என் மலர்
சிவகங்கை
காரைக்குடி:
காரைக்குடி சேர்ந்தவர் தண்ட பாணி (65). வைர கற்கள், தங்கம் வாங்கி விற்பவர். கடந்த மாதம் சில வியாபாரிகள் இவரிடம் 6 பவுன் தங்க நகை, 17 கிராம் வைரம் பதித்த தோடு, மற்றும் 100 வைர கற்களை விற்பதற்காக கொடுத்தனர்.
அதை தண்டபாணி தனது அறையில் வைத்து வியாபாரத்திற்காக வெளியூர் சென்றுவிட்டு நேற்று முன்தினம் காரைக்குடி திரும்பினார்.
தண்டபாணி தனது அறைக்கு சென்றபோது பூட்டு திறந்த நிலையில் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். உள்ளே சென்று பார்த்தபோது 6 பவுன் தங்க நகை, 17 கிராம் வைர கற்கள் பதித்த தோடு, மற்றும் 100 உதிரி வைர கற்கள் திருட்டு போய் இருப்பது தெரிந்தது.
இது குறித்து காரைக்குடி தெற்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்த நிலையில், அதே காம்ப்ளக்சை சேர்ந்த தவுலத்நிசா, லலிதா மற்றும் அழகு ஆகியோர் கூட்டு சேர்ந்து தண்டபாணியின் கடையில் இருந்த வைர நகைகள் மற்றும் வைர கற்களை திருடியது தெரிய வந்தது.
போலீசார் 3 பெண்களையும் கைது செய்து திருட்டு நகைகளை வாங்கிய ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானையை சேர்ந்த அழகர்சாமி என்பவரையும் கைது செய்தனர்.
காரைக்குடி:
காரைக்குடி மீனாட்சிபுரத்தைச் சேர்ந்தவர் பாலு தேவர். இவரது மனைவி ராக்கு (வயது 70). இவர், ரத்த அழுத்த மாத்திரை வாங்குவதற்காக அரசு ஆஸ்பத்திரிக்கு சென்றார்.
அங்கு 40 வயது மதிக்கத்தக்க பெண், ராக்குவுடன் அறிமுகமாகி உங்களுக்கு இலவச அரிசி மற்றும் பருப்பு வாங்கித்தருகிறேன் என்று ஆசை வார்த்தை கூறி, அங்குள்ள டீ கடைக்கு அழைத்துச் சென்றார். அந்த பெண் வாங்கிக்கொடுத்த டீயை ராக்கு குடித்ததும் சிறிது நேரத்தில் அவர் மயக்கமானார்.
அந்த சமயத்தில் மர்ம பெண், ராக்கு அணிந்திருந்த ¾ பவுன் தண்டட்டி நகையை திருடிக் கொண்டு சென்று விட்டார். நினைவு திரும்பிய ராக்கு நகை மற்றும் அந்த பெண்ணை காணாதது கண்டு திடுக்கிட்டார்.
இது குறித்து அவரது மகன் முனியசாமி, காரைக்குடி தெற்கு காவல் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து மூதாட்டியிடம் நகை திருடிய மர்ம பெண்ணை தேடி வருகிறார்கள்.
தேவகோட்டை:
தேவகோட்டையில் சில மாதங்களாக திருட்டு சம்பவங்கள் அதிக அளவில் நடைபெற்று வந்தன. மக்கள் அச்சத்துடன் இருந்தார்கள். மருத்துவமனை வாசலில் நிறுத்தப்பட்ட இரண்டுசக்ர வாகனங்கள் திரும்பி வந்து பார்க்கும் போது காணவில்லை, பஸ்நிலையம் அருகில் நிறுத்தி வைத்த வாகனம், ஓட்டல் வாசலில் நிறுத்திய வாகனங்கள் திருடுபோனது.
இச்சம்பவம் குறித்து நகர் காவல் நிலையத்தில் வழக்குபதிவு செய்யப்பட்டு. ஆய்வாளர் செங்குட்டுவன் தலைமையில், சார்பு ஆய்வாளர் முகமதுதாரிக், குற்றப்பிரிவு காவலர்கள் மலையரசன், புகழேந்தி, அக்னிஸ்வரன் ஆகியோர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
அப்போது தேவகோட்டை பனிப்புலான்வயலை சேர்ந்த பெரியசாமி மகன் ராமலிங்கத்தை கைது செய்தனர்.
