என் மலர்tooltip icon

    புதுக்கோட்டை

    அறந்தாங்கி அருகே குடிநீர் வராததைக் கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
    அறந்தாங்கி:

    அறந்தாங்கி ஒன்றியம் சிட்டங்காடு ஊராட்சி கரிசக்காடு பகுதிக்கு கடந்த சில நாட்களாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. இதனால் பாதிக்கப்பட்ட அப்பகுதி பொது மக்கள் குடிநீர் வழங்காத சிட்டங்காடு ஊராட்சி நிர்வாகத்தைக் கண்டித்து பரவாக்கோட்டை கடைவீதியில் திடீர் என்று சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    மறியலில் ஈடுபட்டவர்களுடன் ஊராட்சி மன்றத் தலைவர் பழனியப்பன் பேச்சுவார்த்தை நடத்தினார். பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதை அடுத்து பொது மக்கள் மறியலை கைவிட்டனர்.
    சுவாதி கொலை கொலை வழக்கில் காவல்துறையினர் செயல்பட்டது போல நிலுவையில் உள்ள அனைத்து வழக்குகளிலும் குற்றவாளிகளை பிடிக்க வேண்டும் என த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் கூறியுள்ளார்
    பொன்னமராவதி :

    பொன்னமராவதியில் நடைபெற்ற தனியார் நிறுவன திறப்பு விழாவில் த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் பங்கேற்றார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:–

    சுவாதி கொலை கொலை வழக்கில் காவல்துறையினர் செயல்பட்டது போல நிலுவையில் உள்ள அனைத்து வழக்குகளிலும் குற்றவாளிகளை பிடிக்க வேண்டும். அனைத்து மாவட்டங்களிலும் தனிப்படை அமைத்து குற்றங்களை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும்.

    தற்போது தென்மேற்கு பருவக்காற்று வீசி வருவதால் மின்சாரத் துறையினர் அதிக அளவு பணியாட்களை வைத்துக் கொண்டு பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றார்.

    அப்போது த.மா.கா. தலைமை செயற்குழு உறுப்பினர் சிதம்பரம், மாவட்டத்தலைவர்கள் மோகன்ராஜ், கூகூர் சண்முகம், வட்டாரத் தலைவர் ராஜேந்திரன், நகரத்தலைவர் செந்தில், நாகராஜன் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.
    அறந்தாங்கி அருகே வீட்டின் பீரோவை உடைத்து 10 பவுன் நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.

    அறந்தாங்கி:

    புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியை அடுத்துள்ள வள்ளவாரி மேற்கு பகுதியை சேர்ந்தவர் செல்லகண்ணு. இவரது மனைவி ராஜம்மாள். இவர்களின் மகன் பரமசிவம். திருமணமாகி தந்தையின் விட்டு அருகில் வசித்து வருகிறார்.

    தற்போது பரமசிவம் சிங்கப்பூரில் வேலை பார்த்து வருகிறார். நேற்று பரமசிவத்தின் மனைவி ஜெயந்தி தனது 2 குழந்தைகளுடன் மாங்காட்டில் உள்ள தாய் வீட்டுக்கு செல்வதாக மாமனார் செல்லகண்ணுவிடம் கூறிவிட்டு சென்றுள்ளார்.

    இந்த நிலையில் இரவு செல்லகண்ணு வீட்டை பூட்டிவிட்டு துங்கிவிட்டார். அப்போது மர்ம நபர்கள் சிலர் பரமசிவத்தின் வீடு புகுந்து அங்குள்ள பீரோவில் இருந்த 10 பவுன் தங்க நகை மற்றும் ரூ. 6 ஆயிரம் ஆகியவற்றை திருடி சென்று விட்டனர். வீட்டில் திருடு போயிருப்பது செல்லகண்ணுக்கு காலையில் தான் தெரியவந்தது.

    இதையடுத்து அவர் அறந்தாங்கி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்கனை தேடி வருகின்றனர்.

