என் மலர்
புதுக்கோட்டை
புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் மீன் பிடி துறைமுகத்தில் இருந்து நாள் ஒன்றுக்கு சுமார் 300 விசைப்படகுகளில் 1,500-க்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்கின்றனர். இவர்களுக்கு தமிழக அரசு மாதம் ஒன்றுக்கு 1,500 லிட்டர் டீசலை மானிய விலையில் வழங்கி வருகிறது.
ஆனால் இவர்கள் மாதம் ஒன்றுக்கு 3 ஆயிரம் லிட்டர் டீசல் செலவாகிறது என கூறுகிறார்கள். இந்த 3 ஆயிரம் லிட்டர் டீசலை அரசே மானிய விலையில் வழங்க வலியுறுத்தியும், மேலும் கடலில் தற்போது மீன்கள் குறைவாக கிடைப்பதாகவும் மீன்களுக்கான விலை மிகவும் குறைவாக இருப்பதாகவும் கூறி வருகிறார்கள்.
இதனால் மீனவர்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி உள்ளனர். இந்த நிலையில் இலங்கை கடற்படையினர் அவ்வப்போது தமிழக மீனவர்களை கைது செய்து அவர்களது படகுகளையும் பறிமுதல் செய்யும் நடவடிக்கை தொடர்ந்த வண்ணம் உள்ளது.
மத்திய, மாநில அரசுகள் இதில் தலையிட்டு உடனடியாக இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள், அவர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட படகுகளை உடனடியாக மீட்டு தரவேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோட்டைப்பட்டினம் மீனவர்கள் இன்று முதல் வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கியுள்ளனர். இந்த போராட்டம் வருகிற 31-ந் தேதி வரை தொடரும் எனவும் தெரிவித்துள்ளனர்.
இதனால் நாள் ஒன்றுக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் 10 ஆயிரம் பேர் வேலை இழந்துள்ளனர். மேலும் நாள் ஒன்றுக்கு சுமார் ரூ.40 லட்சம் வீதம் 9 நாட்களுக்கு ரூ.3 கோடியே 60 லட்சம் வர்த்தகம் பாதிப்பு அடையும். இந்த வேலை நிறுத்தம் காரணமாக மீன்களின் விலை கடுமையாக உயரும் வாய்ப்புள்ளது.
இது குறித்து விசைப்படகு மீனவர்கள் சங்க தலைவர் சின்ன அடைக்கலம் கூறியதாவது:-
தமிழக மீனவர்களை இலங்கை அரசு தொடர்ந்து கைது செய்து வருகிறது. அவர்களிடமிருந்து விசைப் படகுகளையும் பறிமுதல் செய்கிறது. இதனை மீட்டு தர பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறோம். ஆனால் அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இதனால் மீனவர்களின் வாழ்வாதாரம் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது. மத்திய, மாநில அரசுகள் உடனடியாக தலையிட்டு மீனவர்களை அவர்களின் படகுகளையும் மீட்டு தரவேண்டும். மீன்களின் விலை குறைவதனால் பெரும் அளவில் இழப்பை சந்திக்க நேரிடுகிறது.
இந்த இழப்பை ஈடுகட்ட மாதம் ஒன்றுக்கு 3 ஆயிரம் லிட்டர் மானிய விலையில் டீசல் வழங்க வேண்டும். உயர்ரக மீன்களுக்கு அரசு நிரந்தர விலை நிர்ணயம் செய்ய வேண்டும். அதுவரை எங்களது போராட்டங்கள் தொடர்ந்து கொண்டே இருக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
திருவரங்குளம் அருகே உள்ள திருக்கட்டளை ஊராட்சி, தோப்புக்கொல்லை கிராமத்தை சேர்ந்தவர் ரெங்கசாமி. இவருடைய மகன் பாரதிராஜா (வயது 23). இவருக்கு திருமணமாகி கடந்த 16 நாட்களுக்கு முன்பு பெண் குழந்தை பிறந்தது. இதையடுத்து பாரதிராஜா தனது மோட்டார் சைக்கிளில் நேற்று முன்தினம் இரவு பிறந்த தனது மகளை பார்க்க தோப்புக்கொல்லையில் இருந்து அரிமளத்திற்கு சென்று கொண்டிருந்தார்.
