என் மலர்tooltip icon

    ராணிப்பேட்டை

    ராணிப்பேட்டை மாவட்ட சமூக பாதுகாப்புத் துறையில் இளைஞர் நீதி குழுமத்திற்கு சமூகநல உறுப்பினர்கள் நியமிக்க படுவதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்தார்.
    ராணிப்பேட்டை:

    2015ம் ஆண்டின் இளைஞர் நீதி (குழந்தைகள் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு) சட்டத்தின் விதிமுறைகளின்படி அமைக்கப்பட்டுள்ள இளைஞர் நீதி குழுமத்திற்கு சமூக நல உறுப்பினர்களை நியமிக்கப்படுவதற்காக தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

    இதுகுறித்து கலெக்டர் பாஸ்கர பாண்டியன் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பவதாவது:-

    இளைஞர் நீதி குழுமத்திற்கு ஒரு பெண் உட்பட 2 சமூகநல உறுப்பினர்கள் மதிப்பூதிய அடிப்படையில் நியமிக்கப்பட உள்ளனர். குழந்தைகள் தொடர்பான உடல்நலம், கல்வி அல்லது குழந்தைகளுக்கான நலப்பணிகளில் குறைந்தது 7 ஆண்டுகள் முனைப்புடன் ஈடுபாடு கொண்டவர் அல்லது குழந்தை உளவியல், மன நல மருத்துவம், சமூகவியல் அல்லது சட்டம் ஆகியவற்றில் ஏதேனும் பட்டம் பெற்ற தொழில் புரிபவராக இருத்தல் வேண்டும்.
     
    விண்ணப்பதாரர்கள் நியமனம் செய்யப்படும் போது 35 வயதுக்கு குறையாதவராகவும் 65 வயதை பூர்த்தி செய்யாதவராகவும் இருத்தல் வேண்டும். 

    ஒரு குழுவில் அதிகபட்சமாக ஒரு நபர் இருமுறை மட்டுமே பதவி வகிக்க தகுதி உடையவர்களாவர். ஆனால் தொடர்ந்து இருமுறை பதவி வகிக்க இயலாது. 

    இதற்கான விண்ணப்ப படிவத்தை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகிலிருந்தும் மாவட்ட இணையதளத்தில் இருந்தும் பெற்றுக் கொள்ளலாம் (https://vellore.nic.in) தகுதி வாய்ந்த நபர்கள் மேற்கண்ட பதவிக்கு அதற்கான அமைந்த வடிவத்தில் செய்தி வெளியீடு நாளிலிருந்து 15 நாட்கள் வரை கீழ்கண்ட முகவரியில் கிடைக்கப் பெறுமாறு விண்ணப்பிக்கலாம். 

    மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, அண்ணாசாலை, வேலூர் 632 001 தொலைபேசி எண்: 0416-2222310, பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் குறிப்பிட்ட கால கெடுவுக்குள் மேற் குறிப்பிட்ட அலுவலகத்திற்கு வந்து சேர வேண்டும். தகுதி மற்றும் அனுபவத்தின் அடிப்படையில் நியமனம் அமையும். 

    இது குறித்து அரசின் முடிவே இறுதியானது. இவ்வாறு கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளார்.
    ஆற்காடு அருகே கிணற்றில் தாய், மகள் பிணத்தை போலீசார் மீட்டனர்.
    ஆற்காடு:

    வாலாஜா அடுத்த வீசி மோட்டூர் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ். இவரது மனைவி கல்பனா (வயது 32). இவர்களுக்கு ரகு (6) என்ற மகனும் சந்தான ஸ்ரீ (3) என்ற மகளும் உள்ளனர். 

    கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டதால் கணவரை விட்டு பிரிந்து தனது தாயார் வீடான ஆற்காடு கும்மடம் தந்தை பொ¤யார் பகுதியில் வசித்து வந்தார். 

    இந்த நிலையில் நேற்று தனது மகளுடன் வீட்டை விட்டு வெளியே சென்ற கல்பனா மீண்டும் வீடு திரும்பாததால் அதிர்ச்சி அடைந்த தாயார் அந்த பகுதியில் தேடியுள்ளார். அப்போது ஆற்காடு முப்பது வெட்டி பகுதியில் விவசாய கிணற்றில் பிணமாக மிதந்து தெரியவந்தது. 

