என் மலர்tooltip icon

    புதுக்கோட்டை

    இளங்கோவன் ராஜினாமா குறித்து முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கருத்து தெரிவித்துள்ளார்.

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்ட காங்கிரஸ் சார்பில் உள்ளாட்சி தேர்தல் தொடர்பான ஆலோசனை கூட்டம் மாவட்ட காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் இன்று நடந்தது. இதில் முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:–

    நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் தி.மு.க.வின் உழைப்பு கடுமையான உழைப்பு தான். ஆனால் காங்கிரஸ் கட்சியின் உழைப்பு, வாக்கு இல்லாமல் அவர்களால் வெற்றி பெற்றிருக்க முடியாது என்று அவர்களுக்கே தெரியும். அரசியலில் வெற்றி தோல்வி சகஜம் என்று கூறுவது சம்ராதய பேச்சு. அரசியல் கட்சிக்கு வெற்றி தான் முக்கியம்.

    காங்கிரஸ் கட்சி கன்னியாகுமரி, சிவகங்கை மாவட்டங்களில் வலிமையாக உள்ளது. மற்ற மாவட்டங்களில் அவ்வாறு இல்லை என்றால் அது கட்சியின் குறை அல்ல. அது கட்சியை வழி நடத்துபவர்களின் குறை.

    கட்சி தோழர்கள் ஒருவரை ஒருவர் சந்தித்து பேச வேண்டும். விவாதங்கள் செய்ய வேண்டும். விவாதங்கள் நடந்தால் தான் அரசியல்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    புதுக்கோட்டை மாவட்டத்தில் கள ஒருங்கிணைப்பாளர் பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் கணேஷ் வெளியிட்டள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–

    புதுக்கோட்டை மாவட்டம், மாவட்ட இயக்க மேலாண்மை அலகு தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் வாயிலாக 3ஆம் கட்டமாக செயல்படுத்தப்பட்டு வரும் திருமயம், பொன்னமராவதி, மணமேல்குடி மற்றும் ஆவுடையார்கோவில் ஆகிய 5 ஊராட்சி ஒன்றியங்ளில் உள்ள 11 தொகுப்புகளுக்கு கூடுதலாக ஒரு தொகுப்பிற்கு 1 நபர் வீதம் 11 தொகுப்பிற்கும் 11 தொகுப்பு களப்பணியாளர்களும் மற்றும் 2–ஆம் கட்ட அறந்தாங்கி ஊராட்சி ஒன்றியம் ரெத்தினக்கோட்டை தொகுப்பிற்கு காலியாக உள்ள ஒரு பணியிடத்திற்கு 1 நபரும் கீழ்க்கண்ட தகுதிகளை உடைய 12 தற்காலிக கள ஒருங்கிணைப்பாளர்கள் தேர்வு செய்யப் படவுள்ளனர்.

    பதவியின் பெயர் : சமுதாய கள ஒருங்கிணைப்பாளர்.

    தகுதிகள்: சமுதாய கள ஒருங்கிணைப்பாளர் பணிக்கு குறைந்தபட்சம் 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும், மகளிர் சுயஉதவிக்குழுவில் குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் உறுப்பினராகவும், 2 ஆண்டு பொறுப்பாளராகவும் இருத்தல் வேண்டும், ஊராட்சி அளவிலான கூட்டமைப்பில் குறைந்தபட்சம் 2 ஆண்டுகள் உறுப்பினராக இருத்தல் வேண்டும்.

    40 வயதுக்குட்பட்டவராக இருத்தல் வேண்டும். தொகுப்பில் உள்ள ஊராட்சிகளுக்கு சென்று புள்ளி விபரங்களை பெறுவதற்கு விருப்பம் உள்ளவராக இருத்தல் வேண்டும், கைப்பேசி வைத்திருப்பதுடன் எஸ்.எம்.எஸ், அனுப்புவதற்கும், வரும செய்திகளை படிப்பதற்கும் தெரிந்திருக்க வேண்டும், இருசக்கர வாகனம் ஓட்டவும் மற்றும் லைசென்ஸ் வைத்திருப்பவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

    மேற்கண்ட தகுதிகளை பெற்றுள்ளவர்கள் இப்பதவிகளுக்கான விண்ணப்பங்களை மாவட்ட இயக்க மேலாண்மை அலகு அலுவலகத்தில் பெற்று பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை 29.06.2016க்குள் இணை இயக்குநர் திட்ட இயக்குநர், மாவட்ட இயக்க மேலாண்மை அலகு, புதிய பேருந்து நிலையம் அருகில், புதுக்கோட்டை என்ற முகவரிக்கு உரிய விவரம் மற்றும் சான்றிதழ்களில் சான்றொப்பம் பெற்று அனுப்பி வைக்க வேண்டும்.

    இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

    அறந்தாங்கி அருகே போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்ட போது சட்ட விரோதமாக மது விற்ற 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
    அறந்தாங்கி:

    புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி மது விலக்கு அமலாக்கு பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுமதி மற்றும் போலீசார் நேற்று முக்கிய பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அறந்தாங்கி கடையத்துப்பட்டி அருகே உள்ள கடை வீதியில் சட்ட விரோதமாக மது விற்பனை செய்த செல்லையா மற்றும் அதே பகுதியில் பெட்டி கடையில் வைத்து மது விற்பனை செய்த பரமசிவன் ஆகியோர் கைது செய்யப்ட்டனர்.

    அதுபோன்று அறந்தாங்கி கடை வீதி அருகே பெட்டி கடையில் மறைத்து வைத்து  மது விற்பனை செய்த சிவக்குமாரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் பிடிப்பட்ட இந்த 3 பேர்களிடமிருந்து மொத்தம் 35 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
    மேயரை மக்களே தேர்வு செய்யும் முறையே வேண்டும் என்பது தான் எங்களது கட்சியின் நிலைப்பாடு என்று புதுக்கோட்டையில் ஜி.ராமகிருஷ்ணன் பேசினார்.
    புதுக்கோட்டை:

    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் புதுக்கோட்டையில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    சென்னையில் வருகிற 27-ந்தேதி கட்சியின் மாநில பொதுக்குழு கூட்டம் நடக்க உள்ளது. இதில் நடந்து முடிந்த தமிழக சட்டசபை தேர்தல் குறித்து விவாதிக்கப்படும். அடிப்படையில் அ.தி.மு.க.வுக்கும், தி.மு.க.வுக்கு இடையே எந்த வேறுபாடும் கிடையாது.

    2015-ல் ம.தி.மு.க., இடதுசாரி கட்சிகள் மற்றும் விடுதலை சிறுத்தைகள் ஆகிய 4 கட்சிகள் இணைந்து மக்கள் நல கூட்டியக்கம் தொடங்கப்பட்டது. தேர்தலின் போது தே.மு.தி.க., தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிகள் மக்கள் நலக்கூட்டணியில் இணைந்து தொகுதி உடன்பாடு செய்திருந்தது. அது தேர்தல் உடன்பாடுதான். தற்போது தேர்தல் முடிந்து விட்டது. அதனால் இரண்டு கட்சிகளும் மக்கள் நலக்கூட்டணியில் இருந்து விலகினாலும் எந்தவித ஆபத்தும் இல்லை.

    குறைந்த பட்ச செயல் திட்டத்தினால் உருவாக்கப்பட்ட மக்கள் நல கூட்டியக்கம் தொடரும். நான்கு கட்சிகளும் மக்கள் பிரச்சனைக்காக களப்பணி ஆற்றும். உள்ளாட்சி தேர்தல் குறித்து இன்னமும் முடிவு செய்யவில்லை. உள்ளாட்சி தேர்தலில் மாநில தேர்தல் கமி‌ஷன் பணப்பட்டுவாடாவை தடுத்து நிறுத்தி முறையான தேர்தல் நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    ஏற்கனவே உள்ளாட்சி அமைப்புகளில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி ஆகியவற்றின் தலைவர் தேர்தலில் நேரடி தேர்தல்தான் நடந்து வருகிறது. அதே முறை தொடர வேண்டும். மேயரை மக்களே தேர்வு செய்யும் முறையே வேண்டும் என்பது தான் எங்களது கட்சியின் நிலைப்பாடு.