    புதுக்கோட்டை மாவட்டத்தில் ரூ.45.41 லட்சம் மதிப்பிலான வளர்ச்சி பணிகளை கலெக்டர் கணேஷ் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி ஊராட்சி ஒன்றியத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் சார்பில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சிப்பணிகளை மாவட்ட கலெக்டர் கணேஷ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    பின்னர் அவர் கூறியதாவது:–

    தமிழ்நாடு முதலமைச்சர் ஊரகவளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் சார்பில் பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தி செயல்படுத்தி வருகிறார்கள். அதனடிப்படையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் அறந்தாங்கி ஊராட்சி ஒன்றியம், தாந்தானி ஊராட்சி, சிதம்பர விடுதியில் முதலமைச்சரின் சூரிய ஒளியுடன் கூடிய பசுமை வீடுகள் கட்டும் திட்டத்தின் கீழ் ரூ.2.10 இலட்சம் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்ட பசுமை வீடு கட்டடப்பணியினையும், திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் வெட்டப்பட்ட திடக்கழிவு மேலாண்மை குழி பணியையும், தமிழ்நாடு ஊரக சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.29.75 லட்சம் மதிப்பீட்டில் சிதம்பரம் விடுதி முதல் தாந்தானி சாலை வரை அமைக்கப்பட்ட தார் சாலைப்பணியையும், குரும்பூர் ஊராட்சி, கோவில்பட்டி திருக்குளத்தில் நடப்பட்டுள்ள மரக்கன்றுகள், பூவாத்தக்குடி ஊராட்சி, பூவாத்தக்குடியில் மகாத் மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தின் கீழ் ரூ.13.56 இலட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் மரக்கன்றுகள் நட்டு வளர்த்தல் பணியினையும் என மொத்தம் ரூ.45.41இலட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சிப்பணிகள் பார்வையிட்டு ஆய்வு செய்யப்பட்டது.

    இந்த ஆய்வின் போது குளங்களில் மரக்கன்றுகள் வளருவதற்கு இடையூராக இருக்கும் தேவையற்ற செடிகளை அகற்றவும், திடக்கழிவு குழிகளில் மக்கும் குப்பை, மக்காத குப்பைகளை தனித்தனியாக பிரித்து சேமிக்கவும், மரக்கன்றுகளை உரிய முறையில் நடவு செய்து பராமரித்து வளர்க்கவும், முடிவுற்ற பணிகளை உரிய முறையில் பராமரிக்கவும், மேலும் நடைபெறும் பணிகளை தரமான கட்டு மானப்பொருட்களை கொண்டு விரைவாக கட்டி முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரவும் சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தர விடப்பட்டுள்ளது என்றும் கலெக்டர் கணேஷ் கூறினார்.

    இந்த ஆய்வின்போது வட்டார வளர்ச்சி அலுவலர் பொய்யாமொழி, உதவி பொறியாளர் வேல்முருகன், ஒன்றியப்பணி மேற்பார்வையாளர்கள் குமாரசாமி, முத்துக்கிருஷ்ணன், தமிழ்மணி, உள்ளாட்சி அமைப்பின் பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.

    கோட்டைப்பட்டினம் அருகே படகு பழுதானதால் நடுக்கடலில் தத்தளித்த மீனவர்களை கடலோர பாதுகாப்பு குழும போலீசார் மீட்டனர்.

    அறந்தாங்கி:

    புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் மீனவ கிராமத்தில் இருந்து நேற்று இரவு ஏராளமான மீனவர்கள் தங்கள் விசைப்படகு மற்றும் நாட்டுப்படகுகளில் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.

    அவர்களின் மீன் பிடித்து விட்டு இன்று காலை கரை திரும்புவது வழக்கம். இந்த நிலையில் இன்று காலை முதல் மீனவர்கள் கோட் டைப்பட்டினம் மீன்பிடி துறைமுகத்திற்கு கரை திரும் பிக்கொண்டு இருந்தனர்.

    இதற்கிடையே கோட்டைப் பட்டினத்தை சேர்ந்த செய்யது அலி அக்பர் (வயது 26), அப்பாஸ் (32), பொன்னையா (45), பாலு (40) ஆகியோர் சென்ற நாட்டுப்படகில் திடீரென ஓட்டை விழுந்தது.

    இதனை அவர்கள் உடனடியாக சரிசெய்ய முயன்றனர். ஆனாலும் ஓட்டை வழியாக படகுக்குள் தண்ணீர் அதிக அளவில் புகுந்தது. மேலும் படகும் சிறிது, சிறிதாக மூழ்க தொடங்கியது.

    இதனால் அதிர்ச்சி அடைந்த மீனவர்கள் கடலோர பாதுகாப்பு குழும போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    அதன்பேரில் விரைந்து சென்ற திருப்பன்னவாசல் கடலோர பாதுகாப்பு குழும சப்-இன்ஸ்பெக்டர்கள் ரகு பதி, செந்தில்குமார், ராஜ் மோகன் ஆகியோர் கோட்டைப்பட்டினத்தில் இருந்து 5 கடல் மைல் தொலைவில் நடுக்கடலில் படகில் தத்தளித்து கொண்டிருந்த 4 மீனவர்களையும் பத்திரமாக மீட்டனர். பின்னர் அவர்கள் கரைக்கு அழைத்து வரப்பட்டனர்.

