என் மலர்
புதுக்கோட்டை
புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் கணேஷ் வெளியிட்டுள்ள அறிக்ககையில் கூறியிருப்பதாவது:-
தற்பொழுது தமிழகத்தில் சில பகுதிகளில் போதை மருந்து கலந்த சாக்லேட்டுகள் விற்பனை கண்டறியப்பட்டு பறிமுதல் செய்து சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.
இதனைத் தொடர்ந்து புதுக்கோட்டை மாவட்டத்தில் பள்ளிகள் கல்லூரிகள், மாணவ மாணவி விடுதிகள் போன்ற இடங்களில் மட்டுமல்லாது மாவட்டத்தின் அனைத்து பகுதியிலும் போதை மருந்து கலந்த சாக்லேட்டுகள் விற்பனை செய்வது கண்டறியப்பட்டால் அவற்றை பறிமுதல் செய்வதுடன் விற்பனையாளர்கள்மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கடுமையாக எச்சரிக்கப்படுகின்றது.
மாணவ மாணவியர், பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் எவரேனும் போதை மருந்து கலந்த சாக்லேட்டுகள் விற்பனை செய்வது குறித்து விபரம் தெரிந்தால் அத்தகவலை உடனடியாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு தொலைபேசி எண்ணிலோ அல்லது மாவட்ட உணவுப் பாதுகாப்பு நியமன அலுவலர் அலுவலகத்திற்கு 04322-22199 என்ற தொலைபேசியிலும் 9443158399 என்ற அலைபேசியிலும் தொடர் புகொண்டு தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றது.
மேலும், தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை அல்லது நிகோட்டின் கலந்த பான்மசாலா, குட்கா போன்ற உணவுப் பொருட்களின் சேமிப்புக் கிட்டங்கியைப் பற்றியோ விற்பனையைப் பற்றியோ தகவல் அறிந்தால் தாங்கள் மேற்கூறிய தொலைபேசி எண்ணைத் தொடர்புகொண்டு தகவல் தெரிவிக்கவும் கேட்டுக் கொள்ளப்படுகின்றது. இவ்வாறு அந்த அறிக்கையில் அவர் கூறப்பட்டுள்ளது.
புதுக்கோட்டை அருகே வெறிநாய் கடித்ததில் 4 வயது குழந்தை உள்பட 10 பேர் காயமடைந்தனர்.
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே காட்ராம்பட்டி, சிதம்பரவிடுதி, செட்டிவிடுதி ஆகிய பகுதிகளில் நேற்றுவெறிநாய் ஒன்று சுற்றி திரிந்தது. திடீரென அந்த நாய் தெருவில் நடந்து சென்றவர்களை எல்லாம் விரட்டி விரட்டி கடித்தது. மணவாளன்நகரில் வீட்டின் அருகே விளையாடி கொண்டிருந்த 4 வயது சிறுவன் ரதீசையும் கடித்தது. அவனது அலறல் கேட்டு அங்கிருந்த பொதுமக்கள் ஓடி வந்து நாயை விரட்டி விட்டு குழந்தையை மீட்டனர்.
அதே போல் சிதம்பர விடுதியை சேர்ந்த மேகராஜ் (வயது 40), மீனம்பாள்(87), காட்ராம்பட்டியை சேர்ந்த பழனி, சாந்தா, முத்து மீனா உளபட 10க்கும் அதிகமானோரை வெறிநாய் கடித்தது. காயமடைந்தவர்கள் ஆலங்குடி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மேலும் மணவாளன்நகரை சேர்ந்த சீனி, ராஜேந்திரன் ஆகியோருக்கு சொந்தமான பசுமாடு மற்றும் கொத்த மங்கலத்தில் 10க்கும் அதிகமான ஆடுகளை வெறிநாய் கடித்தது.
ஆலங்குடி மற்றும் சுற்று வட்டார பகுதியில் சிலர் வேட்டை நாய்களை பயன்படுத்தி வருகின்றனர். அந்தநாய்கள்தான் நாளடைவில் வெறி பிடித்து கண்ணில் படுபவர்களை எல்லாம் விரட்டிச்சென்று கடிக்கிறது என்று பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
எனவே சுற்றி திரியும் வெறிநாய்களை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பொன்னமராவதி:
பொன்னமராவதியின் மையப்பகுதியில் கொட்டப்பட்டுள்ள குப்பைகளை அப்புறப்படுத்தக்கோரி வரும் 11ம் தேதி வர்த்தகர்கள் மற்றும் சேவை அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் சார்பில் புதுக்கோட்டை கலெக்டரிடம் கோரிக்கை மனு அளிக்கப்படும் என திருமயம் எம்எல்ஏ. ரகுபதி கூறினார்.