    மத்திய அரசின் தவறான பொருளாதார கொள்கையால் விலைவாசி உயர்ந்து வருவதை கண்டித்து ஜூலை மாதம் கண்டன இயக்கம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் பல தனியார் பள்ளிகளில் 25 சதவீத இட ஒதுக்கீடு முறை அமல் படுத்தப்படவில்லை. இந்த விதிமுறையை மீறும் பள்ளிகள் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    உடலும்–உள்ளமும் ஆரோக்கியமாக இருக்க யோகா கற்க வேண்டும் என புதுக்கோட்டை கலெக்டர் கணேஷ் அறிவுரை வழங்கினார்.

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்ட விளையாட்டரங்கில், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், புதுக்கோட்டை மாவட்ட யோகா சங்கம் மற்றும் ஆத்மா யோகா மையம் இணைந்து நடத்திய 2–வது சர்வதேச அளவிலான யோகா தினத்தினை முன்னிட்டு நடைபெற்ற யோகா நிகழ்ச்சியினை கலெக்டர் .சு.கணேஷ் தலைமையேற்று யோகா என்பது இந்தியாவில் 5000 ஆண்டுகள் பழமை வாய்ந்த உடல் சார்ந்த அறிவாகும்.

    யோகா என்பதே தன்னுள் எப்படி வாழ வேண்டும் என்னும் வாழ்க்கையின் சாரத்தை பொதிந்து வைத்திருக்கும் அறிவியல் ஆகும். இது தனிநபரின் உடல், மனம் மற்றும் ஆன்மாவை இயற்கையின் பொருத்தமான கொள்கைகளுடன் சமநிலையுடன் இணைந்து சுகாதாரமாக பராமரிக்க உதவும். இது மக்களை துடிப்பாகவும், ஆரோக்கிய மாகவும் இருப்பதை முழுமையான ஞானத்தை உணரச்செய்ய உதவும் வகையில் வடிவமைக் கப்பட்டுள்ளது.

    எனவே இத்தகைய சிறப்புடைய யோகாவினை அனைத்து பொதுமக்களும் தினமும் உரிய முறையில் பயிற்சி மேற்கொண்டு தங்களது உடலையும், உள்ளத்தையும் என்றும் இளமையுடன் வைத்திருந்து நீண்ட ஆயுள் பெற்று நலமுடன் வாழ வேண்டும் என்றும் மாவட்ட கலெக்டர் சு.கணேஷ் கூறினார்.

    இந்நிகழ்ச்சியில் மாவட்ட விளையாட்டு அலுவலர் வாஞ்சி நாதன், நகர்மன்றத்தலைவர் இரா.ராஜசேகரன், வெங்கடேஸ்வரா மெட்ரிக் பள்ளி தாளாளர் கவிஞர் தங்கமூர்த்தி, மருத்துவர் ராமதாஸ், மாருதி மோகன், பள்ளி, கல்லூரி, இளைஞர் அமைப்புகள், நேரு யுவகேந்திரா, நாட்டு நலப்பணித்திட்ட மாணவ, மாணவிகள், கிராம வளர்ச்சி மையங்கள், யோகா மையங்கள், விளையாட்டு வீரர்கள், காவலர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

    புதுக்கோட்டையில் பிடிபட்ட திருடனை ஒப்படைக்க மறுத்ததால் போலீசாருக்கும் பொதுமக்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி தாலுகா பெரியாளுர் கிராமத்தில் கடந்த சில மாதங்களாக மின்மோட்டார், இன்வெர்ட்டர் உள்ளிட்ட மின்சாதனங்கள் அடிக்கடி திருட்டு போனது. இது குறித்து பொதுமக்கள் போலீசிடம் புகார் அளித்தும், திருடனை பிடிப்பதற்கு எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால் பொதுமக்கள் அதிருப்தியில் இருந்தனர்.

    இந்நிலையில் நேற்று நள்ளிரவு அப்பகுதியில் உள்ள சின்னகருப்பர் கோவிலில் யாரோ ஆயுதங்களை கொண்டு பூட்டை உடைப்பது போல் சத்தம் கேட்டது. அருகில் இருந்தவர்கள் கோவிலை திறந்து பார்த்த போது 3 பேர் கடப்பாரை, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் கோவில் உண்டியலை உடைத்து கொண்டிருந்தனர்.