    வக்கீல்களுக்கு எதிரான சட்ட திருத்தத்தை திரும்பபெற வலியுறுத்தி புதுக்கோட்டையில் ரெயில் மறியலுக்கு முயற்சி செய்த 60 பேரை போலீசார் கைது செய்து விடுதலை செய்தனர்.
    புதுக்கோட்டை:

    சென்னை ஐகோர்ட்டு வக்கீல்கள் சட்டத்தில் கொண்டு வந்துள்ள சில திருத்தங்களை திரும்ப பெற வலியுறுத்தி தமிழகம் முழுவதும் வழக்கீல்கள் கோர்ட்டு புறக்கணிப்பு, உண்ணாவிரதம் என போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்த நிலையில் தமிழகம்–புதுச்சேரி வக்கீல்கள் சங்க கூட்டு நடவடிக்கைக்குழுவின் சார்பில் தேனி மாவட்டத்தில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் வழக்கீல்களுக்கு எதிரான சட்ட திருத்தத்தை திரும்ப பெற வலியுறுத்தி ரெயில் மறியல் போராட்டம் ஜூன் மாதம் 29–ந்தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

    இதன் ஒருபகுதியாக கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு புதுக்கோட்டை கோர்ட்டு வளாகத்தில் வக்கீல்கள் ஒரு நாள் அடையாள உண்ணாவிரத போராட்டம் நடத்தினர். இந்நிலையில் நேற்று காலை 11 மணியளிவில் வக்கீல்கள் சங்க தலைவர் ரவிச்சந்திரன், முன்னாள் தலைவர் செல்லபாண்டியன் தலைமையில் 6 பெண் வக்கீல்கள் உள்பட 60 பேர் ஒன்று சேர்ந்து பிச்சத்தான்பட்டி ரவுண்டானாவில் இருந்து ஊர்வலமாக புதுக்கோட்டை ரெயில் நிலையத்தை நோக்கி ரெயில் மறியல் போராட்டம் நடத்த ஊர்வலமாக வந்தனர்.

    வக்கீல்கள் ரெயில் நிலையத்திற்குள் நுழைய முயற்சித்தனர். ஆனால் புதுக்கோட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு (பொறுப்பு) சோனல் சந்திரா தலைமையில், கூடுதல் துணை போலீஸ் சூப்பிரண்டு கண்ணன் டவுன் துணை போலீஸ் சூப்பிரண்டு பாலகுரு, இன்ஸ்பெக்டர் தினேஷ்குமார் உள்பட போலீசார் பல தடுப்புகள் அமைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். வக்கீல்கள் உள்ளே நுழைய முயன்றபோது போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். அப்போது வக்கீல்கள போலீசாரிடம் உள்ளே சென்று போராட்டம் நடத்த அனுதிக்க வேண்டும் என்று கோரிக்கைவிடுத்தனர். இதற்கு போலீசார் அனுமதி வழங்காததால் வக்கீல்கள் போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    ஆனால் போலீசார் அவர்களது கோரிக்கையை ஏற்காமல் வக்கீல்கல் 60 பேரையும் கைது செய்து வேனில் அழைத்து சென்று ஒரு தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்து மாலையில் விடுவித்தனர்.
    தொழில்நுட்ப குழு வல்லுனர்களை கொண்டு மத்திய, மாநில அரசுகள் ஒரு குழு அமைத்து சமூக வலைதளங்களில் குற்றத்தடுப்பு சட்டத்தை கொண்டு வரவேண்டும் என்று புதுக்கோட்டையில் ஜி.கே.வாசன் பேசியுள்ளார்.
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்ட த.மா.கா. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் பங்கேற்ற அக்கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    சட்டமன்ற தேர்தல் முடிந்து சென்னையில் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களின் 6 கட்ட ஆலோசனை கூட்டம் நடந்தது. தற்போது மண்டல ஆலோனை கூட்டம் நடந்து வருகிறது. புதுக்கோட்டையில் திருச்சி மற்றும் புதுக்கோட்டை மண்டல கூட்டம் நடந்துள்ளது.

    இதில் நிர்வாகிகளோடு உள்ளாட்சி தேர்தலில் கட்சியின் செயல்பாடு குறித்தும், வலிமை குறித்தும் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. உள்ளாட்சி தேர்தலில் கட்சியின் தனித்துவத்தை வெளிப்படுத்துவதற்கு ஏதுவாக என்னென்ன நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

    இது ஜனநாயக நாடு. எனவே ஒரு கட்சியிலிருந்து பிரிந்து மற்றொரு கட்சியில் சேருவது என்பது அவர் அவரின் தனிப்பட்ட உரிமை. த.மா.கா.விலிருந்து யார் பிரிந்து சென்றாலும் கட்சிக்கு எந்தவித பாதிப்பும் இல்லை.