அவனிடம் இருந்து ஸ்பிளண்டர் ஒன்று, ஸ்க்கூட்டி ஒன்று, எக்ஸ்.எல் இரண்டு மொத்தம் நான்கு வாகனங்கள் கைப்பற்றினார்கள். சிறப்பாக செயல்பட்ட காவலர்களை துணை கண்காணிப்பாளர் பாஸ்கரன் பாராட்டினார்.
சிவகங்கை:
சிவகங்கையில் பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் எச். ராஜா நிருபர்களிடம் கூறியதாவது:-
கடந்த 14 தினங்களாக புதுக்கோட்டை மாவட்டம், நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். காங்கிரஸ் கட்சியில் இருந்தபோது தமிழகத்தில் தி.மு.க. துணையுடன் இத்திட்டம் கொண்டுவரப்பட்டது. இத்திட்டத்தால் விவசாயம், நிலத்தடி நீர் பாதிக்காது.
கடந்த டிசம்பர் மாதம் இத்திட்டத்திற்காக ரூ. 11 லட்சத்தை ஓ.என்.ஜி.சி. நிறுவனம் புதுக்கோட்டை மாவட்ட கலெக்டரிடம் செலுத்தி உள்ளது. பெட்ரோல் தேவைக்காக இத்திட்டம் கொண்டுவரப்படுகிறது. இப்போது இத்திட்டத்தை எதிர்ப்பவர்கள் அக்கிராம மக்கள் கிடையாது.

இத்திட்டத்தின் பயன் குறித்து மத்திய அரசு தெளிவாக விளக்கி உள்ளது. நெடுவாசல் கிராம மக்கள் இத்திட்டத்தை உண்மையிலேயே வேண்டாம் என்று விரும்பினால் மத்திய, மாநில அரசுகள் இது குறித்து பேசி கிராம மக்களின் உணர்வை புரிந்து செயல்படும். மக்கள் விரும்பினால் இத்திட்டம் வராது.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின் போது மாவட்ட தலைவர் சுவாமி நாதன், வக்கீல் சொக்க லிங்கம், நிர்வாகிகள் ஷாம், ராஜேந்திரன், விஸ்வநாத கோபால் சூர்ய நாராயணன் உள்பட பலர் இருந்தனர்.
சிவகங்கை:
சிவகங்கை தாலுகா புதுப்பட்டியைச் சேர்ந்தவர் அர்ச்சனா (வயது 23). இவர், சிவகங்கை நகர் போலீசில் ஒரு புகார் கொடுத்தார். அதில், எனக்கும், சோமசுந்தரம் என்பவருக்கும், கடந்த 6 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. அப்போது சீர்வரிசைகள் வழங்கப்பட்டன.
இந்த சூழலில் சிங்கப்பூரில் வேலை பார்க்கும் கணவர் சோமசுந்தரம், அவரது தாய் அழகம்மாள், தந்தை பரமானந்தம், சகோதரர் நித்யானந்தம், அவரது மனைவி சோபியா ஆகியோர் எனது பெற்றோரிடம் கூடுதலாக ரூ. 6 லட்சம் வாங்கி வரும்படி கூறினர்.
சம்பவத்தன்று நான் வீட்டில் இருந்து நடந்து சென்றபோது, ஒரு கார் என்மீது மோதுவது போல் வந்து நின்றது. அதில் இருந்து இறங்கிய கணவர் உள்பட 5 பேரும், பணம் கேட்டு கொலை மிரட்டல் விடுத்தனர் என்று குறிப்பிட்டு இருந்தார்.
இது குறித்து சிவகங்கை நகர் போலீசார் விசாரணை நடத்தி, சோமசுந்தரம் உள்பட 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இதன் அடிப்படையில் பரமானந்தம், நித்யானந்தம் கைது செய்யப்பட்டனர்.
சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை தாலுகா, வேப்பங்குளத்தை சேர்ந்தவர் கனிமொழி (வயது23). இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த சரவணன் (27) என்பவருக்கும் கடந்த 2011-ம் ஆண்டு திருமணம் நடந்தது. அப்போது பெண் வீட்டார் சார்பில் 25 பவுன் நகை, ரூ. 1 லட்சம் மதிப்புள்ள சீர்வரிசை பொருட்கள் கொடுத்ததாக கூறப்படுகிறது. இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது.
இந்நிலையில் கனிமொழி, தேவகோட்டை மகளிர் போலீசில் ஒரு புகார் செய்தார். அதில், தொழில் தொடங்க கூடுதல் வரதட்சணை கேட்டு கணவர் சரவணன் துன்புறுத்துவதாகவும், இதற்கு அவரது பெற்றோர் மாயழகு-பராசக்தி, உறவினர் தெய்வானை ஆகியோர் உடந்தையாக இருப்பதாகவும் கூறியுள்ளார்.