    இதனை பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். பின்னர் அவர்களை பிடிக்க முயன்றபோது, 2 பேர் தப்பியோடிவிட்டனர். ஒருவர் மட்டும் பிடிபட்டார். அவருக்கு பொதுமக்கள் தர்மஅடி கொடுத்து விசாரித்த போது, அவர் மேற்பனைகாட்டை சேர்ந்த ரவிக்குமார் என்பது தெரிய வந்தது.

    இந்த சம்பவம் குறித்த தகவல் அறிந்ததும் கீரமங்கலம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, திருடனை தங்களிடம் ஒப்படைக்க கோரினர். ஆனால் போலீசாரின் கோரிக்கையை நிராகரித்த பொதுமக்கள், திருடனை மாவட்ட கலெக்டரிடம் ஒப்படைக்கப் போவதாக கூறி, ஒரு வேனில் திருடனை ஏற்றிக்கொண்டு புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு அழைத்து வந்தனர்.

    கலெக்டர் அலுவலகம் முன்பு போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது போலீசாருக்கும், பொதுமக்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

    தகவல் அறிந்ததும் அங்கு வந்த டவுன் டி.எஸ்.பி. பாலகுரு, பெரியாளுர் கிராமத்தில் நடந்த கொள்ளை சம்பவங்கள் குறித்து விரிவான விசாரணை மேற்கொள்ளப்படும் என்று உறுதியளித்தார். இதில் திருப்தியடைந்த பொதுமக்கள் திருடனை போலீசில் ஒப்படைத்து விட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.
    புதுக்கோட்டையில் மாணவிகள் விடுதிக்குள் 7 அடி நீள பாம்பு புகுந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை அரசு மகளிர் கலைக்கல்லூரியில் படிக்கும் ஆதிதிராவிடர் நல மாணவிகள், அருகில் உள்ள ஆதிதிராவிடர் நல மாணவியர் விடுதியில் தங்கி படித்து வருகின்றனர். கல்லூரி திறந்து ஒரு நாட்களே ஆன நிலையில் நேற்று விடுதி திறக்கப்பட்டது.

    இந்நிலையில் விடுதிக்குள் துப்புரவு பணியாளர்கள் பணியில் ஈடுபட்டனர். அப்போது ஒரு அறையில் நீளமான பாம்பு சுற்றி திரிந்ததை பார்த்த துப்புரவு பணியாளர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

    இது குறித்து உடனே புதுக்கோட்டை தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று பாம்பை பிடிக்க முயன்றனர். அப்போது அவர்களுக்கு போக்கு காட்டிய பாம்பு ஒரு பொந்துக்குள் நுழைந்து விட்டது. பின்னர் ஒரு மணி நேர போராட்டத்திற்கு தீயணைப்பு வீரர்கள் பாம்பை பிடித்தனர். பிடிபட்ட பாம்பு 7 அடி நீளமுள்ள கருஞ்சாரை பாம்பு என்பது தெரியவந்தது. விடுதியில் மாணவிகள் யாரும் இல்லாததால் அதிர்ஷ்ட வசமாக அசம்பாவிதம் ஏதும் ஏற்படவில்லை.

    இதையடுத்து பாம்பை பிடித்த தீயணைப்பு வீரர்கள் வனத்துறையிடம் ஒப்படைத்தனர். மாணவிகள் விடுதிக்குள் கருஞ்சாரை பாம்பு புகுந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    தமிழக அரசின் உத்தரவின்படி புதுக்கோட்டை மாவட்டத்தில் 14 மதுக்கடைகள் மூடப்பட்டு உள்ளன.
    புதுக்கோட்டை:

    தமிழ்நாட்டில், நாங்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் படிப்படியாக மதுக்கடைகளை மூடுவோம் என்று சட்டசபை தேர்தலின்போது அ.தி.மு.க. வாக்குறுதி அளித்தது. அதன்படி, அ.தி.மு.க.மீண்டும் ஆட்சிக்கு வந்ததும் முதல்-அமைச்சராக பொறுப்பேற்ற ஜெயலலிதா, மதுக்கடைகளின் விற்பனை நேரம் குறைக்கப்படும் என்றும், முதல் கட்டமாக 500 மதுக்கடைகள் மூடப்படும் என்றும் அறிவித்தார்.

