என் மலர்tooltip icon

    செய்திகள்

    காரைக்குடி அஞ்சலகத்தில் ரூ.1 கோடி முறைகேடு: அலுவலர்கள் உள்பட 7 பேர் பணியிடை நீக்கம்
    X

    காரைக்குடி அஞ்சலகத்தில் ரூ.1 கோடி முறைகேடு: அலுவலர்கள் உள்பட 7 பேர் பணியிடை நீக்கம்

    காரைக்குடி தலைமை அலுவலகத்தில் ரூ.1 கோடிக்கு மேல் முறைகேடுகள் நடந்திருப்பது தெரியவந்துள்ளது. இதைத்தொடர்ந்து உதவி அலுவலர்கள் உள்பட 7 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

    காரைக்குடி:

    சிவகங்கை மாவட்டம் காரைக்குடி தலைமை அஞ்சலகத்தில் சிலர் தங்களது சேமிப்பு கணக்குகளை பராமரிக்காமல் இருந்து வருகின்றனர். இதை பயன்படுத்தி அந்த கணக்குகளில் இருந்து லட்சக்கணக்கில் பணப் பரிமாற்றம் நடந்திருப்பது தெரியவந்தது.

    இதுகுறித்து தென்மண்டல இயக்குநர் நிர்மலாதேவி தலைமையிலான குழுவினர் விசாரணை மேற்கொண்டனர். இதில் அஞ்சலக உதவி பெண் அலுவலர் முத்துமதி (வயது27) என்பவர் கடந்த 2 ஆண்டுகளாக பல லட்ச ரூபாயை முறைகேடாக பரிமாற்றம் செய்திருப்பது தெரியவந்தது.

    இவர் எம்.சி.ஏ. பட்டதாரி என்பதால் அஞ்சலக அதிகாரிகளின் பாஸ்வேர்டை முறைகேடாக பயன்படுத்தி ஏ.டி.எம். மூலம் பணப்பரிமாற்றம் செய்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவர் மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

    இதில் பல லட்சம் ரூபாய்க்கு முறைகேடு நடந்து இருக்கலாம் என்பதால் விசாரணை சி.பி.ஐ.க்கு மாற்றப்பட்டது. அதன்படி சி.பி.ஐ. உதவி ஆணையர் சடகோபன் தலைமையில் அதிகாரிகள், காரைக்குடி அஞ்சலகத்தில் பண பரிவர்த்தனையில் தொடர்புடைய அலுவலர்கள் வீடுகளிலும், அஞ்சலக சேமிப்பு கணக்கு முகவரின் வீட்டிலும் சோதனை நடத்தினார்கள்.

    இதில் சுமார் ரூ.1 கோடிக்கும் மேல் முறைகேடு நடந்திருப்பதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. சில ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.

    இதைத்தொடர்ந்து 2 அஞ்சலக உதவி அலுவலர்கள் உள்பட 7 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். குற்றம் சாட்டப்பட்டுள்ள உதவி அலுவலர் முத்துமதி மதுரை ஐகோர்ட்டில் முன் ஜாமீன் பெற்றுள்ளதாக தெரிகிறது.

    Next Story
    ×