என் மலர்
புதுக்கோட்டை
புதுக்கோட்டை:
நாம் தமிழர் கட்சியின் புதுக்கோட்டை மண்டல நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர்சீமான் நிருபர்களிடம் கூறியதாவது:–
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள சாந்தன் தன்னை கைதிகள் பரிமாற்ற ஒப்பந்தப்படி இலங்கை சிறைக்கு மாற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார். இது எந்த அளவுக்கு சாத்தியமானதென தெரியவில்லை. எனினும் அவரது உணர்வை மதிக்க வேண்டும். நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் ஜல்லிக் கட்டு நடத்த தனி மசோதா கொண்டு வந்து நிறைவேற்ற வேண்டும். பள்ளி, கல்லூரி , வழிபாட்டு தலங்களின் அருகே அரசு மதுபானக் கடைகள் இயங்கவில்லை என்று கூறி வந்த அ.தி.மு.க. அரசு , தற்போது பள்ளி, கல்லூரி, வழிபாட்டு தலங்கள் அருகில் உள்ள 1000 கடைகளை மூடப்போவதாக அறிவித்துள்ளது. படிப்படியாக மதுபானக் கடைகளை மூடினால் அது வரவேற்கத்தக்கது.
மீனவர்களின் சிறைபிடிப்பு தினசரி செய்தியாகிவிட்டது. தமிழக மீனவர்களின் படகுகளை விடுவிக்கமாட்டேன் என அந்நாட்டு பிரதமர் கூறிவரும் நிலையில் இலங்கைக்கு போர்க்கப்பலை இந்தியா வழங்குவது ஏற்படையதல்ல.
காஷ்மீரில் தீவிரவாதி என பர்ஹான் வானியை சுட்டுக்கொன்றதை ஏற்க முடியாது. மக்களுக்காக போராடுபவர்கள் எல்லாம் தீவிரவாதிகள் அல்ல.
இவ்வாறு அவர் கூறினார்.
திருமயம்:
புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள போசம்பட்டியில் மாநில அளவிலான இளையோர் ஆண்கள் கபாடி போட்டி நடைபெற்று வருகின்றன. இந்த கபாடி போட்டியை காண மாவட்டங்களின் பல்வேறு பகுதிகளிலிருந்து சுமார் 1000க்கும் மேற்பட்டோர் வந்துள்ளனர். இந்தப்போட்டி போசம்பட்டி ஸ்ரீமுனீஸ்வரர் கோவில் திடல் முன்பு நடைபெற்று வருகிறது
இப்போட்டியில் சென்னை,புதுக்கோட்டை திருச்சி, சேலம், சிவகங்கை அரியலூர், தஞ்சாவூர்,நாகப்பட்டிணம், கடலூர், ஆகிய மாவட்டங்கள் உட்பட 14 மாவட்டங்களை சேர்ந்த சுமார் 168 கபாடி வீரர்கள் போட்டியில் கலந்து கொண்டு விளையாடி வருகின்றனர். போட்டியில் கபாடி வீரர்கள் 65 கிலோ உடல் எடை உள்ளவர்கள் மட்டும் போட்டியில் கலந்து கொள்ளமுடியும். போட்டி லீக் மற்றும் நாக் அவுட் முறையில் நடைபெறும்.போட்டி 15 சுற்றுகளாக நடைபெறும், 15 வது சுற்று போட்டி இறுதிப்போட்டியாகும் .
போட்டியில் வெற்றி பெறும் அணிகளுக்கு முதல்பரிசு 24,001ம் இரண்டாம்பரிசு 20,001ம் மூன்றாம்பரிசு 15,001ம் நான்காம் பரிசு 10,001ம் தொகை ரொக்கமாகவும் சுழற்கோப்பைகளும் வழங்கப்படும் என போட்டி அமைப்பாளர்கள் அறிவித்துள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினம் அருகே அய்யம்பட்டினம் மீனவ கிராமம் உள்ளது. இப்பகுதியை சேர்ந்த குரூஸ் என்பவருக்கு சொந்தமான பைபர் படகில் 4 மீனவர்கள் நேற்று மாலை கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.