    இதையடுத்து ஆற்காடு டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த போலீசார் தாய், மகளின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

    இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    நெமிலி அருகே மணல் கடத்திய 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.
    நெமிலி:

    ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் அடுத்த சிருகரும்பூர் கிராமத்தை சேர்ந்தவர் தனுஷ் குமார் (வயது 18) மற்றும் அதே பகுதியை சேர்ந்த ராஜேந்திர பிரசாத் (21) இவர்கள் இருவரும் பாலாற்றில் இருந்து மூலம் மணலை மூட்டையாக கட்டி கடத்தி கொண்டிருந்தனர். 

    அப்போது ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த காவேரிப்பாக்கம் போலீஸ் அவர்களை பிடித்து மணல் கடத்தலுக்கு பயன்படுத்திய பைக்கை செய்யப்பட்டு அவர்களை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
    பாணாவரத்தில் பெருமாள் கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.
    நெமிலி:

    ராணிப்பேட்டை மாவட்டம் பாணாவரம் கவரை தெருவில் -ஸ்ரீ தேவி, பூதேவி சமேத சீனிவாச பெருமாள் கோவில் அமைந்துள்ளது. 

    இக்கோவில் 200 வருடங்கள் பழமை வாய்ந்த கோவிலாகும். கடந்த சில மாதங்களாக ஊர் பொதுமக்கள் ஒன்றிணைந்து கோவிலை புனரமைப்பு பணிகளை செய்து வந்தனர்.

    இந்நிலையில் நேற்று காலை 5 மணிக்கு கோ பூஜையும், 6 மணிக்கு கலசங்கள் புறப்பாடு நடைபெற்றது. 7 மணிக்கு ஸ்ரீதேவி, பூதேவி சமேத சீனிவாச பெருமாளுக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. 

    பிறகு பிற்பகல் 1 மணிக்கு ஊஞ்சல் சேவை மற்றும் திருக்கல்யாண உற்சவ வைபவம் நடைபெற்றது. மாலை 7 மணிக்கு சீனிவாச பெருமாள் சமேதராய் திருவீதி உலா நடைபெற்றது. அப்போது பஜனை குழுவினரால் நாலாயிர திவ்வியப் பிரபந்தம் பாடப்பட்டது. 

    விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
    வாலாஜா அனந்தலையில் வேளாண் கல்லூரி மாணவிகள் விழிப்புணர்வு நடத்தினர்.
    வாலாஜா:

    வாலாஜா அடுத்த கலவை ஆதிபராசக்தி தோட்டக்கலை கல்லூரி மாணவிகள் அனந்தலை கிராமத்தில் ஊரக தோட்டக்கலை குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். 

    இதில் உழவன் செயலி உபயோகத்தைப் பற்றியும், அவற்றின் நன்மைகள் பற்றியும் விவசாயிகளுக்கு எடுத்துக் கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
     
    இந்த செயலி மூலம் விவசாயிகள் வேளாண்மை தொடர்பான அனைத்து திட்டங்களையும் தெரிந்து கொள்ளலாம். 18 வகையான சேவைகள் உழவன் செயலி மூலம் பெற்று பயன்பெறலாம் என்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
    ராணிப்பேட்டையில் நடைபெறும் வேலை வாய்ப்பு முகாமில் இளைஞர்கள் திரளாக பங்கேற்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
    நெமிலி :

    ராணிப்பேட்டை மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் வழிகாட்டும் மையம் இணைந்து தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களின் 69 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு அம்மூரில் உள்ள ஜிகே பள்ளியில் மாபெரும் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நாளை (சனிக்கிழமை)நடைபெற உள்ளது.

    இதனையடுத்து நெமிலி பிடிஓ அலுவலகத்தில் நேற்று நெமிலி யூனியனுக்கு உட்பட்ட 47 கிராம பஞ்., தலைவர்கள் மற்றும் ஒன்றிய கவுன்சிலர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

    அப்போது ஒன்றியக்குழு தலைவர் வடிவேல் பேசியதாவது:-

    ஒவ்வொரு கிராமத்திலும் இருந்தும் பஞ்., தலைவர்கள் 50 இளைஞர்களை தனியார் வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்ள அறிவுறுத்த வேண்டும்.