மோட்டார் சைக்கிள் தோப்புக்கொல்லை– அரிமளம் சாலையில் பூவசரக்குடி என்ற இடத்தில் சென்றபோது, மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த புளியமரத்தில் மோதியது. இதில் மோட்டார் சைக்கிளை ஓட்டி சென்ற பாரதிராஜா தலையில் பலத்த காயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
இதைக்கண்ட அவ்வழியாக சென்றவர்கள், வல்லத்திராக்கோட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பாரதிராஜாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து வல்லத்திராக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பிறந்த மகளை பார்க்க சென்ற என்ஜினீயர் புளியமரத்தில் மோதி இறந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடை பெறவுள்ள ஊரக உள்ளாட்சி தேர்தல் 2016ஐ முன்னிட்டு மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட கலெக்டர் கணேஷ் தலைமையில் நடைபெற்றது.
ஆய்வுக்கூட்டத்தை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட கலெக்டர் கணேஷ் துவக்கி வைத்து பேசியதாவது:
தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் சார்பில் தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் 2016 விரைவில் நடைபெறவுள்ளது. இதன்படி மாவட்டத்தில் நடைபெறவுள்ள ஊரக உள்ளாட்சி தேர்தலை சிறப்பாக நடத்தும் வகையில் மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு தேர்தல் தொடர்பான பணிகள் நடைபெற்று வருகிறது.
அதனடிப்படையில் மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தலுக்கான முன்னேற் பாடு பணி கள் குறித்து ஊரக வளர்ச்சித் துறை, நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகள் ஆகிய துறைகளை சேர்ந்த அரசு அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம் துவக்கி வைக்கப்பட்டுள்ளது.
கூட்டத்தில் வெளியிடப்பட்ட உள்ளாட்சி வாக்காளர் பட்டியல் குறித்த விபரம், தேர்தல் தொடர்பான பணிகள் உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் கேட்டறிந்து ஆய்வு செய்யப்பட்டது. மேலும் வாக்கு எண்ணும் மையங்களுக்கு தடுப்பு வேலிகள் அமைத்திட உரிய திட்ட மதிப்பீடு தயார் செய்யவும் மற்றும் இம்மையங்களுக்கு சம்மந்தப்பட்ட காவல் துணை கண்காணிப்பாளர்களிடம் தடையின்மை சான்று பெறவும், வாக்குப்பதிவு அலுவலர்கள் விபரம் சேகரிக்கவும் மற்றும் தகவல் கோப்பு படிவம் தயார் செய்யவும், மேலும் இதன் மூலம் நடை பெறவுள்ள ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான பணிகளை சிறப்பாக மேற்கொள்ள சம்மந்தப் பட்ட அலுவலர்களுக்கு உத்தர விடப்பட்டுள்ளது.
இவ்வாறு கலெக்டர் கூறினார்.
பொன்னமராவதி:
பொன்னமராவதி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் உள்ளாட்சித்தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. ஒன்றிய ஆணையர் சதாசிவம் வாக்காளர் பட்டியலை வெளியிட்டார்.
ஊராட்சித்தலைவர் சோலையப்பன், முருகேசன், சண்முகம் ஆகியோர் பெற்றுக்கொண்டனர். இதில் கிராம ஊராட்சி ஆணையர் பாஸ்கர், ஒன்றிய பொறியாளர் கதிரேசன், துணைஆணையர் வெள்ளைச்சாமி உட்பட பலர் கலந்துகொண்டனர்.
பொன்னமராவதி ஊராட்சி ஒன்றியத்தில் 75ஆயிரத்து 236வாக்காளர்கள் உள்ளனர். இதில் 37ஆயிரத்து349ஆண் வாக்காளர்களும், 37ஆயிரத்து887பெண் வாக்காளர்களும் உள்ளனர்.
