை விரட்டிச் சென்று அடக்க முயன்றனர். இதில், ஒருசில காளைகள் மட்டுமே பிடிபட்டன. போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்து இருந்தபோதும், திடீரென காளைகள் வயல் பகுதிகளிலும், கண்மாய் பகுதிகளிலும், ஆற்றுப் பகுதிகளிலும் அவிழ்த்து விடப்பட்டதால் போலீசாரால் அதனை தடுக்க முடியாமல் திணறினர்.
இதுகுறித்து நெற்குப்பை போலீசார் தடையை மீறி காளைகளை அவிழ்த்து விட்டதாக பொட்டபட்டியைச் சேர்ந்த பிரபு(வயது24), சூரப்பட்டி குமார்(22), புழுதிபட்டி ரமேஷ்(38), சிங்கம்புணரி செழியன்(37), நச்சாந்துபட்டி பாண்டி(36), கோட்டூர் முருகேசன்(30) ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து 6 பேரையும் கைது செய்தனர்.
மானாமதுரை:
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே உள்ள கீழமேல்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெயகணேஷ் (வயது45), கூலி தொழிலாளி. இவரது மனைவி வீரமல்லி. கடந்த சில மாதங்களாக ஜெயகணேஷ் சரியாக வேலைக்கு செல்லாமல் மது பழக்கத்துக்கு அடிமையானார். இதனால் அடிக்கடி குடித்து விட்டு வந்து மனைவியிடம் தகராறு செய்வது வாடிக்கையாக இருந்தது.
இந்த நிலையில் நேற்று இரவும் மது குடித்த நிலையில் வீட்டுக்கு வந்த ஜெயகணேஷ் வழக்கம் போல் மனைவியிடம் தகராறு செய்தார். அப்போது வீட்டில் இருந்து வீரமல்லியின் தாயார் செல்லம்மாள், ஏன் தினமும் குடித்து விட்டு மகளிடம் பிரச்சினை செய்கிறாய் என கேட்டார்.
இதனால் ஆத்திரம் அடைந்த ஜெயகணேஷ், போதையில் தன் நிலையை மறந்து செல்லம்மாளை சுவற்றில் மோதச்செய்தும், கீழே தள்ளியும் தாக்கினார். இதில் படுகாயம் அடைந்த அவர், சிறிது நேரத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த ஜெயகணேஷ் உடனே மானாமதுரை போலீஸ் நிலையத்திற்கு சென்று நடந்த சம்பவங்களை கூறி சரண் அடைந்தார். போலீசார் அவரை கைது செய்தனர்.
இந்த நிலையில் கொலை நடந்த இடத்திற்கு வந்து மானாமதுரை போலீஸ் துணை சூப்பிரண்டு புருசோத்தமன் விசாரணை நடத்தினார். இந்த சம்பவம் குறித்து மானாமதுரை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
காரைக்குடி அருகே உள்ள கோவிலூர் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன. எனவே, நாளை (20-ந்தேதி) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கண்டரமாணிக்கம், ஆலங்குடி, சொக்கநாதபுரம், நாச்சியாபுரம், இளங்குடி, பட்டமங்கலம் மற்றும் அதனை சுற்றி உள்ள கிராமங்களுக்கு மின்வினியோகம் நிறுத்தப்படும் என்று காரைக்குடி மின்வாரிய உதவி செயற்பொறியாளர் செல்லத்துரை தெரிவித்துள்ளார்.
இதேபோல், காளையார்கோவில் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன. எனவே, நாளை (20-ந்தேதி) காலை 9 மணி முதல் 5 மணி வரை காளையார்கோவில், நாட்டரசன்கோட்டை, புளியடிதம்மம், கொல்லாவயல் ஆகிய பகுதிகளில் மின்வினியோகம் நிறுத்தப்படும் என்று மின்வாரிய செயற்பொறியாளர் சாமுவேல் ராஜசேகரன் தெரிவித்துள்ளார்.
காரைக்குடி:
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி தலைமை அஞ்சலகத்தில் சிலர் தங்களது சேமிப்பு கணக்குகளை பராமரிக்காமல் இருந்து வருகின்றனர். இதை பயன்படுத்தி அந்த கணக்குகளில் இருந்து லட்சக்கணக்கில் பணப் பரிமாற்றம் நடந்திருப்பது தெரியவந்தது.
இதுகுறித்து தென்மண்டல இயக்குநர் நிர்மலாதேவி தலைமையிலான குழுவினர் விசாரணை மேற்கொண்டனர். இதில் அஞ்சலக உதவி பெண் அலுவலர் முத்துமதி (வயது27) என்பவர் கடந்த 2 ஆண்டுகளாக பல லட்ச ரூபாயை முறைகேடாக பரிமாற்றம் செய்திருப்பது தெரியவந்தது.