    இதைத்தொடர்ந்து கடந்த மாதம் 24-ந் தேதி முதல் மதுக்கடைகளின் விற்பனை நேரம் குறைக்கப்பட்டது.இந்நிலையில் தமிழகம் முழுவதும் 500 மதுக்கடைகள் இன்று(நேற்று) முதல் முதல்கட்டமாக மூடப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது. அதன்படி தமிழகம் முழுவதும் நேற்று 500 மதுக்கடைகள் மூடப்பட்டன.

    அதன்படி புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள சாந்தநாதபுரம் 5-ம் வீதி, திலகர் திடல், திருவப்பூர், சந்தைப்பேட்டை, பொன்னமராவதி நகர் பகுதி, காரையூர், கீரனூர் புலியூர் சாலை, குரும்பூர் ஒத்தக்கடை, ஆலங்குடி சாலை மேட்டுப்பட்டி, விராலிமலை நகர் பகுதி, அறந்தாங்கி அருகே வல்லவாரி, முள்ளங்குறிச்சி அருகே ஊரக்காடு, மூக்கம்பட்டி, விராலிமலை அருகே ராஜாளிபட்டி ஆகிய 14 மதுக்கடைகள் நேற்று முதல் மூடப்பட்டன. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
    புதுக்கோட்டை புதிய பஸ் நிலைய பகுதியில் நகராட்சி லாரி மூலம் கழிவுநீரை திறந்து விட்டனர். இதனால் பயணிகளுக்கு தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. உடனடியாக நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை நகரின் மையபகுதியில் புதுக்கோட்டை புதிய பஸ் நிலையம் அமைந்து உள்ளது. இந்த பஸ் நிலையத்திற்கு தினமும் சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பயணிகள் வந்து செல்கின்றனர். ஆனால் புதிய பஸ் நிலையத்தில் குடிநீர் வசதி போன்ற எந்த ஒரு அடிப்படை வசதிகளும் இல்லை.

    பஸ் நிலைய வளாகத்தில் உள்ள ஆண், பெண் கழிவறைகள் முறையாக பராமரிக்கப்படாததால் தூர்நாற்றம் வீசுகின்றன. இது குறித்து பொதுமக்கள் பலமுறை நகராட்சி நிர்வாகத்திடம் புகார் அளித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

    இந்த நிலையில் நேற்று புதிய பஸ் நிலைய வளாகத்தில் உள்ள கழிவுநீர் கால்வாயில் நகராட்சி லாரி மூலம் கழிவுநீரை திறந்து விட்டனர். இதனால் பயணிகளுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே இது குறித்து மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பயணிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
    விராலிமலை சட்டமன்ற பகுதிக்குட்பட்ட அரசு பள்ளி அளவில் 10 மற்றும் 12ம் வகுப்பில் பொது தேர்வில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவ- மாணவிகளுக்கு அமைச்சர் விஜயபாஸ்கர் பரிசுகள் வழங்குகிறார்.

    விராலிமலை:

    தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதாவின் ஆணைக்கிணங்க புதுக்கோட்டை மாவட்ட அளவில் கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற 10 மற்றும் 12ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவ, மாணவிகளுக்கும், விராலிமலை சட்டமன்ற பகுதிக்குட்பட்ட அரசு பள்ளி அளவில் 10 மற்றும் 12ம் வகுப்பில் பொது தேர்வில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவ மாணவிகளுக்கும் இதற்கு உறுதுணையாக இருந்த ஆசிரியர்களுக்கும் பாராட்டு விழா நாளை (19ம் தேதி) காலை 10 மணியளவில் இலுப்பூர் ஏ.ஆர்.ஆர். திருமண மஹாலில் நடைபெறுகிறது.

    இதில் சாதனை படைத்த மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள், பள்ளிகளுக்கு அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் பரிசுகள் மற்றும் சான்றிதழ் வழங்கி பேசுகிறார்.