    மேலும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுவதை ஆட்டோவில் ஒலி பெருக்கி மூலம் அறிவிப்பு செய்து அனைத்து கிராமப்புற இளைஞர்களும் பயன்படும் வகையில் அனைவரிடமும் கொண்டு சேர்க்க வேண்டும் என்றார்.
    ராணிப்பேட்டை மாவட்டத்தில் நாளை நடைபெற உள்ள வேலை வாய்ப்பு முகாம் முன்னேற்பாடு பணிகள் குறித்து அமைச்சர் சி.வி.கணேசன் ஆய்வு செய்தார்.
    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை மாவட்டம் அம்மூர் அருகே ஜிகே உலக பள்ளியில் நாளை (சனிக்கிழமை) நடைபெற உள்ள தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் முன்னேற்பாடுகள் பணிகள் குறித்து தொழிலாளர் நலன் மற்றும் மேம்பாட்டுத் துறை அமைச்சர் சி.வி.கணேசன்  நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். 

    கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமை  தாங்கினார்.
    இந்த ஆய்வுக்கு பின்னர் அமைச்சர் கணேசன் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:-

    ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஜிகே உலக பள்ளியில் மாபெரும் வேலை வாய்ப்பு முகாம் நாளை (சனிக்கிழமை) நடைபெற உள்ளது. 

    அந்த வேலை வாய்ப்பு முகாமில் சேப்பாக்கம், திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ., நீர்வளத்துறை  அமைச்சர் துரைமுருகன்,கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பிக்க உள்ளனர். 

    சுமார் 150க்கும் மேற்பட்ட தனியார் துறை நிறுவனங்கள் இந்த வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொண்டு வேலை நாடுநர்களை தேர்ந்தெடுக்க உள்ளனர்.

    8ம் வகுப்பு முதல் பொறியியல் கலை அறிவியல் பட்ட படிப்பு மற்றும்  பட்டயப் படிப்பு வரை படித்துள்ள இளைஞர்கள் இந்த முகாமில் பங்கேற்கலாம். 

    அதற்கான முன்னேற்பாடு பணிகள் குறித்த  ஆய்வு செய்யப்பட்டு முகாமுக்கு வரும் அனைவருக்கும் தேவையான வசதிகளான தண்ணீர் வசதி ஆம்புலன்ஸ் வசதி தாய்மார்கள் யாரேனும் வந்தால் குழந்தைகளுக்கு பாலூட்டும் அறை போன்ற அடிப்படை வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. 

    துறைசார்ந்த அலுவலர்களுக்கு பணிகளை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது. 

    இந்த ஆய்வின்போது மாவட்ட வருவாய் அலுவலர் முகமது அஸ்லாம், திட்ட இயக்குனர் ஊரக வளர்ச்சி முகமை லோகநாயகி, இணை இயக்குனர்கள் அனிதா, ராஜசேகர், ஜெகதீசன், ஜிகே உலக பள்ளி இயக்குனர் வினோத் காந்தி, மற்றும் வேலைவாய்ப்புத் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
    காவேரிப்பாக்கம் பி.டி.ஓ. அலுவலகத்தில் பஞ்.தலைவர்கள் தரையில் அமர்ந்து கூட்டம் நடத்தினர்.
    நெமிலி:

    ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் ஊராட்சி ஒன்றியத்தில் ஒன்றிய அலுவலகத்தில் தலைவர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற இருந்தது.

    கூட்டம் நடத்த வட்டார வளர்ச்சி அலுவலக கூட்ட அரங்கை தராததால் அனைத்து ஊராட்சி மன்றத் தலைவர்களும் பி-.டி.ஓ. அலுவலகம் முன்பு அமர்ந்து  கூட்டத்தினை நடத்தினர். 

    இதில் கூட்டமைப்பு தலைவர் அர்ஜுனன் செயலாளர் மோகனசுந்தரம் பொருளாளர் ராஜேந்திரன் கூட்டமைப்பு பொதுக்குழு உறுப்பினர்கள் முன்னிலையில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    இதில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் வழங்கப்படும் அனைத்து வேலைகளையும் ஊராட்சி மன்ற தலைவர் வாயிலாகத்தான் செயல்படுத்த வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
    நெமிலி அருகே நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
    நெமிலி:

    ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி அடுத்த சயனபுரம் ஊராட்சியில் தமிழ்நாடு அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தினை நெமிலி கிழக்கு ஒன்றிய செயலாளரும், நெமிலி ஒன்றிய குழுதலைவருமான பெ.வடிவேலு திறந்து வைத்தார். 