இந்த புகாரின்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ராமலட்சுமி விசாரணை நடத்தி சரவணன் உள்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்து உள்ளார்.
மானாமதுரை:
சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகே உள்ள கீழமேல்குடி கிராமத்தில் ஏராளமானோர் வசித்து வருகின்றனர். இவர்களில் 150-க்கும் மேற்பட்டோரின் குடும்ப அட்டைகள், திடீரென வறுமைக்கோடு பட்டியலில் இருந்து நீக்கப்பட்டதாம்.
இது குறித்து குடிமைப் பொருள் அலுவலகத்தில் பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். இது பற்றி விசாரிக்க வருவதாக அதிகாரிகள் கூறினர். இதற்காக ரேஷன் கடை முன்பு மக்கள் திரண்டிருந்தனர். ஆனால் குறிப்பிட்ட நேரத்தில் அதிகாரிகள் வராததால் ஆத்திரம் அடைந்த பெண்கள் ரேஷன் கடைக்கு பூட்டு போட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
கல்லல்:
தேவகோட்டை அருகே விறுசுழி ஆறு மற்றும் மணிமுத்தாறுகள் உள்ளன. இந்த ஆறுகளின் குறுக்கே ஆன்ரி வயல் என்ற பகுதியில் அணை கட்டும் பணி நடந்து வருகிறது. இந்தப்பணியை தொடர்ந்து சிலர் அப்பகுதியில் மணல் அள்ளி வந்தனர். இதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததை தொடர்ந்து அணை கட்டும் ஒப்பந்ததாரர் “பணி நடக்கும் பகுதியில் யாரும் மணல் அள்ளக்கூடாது” என கூறினார்.
ஆனாலும் இதையும் மீறி மணல் அள்ளப்பட்டு வந்தது. நேற்று விடிய விடிய சிலர் டிப்பர் லாரி, டிராக்டர் மூலம் மணலை அள்ளிச் சென்ற வண்ணம் இருந்தனர். இன்று அதிகாலை 4 மணி அளவில் அந்த வழியாக பொதுமக்கள் சென்றபோது மணல் அள்ளுவதை பார்த்தனர். இது குறித்து தேவகோட்டை தாலுகா போலீசில் புகார் செய்தனர்.
இதைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து சென்று பார்த்தபோது 2 பேர் டிப்பர் லாரியில் மணல் அள்ளிக் கொண்டிருந்தனர். அவர்களை பிடித்து விசாரித்த போது கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரையைச் சேர்ந்த ரமேஷ் (வயது 36), திண்டுக்கல் மாவட்டம் அழகு சமுத்திர பட்டியைச் சேர்ந்த கருப்பன் (38) என தெரியவந்தது.
அவர்களை போலீசார் கைது செய்து டிப்பர் லாரி, மற்றும் மணல் அள்ளும் எந்திரம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். மற்றவர்களை தேடி வருகிறார்கள்.
காரைக்குடியில் சட்ட பேரவை காங்கிரஸ் கட்சியின் தலைவர் கே.ஆர்.ராமசாமி எம்.எல்.ஏ. நிருபர்களிடம் கூறியதாவது:-
விவசாயிகளுக்கு 5 ஏக்கருக்கு மேல் நிவாரணம் வழங்க முடியாது என அரசு கூறி உள்ளது. இந்த அரசு விவசாயிகளை வஞ்சிக்கிறது. உற்பத்தியை அதிகரிக்க விவசாயிகளுக்கு உரிய உதவியை மாநில அரசு செய்ய வேண்டும். மாநில அரசின் நிதி நிலைமை மோசமாகி வாங்கிய கடனுக்கு வட்டி செலுத்த முடியாத நிலை உள்ளது.
கடந்த 7 மாதத்தில் எந்த திட்டங்களும் செயல்படுத்தப்படவில்லை. ரேசன் கார்டில் வறுமைக்கோட்டுக்கு கீழே உள்ளவர்களை, மேலே உள்ளவர்கள் என தவறாக கணக்கிட்டு, அவர்களது சலுகைகளை பறிக்கின்றனர்.
இந்த ஆட்சி நீடிக்க வழியே கிடையாது. எப்போது வேண்டுமானாலும் கவிழலாம். இந்த அரசால் மக்களுக்கு நல்ல ஆட்சியை தர முடியாது.
