என் மலர்
சிவகங்கை
மானாமதுரை:
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை பின்தங்கிய பகுதியாகும். விவசாய தொழிலை நம்பிதான் உள்ளனர். பருவமழை இல்லை என்றால் இப்பகுதியில் உள்ள ஏராளமானோர் வெளியூர் பிழைப்பு தேடி செல்லும் நிலை இன்றும் உள்ளது.
புதிய தொழிற்சாலைகளை உருவாக்கும் வகையில் மானாமதுரை பகுதியில் சிப்காட், தொழிற்பேட்டை, மதுரை–ராமேசுவரம் சாலையில் முத்தனேந்தல் அருகே சிட்கோ தொழிற் கூடங்கள் அமைக்கப்பட்டு 20 வருடங்களுக்கும் மேலாகின்றன. சிப்காட் தொழிற்பேட்டையில் அரசு அரிசி ஆலையும், செல்போன் உதிரி பாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலையும் செயல்படுகிறது. ஆரம்பிக்கப்பட்ட சிமெண்டு ஆலை, கிராபைட் ஆலை உள்ளிட்ட பல்வேறு சிறுதொழிற் நிறுவனங்கள் மூடப்பட்டு விட்டன.
சிறு தொழில் நிறுவனங்கள் அமைக்க தொடங்கப்பட்ட சிட்கோ தொழிற்பேட்டையில் இதுவரை எந்தவிர தொழிலும் தொடங்கவில்லை. சிறு தொழில்கள் தொடங்கும் வகையில் தொழில் கூடங்கள், மேல்நிலை குடிநீர் தொட்டி வசதி உள்ள சிட்கோ தொழிற்பேட்டையில் உடன் சாலை வசதி, மின்சார வசதிகள் செய்து சிறு தொழிற்சாலைகளை செயல்படுத்தி வேலை வாய்ப்பை ஏற்படுத்த வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
சிவகங்கை:
சிவகங்கை மாவட்ட ம.தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டம் மாவட்ட செயலாளர் புலவர் செவந்தியப்பன் தலைமையில் நடைபெற்றது. நகர் செயலாளர் சுந்தர பாண்டியன் வரவேற்றார்.
கூட்டத்தில் கலந்து கொண்டு பொதுச் செயலாளர் வைகோ பேசியதாவது:–
ம.தி.மு.க. சிறிய கட்சி தான். முல்லை பெரியாறு பிரச்சினை, மீத்தேன் பிரச்சினை உள்பட பல்வேறு பிரச்சினைகளை சாதித்தது நமது கட்சிதான். மற்ற கட்சிகள் மக்கள் பிரச்சினைகளை சாதித்தது இல்லை. நெய்வேலி நிலக்கரி நிறுவனம் தனியாருக்கு தாரை வார்க்கப்பட இருந்ததை ம.தி.மு.க. தடுத்து நிறுத்தி அரசுடமையாக்கியது.
நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் பணம் பிரதானமாக விளங்கியது. பணம்தான் ஜனநாயகத்தை தோற்கடித்தது. தேர்தலில் ஒரு இடம்கூட நாம் ஜெயிக்க முடியாது என்பது எனக்கு முன்பே தெரியும். மக்கள் நமது சேவையை பயன்படுத்திக் கொள்கிறார்கள். தேர்தலில் பணத்திற்கு அடிமை ஆகிறார்கள்.
தி.மு.க.வில் சுயமரியாதை இல்லை. அது குறைந்து வருகிறது. தி.மு.க. நம்மை அழிக்க நினைக்கிறது. இத்தேர்தலில் தி.மு.க. வெற்றி பெற்றிருந்தால் நம்மை அழிக்க முயற்சித்து இருப்பார்கள். எனவே தி.மு.க. ஆட்சிக்கு வரக் கூடாது என்று ராஜதந்திர முடிவினை எடுத்தேன். இதனால் மாற்று அணி அமைந்தது.
வழக்கறிஞர்கள் சட்ட திருத்தம் குறித்து போராடி வருவதை ம.தி.மு.க. ஆதரிக்கிறது. சென்னையில் கொலை, கொள்ளைகள் அதிகரித்து வருகிறது. இதை அரசு தடுத்திட வேண்டும். மதுக்கடைகள் முழுமையாக மூடப்பட வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
சிவகங்கையில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ நிருபர்களிடம் கூறியதாவது:-
வக்கீல்கள் சட்டத்தில் திருத்தங்கள் செய்தததை எதிர்த்து வக்கீல்கள் போராடுவது நியாயமானது இதை உயர் நீதிமன்றமும், உச்ச நீதிமன்றமும் வேடிக்கை பார்க்காமல் வக்கீல்களை பாதிக்காத வகையில் முழுஅளவிலான சட்டத்திருத்தத்தை கொண்டு வர வேண்டும். தமிழகத்தில் தொடரும் கொலைகளால் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு விட்டது. இதில் அரசு, போலீசாரை முழுஅளவில் செயல்பட உத்தரவிட வேண்டும். மேலும் காவல் துறையில் உள்ள காலிபணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும்.