    இதில் சயனபுரம் ஊராட்சி மன்றத் தலைவர் பவானி வடிவேலு மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், கிராம பொதுமக்கள் என திரளானோர் கலந்து கொண்டனர். 

    நேரடி வசூல் கொள்முதல் திறக்கப்பட்டதால் அப்பகுதியில் உள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
    காவேரிப்பாக்கம் அருகே முட்புதரில் பதுக்கிய 4 டன் ரேசன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.
    நெமிலி:

    ராணிப்பேட்டை மாவட்டத்தில் ரேசன் அரிசி கடத்ததுபவர்களை பிடிக்க குடிமை பொருள் குற்ற புலனாய்வு பிரிவு சென்னை கோட்ட கண்காணிப்பாளர் ஸ்டாலின் உத்தரவிட்டார். 

    அவரது உத்தரவின் பேரில் காவேரிப்பாக்கம் அருகே துறை பெரும்பாக்கம் மாகானிப்பட்டு செல்லும் சாலை அருகே முட்புதரில் வெளி மாநிலத்திற்கு கடத்துவதற்காக ரேசன் அரிசியை பதுக்கி வைத்திருப்பதாக குடிமை பொருள் குற்றபுலனாய்வு பிரிவு ஆய்வாளர் சதீஷ்க்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    அங்கு சென்று சோதனை நடத்திய போது 4 டன் ரேசன் அரிசி பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து ரேசன் அரிசியை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். ரேசன் அரிசியை அங்கு பதுக்கியவர்கள் யார் என்று வழக்கு பதிவு செய்து விசாரனை நடத்தி வருகின்றனர்.
    அரக்கோணம் மத்திய தொழில் பாதுகாப்பு படையில் மகளிர் தின விழா நடைபெற்றது.
    அரக்கோணம்:

    அரக்கோணம் அடுத்த நகரி குப்பத்தில் உள்ள மத்திய தொழில் பாதுகாப்புப் படையில் சர்வதேச மகளிர் தின விழா கொண்டப்பட்டது. டிஐஜி சாந்திஜெய்தேவ் தலைமையில் கேக் வெட்டியும் கலை நிகழ்ச்சிகள் நடத்தியும் கொண்டாடினர். 

    இந்நிகழ்ச்சியில் துணை கமாண்டன்ட் பராமிந்தர் கவுர், அசிஸ்டெண்ட் கமாண்டன்ட் சேத்னா, சீனியர் மருத்துவ அதிகாரி துணை கமாண்டன்ட் எஸ்.கே. சபானா, அரக்கோணம் துணை தாசில்தார் சரஸ்வதி, கேந்திரிய வித்யாலயா பள்ளி முதல்வர் மலர்விழி மற்றும் வீராங்கனைகள் பலர் கலந்து கொண்டனர்.
    ராணிப்பேட்டையில் மகளிர் தினத்தை முன்னிட்டு கால்பந்து போட்டி நடைபெற்றது.
    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை தனியார் மேல்நிலைப்பள்ளியில் மகளிர் தினத்தை முன்னிட்டு  பெண்களுக்கான கால்பந்து போட்டி நடந்தது. 

    கலெக்டர் பாஸ்கர பாண்டியன் கால்பந்து போட்டியை தொடங்கி வைத்தார் நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:-

    இல்லம் பெண்களுக்கு உலகம் ஆண்களுக்கு என்ற கூற்றினை மாற்றி ஓடி விளையாடு பாப்பா நீ ஒளிந்திருக்கலாகாதுபாப்பா என இப்பாடல் மூலம் பெண்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தியவர் பாரதியார் ஆவார். 

    கல்வி ஒரு கண் என்றால் விளையாட்டு என்பது மற்றொரு கண். கல்வியை கற்றுத்தராத பாடங்களையெல்லாம் விளையாட்டானது கற்றுத்தரும். தோல்வி பெறாத எந்த ஒரு மனிதரும் வெற்றியை பெறுவதில்லை. 

    தோல்வி பெறாத எந்த ஒரு மனிதரும் வெற்றியின் சுவை முழுவதும் சுவைப்பதில்லை. 

    படிப்பில் தங்கப்பதக்கம் வாங்கிய ஒரு மனிதரை விட விளையாட்டுப் போட்டியில் தோல்வியுற்ற வீரர் சிறப்பாக செயலாற்றுவார் என்ற நம்பிக்கை எனக்கு எப்போதுமே உண்டு. 

    இவ்வாறு அவர் பேசினார். 
    ×