என் மலர்
செய்திகள்

காரைக்குடியில் இருந்து மாயமான 4 மாணவர்கள் பெங்களூருவில் மீட்பு
காரைக்குடி:
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியை சேர்ந்த தனியார் பள்ளியில் 10–ம் வகுப்பு படித்து வந்தவர்கள் பாலாஜி (வயது14), விக்னேஷ் (14), சஞ்சய் ராமசாமி (14), சிவபாலன் (14).
இவர்கள் 4 பேரும் கடந்த 21–ந்தேதி காலை வீட்டில் இருந்து வழக்கம் போல் பள்ளிக்கு புறப்பட்டு சென்றனர். ஆனால் அவர்கள் பள்ளிக்கு வரவில்லை என தலைமையாசிரியர் மாணவர்களின் பெற்றோருக்கு தகவல் கொடுக்க பரபரப்பு ஏற்பட்டது.
4 மாணவர்கள் ஒரே நேரத்தில் மாயமானதால் அவர்கள் கடத்தப்பட்டார்களா? அல்லது வேறு எங்காவது சேர்ந்து சென்றார்களா? என தெரியாமல் பல்வேறு பகுதிகளிலும் பெற்றோர் தேடினர். இருப்பினும் அவர்களை பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை.
இதனை தொடர்ந்து காரைக்குடி வடக்கு போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் பிச்சைப்பாண்டியன் வழக்குப்பதிவு செய்து மாயமான 4 மாணவர்களையும் தேடி வந்தார். இந்த சூழலில் மாணவர்கள் பெங்களூருவில் இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.
மாயமான 4 மாணவர்களும் பெங்களூரு சென்றுள்ளனர். அங்கு அவர்கள் சுற்றி திரிந்தபோது மாணவன் பாலாஜியின் உறவினர் கண்ணில் பட்டு விட்டனர். அவர் 4 மாணவர்களையும் மீட்டு பெற்றோருக்கு தகவல் கொடுத்துள்ளார்.
இதன் அடிப்படையில் மாணவர்களின் பெற்றோரும், போலீசாரும் பெங்களூரு விரைந்துள்ளனர். அவர்கள் வந்த பிறகே மாணவர்கள் பெங்களூரு சென்றது எப்படி என்பது குறித்த விவரம் தெரியவரும்.
மாணவர்கள் மாயமான பள்ளியில் படித்து வந்த 12–ம் வகுப்பு மாணவி ஒருவரும், கடந்த 13–ந்தேதி முதல் மாயமாகி இருப்பது தற்போது தெரியவந்துள்ளது. வீட்டில் இருந்து மாயமான அவர் ஆந்திர மாநிலம் ஹைதராபாத்தில் இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. அவரை மீட்க காரைக்குடி போலீசார் ஹைதராபாத் சென்றுள்ளனர்.