இவர் எம்.சி.ஏ. பட்டதாரி என்பதால் அஞ்சலக அதிகாரிகளின் பாஸ்வேர்டை முறைகேடாக பயன்படுத்தி ஏ.டி.எம். மூலம் பணப்பரிமாற்றம் செய்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவர் மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
இதில் பல லட்சம் ரூபாய்க்கு முறைகேடு நடந்து இருக்கலாம் என்பதால் விசாரணை சி.பி.ஐ.க்கு மாற்றப்பட்டது. அதன்படி சி.பி.ஐ. உதவி ஆணையர் சடகோபன் தலைமையில் அதிகாரிகள், காரைக்குடி அஞ்சலகத்தில் பண பரிவர்த்தனையில் தொடர்புடைய அலுவலர்கள் வீடுகளிலும், அஞ்சலக சேமிப்பு கணக்கு முகவரின் வீட்டிலும் சோதனை நடத்தினார்கள்.
இதில் சுமார் ரூ.1 கோடிக்கும் மேல் முறைகேடு நடந்திருப்பதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. சில ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.
இதைத்தொடர்ந்து 2 அஞ்சலக உதவி அலுவலர்கள் உள்பட 7 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். குற்றம் சாட்டப்பட்டுள்ள உதவி அலுவலர் முத்துமதி மதுரை ஐகோர்ட்டில் முன் ஜாமீன் பெற்றுள்ளதாக தெரிகிறது.
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே உள்ள புதூர் யூனியனுக்குட்பட்டது கரிசல்பட்டி கிராமம். இங்கு 70 ஆண்டுகள் பழமை வாய்ந்த கைலாசநாதர் கோவில் உள்ளது. இப்பகுதியில் பிரசித்தி பெற்ற இக்கோவிலில் விசேஷ நாட்களில் ஏராளமான பக்தர்கள் திரண்டு வந்து சாமி தரிசனம் செய்வது வழக்கம்.
இந்த நிலையில் நேற்று வழக்கம்போல் பூசாரி கோவிலை பூட்டி விட்டு சென்றுவிட்டார். நள்ளிரவு நேரத்தில் கோவில் கதவை உடைத்து உள்ளே புகுந்த மர்ம ஆசாமிகள் கோவிலில் இருந்த பைரவர் சிலை, நவக்கிரக சிலைகள், நாகராஜர் சிலை ஆகியவற்றை பெயர்த்து எடுத்து சேதப்படுத்தினர். பின்னர் அந்த கும்பல் சிலைகளின் அடியில் வைக்கப்பட்டிருந்த தங்க தகடுகளை திருடி சென்றனர்.
இன்று காலை கோவிலுக்கு வந்த பூசாரி, சிலைகள் பெயர்த்து எடுத்து ஆங்காங்கே கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்த புகாரின்பேரில் புழுதிபட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கருணாநிதி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டார்.
இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து சாமி சிலைகளின் அடியில் வைக்கப்பட்டு இருக்கும் தங்க தகடுகளை திருடும் நோக்கத்தில் மர்ம கும்பல் இச்செயல்களில் ஈடுபட்டதா? அல்லது சாமி சிலைகளை அவமரியாதை செய்யும் நோக்கில் செயல்பட்டதா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மானாமதுரை:
சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் முழு சுகாதார திட்டம் செயல்படுத்தப்பட்டு சேகரிக்கப்படும் குப்பைகள் மறு சுழற்சி செய்யப்படுகிறது.
நகரில் பிளாஸ்டிக் பைகள் பயன்பாட்டிற்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. வைகை ஆற்றிலும் மருத்துவ கழிவுகள், கோழி இறைச்சி கழிவுகள் கொட்டப்படாத வகையில் வைகை ஆறும் கண்காணிப்பட்டு வருகிறது. வைகை ஆற்றில் கோழிகழிவுகளை வீசும் நபர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இது தவிர நாள்தோறும் தினமும் காலையில் அனைத்து தெருக்களிலும் வீடுகளுக்கே சென்று மக்கும் குப்பைகள், மக்காத குப்பைகள் பிரித்து வாங்கும் பணியும் நடந்து வருகிறது.
தற்போது திருமண விழா மற்றும் திருவிழா காலங்களில் வீதிகளில் வீசப்படும் குப்பைகளை தடுக்க பிளாஸ்டிக் குப்பை தொட்டிகள் தயார் நிலையில் உள்ளது. புதிய உறுதியான இந்த குப்பை தொட்டிகள் மானாமதுரை பஸ் நிலையம், மருத்துவமனை, வாரச்சந்தை, வைகை ஆற்று கரை பகுதி, மூன்று தெருக்கள் சந்திக்கும் இடம் ஆகிய இடங்களில் வைக்கப்பட உள்ளன என மானாமதுரை பேரூராட்சி செயல் அலுவலர் மங்களேஸ்வரன், சுகாதார ஆய்வாளர் அபுபக்கர் ஆகியோர் தெரிவித்தனர்.






