என் மலர்
செய்திகள்

மானாமதுரை அருகே குடும்ப பிரச்சினையில் பெண் அடித்துக்கொலை: மருமகன் வெறிச்செயல்
மானாமதுரை:
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே உள்ள கீழமேல்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெயகணேஷ் (வயது45), கூலி தொழிலாளி. இவரது மனைவி வீரமல்லி. கடந்த சில மாதங்களாக ஜெயகணேஷ் சரியாக வேலைக்கு செல்லாமல் மது பழக்கத்துக்கு அடிமையானார். இதனால் அடிக்கடி குடித்து விட்டு வந்து மனைவியிடம் தகராறு செய்வது வாடிக்கையாக இருந்தது.
இந்த நிலையில் நேற்று இரவும் மது குடித்த நிலையில் வீட்டுக்கு வந்த ஜெயகணேஷ் வழக்கம் போல் மனைவியிடம் தகராறு செய்தார். அப்போது வீட்டில் இருந்து வீரமல்லியின் தாயார் செல்லம்மாள், ஏன் தினமும் குடித்து விட்டு மகளிடம் பிரச்சினை செய்கிறாய் என கேட்டார்.
இதனால் ஆத்திரம் அடைந்த ஜெயகணேஷ், போதையில் தன் நிலையை மறந்து செல்லம்மாளை சுவற்றில் மோதச்செய்தும், கீழே தள்ளியும் தாக்கினார். இதில் படுகாயம் அடைந்த அவர், சிறிது நேரத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த ஜெயகணேஷ் உடனே மானாமதுரை போலீஸ் நிலையத்திற்கு சென்று நடந்த சம்பவங்களை கூறி சரண் அடைந்தார். போலீசார் அவரை கைது செய்தனர்.
இந்த நிலையில் கொலை நடந்த இடத்திற்கு வந்து மானாமதுரை போலீஸ் துணை சூப்பிரண்டு புருசோத்தமன் விசாரணை நடத்தினார். இந்த சம்பவம் குறித்து மானாமதுரை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.