    ஜனநாயகத்தில் ஒரு கட்சியால் அடையாளம் காணப்பட்ட இயக்கத்தில் பல்வேறு நல்லவைகளை அனுபவித்து விட்டு, வேறு கட்சிக்கு செல்ல வேண்டும் என்று நினைப்பவர்களால் நிச்சயமாக கட்சிக்கு எந்தவித பாதிப்பும் இல்லை. இருப்பினும் என்னோடு இருப்பவர்கள் என்னோடு தான் இருக்கவேண்டும் என்பதுதான் எனது விருப்பம்.

    மேட்டூர் அரசு மருத்துவமனையில் கண் அறுவை சிகிச்சை செய்தவர்களுக்கு கண் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அரசு மருத்துவமனைகளில் முறையான சிகிச்சை அளிக்கப்படுகிறதா? என்பது குறித்து தமிழக அரசு ஆய்வு மேற்கொண்டு தரமான சிகிச்சையை உறுதி செய்யவேண்டும்.

    சமூக வலைதளங்களில் தற்போது தவறான சித்திரங்கள் வருவதால் பலர் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னையில் படுகொலை செய்யப்பட்ட சுவாதி சம்பவமாக இருந்தாலும் சரி, பேஸ்புக்கில் தன் படத்தை ஆபாசமாக சித்தரித்து வெளியிட்டதால் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்ட வினுப்பிரியா சம்பவமாக இருந்தாலும் சரி, சமூக வலைதளங்களில் அவர்களை பற்றி தவறான கருத்துக்கள் சித்தரிக்கப்படுகின்றன.

    தொழில்நுட்ப குழு வல்லுனர்களை கொண்டு மத்திய, மாநில அரசுகள் ஒரு குழு அமைத்து சமூக வலைதளங்களில் குற்றத்தடுப்பு சட்டத்தை கொண்டு வரவேண்டும். சமூக வலைதளங்களில் தவறான தகவல்களை பரப்புவர்களை கண்டறிந்து அவர்களுக்கு தகுந்த தண்டனை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    மேலும் மக்கள் கூடும் இடமாக உள்ள பேருந்து நிலையங்கள், ரெயில் நிலையங்கள் உள்ளிட்டவைகளில் கட்டாயம் சிசிடிவி, கேமிராக்களை மத்திய, மாநில அரசுகள் நிறுவ நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    குளச்சல் துறைமுகத்தை பொறுத்தவரை அந்த மாவட்ட மக்களின் கருத்தை கேட்டு எந்த இடத்தில் துறைமுகம் முறையாக அமைய வேண்டுமோ? அந்த இடத்தில் துறைமுகம் அமைவதற்கு அதற்குண்டான உட்கட்டமைப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

    ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் ராஜினாமா குறித்த கேள்விக்கு பதில் அளித்த அவர், மற்றொரு கட்சி உட்கட்சி பிரச்சனையை நான் பேசுவது தவறு என்றார்.
    வங்காள தேசத்துக்கு அருகில் உள்ள ஒரு தீவை மேற்கு வங்காள அரசு மீட்டது போல் கச்சத்தீவையும் இந்திய அரசு மீட்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்டு தேசிய குழு உறுப்பினர் மகேந்திரன் கூறியுள்ளார்.
    அறந்தாங்கி:

    புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய குழு உறுப்பினர் மகேந்திரன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தமிழ்நாட்டின் தலைநகராகிய சென்னை தற்போது கொலை நகரமாக மாறியுள்ளது. ஒரு கோடி மக்கள் தொகையை நெருங்கி கொண்டிருக்கிற சென்னை நகரத்தில் பாதுகாப்பு என்பது கேள்விக்குறியாகி உள்ளது. நுங்கம்பாக்கம் ரெயில் நிலையத்தில் கடந்த சில தினங்களுக்கு முன் என்ஜினீயரிங் மாணவி கழுத்து அறுபட்டு கொலை செய்யப்பட்டார். தமிழகத்தில் சட்டமும் ஒழுங்கும் எந்த நிலைமையில் உள்ளது என்பதற்கு இது ஒரு ஆதாரம். ரெயில் நிலையங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும்.