இந்த ஒன்றியத்தில் இரண்டு மாவட்டக்கவுன்சிலர், 16ஒன்றியக்கவுன்சிலர், 42கிராம ஊராட்சித்தலைவர், 291கிராமஊராட்சி உறுப்பினர் என351பதவிகளுக்கு உள்ளாட்சித்தேர்தல் நடத்துவதற்கு இந்த வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம், விராச்சிலை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தலைவர் வைரமுத்து முன்னிலையில் அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழ்நாடு முதலமைச்சர் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்பநலத்துறையின் சார்பில் பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தி செயல்படுத்தி வருகிறார்கள். அதனடிப்படையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள விராச்சிலை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வரும் சிகிச்சைகள் மற்றும் இதர மருத்துவப்பணிகள் குறித்து திடீர் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
இந்த ஆய்வின் போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள உள்நோயாளிகளை தினமும் சரியான முறையில் பரிசோதனை செய்து சிகிச்சை வழங்கவும், கர்ப்பிணி தாய்மார்களுக்கு சுகப்பிரசவம் நடக்கும் வகையில் தேவையான மருத்துவ ஆலோசனைகள் வழங்கி அரசு மருத்துவமனையில் அதிக பிரசவங்களை மேற்கொள்ளவும், மருத்துவப்பதிவேடுகளை முறையாக பராமரிக்கவும், மேலும் அரசு மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளுக்கு மிகச்சிறப்பான முறையில் உயர்தர சிகிச்சை அளித்திட சம்மந்தப்பட்ட மருத்துவர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்று அமைச்சர் விஜய பாஸ்கர் அவர்கள் கூறினார்.
அவர் கீரனூர் அரசு தாலுகா மருத்துவமனையை பார்வையிட்டு ஆய்வு செய்து, பிறந்த குழந்தைகளுக்கு அம்மா குழந்தைகள் நல பரிசுப்பெட்டகத்தையும் வழங்கினார்.
இந்த ஆய்வில் கந்தர்வக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் ஆறுமுகம், மாவட்ட ஊராட்சி குழுத்தலைவர் ராமையா, நகர்மன்றத்தலைவர் இரா.ராஜசேகரன், திருமயம் ஒன்றியக்குழு துணைத்தலைவர் ராமு, ஆத்மா குழுத்தலைவர் பால்ராஜ், மருத்துவ அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
பொன்னமராவதி பேரூந்து நிலையம் முன்பு சிட்டி லயன்ஸ் சங்கம் மற்றும் நத்தம் அப்போலோ மருந்தகம் இணைந்து நடத்திய இலவச சர்க்கரை நோய் கண்டறியும் முகாம் நடந்தது.
முகாமிற்கு சிட்டியலயன்ஸ் சங்கத் தலைவர் டாக்டர் கருணாநிதி தலைமை வகித்தார். வட்டாரத்தலைவர் மாணிக்கவேல் முகாமை தொடங்கிவைத்தார். நத்தம் அப்போலோ மருந்தக மருத்து வக்குழுவினர் முகாமை நடத்தினர். இதில் செயலாளர்கள் செல்வம், சரவணன், பொருளாளர் செந்தில்குமார், துணைத்தலைவர் பாலமுரளி, இயக்குனர்கள் சந்திரன்,பாலசுப்பிரமணியன்,சுந்தரமூர்த்தி,ரவிச்சந்திரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
புதுக்கோட்டை மாவட்டம் புதுக்குடியில் இருந்து நாட்டுப்படகில் நாகூர்கனி (வயது 42) காளியப்பன், ஆறுமுகம் ஆகியோர் நேற்று கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். இவர்கள் சுமார் 3நாட்டிக்கல் மைல் தொலைவில் கடலில் விரிக்கப்பட்டிருந்த வலையை இழுத்த போது வலைக்குள் அகப்பட்டிருந்த விஷத்தன்மை கொண்ட ஜெல்லி மீன் நாகூர்கனியை கடித்துள்ளது. இதனால் அவருக்கு உடல் எங்கும் தடிப்பு ஏற்பட்டதுடன், மயக்கமடைந்து படகில் விழுந்துள்ளார்.
இதையடுத்து படகில் இருந்த காளியப்பன், மீனவர்களுக்கான உதவி எண் 1093 எண் மூலம் கடலோரக்காவல் படைக்கு தகவல் தெரிவித்தார். இதைத்தொடர்ந்து உதவி ஆய்வாளர் ரகுபதி தலைமையிலான திருப்புன வாசல் கடலோரக்காவல் படையினர், நாகூர்கனியை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர்.
