search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மழை தண்ணீர் வீணாக செல்வதை தடுக்க சென்னையில் 49 சிறு குளங்களில் நீர் சேமிக்க ரூ.44 கோடியில் திட்டம்
    X

    மழை தண்ணீர் வீணாக செல்வதை தடுக்க சென்னையில் 49 சிறு குளங்களில் நீர் சேமிக்க ரூ.44 கோடியில் திட்டம்

    • மழை நீர் செல்லும் வகையில் கால்வாய்கள் அமைக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.
    • தனியார் நிலங்கள் கையகப்படுத்தப்பட இருக்கும் என்று தெரிகிறது.

    சென்னை:

    சென்னை நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் பருவ மழையின்போது தண்ணீர் செல்ல வழியின்றி குடியிருப்பு பகுதிகளில் தேங்குவது கடும் சவாலை ஏற்படுத்தி வருகிறது.

    அருகில் உள்ள ஏரி, குளங்களுக்கு தண்ணீர் செல்ல போதிய வடி கால்வாய் வசதி இல்லாததால் இந்த பிரச்சினை நீடித்து வருகிறது. கடந்த வாரம் பெய்த ஒரு நாள் கோடை மழைக்கே பல இடங்கள் வெள்ளத்தில் மிதந்தன. சென்னையில் குடியிருப்பு பகுதிகளில் மழை நீர் தேங்காமல் இருக்க மாநகராட்சி அதிகாரிகள் பல்வேறு நடவடிக்கைகைள எடுத்து வருகிறார்கள்.

    இந்நிலையில் சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் மழைநீர் தேங்காமல் இருக்கவும், அந்த தண்ணீர் வீணாகாமல் அருகில் உள்ள சிறிய ஏரி, குளங்களில் சேமிக்கவும் மாநகராட்சி திட்டமிட்டு உள்ளது. இதற்காக மழை நீர் செல்லும் வகையில் கால்வாய்கள் அமைக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.

    இதற்கான முதல் கட்டபணி ரூ.44 கோடி மதிப்பில் நடைபெற இருக்கிறது.15 மண்டலங்களில் உள்ள 49 சிறு ஏரி, மற்றும் குளங்களுக்கு தண்ணீரை கொண்டு செல்வது குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்ய உள்ளனர்.

    இதேபோல் குளங்களில் இருந்து உபரி நீர் செல்லும் கால்வாய் இல்லாததாலும் குடியிருப்பு பகுதிகளுக்குள் தண்ணீர் புகுந்து கடும் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. இதையடுத்து ஏரிகளில் உபரி நீர் கால்வாய் அமைக்கவும் அதிகாரிகள் பரிசீலனை செய்து வருகிறார்கள்.

    இதற்காக தனியார் நிலங்கள் கையகப்படுத்தப்பட இருக்கும் என்று தெரிகிறது. இது தொடர்பான விரிவான ஆய்வு முடிந்த பின்னரே எவ்வளவு இடம் கையகப்படுத்தப்படும் என்ற விபரம் தெரியவரும்.

    பலத்த மழை பெய்யும்போது பல்வேறு இடங்களில் இருந்து ஆவடி அருகே உள்ள பருத்திப்பட்டு ஏரி, மற்றும் அயப்பாக்கம், கோலடி ஏரிகளுக்கு தண்ணீர் செல்லும். இந்த ஏரிகளில் இருந்து வெளியேறும் உபரி நீர் அம்பத்தூர் ஏரியில் கலப்பதால் பல பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வருகிறது.

    இதேபோல் நன்மங்கலம் ஏரியில் உபரி நீர் கால்வாய் இல்லை. மழை நீரால் குளம் நிரம்பும்போது குடியிருப்பு பகுதிகளுக்குள் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இந்த ஏரிகளில் உபரி நீர் கால்வாய் அமைக்க திட்ட மிடப்பட்டு உள்ளது. இதே போல் போரூர், செம்மஞ்சேரி உள்ளிட்ட சில ஏரிகளில் கால்வாய் அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    இதுகுறித்து அதிகாரி ஒருவர் கூறும்போது, ஏரிகளில் உபரி நீர் கால்வாய்கள் இல்லாததால் பல மண்டலங்களில் வெள்ள அபாயம் அதிகரித்து உள்ளது. உபரி நீர்கால்வாய் அமைப்பது தொடர்பாக ஆய்வு செய்யப்பட்டு நிலம் கையகப்படுத்தப்படும். பெரும்பாக்கம் ஏரியில் உபரிநீர் கால்வாய்கள் அமைக்கும் பணி சவாலானது. அயனம்பாக்கம் ஏரிப்பகுதியில் போதிய கால்வாய்கள் இல்லை. முகப்பேர், பாடி, நொளம்பூர் பகுதிகளில் இருந்த குளங்கள் தற்போது இல்லை. இதுபோன்ற இடங்களில் கூடுதலாக மழைநீர் வடிகால்வாய்கள் அமைக்க வேண்டும் என்றார்.

    Next Story
    ×