மீன் பிடித்து விட்டு, இன்று அதிகாலை கரைக்கு திரும்பினர். அய்யம்பட்டினம் கடற்கரையில் இருந்து 6 கடல் மைல் தொலைவில் வந்து கொண்டிருந்த போது , திடீரென காற்றின் வேகம் காரணமாக நடுக்கடலில் படகு மூழ்கியது.
இதனால் தண்ணீரில் தத்தளித்து கொண்டிருந்த மீனவர்கள் 4 பேரும் உடனடியாக செல்போன் மூலம் படகு உரிமையாளர் குரூசுக்கு தகவல் கொடுத்தனர். அவர் உடனடியாக கடலோர பாதுகாப்பு குழும போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.
இதையடுத்து கடலோர பாதுகாப்பு குழும போலீசார் தங்களது படகில், கடலுக்குள் சென்றனர். பின்னர் தண்ணீரில் தத்தளித்து கொண்டிருந்த 4 மீனவர்களையும் தங்களது படகில் மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர்.
கடந்த 9-ந்தேதி ஜெகதாப்பட்டினம் மீனவர்கள் 4 பேர் சென்ற விசைப்படகு நடுக்கடலில் மூழ்கியது. அவர்கள் நேற்று முன்தினம் மீட்கப்பட்டனர். இந்நிலையில் இன்று பைபர் படகு மூழ்கியதில் 4 மீனவர்கள் கடலில் தத்தளித்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் நிருபர்களிடம் கூறியதாவது:-
பாலாற்றில் ஆந்திர அரசு தடுப்பணை கட்டுவதால் வேலூர், திருவண்ணாமலை, காஞ்சீபுரம் உள்ளிட்ட மாவட்ட மக்கள் அதிகம் பாதிக்கப்படுவார்கள். எனவே இந்த தடுப்பணையை உடனே இடிக்க வேண்டும். மேலும் நதிநீர் விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகள் தீவிரம் காட்ட வேண்டும்.
ஏழை, எளிய குடும்பங்களை சேர்ந்த மாணவர்கள் வாங்கிய கல்விக்கடனை வசூலிக்க ஸ்டேட் வங்கி நிர்வாகம் ரிலையன்ஸ் நிறுவனத்துடன் 15 ஆண்டுகள் ஒப்பந்தம் செய்துள்ளது. அந்த நிறுவனத்தின் மூலம் பணம் கேட்கப்படுவதால் மாணவர்களின் பெற்றோர் இக்கட்டான சூழ்நிலைக்கு ஆளாகின்றனர். எனவே அந்த ஒப்பந்தத்தை உடனடியாக ரத்து செய்ய வேண்டும்.
சட்டப்பேரவை தேர்தலே நேர்மையாக நடைபெறாத நிலையில், உள்ளாட்சி தேர்தல் நேர்மையாக நடைபெற சாத்தியம் இல்லை. எனினும் மக்கள் நலக்கூட்டணி தேர்தலை சந்திக்கும். புதுக்கோட்டை உள்ளிட்ட தென் மாவட்ட மக்களுக்கு பயன் அளிக்கக்கூடிய காவிரி- குண்டாறு இணைப்பு திட்டத்தை செயல்படுத்த வேண்டும்.
சென்னையில் கொல்லப்பட்ட சுவாதியின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை அளிக்க வேண்டும். தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சிறப்பாக இல்லை. குறிப்பாக சென்னையில் தினம் ஒரு குற்றச்செயல்கள் அரங்கேறி வருகிறது. வன்முறைதான் அதிகரித்துள்ளது. இதனை தமிழக முதல்வர் தடுக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
அறந்தாங்கி:
புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினம் மீன் பிடி தளத்தில் இருந்து 136 விசைப்படகுகளில் சுமார் 500–க்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர். இதில் ஜெகதாப்பட்டினத்தைச்சேர்ந்த காளிமுத்து என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் காளிமுத்து, மற்றொரு காளிமுத்து, அர்ச்சுணன், கோபி ஆகிய 4 பேரும் சென்று இருந்தனர். இவர்கள் கடற்கரையில் இருந்து 26 கடல் மைல் தொலைவில் நேற்று முன்தினம் இரவு மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது காளிமுத்துவின் படகு திடீரென்று பழுதானது. இதனால் படகின் உள்ளே கடல் நீர் புகுந்தது.