பாமர மக்கள் தற்போதைய அ.தி.மு.க. அசை ஏற்றுக்கொள்ளும் மனநிலையில் இல்லை. இது தான் உண்மை.
இவ்வாறு அவர் கூறினார்.
காரைக்குடி:
காரைக்குடி காளையப்பா நகரைச் சேர்ந்தவர் முருகேசன் (வயது 33). கட்டிட தொழிலாளி. இவரை 3 மாதத்திற்கு முன்பு பாம்பு கடித்துள்ளது. இதற்கு முறையான மருத்துவம் பார்க்காமல் நாட்டு மருத்துவம் பார்த்ததாக கூறப்படுகிறது. அதன் பிறகு முருகேசனுக்கு அடிக்கடி உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதனால் மன வேதனையில் இருந்து வந்த அவர், நேற்று ஊர் திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற நாடகம் பார்க்க செல்வதாக வீட்டில் கூறிச் சென்றார்.
நள்ளிரவில் அவரது மனைவி மகாலட்சுமி எழுந்து வெளியே வந்தபோது, வீட்டின் பின்புறம் உள்ள மரத்தில் முருகேசன் தூக்கில் பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இது குறித்து காரைக்குடி வடக்கு போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் மணிவண்ணன் வழக்குப்பதிவு செய்து, முருகேசன் தற்கொலை குறித்து விசாரணை நடத்தி வருகிறார்.
சிவகங்கை:
சிவகங்கை மாவட்டம், உலகம்பட்டி அருகே உள்ள முருகபட்டியைச் சேர்ந்தவர் வேல்சாமி (60) விவசாயி. இவரது மகள் பிரியா (வயது 22). நர்சிங் படித்துள்ள இவர், சென்னையில் தனியார் ஆஸ்பத்திரியில் பணியாற்றி வருகிறார்.
இதே ஊரைச் சேர்ந்தவர் மகாலிங்கம் (24). இவருக்கும், பிரியாவுக்கும் கடந்த ஓராண்டாக காதல் இருந்து வந்துள்ளது. இதனை அறிந்த வேல்சாமி, மகளுக்கு வேறு இடத்தில் திருமண ஏற்பாடு செய்தார்.
இந்த நிலையில், சென்னையில் இருந்து ஊருக்கு வந்த பிரியா திடீரென மாயமாகி விட்டார். அவரை பல இடங்களில் தேடியும் எந்த தகவலும் கிடைக்கவில்லை.
இது குறித்து உலகம்பட்டி போலீசில், வேல்சாமி புகார் செய்தார். அதில், மகாலிங்கம், அவரது பெற்றோர் சுப்பிரமணி- வீராயி ஆகியோர் சேர்ந்து, பிரியாவை கடத்தி விட்டதாக குறிப்பிட்டுள்ளார்.
உசிலம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி வழக்குப்பதிவு செய்து கடத்தப்பட்ட பிரியாவை தேடி வருகிறார்.
காரைக்குடி அருகே உள்ள கோட்டையூரை சேர்ந்த அரவிந்த்குமார், தனது மனைவி மற்றும் குழந்தையுடன் காரைக்குடியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு சென்றுள்ளார். டாக்டரிடம் காண்பித்து மருந்துகள் வாங்கிவிட்டு வீடு திரும்பியதும் அரவிந்த்குமார் மனைவி தனது கைபையை திறந்து பார்த்தார்.
அப்போது அதில் வைத்திருந்த 2 செல்போன்கள் ரூ.3,500 மற்றும் 2 ஏ.டி.எம்.கார்டுகள் மாயமாகி இருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக அவர்கள் மருத்துவமனை வந்து விவரம் தெரிவித்தனர்.
இதனை தொடர்ந்து மருத்துவமனையின் சி.சி.டி.வி. காமிரா பதிவுகள் ஆய்வு செய்யப்பட்டன. அதில் அரவிந்த்குமார் மனைவி மருந்து வாங்குவதற்காக கைப்பையை கீழே வைத்திருந்தபோது அங்கு காவலாளியாக இருந்த கணேசபுரம் பழனி (வயது 50) கைப்பையை திறந்து பணம் மற்றும் பொருட்களை அபேஸ் செய்வது தெரியவந்தது.
தொடர்ந்து அவர் காரைக்குடி வடக்கு போலீ சில் ஒப்படைக்கப்பட்டார். சப் இன்ஸ்பெக்டர் முத்து கிருஷ்ணன் வழக்குப்பதிவு செய்து பழனியை கைது செய்தனர்.