    தேர்தல் கூட்டணி என்பது வேறு, மாற்று அரசியல் என்பது வேறு. தேர்தல் நேரத்தில் பல்வேறு கட்சிகள் வரும், போகும். மேலும் தே.மு.தி.க., த.மா.கா. ஆகியோர் மக்கள் நலக்கூட்டணியை விட்டு போய் விட்டனரா?, இருக்கின்றார்களா? என நாங்கள் இன்னும் முடிவு செய்யவில்லை.

    தமிழகக்தில் பொது மருத்துவம் எவ்வளவு சீரழிந்துள்ளது என்பதற்கு மேட்டூரில் கண் பரிபோனவர்கள்கள் தான் சாட்சி. இது குறித்து அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகக்தில் 500 மதுக்கடைகளை மூடியுள்ளதால் எந்த மாற்றமும் தமிழகத்தில் ஏற்படவில்லை.

    வங்காள தேசத்துக்கு அருகில் உள்ள ஒரு தீவை மேற்கு வங்காள அரசு மீட்டது போல் கச்சத்தீவையும் இந்திய அரசு மீட்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    பொன்னமராவதி அருகே உள்ள வார்ப்பட்டு ஊராட்சி மூங்கில்குறிச்சி நல்லூர் கோயில் காளை பாயும்புலி நேற்று மறைந்தது. ஊர் பொதுமக்கள் ஒன்று கூடி மேளதாளங்கள் முழங்கி இறுதிச்சடங்கு செய்தனர்.

    பொன்னமராவதி:

    புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி ஒன்றியம் வார்ப்பட்டு ஊராட்சி மூங்கில் குறிச்சி நல்லூர் நீலகண்டிஅம்மன் கோயில் காளை ஒன்று கடந்த 18வருடங்களாக வளர்க்கப்பட்டு வந்தது. இது நேற்று திடீர் என உடல்நலக்குறைவால் இறந்துள்ளது. இதற்கு 18வயது ஆகின்றது.

    இதுவரை 500ஜல்லிக் கட்டில் பங்கு பெற்றுள்ளது 15 மாவட்டங்களுக்குச் சென்றுள்ளது. இவ்வாறு சிறப்பு மிக்க காளை நேற்று முன்தினம் 24 ம் தேதி இரவு இறந்துள்ளது.

    இதனையடுத்து ஊர் பொதுமக்கள் மனிதர்களுக்கு போல மாலை அலங்காரம் செய்து, பணம் மாலை கட்டி தொங்க விட்டு கோயில் முன்பு வைத்து வழிபட்டனர். பொதுமக்கள் விரதம் இருந்து ஒன்று கூடி மைக்செட் மற்றும் மேளதாளம் வைத்தும், பெண்கள் ஒப்பாறி பாடல்கள் பாடியும் பொதுமக்கள் தங்களது அஞ்சலியை செலுத்தினர்.

    இதனைத் தொடர்ந்து மேளதாளங்களுடன் அந்தக்காளையை ஊர்வலமாக எடுத்துச் சென்று நீலகண்டி அம்மன் கோயில் முன்பு நல்லடக்கம் செய்தனர். கோயில் காளை இறந்ததால் அந்த ஊரே சோகத்தில் மூழ்கியது.

    புதுக்கோட்டையில் மிளகாய் பொடியை தூவி,தொழிலதிபர் மனைவியிடம் நகை பறிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை ஜானகிநகர் பகுதியை சேர்ந்தவர் ரவி. தொழிலதிபர். இவரது மனைவி மாலதி (வயது 40).

    சம்பவத்தன்று இரவு இருவரும் வீட்டில் அயர்ந்து தூங்கிகொண்டிருந்தனர். இந்நிலையில் அதிகாலை 3 மணிக்கு கதவு தட்டப்படும் சத்தம் கேட்கவே, மாலதி எழுந்து சென்று கதவை திறந்தார்.

    அப்போது வீட்டின் வாசலில் நின்று கொண்டிருந்த மர்மநபர்கள் 3பேர் , மாலதி மீது மிளகாய் பொடியை தூவி மயக்க மருந்தை தெளித்துள்ளனர். பின்னர் அவர் அணிந்திருந்த 2 தங்க சங்கிலி உள்பட 20பவுன் தங்க நகைகளை பறித்தனர். மாலதி சத்தம் போடவே, ரவி விரைந்து சென்று மர்ம நபர்களை பிடிக்க முயன்றார். அப்போது அவரை சரமாரி தாக்கி விட்டு தப்பியோடி விட்டனர்.

    இதில் காயமடைந்த ரவி, புதுக்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து திருக்கோகர்ணம் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    ×