    இதில் புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் கணேஷ் தலைமை தாங்குகிறார். விழாவில் புதுக்கோட்டை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சாந்தி, அன்னவாசல் ஒன்றிய முன்னாள் சேர்மனும், கூட்டுறவு ஒன்றியங்களின் மாவட்டத்தலைவருமான சின்னதம்பி, அறந்தாங்கி மாவட்ட கல்வி அலுவலர் சத்யா, மெட்ரிக் பள்ளி ஆய்வாளர் சூசை, புதுக்கோட்டை மாவட்ட கல்வி அலுவலர் பரமசிவம் ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்தி பேசுகின்றனர்

    புதுக்கோட்டை மாவட்ட மத்திய அரசு வழக்கறிஞராக அறந்தை அண்ணாத்துறை நியமிக்கப்பட்டுள்ளார்.

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்ட மத்திய அரசு வழக்கறிஞராக அறந்தை அண்ணாத்துறை நியமிக்கப்பட்டுள்ளார்.

    இவர் பா.ஜ.க வின் வழக்கறிஞர் பிரிவு மாவட்ட பொதுச் சொயலாளராக பதவி வகித்து வருகிறார். மத்திய அரசு வழக்கறிஞராக நியமிக்கப்பட்டுள்ள அறந்தை அண்ணாத்துறையை சக வழக்கறிஞர்களும், நண்பர்களும் வாழ்த்து தெரிவித்தனர்.

    பிரதமரிடம் தமிழக முதல்வர் அளித்த கோரிக்கைகள் மீது மத்திய அரசு விரைந்து நடவடிக்கை எடுத்து போதிய நிதி ஒதுக்க வேண்டும் என்று ஜி.கே.வாசன் பேட்டியளித்துள்ளார்.
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்ட த.மா.கா. தலைவர் கூகூர் சண்முகம் இல்ல திருமண விழாவில் கலந்து கொண்ட அக்கட்சியின் தலைவர் ஜி.கே. வாசன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    உள்ளாட்சி தேர்தலில் யாருடன் கூட்டணி என்பது குறித்து இயக்கத்தின் நிர்வாகிகள் தலைவர்கள் தொண்டர்கள் கூட்டம் என 5 கட்ட கூட்டம் நடந்துள்ளது. அதன் முடிவின்படி அவர்களின் எண்ணங்களை அறிந்து அதற்கு ஏற்றவாறு கூட்டணி குறித்த அறிவிப்பு வெளியாகும்.

    தேர்தல் முடிவினால் மக்கள் மாற்றத்திற்கு தயாராக இல்லை என்று என்னால் கூற முடியாது. தேர்தல் எப்படி நடந்தது என்று மக்களுக்கு தெரியும். மக்களுக்கு நம்பிக்கை தேர்தல் ஆணையத்தின் மீது வர வேண்டும். இதுவரை அந்த நம்பிக்கை மக்களிடம் வரவில்லை.

    பெட்ரோல், டீசல் விலை உயர்வை த.மா.கா. கடுமையாக கண்டிக்கிறது. தொடர்ந்து பெட்ரோல், டீசல் விலை உயர்வால் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்து வருகிறது. தக்காளி, பருப்பு ஆகியவற்றின் விலை உயர்விற்கு மத்திய அரசின் தவறான செயல்பாடுகள் தான் காரணம்.

    பிரதமர் தமிழக முதல்வர் சந்திபபை பொறுத்த வரையில் தமிழகத்திற்கு தேவையான திட்டங்களை மத்திய அரசு கொடுக்க வேண்டும். அதற்கு உண்டான நிதியை மத்திய அரசு ஒதுக்க வேண்டும்.

    அரவக்குறிச்சி, தஞ்சை ஆகிய தொகுதிகளின் தேர்தலை ரத்து செய்துள்ளதே தேர்தல் ஆணையத்தின் தோல்விக்கு உதாரணமாகும். வரும் காலங்களிலாவது தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு மக்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் பலமான வலுவாக செயல்பாடுகளாக இருக்க வேண்டும்.

    குறிப்பாக கோட்பாடுகள், நெறிமுறைகள் ஆகியவை எல்லாம் கண்டிப்போடு செயல்படும் விதமாக நடவடிக்கைகள் இருக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    ×