பொன்னமராவதி நகரின் மையப்பகுதியில் கொட்டப்பட்டு வரும் குப்பை மற்றும் கழிவுகளை அப்பறப்படுத்த கோருவது சம்மந்தமாக வர்த்தகர்கள் மற்றும் சேவை சங்கங்களின் ஆலோசனைக்கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு திருமயம் எம்எல்ஏ. ரகுபதி தலைமை வகித்தார்.
முன்னாள் ஒன்றியக்குழுத்தலைவர் ராஜீ, திமுக நகரச்செயலாளர் அழகப்பன், காங்கிரஸ் நகரத் தலைவர் பழனிப்பன் ஆகியோர் முன்னிலைவகித்தனர். வர்த்தக கழகத்தலைவர் பழனியப்பன், முன்னாள் வர்த்தக சங்க தலைவர் வேலாயுதம், ராயல்லயன்ஸ் சங்கத்தலைவர் அன்புச்செல்வன், சிட்டி லயன்ஸ் சங்க செயலாளர் செல்வம், ரோட்டரி சங்கத்தலைவர் முரளிதரன், பேரூராட்சிக்கவுன்சிலர் காளிதாஸ், முன்னாள் கவுன்சிலர் செல்வக்குமார் ஆகியோர் குப்பையை அப்புறபடுத்துவது குறித்து பேசினர். இதனைத்தொடர்ந்து திருமயம் எம்எல்ஏ.ரகுபதி பேசியதாவது:–
பொதுமக்களுக்கு இடை யூராக கொட்டப்பட்டுள்ள குப்பையை அப்புறப்படுத்தக்கோரி வரும் 12ம் தேதி பஸ் மறியல் போராட்டம் நடத்த முடிவுசெய்திருந்தோம். ஆனால் அரசுக்கும் பேரூராட்சிக்கும் காலஅவகாசம் கொடுக்கவேண்டும் என்ற நோக்கில் அதற்கான மாற்று வழியாக கொட்டப்படும் குப்பைகளை திடக்கழிவு மேலாண்மைத்திட்டத்தின் கீழ் உரங்கள் தயாரித்து குப்பைக்கழிவுகளை அப்புறப்படுத்தலாம். அல்லது பொன்னமராவதி பேரூராட்சிப்பகுதியில் சேகரிக்கப்படும் குப்பைகளை தனியாருக்கு விற்பனை செய்து அதனை அப்புறப்படுத்தலாம். அல்லது இந்தக்குப்பைகளை முழுவதும் அப்புறப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 11ம் தேதி திங்கள்கிழமை வர்த்தகர்கள் மற்றும் சேவை அமைப்புகள் மற்றும் பொதுமக்களுடன் சென்று புதுக்கோட்டை கலெக்டரிடம் கோரிக்கை மனு அளிப்பது.
இதற்காக இரண்டு மாதம் காலஅவகாசம் கொடுக்கப்படும். இந்த குப்பைகளை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்காதது பேரூராட்சியின் அலட்சியம் தான் காரணம். தொடர்ந்து குப்பைக்கூழங்கள் இவ்வாறு இருந்தால் குடிதண்ணீரில் சாக்கடை நீர் தான் வரும் தமிழ அரசும் பேரூராட்சியும் இதற்கு நிரந்தர தீர்வு காணாவிட்டால் பஸ் மறியல் போராட்டமும், மத்திய அரசின் தூய்மை இந்தியா திட்டத்தின் மூலமாக இதனை அப்புறப்படுத்த ரெயில் மறியல் போராட்டமும் நடத்த தயாராக உள்ளேன் எனப்பேசினார்.
இதில் வர்த்தக சங்க செயலாளர் முகமது அப்துல்லா, பொருளாளர் சத்தியமூர்த்தி, மூன்று லயன்ஸ் சங்க நிர்வாகிகள்,ரோட்டரி சங்க நிர்வாகிகள் , முத்தமிழ்பாசறை நிர்வாகிகள், வர்த்தகர் கழக நிர்வாகிகள், நகைக்கடை உரிமையாளர் சங்க நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
கந்தர்வக்கோட்டை:
கந்தர்வகோட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் அறிவிக்கப்படாத தொடர் மின்வெட்டு கடந்த 10 நாட்களாக ஏற்படுகிறது. தினசரி பகல் நேரங்களில் சுமார் 20 முறையும் இரவு நேரங்களில் சுமார் 10 முறையும் மின்நிறுத்தம் செய்யப்படுகிறது.