இதனால் அதிர்ச்சி அடைந்த மீனவர்கள், தங்கள் படகில் இருந்த வாக்கி டாக்கி மூலம் தாங்கள் ஆபத்தில் உள்ள தகவலை மற்ற மீனவர்களுக்கு தெரிவித்தனர்.
இதையடுத்து அப்பகுதியில் மீன்பிடித்து கொண்டிருந்த ஜெகதாப்பட்டினம் மீனவர் சக்திவேல் தனது விசைப்படகை காளிமுத்து விசைப்படகு நின்ற பகுதிக்கு ஓட்டிச் சென்றுள்ளார். அவர்கள் அந்த பகுதிக்கு சென்று பார்த்தபோது காளிமுத்துவின் படகை காணவில்லை. அந்த படகு முற்றிலும் மூழ்கியிருக்கலாம் என தெரிகிறது. அந்த படகில் வந்த காளிமுத்து உள்ளிட்ட 4 மீனவர்களையும் அங்கு காணவில்லை.
இதையடுத்து சக்திவேல் கரை திரும்பியவுடன், மீனவர் சங்க பிரதிநிதிகள் மற்றும் மாயமான மீனவர்களின் உறவினர்களிடம் தெரிவித்தார். அவர்கள் மாயமான மீனவர்களை மீட்டு தரும்படி கடலோர பாதுகாப்பு குழும போலீசார், மீன்வளத்துறை அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தனர்.
கடலில் கடும் சூறைக்காற்று வீசுவதால், நேற்று காணாமல் போன மீனவர்களை தேடி மற்ற மீனவர்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.
இன்று காலை ஜெகதாப்பட்டினம் மீனவர்கள் 15 பேர் 3 விசைப்படகுகளில் மாயமான மீனவர்களை தேடி கடலுக்கு சென்றனர். மேலும் ஹெலிகாப்டர்மூலம் கண்டுபிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழக முதல்–அமைச்சருக்கு அப்பகுதி மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர் .
மீனவர்கள் 4 பேர் மாயமான சம்பவம் அந்த பகுதி மீனவர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதன் காரணமாக அப்பகுதி விசைப்படகு மீனவர்கள் யாரும் கடலுக்கு மீன் பிடிக்க செல்லாமல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
விராலிமலை:
விராலிமலை கிழக்கு ஒன்றியம் களமாவூரில் உள்ளாட்சி தேர்தலையொட்டி விராலிமலை தொகுதி அ.தி.மு.க. சார்பில் ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர் தலைமை தாங்கி பேசினார்.
பாராளுமன்ற துணை சபாநாயகர் மு.தம்பிதுரை கலந்து கொண்டு பேசுகையில், நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை பிடித்தது. அதேபோல வரும் உள்ளாட்சி தேர்தலில் அனைத்து பொறுப்புகளிலும் அ.தி.மு.க.வினரே வெற்றி பெற வேண்டும்.
இதற்கு கழக நிர்வாகிகள் கடுமையாக உழைக்க வேண்டும் என்றார். முன்னதாக விராலிமலை கிழக்கு ஒன்றிய செயலாளரும், ஒன்றியக்குழு துணைத் தலைவருமான திருமூர்த்தி வரவேற்றார்.
கூட்டத்தில் ஆறுமுகம் எம்.எல்.ஏ., முன்னாள் மாவட்ட செயலாளர் வி.ஆர் ராமசாமி, அன்னவாசல் ஒன்றிய செயலாளர் சாம்பசிவம், இலுப்பூர் பேரூராட்சி தலைவர் ராஜமன்னார், விராலிமலை அட்மா சேர்மன் பழனியாண்டி, கிழக்கு ஒன்றிய மாவட்ட கவுன்சிலர் முத்துசாமி, மாவட்ட இலக்கிய அணி துணை செயலாளர் களமாவூர் பாலசுப்பிரமணியன், முன்னாள் விராலிமலை ஒன்றியகுழுத்தலைவர் ஏ.வி.ராஜேந்திரன், மாவட்ட ஒன்றிய கழக நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள், அ.தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
முடிவில் விராலிமலை ஒன்றியக்குழுத்தலைவர் சுப்பையா நன்றி கூறினார்.
