என் மலர்
செய்திகள்

திருப்பத்தூரில் ஆட்டோ தீப்பிடித்து எரிந்து நாசம்: போலீசார் விசாரணை
திருப்பத்தூர்:
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள திருக்களாப்பட்டியை சேர்ந்தவர் ராமன் (வயது42). இவர் திருப்பத்தூரில் ஆட்டோ ஓட்டி வருகிறார். பகலில் ஆட்டோ ஓட்டி விட்டு இரவு திருப்பத்தூரில் உள்ள சீரணி அரங்கம் அருகே ஆட்டோவை நிறுத்தி விட்டு சொந்த ஊரான திருகளாப்பட்டிக்கு சென்று விடுவார்.
நேற்று வழக்கம்போல் ஆட்டோவை நிறுத்தி விட்டு சொந்த ஊருக்கு சென்று விட்டார். இன்று அதிகாலை 1 மணி அளவில் ஆட்டோ பயங்கர சத்தத்துடன் தீப் பிடித்து எரிந்தது. அக்கம் பக்கத்தினர் உடனே தீயை அணைக்க முற்பட்டனர். ஆனால் தீ மளமளவென எரிந்து ஆட்டோ முழுவதும் நாசமாகி விட்டது.
மேலும் அருகில் இருந்த 2 ஆட்டோக்கள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் தீ பரவாமல் இருக்க இரவு நேர ரோந்து போலீசாரும், பொதுமக்களும் சேர்ந்து தீ பரவாமல் தடுத்தனர்.
தீப்பிடித்து எரிந்ததில் ஆட்டோ முழுவதும் எரிந்து நாசமாகி எலும்புக்கூடாக காட்சி அளித்தது.
ஆட்டோ மர்மமான முறையில் எரிந்ததால் யாராவது தீ வைத்தார்களா? அல்லது மின் கசிவு ஏற்பட்டு தீப்பிடித்ததா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.






