என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோவையில் 25 பவுன் நகை திருடிய வேலைக்கார பெண் கைது
- போத்தனூர் போலீசில் காந்தரூபன் நகைகள் மாயமானது குறித்து புகார்
- மகேஸ்வரி வீட்டின் மேற்கூரையில் மறைத்து வைத்திருந்த 25 பவுன் தங்க நகைகள் சிக்கின
கோவை,
கோவை வெள்ளலூர் பகுதியை சேர்ந்தவர் காந்தரூபன் (வயது 43). இவரது மனைவி கடந்த ஓராண்டுக்கு முன்பு இறந்து விட்டார். எனவே காந்த ரூபன் வீட்டு வேலை செய்வதற்காக, வெள்ளலூரை சேர்ந்த மகேஸ்வரி (வயது 37) என்பவரை பணியமர்த்தினார்.
இந்த நிலையில் காந்தரூபன் வீட்டில் 25 பவுன் தங்க நகைகள் திடீரென மாயமானது. எனவே அவர் இதுகுறித்து மகேஸ்வரியிடம் கேட்டார். அதற்கு அவர் சரிவர பதிலளிக்கவில்லை என தெரிகிறது. இதனால் சந்தேகம் அடைந்த காந்தரூபன் வீட்டில் நகைகள் மாயமானது குறித்து போத்தனூர் போலீசில் புகார் அளித்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
அப்போது மகேஸ்வரி முன்னுக்குப்பின் முரணாக பேசியதாக தெரிகிறது. எனவே போலீசார் சந்தேகத்தின்பேரில் அவரது வீட்டுக்கு சென்று அதிரடி சோதனை நடத்தினர். இதில் வீட்டின் மேற்கூரையில் மறைத்து வைத்திருந்த 25 பவுன் தங்க நகைகள் சிக்கின.
அவற்றை போலீசார் பறிமுதல் செய்து மேலும் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது காந்தரூபன் வீட்டில் 25 பவுன் நகைகள் திருடியதை மகேஸ்வரி ஒப்புக்கொண்டார். எனவே அவரை போலீசார் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.