சென்னையில் இளம்பெண் சுவாதி கொலை செய்யப்பட்ட சம்பவம், தமிழகத்தில் மனிதாபிமானம் குறைந்து வருவதை காட்டுகிறது. இதற்கு காரணம் புகார் கூற செல்லும் மக்களை போலீசார் சாட்சிகள் என கூறி அலைக்கழிக்கப்படுவார்கள் என்ற பயம் உள்ளது. முன்பெல்லாம் பள்ளிகளில் நீதி போதனை வகுப்புகளும், பாட புத்தகங்களில் நீதி போதனைகளும் இடம் பெறும். ஆனால் தற்போது அவ்வாறு இல்லை. அறிவியல் முன்னேற்றம் என்பது தேவைதான். ஆனால் அது பல பிரச்சனைகளை உருவாக்கி வருகிறது.
இத்தகைய கொலைகளுக்கு எல்லாம் காரணம் மது ஒன்று தான். எனவே தமிழகத்தில் முழுஅளவில் மதுக்கடைகளை மூட வேண்டும். 12 மணிக்கு கடையை திறப்பதால் எந்த பயனும் இல்லை. அ.தி.மு.க.வினரே மறைமுகமாக மது விற்று வருகின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின்போது மாவட்ட செயலாளர் செவந்தியப்பன், மாநில தணிக்கை குழு உறுப்பினர் கார் கண்ணன் ஆகியோர் உடன் இருந்தனர்.
சிவகங்கை:
சிவகங்கை மாவட்டம் பூவந்தி அருகே உள்ள தாமரைக்கண்மாய் பகுதியை சேர்ந்தவர் போதும்பொண்ணு (வயது45). இந்த பெண் ஆடு மேய்க்கும் தொழில் செய்து வந்தார்.
நேற்று இவர் ஆடு மேய்த்து கொண்டிருந்தபோது 20 வயது மதிக்கத்தக்க வாலிபர் அங்கு வந்தார். அவர் திடீரென கத்தியை காட்டி போதும்பொண்ணுவை மிரட்டினார். மேலும் அவரிடம் இருந்த ரூ.2 ஆயிரத்தை பறித்து கொண்டு தப்பி விட்டார்.
இது குறித்து பூவந்தி போலீசில் போதும் பொண்ணு புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் பாலாஜி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
சிவகங்கை:
சிவகங்கை மாவட்ட ம.தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டம் இன்று சிவகங்கையில் உள்ள ஏ.எம்.கே. திருமண மகாலில் நடக்கிறது.
இக்கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் புலவர் சிவந்தியப்பன் தலைமை தாங்குகிறார். கூட்டத்தில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகிறார்.
இச்செயல் வீரர்கள் கூட்டத்தில் வருகிற உள்ளாட்சி தேர்தல் குறித்து விவாதிக்கப்படுகிறது.
இக்கூட்டத்திற்கான மாவட்ட செயலாளர் புலவர் சிவந்தியப்பன், மாநில தணிக்கைக்குழு உறுப்பினர் வக்கீல் கார் கண்ணன், நகர செயலாளர் சுந்தரபாண்டியன் மற்றும் நிர்வாகிகள் செய்துள்ளனர்.
சிவகங்கை மாவட்டம் திருப்பாச்சேத்தி அருகே உள்ள டி.வேலாங்குளத்தைச்சேர்ந்தவர் ராஜ்குமார் (வயது40), விவசாயி. இவரது மனைவி ஜெயபாண்டி (38). இவர்களது மகள் பரமேசுவரி (21).
இவருக்கும், அதே ஊரைச் சேர்ந்த முனீசுவரன் என்பவருக்கும் திருமணம் நடைபெற்றது. கடந்த சில நாட்களாக கணவருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு, பரமேசுவரி தாய் வீட்டிற்கு வந்து விட்டார்.
அவரை கணவர் வீட்டிற்கு அனுப்புவது தொடர்பாக ராஜ்குமாருக்கும், ஜெயபாண்டிக்கும் நேற்று இரவில் வாக்குவாதம் ஏற்பட்டது. கணவரின் முடிவு ஜெயபாண்டிக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது.
இன்று அதிகாலை ராஜ்குமார் வீட்டுவாசலில் தலை வைத்து படுத்திருந்தார். அவரை பார்த்ததும் ஜெயபாண்டிக்கு கோபம் ஏற்பட, வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து ராஜ்குமாரின் பின்தலையில் வெட்டினார். இதில் பலத்த காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பலியாகி விட்டார்.