கடற்கரையில் தயார் நிலையில் நிறுத்தப்பட்டிருந்த ஆம்புலன்ஸ் மூலம் மணமேல்குடி அரசு மருத்துவமனையில் நாகூர் கனி சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்ட அளவில் அரிமளம், புதுக்கோட்டை, நற்சாந்துபட்டி ஆகிய இடங்களில் அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு பொதுக்கூட்டங்கள் நடை பெற்றன.
கூட்டத்தில் அமைச்சர் விஜயபாஸ்கர், தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத் தலைவர் பி.கே.வைரமுத்து, விவசாய பிரிவுத் தலைவர் துரை.கோவிந்தராஜன் மற்றும் பலர் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினர்.
முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கார்த்திக் தொண்டைமான், நகர்மன்றத் தலைவர் ராஜசேகர், நகரச் செயலாளர் பாஸ்கர், நகர்மன்றத் துணைத் தலைவர் எஸ்.ஏ.எஸ்.சேட், முன்னாள் மாவட்டச் செயலாளர் வி.ஆர்.எஸ்.ராமசாமி, மாவட்ட பாசறை செயலாளர் கருப்பையா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியை சேர்ந்தவர் தங்கராஜ் (வயது 28). லோடு ஆட்டோ டிரைவர். இவரது மனைவி சந்திரலேகா (வயது 26). இவர்களுக்கு திருமணமாகி 1½ வருடம் ஆகிறது. பிறந்து 2மாதமே ஆன நிலையில் வைணேஸ்வரி என்ற பெண் குழந்தை உள்ளது.
இந்நிலையில் தங்கராஜூக்கு குடிபழக்கம் இருந்து வந்தது . தினமும் குடித்து விட்டு வீட்டிற்கு வருவார். இதனால் கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.நேற்றிரவும் தகராறு ஏற்பட்டது.
இதில் மனமுடைந்த சந்திரலேகா இன்று அதிகாலை , திடீரென வீட்டின் பின்புறமுள்ள கிணற்றில் தனது குழந்தையை தூக்கிவீசினார். பின்னர் அவரும் கிணற்றில் குதித்து விட்டார். அவரது சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.
பின்னர் கிணற்றில் தத்தளித்த சந்திரலேகாவை மீட்டு, புதுக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். குழந்தை வைணேஸ்வரி கிணற்றில் மூழ்கி இறந்தது.
இது குறித்த தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு சென்ற ஆலங்குடி போலீசார் , குழந்தை உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். குழந்தையை கிணற்றில் தள்ளிக்கொன்று தாய் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் புதுக்கோட்டை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ஜே.சி.ஐ புதுக்கோட்டை கிங்ஸ் சார்பில் பள்ளி, கல்லூரிகளில் நாப்கின் டெஸ்ட்ராயர் மிஷின் பொருத்தும் நிகழ்ச்சியை மாவட்ட கலெக்டர் கணேஷ் துவக்கி வைத்து கூறியதாவது:-
ஜே.சி.ஐ வார விழாவினை முன்னிட்டு ஜே.சி.ஐ புதுக்கோட்டை கிங்ஸ் சார்பில் புதுக்கோட்டை ராணியார் அரசு பெண்கள் உயர்நிலைப்பள்ளி மற்றும் மேல்நிலைப்பள்ளி, மவுண்ட்சியோன், டாக்டர்ஸ் நர்சிங் கல்லூரி உட்பட 7 இடங்களில் நாப்கின் டெஸ்ட்ராயர் மிஷின் பொருத்தப்பட்டுள்ளது. மேலும் சுராக்ஷா எனும் நாப்கின் மிஷின் பொருத்துதல் குறித்தும், உபயோகப்படுத்துதல் மற்றும் அதன் முக்கியத்துவம் குறித்தும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு விளக்கமாக எடுத்துரைக்கப்பட்டது. எனவே இதனை அனைத்து பள்ளி, கல்லூரி மாணவிகளும் உரிய முறையில் பயன்படுத்தி தன் சுகாதாரம் பேண வேண்டும் என்றும் மாவட்ட கலெக்டர் கணேஷ் கூறினார்.
