என் மலர்tooltip icon

    செய்திகள்

    நடுக்கடலில் படகு மூழ்கியது: 4 மீனவர்களை தேடும் பணி தீவிரம்
    X

    நடுக்கடலில் படகு மூழ்கியது: 4 மீனவர்களை தேடும் பணி தீவிரம்

    நடுக்கடலில் படகு மூழ்கியதில் மாயமான புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் 4 பேரை தேடும் பணி துரிதப்படுத்தப்பட்டுள்ளது.

    அறந்தாங்கி:

    புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினம் மீன் பிடி தளத்தில் இருந்து 136 விசைப்படகுகளில் சுமார் 500–க்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர். இதில் ஜெகதாப்பட்டினத்தைச்சேர்ந்த காளிமுத்து என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் காளிமுத்து, மற்றொரு காளிமுத்து, அர்ச்சுணன், கோபி ஆகிய 4 பேரும் சென்று இருந்தனர். இவர்கள் கடற்கரையில் இருந்து 26 கடல் மைல் தொலைவில் நேற்று முன்தினம் இரவு மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது காளிமுத்துவின் படகு திடீரென்று பழுதானது. இதனால் படகின் உள்ளே கடல் நீர் புகுந்தது.

    இதனால் அதிர்ச்சி அடைந்த மீனவர்கள், தங்கள் படகில் இருந்த வாக்கி டாக்கி மூலம் தாங்கள் ஆபத்தில் உள்ள தகவலை மற்ற மீனவர்களுக்கு தெரிவித்தனர்.

    இதையடுத்து அப்பகுதியில் மீன்பிடித்து கொண்டிருந்த ஜெகதாப்பட்டினம் மீனவர் சக்திவேல் தனது விசைப்படகை காளிமுத்து விசைப்படகு நின்ற பகுதிக்கு ஓட்டிச் சென்றுள்ளார். அவர்கள் அந்த பகுதிக்கு சென்று பார்த்தபோது காளிமுத்துவின் படகை காணவில்லை. அந்த படகு முற்றிலும் மூழ்கியிருக்கலாம் என தெரிகிறது. அந்த படகில் வந்த காளிமுத்து உள்ளிட்ட 4 மீனவர்களையும் அங்கு காணவில்லை.

    இதையடுத்து சக்திவேல் கரை திரும்பியவுடன், மீனவர் சங்க பிரதிநிதிகள் மற்றும் மாயமான மீனவர்களின் உறவினர்களிடம் தெரிவித்தார். அவர்கள் மாயமான மீனவர்களை மீட்டு தரும்படி கடலோர பாதுகாப்பு குழும போலீசார், மீன்வளத்துறை அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தனர்.

    கடலில் கடும் சூறைக்காற்று வீசுவதால், நேற்று காணாமல் போன மீனவர்களை தேடி மற்ற மீனவர்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.

    இன்று காலை ஜெகதாப்பட்டினம் மீனவர்கள் 15 பேர் 3 விசைப்படகுகளில் மாயமான மீனவர்களை தேடி கடலுக்கு சென்றனர். மேலும் ஹெலிகாப்டர்மூலம் கண்டுபிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழக முதல்–அமைச்சருக்கு அப்பகுதி மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர் .

    மீனவர்கள் 4 பேர் மாயமான சம்பவம் அந்த பகுதி மீனவர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதன் காரணமாக அப்பகுதி விசைப்படகு மீனவர்கள் யாரும் கடலுக்கு மீன் பிடிக்க செல்லாமல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    Next Story
    ×