மேலும் குறைந்த மின்னழுத்தத்தில் மின்சாரம் வருவதால் பொதுமக்கள் அன்றாடம் பயன்படுத்தும் மின்விசிறி, கணினி, நீர் இறைப்பான்கள், மின்விளக்குகள் மற்றும் அனைத்து மின்சாதனப்பொருட்கள் பழுதடைந்து பொதுமக்களுக்கு வீண்செலவு ஏற்படுகிறது. மேலும் குடிநீர் வழங்க முடியாமல் ஊராட்சிமன்ற பணியாளர்கள் திண்டாடுகின்றனர்.
இதனை அதிகாரிகளுக்கு எவ்வளவோ முறை எடுத்துக்கூறியும் கண்டுகொள்ளாமல் அலட்சியம் காட்டுகின்றனர். இதனால் பெரியோர்களுக்கும், குழந்தைகளுக்கும், வர்த்தகர்களுக்கும் பல்வேறு அசௌகரியம் ஏற்படுகிறது. எனவே மின்சாரத்துறை உயர் அதிகாரிகள் கந்தர்வக்கோட்டை பகுதியில் குறைந்த மின்னழுத்தம் மற்றும் அடிக்கடி மின்தடை ஏற்படுவதை உடனடியாக சரிசெய்ய பொதுமக்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.
திருவிழாவிற்காக நாகுடி அருகே உள்ள கீழ்குடி வேளார் சமூகத்தினர் செய்திருந்த 50க்கும் மேற்பட்ட சாமி, குதிரை, காளை உள்ளிட்ட சிலைகளை கிராமத்தினர் வாகனங்களில் ஊர்வலமாக எடுத்துச் சென்றனர்.
தொடர்ந்து கோவில் வளாகத்தில் சிலைகளுக்கு கண்திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை பிராமணவயல் கிராமத்தினர் செய்திருந்தனர்.
அறந்தாங்கி எல்.என்.புரத்தைச் சேர்ந்த அழகேசன் மகன் மகேஸ் என்ற மகேஸ்வரன் (வயது 26). இவர் கடந்த 15 நாட்களுக்கு முன்பு அறந்தாங்கியில் வழிப்பறியில் ஈடுபட்டபோது அறந்தாங்கி போலீசாரால் கைது செய்யப்பட்டார். தொடர்ந்து அவரிடம் நடத்திய விசாரணையில் அவர் ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் சிலை திருட்டு, வழிப்பறி போன்ற சம்பவங்களில் ஈடுபட்டுள்ளதும், அது தொடர்பாக அவர்மீது வழக்குகள் இருப்பதும் தெரியவந்தது.
இதைத் தொடர்ந்து புதுக்கோட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சந்தோஸ் ஹதிமனி பரிந்துரையின்பேரில், மகேஸை குண்டர் தடுப்பு சட்டத்தின்கீழ் கைது செய்ய புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் கணேஸ் உத்தரவிட்டார். அவரது உத்தரவின்பேரில் போலீசார் மகேஸை குண்டர் தடுப்பு சட்டத்தின்கீழ் திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் கணேஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–
ஆண்டுதோறும் சுதந்திரதின விழாவில் மாற்றுத்திறனாளிகள் நலனுக்கான சிறப்பாக சேவை புரிந்தவர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் மாநில விருதுகள் வழங்கப்படுகிறது. 15.08.2016 அன்று நடைபெற உள்ள சுதந்திரதின விழாவில் கீழ்குறிப்பிட்டுள்ள விருதுகள் வழங்கப்பட உள்ளது.
வழங்கப்பட உள்ள விருதுகளின் விபரம்:– 1. மாற்றுத்திறனாளிகளுக்கு சேவை புரிந்த தொண்டு நிறுவனம், 2. மாற்றுத்தி றனாளிகளுக்கு சேவைபுரிந்த சிறந்த மருத்துவர், 3.மாற்றுத் திறனாளிகளுக்கு அதிக அளவில் வேலைவாய்ப்பு அளித்த தனியார் நிறுவனம், 4.மாற்றுத்திறனாளிகளுக்கு சேவைபுரிந்த சிறப்பு சமூக நலப்பணியாளர். புதுக்கோட்டை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக சேவை புரிந்தவர்கள் மேற்படி விருதுகளுக்கு 11.07.2016–க்குள் விண்ணப்பிக்கலாம் என்றும் அதற்கான விண்ணப்பங்களை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர், புதிய பேருந்து நிலையம் அருகில், புதுக்கோட்டை என்ற முகவரியில் அணுகி பெற்றுக்கொள்ளலாம்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்படுகிறது.
புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் வேளாண்மை துறையின் சார்பில் ரூ.1.50 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் ஒருங்கிணைந்த புதிய வேளாண் விரிவாக்க மைய அலுவலக கட்டிட கட்டுமானப் பணிகளை மாவட்ட கலெக்டர் சு.கணேஷ் தலைமையில், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் டாக்டர்.சி.விஜயபாஸ்கர் ஆய்வு செய்தார்.
பின்னர் அவர் கூறியதாவது:-
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் வேளாண்மைத் துறையின் சார்பில் பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தி செயல்படுத்தி வருகிறார்கள். இதன்படி தமிழக அரசு வேளாண்மை துறைக்கு பல்வேறு அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் வகையில் புதிய கட்டடங்கள் கட்டுவதற்கு நிதி ஒதுக்கீடு செய்து வருகிறது. அதனடிப்படையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் விராலிமலை ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் ரூ.1.50 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் ஒருங்கிணைந்த புதிய வேளாண் விரிவாக்க மைய அலுவலக கட்டிட கட்டுமானப்பணிகள் பார்வையிட்டு ஆய்வு செய்யப்பட்டது.
மேலும், இவ்வலுவலக கட்டிடத்தின் தரைத் தளம் 3816 சதுர அடி பரப்பளவிலும், முதல் தளம் 1586 சதுர அடி பரப்பளவிலும் என மொத்தம் 5402 சதுர அடி பரப்பளவில் ரூ.79,87,753- மதிப்பீட்டில் கட்டப்பட்டு வருகிறது. இதே போன்று இடப்பொருள் தானியங்கிடங்கு 2400 சதுர அடியில் ரூ.32,61,788- மதிப்பீட்டிலும் கட்டப்பட்டு வருவதுடன் அலுவலக உபயோகப்பொருட்கள், குடிநீர் வசதி, மின்சாதன வசதிகள் போன்ற பல்வேறு வசதிகள் ரூ.37,50,459- மதிப்பில் மேற்கொள்ளப்பட்டு வருவதுடன் மொத்தம் ரூ.1.50 கோடி மதிப்பீட்டில் இந்த புதிய வேளாண் விரிவாக்க மைய கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. இந்த ஒருங்கிணைந்த வேளாண் விரிவாக்க மையத்தில் வேளாண்மைத்துறை, தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை, வேளாண்மை பொறியியல் துறை, வேளாண் விற்பனை மற்றும் வணிகத்துறை ஆகிய அலுவலகங்கள் செயல்படவுள்ளது.
மேலும் இக்கட்டிட கட்டுமானப்பணிகளை தரமான கட்டுமானப்பொருட்களை கொண்டு தரமாகவும், விரைவாகவும் கட்டிமுடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்றார்.
இந்த ஆய்வின் போது மாவட்ட வருவாய் அலுவலர் திரு.சு.மாரிமுத்து, வருவாய் கோட்டாட்சியர் வடிவேல் பிரபு, உள்ளாட்சி அமைப்பின் பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கெர்ணடனர்.
அறந்தாங்கி:
தமிழக மக்கள் ஜனநாயக கட்சி சார்பில் அறந்தாங்கியில் சமூக நல்லிணக்க இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு அக்கட்சியின் நிறுவனர்–தலைவர் கே.எம்.சரீப் தலைமை தாங்கினார். மாநில நிர்வாகி ஷாஜகான் முன்னிலை வகித்தார்.
நிகழ்ச்சியில் அறந்தாங்கி தாசில்தார் மணிவண்ணன், மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி மாவட்டச் செயலாளர் கவிவர்மன், வர்த்தக சங்கத் தலைவர் சந்திரமோகன், முன்னாள் தலைவர் ரவீந்திரகுமார், அறந்தாங்கி நகர தி.மு.க செயலாளர் ஆனந்த், அறந்தாங்கி வழக்கறிஞர் சங்கத் தலைவர் வெங்கடேசன், மனிதநேய மக்கள் கட்சி நிர்வாகி கிரீன்முகமது, வர்த்தக சங்கம், ரோட்டரி சங்கம், நகரசபை கவுன்சிலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.