இந்நிகழ்ச்சியில் திட்ட இயக்குநர் (மா.ஊ.வ.மு) சந்தோஷ்குமார், ஜே.சி.ஐ புதுக்கோட்டை கிங்ஸ் தலைவர் எம்.வீரய்யா, செந்தூரான் கல்வி நிறுவனங்களின் தாளாளர் வைரவன், மண்டலத்தலைவர் சங்கர நாராயணன், மண்டல துணைத்தலைவர்கள் சேதுரத்தினம், எஸ்.வி.எஸ்.ஜெயக்குமார், கதிர்வேல், வித்யா, லெட்சுமணன், சண்முக பழனியப்பன், கண்ணன், ஸ்ரீராம், ஸ்ரீனிவாசன், ஜோன்ஸ், ராஜ்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
காவிரி பிரச்சினையில் நிரந்தர தீர்வு காண மத்திய அரசை வலியுறுத்தியும், கர்நாடக மாநிலத்தில் தமிழர்களுக்கு எதிராக நடைபெறும் வன்முறை போராட்டங்களுக்கு கண்டனம் தெரிவித்தும், தமிழகம் முழுவதும் இன்று கடையடைப்பு மற்றும் ரெயில் மறியல் போராட்டம் நடைபெற்றது.
புதுக்கோட்டை மாவட்ட தி.மு.க.வினர் ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபடுவதற்காக புதுக்கோட்டை ரெயில் நிலையத்திற்கு திரண்டு சென்றனர். அங்கு பாதுகாப்புக்கு நின்ற போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி உள்ளே புகுந்து விடாமல் தடுத்தனர். இதனால் போலீசாருக்கும், தி.மு.க.வினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இருப்பினும் தி.மு.க.வினர் போலீசாரின் தடையை மீறி ரெயில் நிலையத்திற்குள் சென்றனர். பின்னர் அங்கு நின்ற திருச்சி-ராமேஸ்வரம் ரெயிலை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
புதுக்கோட்டை தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் தங்கவேலு தலைமையில் நடைபெற்ற இந்த மறியல் போராட்டத்தில் எம்.எல்.ஏ.க்கள் ரகுபதி, மெய்யநாதன், நகர செயலாளர் நயினா முகமது, சொத்து பாதுகாப்பு குழு உறுப்பினர் சந்திரசேகரன் உள்பட 300 பேர் கலந்து கொண்டனர். இதையடுத்து அவர்களை போலீசார் கைது செய்தனர். இதன் காரணமாக அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. அதே போல் விடுதலை சிறுத்தை கட்சியினரும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கரூர் மாவட்டத்தில் கரூர் மற்றும் குளித்தலையில் தி.மு.க. மற்றும் விடுதலை சிறுத்தை கட்சியினர் ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதே போல் அரியலூரிலும் ரெயில் மறியல் போராட்டம் நடைபெற்றது.
புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள வெ.கோட்டையூர் கிராமத்தை சேர்ந்தவர் சிதம்பரம். இவர் சென்னையில் வசித்து வருகிறார். தனது குல தெய்வமான பூங்காவன அய்யனார் கோவிலில் கும்பாபிஷேக விழாவில் கலந்து கொள்வதற்காக வந்துள்ளார். கோவில் கும்பாபிஷேகம் நடந்து கொண்டிருந்த போது சிதம்பரம் மனைவி கழுத்தில் அணிந்திருந்த 7 பவுன் தங்க சங்கிலியை யாரோ பறித்து சென்று விட்டனர்.
இதே போல் வெ.கோட்டையூர் அருகே உள்ள தேவப்படியை சேர்ந்த பழனியம்மாள் என்ற பெண்ணிடம் கழுத்தில் அணிந்திருந்த 6 சவரன் தங்க சங்கிலியை யாரோ பறித்து சென்று விட்டனர். இது குறித்து திருமயம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. புகாரையடுத்து 13 சவரன் நகையை திருடிசென்ற மர்ம நபர்கள் குறித்து திருமயம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.






