என் மலர்
உள்ளூர் செய்திகள்

கடலூர் திருப்பாதிரிப்புலியூர் பகுதியில் இறந்த நபரின் உடலை கொடுக்க மறுத்த உறவினர்களிடம் கடலூர் மற்றும் புதுச்சேரி மாநில போலீசார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட காட்சி.
மர்ம கும்பலால் தாக்கப்பட்டு உயிரிழந்த கடலூர் வாலிபர் உடலை ஒப்படைக்க உறவினர்கள் மறுப்பு: போலீசாருடன் கடும்வாக்குவாதம்
- பாலமுருகனை அங்கிருந்து கடலூர் திருப்பாதிரிப்புலியூரில் அவரது வீட்டிற்கு கொண்டு வந்தனர்.
- பாலமுருகன் மீது பழிக்குபழியாக இந்த தாக்குதல் நடத்தப்பட்டதா ?
கடலூர்:
கடலூர் திருப்பாதிரிப்புலியூர் மாரியம்மன்கோவில் தெருவை சேர்ந்தவர் ஓசைமணி மகன் பாலமுருகன் (வயது 28). அதே பகுதியை சேர்ந்த காமராஜ் என்பவர் கொலையில் பாலமுருகன் சம்பந்தப்பட்டு அந்த வழக்கு நிலுவையில் உள்ளது. இந்நிலையில் பாலமுருகன் சம்பவத்தன்று திருநங்கை ஒருவரை பஸ் ஏற்றிவிட புதுவை பஸ் நிலையத்திற்கு வந்தார். அப்போது அங்கு வந்த ஒரு கும்பல் திடீரென பாலமுருகனை பலமாக தாக்கியது. இதில் பாலமுருகன் சுருண்டு விழுந்தார். உடனே அந்த கும்பல் அங்கிருந்து தப்பி சென்றது. இதை பார்த்த அருகில் இருந்தவர்கள் பாலமுருகனை மீட்டு சிகிச்சைக்கு புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இதனையடுத்து பாலமுருகனை மேல் சிகிச்சைக்காக இவரது உறவினர்கள் கிருமாம்பா க்கத்தில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு பாலமுருகனுக்கு சிகிச்சை அளித்த டாக்டர்கள் பாலமுருகனின் உடல்நிலை மோசமாக உள்ளதால் சிகிச்சை அளித்தும் பலனில்லை என்று கூறியதாக தெரிகிறது. இதைகேட்ட பாலமுருகனின் உறவினர்கள் பாலமுருகனை அங்கிருந்து கடலூர் திருப்பாதிரிப்புலியூரில் அவரது வீட்டிற்கு கொண்டு வந்தனர்.
இதனையடுத்து வீட்டிலி ருந்த பாலமுருகனின் உடல்நிலை மிகவும் மோசமாகி உயிரிழந்தார். இதுகுறித்து பாலமுருகனின் உறவினர்கள் போலீசாரிடம் தெரிவிக்காமல் இருந்ததாக கூறப்படுகிறது. ஆனால் முன்னதாக பாலமுரகன் தாக்கப்பட்டது குறித்து பாலமுருகன் அண்ணன் வெங்கடேசன் புதுவை உருளையன்பேட்டை போலீசாரிடம் அளித்த புகாரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வந்த நிலையில் தற்போது பாலமுருகன் இறந்த சம்பவம் அறிந்த புதுவை போலீசார் கொலை வழக்காக மாற்றி சம்பவ இடத்திற்கு வந்து பாலமுருகன் இறந்ததை போலீசாரிடம் ஏன் தெரிவிக்கவில்லை என்று கேட்டனர். உடனே அருகில் இருந்த பாலமுருகனின் நண்பர்கள், உறவினர்கள் உள்பட 100-க்கும் மேற்பட்டோர் அங்கு கூடி பாலமுருகன் உடலை தரமாட்டோம் என போலீசாரிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் கடலூர் திருப்பாதிரிபோலீசாருக்கு தெரிவிக்கப்பட்டது.
சம்பவ இடத்திற்கு வந்த திருப்பாதிரி போலீசார் புதுவை போலீசாரிடம் சம்பவம் குறித்து கேட்டு பாலமுருகன் உறவினர்களிடம் புதுவை, திருப்பாதிரி போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி பாலமுருகன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பாதிரி போலீசாரின் உதவியுடன் கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு பணியில் இருந்த டாக்டர்கள் கொலை வழக்கு சம்பந்தமான உடலை இங்கு பிரேத பரிசோதனை செய்ய மாட்டோம் என்று கூறி அதற்கு முண்டியம்பாக்கம், புதுவை கதிர்காமம் ஆஸ்பத்திரிக்குதான் நீங்கள் கொண்டு செல்ல வேண்டும் என்று கூறினர். இதனையடுத்து புதுவை போலீசார் பாலமுருகன் உடலை கதிர்காமம் ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து புதுவை போலீசார் வழக்கு பதிவு செய்து கொலை வழக்கு நிலுவையில் இருந்த பாலமுருகன் மீது பழிக்குபழியாக இந்த தாக்குதல் நடத்தப்பட்டதா ? அல்லது வேறு ஏதேனும் காரணமா என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.