அறந்தாங்கி:
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே உள்ள கம்மங்காடு அத்தானியைச் சேர்ந்தவர் நாராயணன் (வயது 37). இவர் கடந்த 10 வருடங்களுக்கு மேலாக பக்ரைன் நாட்டில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். விடுமுறையின் போது சொந்த ஊரான அறந்தாங்கிக்கு வந்து விட்டு, மீண்டும் பக்ரைனுக்கு சென்று விடுவார்.
அதேப்போல் கடந்த 6 மாதத்திற்கு முன்பு நாராயணன் விடுமுறையில் அறந்தாங்கிக்கு வந்தார். பின்னர் பக்ரைனுக்கு சென்று விட்டார். அங்கு அவர் பக்ரைன் தலை நகரான மனமா தலைமை போலீஸ் நிலையம் அருகே உள்ள டெலிபோன் பூத்தில் இருந்து அறந்தாங்கியில் உள்ள உறவினர்களுக்கு தினமும் பேசுவது வழக்கம்.
அது போல் நேற்றிரவு உறவினர்களுக்கு போனில் பேசி கொண்டிருந்தார். அப்போது அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் சிலர் நாராயணனை கத்தியால் குத்தி கொலை செய்து விட்டு தப்பியோடிவிட்டனர். அவரை கொலை செய்தவர்கள் யார், எதற்காக கொலை செய்தனர்? என்று தெரியவில்லை. இது குறித்து பக்ரைன் நாட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாராயணன் கொலை செய்யப்பட்டதை அறிந்த அவரது உறவினர்கள் சோகத்தில் மூழ்கினர். அவரை கொலை செய்த நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுப்பதோடு, நாராயணன் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டுமென பக்ரைனில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
கொலை செய்யப்பட்ட நாராயணனுக்கு மனைவியும்,2 பெண் குழந்தைகளும் உள்ளனர்.
கந்தர்வக்கோட்டை:
பாரதிய ஜனதா கட்சியின் கந்தர்வக்கோட்டை ஒன்றிய தலைவராக கே.கார்த்திகேயன் நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத்தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், பெருங்கோட்ட பொறுப் பாளர் சரவணபெருமாள், கோட்ட பொறுப்பாளர் சண்முகராஜன், கோட்ட இணைபொறுப்பாளர் ராஜேந்திரன் ஆகியோரின் ஒப்புதலுடன் பாரதிய ஜனதா கட்சியின் புதுக்கோட்டை மாவட்ட தலைவர் ராமசேதுபதி அம்பலக்காரர், கந்தர்வக்கோட்டை பா.ஜ.க. ஒன்றிய தலைவராக கே.கார்த்திகேயனை அறிவித்துள்ளார்.
அறந்தாங்கி:
அறந்தாங்கி அருகே உள்ள ஆவுடையார் கோவில் திருவிழா நடைபெற்று வருகிறது. இதனை காண்பதற்காக திருப்பூர் மாவட்டம், ஊத்துக்குளியைச் சேர்ந்த முன்டான் (வயது 56) வந்துள்ளார்.
இவர் நேற்று முன்தினம் தேர் திருவிழாவை பார்த்து விட்டு கோவில் அருகே உள்ள தெப்ப குளத்தில் குளிக்க சென்றுள்ளார். அப்போது அவர் குளத்தினுள் மூழ்கி விட்டார். நேற்று இரவு தெப்பக்குளத்தில் முன்டானின் உடல் மிதக்க தொடங்கியது. இதனைப் பார்த்த பொது மக்கள் அதிர்ச்சியடைந்தனர்.
இது குறித்து அவர்கள் ஆவுடையார் கோவில் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து விரைந்து வந்த போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் முன்டானின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அறந்தாங்கி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






