search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சமூக வலைதளங்களில் குற்றத்தடுப்பு சட்டத்தை கொண்டு வரவேண்டும்: புதுக்கோட்டையில் ஜி.கே.வாசன் பேட்டி
    X

    சமூக வலைதளங்களில் குற்றத்தடுப்பு சட்டத்தை கொண்டு வரவேண்டும்: புதுக்கோட்டையில் ஜி.கே.வாசன் பேட்டி

    தொழில்நுட்ப குழு வல்லுனர்களை கொண்டு மத்திய, மாநில அரசுகள் ஒரு குழு அமைத்து சமூக வலைதளங்களில் குற்றத்தடுப்பு சட்டத்தை கொண்டு வரவேண்டும் என்று புதுக்கோட்டையில் ஜி.கே.வாசன் பேசியுள்ளார்.
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்ட த.மா.கா. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் பங்கேற்ற அக்கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    சட்டமன்ற தேர்தல் முடிந்து சென்னையில் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களின் 6 கட்ட ஆலோசனை கூட்டம் நடந்தது. தற்போது மண்டல ஆலோனை கூட்டம் நடந்து வருகிறது. புதுக்கோட்டையில் திருச்சி மற்றும் புதுக்கோட்டை மண்டல கூட்டம் நடந்துள்ளது.

    இதில் நிர்வாகிகளோடு உள்ளாட்சி தேர்தலில் கட்சியின் செயல்பாடு குறித்தும், வலிமை குறித்தும் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. உள்ளாட்சி தேர்தலில் கட்சியின் தனித்துவத்தை வெளிப்படுத்துவதற்கு ஏதுவாக என்னென்ன நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

    இது ஜனநாயக நாடு. எனவே ஒரு கட்சியிலிருந்து பிரிந்து மற்றொரு கட்சியில் சேருவது என்பது அவர் அவரின் தனிப்பட்ட உரிமை. த.மா.கா.விலிருந்து யார் பிரிந்து சென்றாலும் கட்சிக்கு எந்தவித பாதிப்பும் இல்லை.

    ஜனநாயகத்தில் ஒரு கட்சியால் அடையாளம் காணப்பட்ட இயக்கத்தில் பல்வேறு நல்லவைகளை அனுபவித்து விட்டு, வேறு கட்சிக்கு செல்ல வேண்டும் என்று நினைப்பவர்களால் நிச்சயமாக கட்சிக்கு எந்தவித பாதிப்பும் இல்லை. இருப்பினும் என்னோடு இருப்பவர்கள் என்னோடு தான் இருக்கவேண்டும் என்பதுதான் எனது விருப்பம்.

    மேட்டூர் அரசு மருத்துவமனையில் கண் அறுவை சிகிச்சை செய்தவர்களுக்கு கண் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அரசு மருத்துவமனைகளில் முறையான சிகிச்சை அளிக்கப்படுகிறதா? என்பது குறித்து தமிழக அரசு ஆய்வு மேற்கொண்டு தரமான சிகிச்சையை உறுதி செய்யவேண்டும்.

    சமூக வலைதளங்களில் தற்போது தவறான சித்திரங்கள் வருவதால் பலர் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னையில் படுகொலை செய்யப்பட்ட சுவாதி சம்பவமாக இருந்தாலும் சரி, பேஸ்புக்கில் தன் படத்தை ஆபாசமாக சித்தரித்து வெளியிட்டதால் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்ட வினுப்பிரியா சம்பவமாக இருந்தாலும் சரி, சமூக வலைதளங்களில் அவர்களை பற்றி தவறான கருத்துக்கள் சித்தரிக்கப்படுகின்றன.

    தொழில்நுட்ப குழு வல்லுனர்களை கொண்டு மத்திய, மாநில அரசுகள் ஒரு குழு அமைத்து சமூக வலைதளங்களில் குற்றத்தடுப்பு சட்டத்தை கொண்டு வரவேண்டும். சமூக வலைதளங்களில் தவறான தகவல்களை பரப்புவர்களை கண்டறிந்து அவர்களுக்கு தகுந்த தண்டனை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    மேலும் மக்கள் கூடும் இடமாக உள்ள பேருந்து நிலையங்கள், ரெயில் நிலையங்கள் உள்ளிட்டவைகளில் கட்டாயம் சிசிடிவி, கேமிராக்களை மத்திய, மாநில அரசுகள் நிறுவ நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    குளச்சல் துறைமுகத்தை பொறுத்தவரை அந்த மாவட்ட மக்களின் கருத்தை கேட்டு எந்த இடத்தில் துறைமுகம் முறையாக அமைய வேண்டுமோ? அந்த இடத்தில் துறைமுகம் அமைவதற்கு அதற்குண்டான உட்கட்டமைப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

    ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் ராஜினாமா குறித்த கேள்விக்கு பதில் அளித்த அவர், மற்றொரு கட்சி உட்கட்சி பிரச்சனையை நான் பேசுவது தவறு என்றார்.
    Next Story
    ×