இதுதொடர்பான தகவல் கிடைத்ததும் மானாமதுரை காவல் துணை கண்காணிப்பாளர் புருஷோத்தமன், திருப்பாச்சேத்தி போலீஸ் இன்ஸ்பெக்டர் சேசு மற்றும் போலீசார் சம்பவ இடம் சென்று ராஜ்குமார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
குடும்ப தகராறில் மனைவியே கணவனை வெட்டிக்கொன்ற சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருப்பத்தூர்:
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள திருக்களாப்பட்டியை சேர்ந்தவர் ராமன் (வயது42). இவர் திருப்பத்தூரில் ஆட்டோ ஓட்டி வருகிறார். பகலில் ஆட்டோ ஓட்டி விட்டு இரவு திருப்பத்தூரில் உள்ள சீரணி அரங்கம் அருகே ஆட்டோவை நிறுத்தி விட்டு சொந்த ஊரான திருகளாப்பட்டிக்கு சென்று விடுவார்.
நேற்று வழக்கம்போல் ஆட்டோவை நிறுத்தி விட்டு சொந்த ஊருக்கு சென்று விட்டார். இன்று அதிகாலை 1 மணி அளவில் ஆட்டோ பயங்கர சத்தத்துடன் தீப் பிடித்து எரிந்தது. அக்கம் பக்கத்தினர் உடனே தீயை அணைக்க முற்பட்டனர். ஆனால் தீ மளமளவென எரிந்து ஆட்டோ முழுவதும் நாசமாகி விட்டது.
மேலும் அருகில் இருந்த 2 ஆட்டோக்கள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் தீ பரவாமல் இருக்க இரவு நேர ரோந்து போலீசாரும், பொதுமக்களும் சேர்ந்து தீ பரவாமல் தடுத்தனர்.
தீப்பிடித்து எரிந்ததில் ஆட்டோ முழுவதும் எரிந்து நாசமாகி எலும்புக்கூடாக காட்சி அளித்தது.
ஆட்டோ மர்மமான முறையில் எரிந்ததால் யாராவது தீ வைத்தார்களா? அல்லது மின் கசிவு ஏற்பட்டு தீப்பிடித்ததா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே உள்ளது இடைக்காட்டூர். இங்கு பிரசித்தி பெற்ற திருஇருதய ஆண்டவர் திருத்தலம் உள்ளது.
மாதத்தின் முதல் வெள்ளிக்கிழமை சிறப்பு வெள்ளியாக கருதப்பட்டு பக்தர்களின் வேண்டுதலுக்காக கூட்டு திருப்பலி நடைபெற்று வருகிறது.
இதில் கலந்து கொள்ள தமிழகம் முழுவதும் பக்தர்கள், சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். ஆண்டு தோறும் திரு இருதய பெருவிழா 10 நாட் கள் நடைபெறும்.
இந்த ஆண்டு திருவிழா கடந்த 24–ந்தேதி தேவாலயம் முன்பு உள்ள கொடி மரத்தில் கொடி ஏற்றத்துடன் தொடங்கியது. சிவகங்கை மறைமாவட்ட முதன்மை குரு ஜோசப் லூர்து ராஜா கலந்து கொண்டு மறையுரை ஆற்றினார். முக்கிய விழாவான திரு இருதய ஆண்டவர் அலங்கார தேர்பவனி மற்றும் பெருவிழா நாளை மறுநாள் (1–ந்தேதி) நடைபெறுகிறது.
அன்று காலை 7 மணிக்கு திருத்தலத்தில் திருஇருதய பெருவிழா திருப்பலி, நவநாள், நற்கருணை ஆராதனையுடன் தொடங்குகிறது.
அதைத்தொடர்ந்து 11 மணிக்கு திருவிழா திருப்பலி பூஜையை சிவகங்கை மறை மாவட்ட ஆயர் சூசைமாணிக்கம் இரக்கத்தின் தேற்றுபவர் நானே’ என்ற தலைப்பில் மறையுரை கூறி தொடங்கி வைக்கிறார். மாலை 6 மணிக்கு நிறைவு திருப்பலி நடக்கிறது. மின்விளக்கு அலங்கார தேர்ப்பவனியை சிவங்கை மறை மாவட்ட பொருளாளர் மைக்கேல் ராஜ் தொடங்கி வைக்கிறார்.
2–ந்தேதி (சனிக்கிழமை) நற்கருணை பெருவிழா நடைபெறுகிறது. அன்று காலை 5.30 மணிக்கு ஓரியூர் தூய அருளானந்தர் மேல்நிலைப்பள்ளி இளங் கேஸ்வரன் சிறப்பு திருப்பலி பூஜை நடத்துகிறார். மாலை 6 மணிக்கு செக்காலை பங்கு தந்தை வின்சென்ட் அமல்ராஜ், தேவகோட்டை ஆனந்தா கல்லூரி துணை முதல்வர் ஜோசப் ஜான் கென்னடி ஆகியோர் தொடங்கி வைக்கின்றனர்.
திருஇருதய பெருவிழா ஏற்பாடுகளை இடைக்காட்டுர் திருத்தல பணியாளர் ரெமிஜியஸ் மற்றும் இடைக்காட்டூர் சமூக முன்னேற்ற சங்கம், செல்ஸ் இளையோர் பேரவை, மரியின் ஊழியர்கள், பங்கு இறை மக்கள் ஆகியோர் செய்து வருகின்றனர்.
விழாவை முன்னிட்டு மதுரை, சிவகங்கை, மானாமதுரை ஆகிய ஊர்களில் இருந்து சிறப்பு பஸ் வசதிகள் செய்யப்பட்டுள்ளது.
காரைக்குடி:
காரைக்குடி அருகே சாக்கோட்டை போலீஸ் சரகத்திற்குட்பட்ட புளியங்குடியிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் சுப்பிரமணி (வயது46). குடும்ப பிரச்சினை காரணமாக கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இவரது மனைவி வேறு ஒருவரை திருமணம் செய்து கொண்டு சென்றுவிட்டார். இதனால் விரக்தி அடைந்த அவர், மதுப்பழக்கத்திற்கு அடிமையானார்.
இந்த நிலையில் சம்பவத் தன்று குடிபோதையில் சாக்கோட்டை அருகே உள்ள ஊரணிக்கு சென்றுள்ளார். அப்போது வாழ்க்கையில் வெறுப்படைந்த சுப்பிரமணி ஊரணியில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து அவரது அண்ணன் விடத்தன் கொடுத்த புகாரின்பேரில் சாக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வராஜ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
தேவகோட்டை:
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை நகர் பகுதியில் பூட்டி கிடந்த வீடுகளை குறிவைத்து நகை–பணம் கொள்ளையடிக்கப்பட்டது. மொத்தம் 11 வீடுகளில் பூட்டை உடைத்து 50 பவுன் நகை, ரூ.50 ஆயிரம் ரொக்கம் மற்றும் வெள்ளிச் சாமான்கள், செல்போன், லேப்–டாப், மோட்டார் சைக்கிள் ஆகியவை திருட்டு போயின.
இதுகுறித்து தேவகோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். மேலும் தனிப்படை அமைத்து குற்றவாளிகளை தேடி வந்தனர்.
போலீசாரின் தீவிர தேடுதல் வேட்டையில் 2 கொள்ளையர்கள் சிக்கினார்கள். விசாரணையில் அவர்கள் தேவகோட்டை ரகுநாதபுரத்தைச் சேர்ந்த வெள்ளத்துரை மகன் முத்துக்குமார் (வயது 31), மதுரை வில்லாபுரம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பை சேர்ந்த உலகநாதன் மகன் கனகவேல் பாண்டியன் (32) என்பது தெரியவந்தது. இருவரும் கைது செய்யப் பட்டனர்.
அவர்களிடம் இருந்து 5 பவுன் நகையும், மோட்டார் சைக்கிளும் பறிமுதல் செய்யப்பட்டன.
கைதான 2 கொள்ளையர்களிடம் போலீசார் விசாரணை நடத்தியபோது, இந்த வழக்கில் மேலும் ஒருவர் சம்பந்தப்பட்டு இருப்பது தெரிந்தது.
இதில் தொடர்புடைய திருப்பரங்குன்றத்தைச் சேர்ந்த மாணிக்கம் மகன் கண்ணன் (வயது 56) என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.
கொள்ளையடிக்கப்பட்ட நகை–பணம் மற்றும் பொருட்களை கண்ணனிடம் கொடுத்துள்ளதாக கைதான இருவரும் தெரிவித்தனர். எனவே கண்ணனை தேடிப்பிடிக்கும் பணியில் தேவகோட்டை தனிப்பிரிவு போலீசார் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
காரைக்குடி:
காரைக்குடி அருகே உள்ள புதுவயலைச் சேர்ந்தவர் லோடுமேன் தொத்தன் என்ற ஜாகீர்உசேன் (வயது32). சம்பவத்தன்று இவர் பஸ் நிலையத்தில் நின்று கொண்டிருந்தபோது லாரி டிரைவர் அந்தமான் என்ற புரோஸ்அலி என்பவர் கத்தியை காட்டி மிரட்டி ரூ.500–ஐ பறித்து கொண்டதாகவும், கொலை மிரட்டல் விடுத்ததாகவும் சாக்கோட்டை போலீசில் ஜாகீர்உசேன் புகார் செய்தார்.
இதன்பேரில் சப்–இன்ஸ் பெக்டர் சரவணபோஸ் வழக்குப்பதிவு செய்து புரோஸ்அலியை கைது செய்தார்.






