என் மலர்tooltip icon

    புதுக்கோட்டை

    புதுக்கோட்டையில் கைவினைப்பொருட்கள் சிறப்புக் கண்காட்சியை தொடங்கி வைத்து கலெக்டர் கணேஷ் பேசினார்.

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை லேணா திருமண மண்டபத்தில் தமிழ்நாடு கைத்திறத் தொழில்கள் வளர்ச்சிக்கழகம், பூம்புகார் விற்பனை நிலையம், திருச்சி சார்பில் சிறப்பு கைவினைப்பொருட்கள், கைத்தறி துணி வகைகள், நகை வகைகள் மற்றும் கைத்திறன் அகலன்கள் இடம் பெற்ற அகில இந்திய கைவினைப்பொருட்கள் சிறப்பு கண்காட்சி தொடங்கியது.

    கண்காட்சியை கலெக்டர் கணேஷ் தொடங்கி வைத்து கூறியதாவது;

    இக்கண்காட்சியில் இந்தியாவின் அனைத்து மாநிலங்களின் தனிச் சிறப்புமிக்க கைவினைப் பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. தேசிய விருது, மாநில விருது பெற்ற கைவினைஞர்கள் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட கைவினைஞர்கள் இச்சிறப்புக் கண்காட்சியில் பங்கு பெற்றுள்ளனர். தங்கள் தனிச்சிறப்புமிக்க கைத்திறன் பொருட்களை நேரடியாக விற்பனை செய்கின்றனர். இங்கு கிடைக்கும் கைவினைப்பொருட்கள், பஞ்சலோக சிலைகள், பித்தளை விளக்குகள், தஞ்சாவூர் கலைத்தட்டுகள், தஞ்சாவூர் ஓவியங்கள், மரச்சிற்பங்கள், காகிதக் கூழ் பொம்மைகள், சுட்டமண் பொம்மைகள், மூங்கில் பொருட்கள், வாழை நார் பொருட்கள், சணல் பொருட்கள், அழகிய வேலைப்பாடுகளுடன் கூடிய நகை வகைகள், அரக்கு வளையல்கள் மற்றும் அனைத்து மாநில கைத்திற சேலை வகைகள், மதுரை சுங்கடி, ஹைதராபாத், ஆந்திரா மாநில சேலை வகைகள், சுடிதார், டாப்ஸ் ஆகியன அனைத்து மாநிலங்களிலிருந்து வரவழைக்கப்பட்டு காட்சிக்கும், விற்பனைக்கும் வைக்கப்பட்டுள்ளன.

    இக்கண்காட்சி 14.10.2016 முதல் 20.10.2010 காலை 10.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை ஞாயிறு உள்பட நடைபெறும். இக்கண்காட்சியில் அனைத்து பொருட்களுக்கும் 10ச தவீதம் தள்ளுபடி வழங்கப்படுகிறது. அனைத்து வகையான கடன் அட்டைகளும் எவ்வித சேவைகட்டணமின்றி ஏற்றுக்கொள்ளப்படும் வசதி செய்யப்பட்டுள்ளது.

    இவ்வாறு கலெக்டர் கூறினார்.

    புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி ஊராட்சி ஒன்றியத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் சார்பில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சிப்பணிகளை மாவட்ட கலெக்டர் கணேஷ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி ஊராட்சி ஒன்றியத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் சார்பில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சிப்பணிகளை மாவட்ட கலெக்டர் கணேஷ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    தமிழ்நாடு முதலமைச்சர் ஊரகவளர்ச்சி மற்றும் ஊரா ட்சித்துறையின் சார்பில் பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தி செயல்படுத்தி வருகிறார்கள். அதனடிப்படையில் நமது மாவட்டத்தில் கறம்பக்குடி ஊராட்சி ஒன்றியம், கீராத்தூர் ஊராட்சி, கீராத்தூரில் மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தின் கீழ் ரூ.15.25 இலட்சம் மதிப்பீட்டில் நெல்லி, புளி, கருவை, நாவல், பலா, இலந்தை என 1 இலட்சம் எண்ணிக்கையில் நடவு செய்யப்பட்டு வரும் மரக்கன்றுகள் உற்பத்தி செய்யும் பணியையும், மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தின் கீழ் ரூ.1.50 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட மண்புழு இயற்கை உரம் தயாரிக்கும் கொட்டகை பணியையும், புதுவிடுதி ஊராட்சி, ஏ.டி.காலனியில் தனிநபர் இல்லக்கழிவறை கட்டும் திட்டத்தின் கீழ் ரூ.12000 மதிப்பீட்டில் கட்டப்பட்ட கழிவறை கட்டுமான பணியையும், வாண்டான் விடுதி ஊராட்சி, வாண்டான் விடுதியில் இந்திரா நினைவு குடியிருப்பு கட்டும் திட்டத்தின் கீழ் ரூ.1.70 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் வீட்டின் கட்டுமானப் பணியையும் என மொத்தம் ரூ.18.57 இலட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சிப் பணிகள் பார்வையிட்டு ஆய்வு செய்யப்பட்டது.

    இந்த ஆய்வின் போது வீட்டின் தரைத்தளம், மேல்தளம், கைப்பிடிச்சுவர், படிக்கட்டுகள் அமைப்பது உள்ளிட்ட பல்வேறு பணிகளை விரைவாக மேற்கொள்ளவும், நடவு செய்யப்பட்டுள்ள மரக்கன்றுகளை குளங்கள், கண்மாய்கள், சாலையோரங்கள் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நட்டு வளர்த்து தினமும் உரிய முறையில் நீர் ஊற்றி பராமரிக்கவும், மண்புழு இயற்கை உரம் தயாரிக்கும் கொட்டகையில் மண்புழுக்களை கொண்டு மண்புழு இயற்கை உரத்தினை விரைவாக தயாரித்து விவசாயிகளுக்கு குறைந்த விலையில் வழங்கவும், தனிநபர் இல்லக்கழிவறைகளை தினமும் உரிய முறையில் பயன்படுத்தி பொது சுகாதாரம் காக்கவும், மேலும் முடிவுற்ற பணிகளை உரிய முறையில் பராமரிக்கவும், நடைபெறும் பணிகளை தரமான கட்டுமானப்பொருட்களை கொண்டு விரைவாக கட்டிமுடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரவும் சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

    இவ்வாறு கலெக்டர் கூறினார்.

    பொன்னமராவதி அருகே குடிசை வீடு திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதில் வீட்டில் இருந்த தளாவடப்பொருட்கள் மற்றும் வைக்கோல் எரிந்து சேதமாயின.

    பொன்னமராவதி:

    பொன்னமராவதி அருகே உள்ள தொட்டியம்பட்டியைச்சேர்ந்த கட்டையன் (வயது65). வைக்கோல் போரில் ஆண குடிசைவீட்டில் வசதித்து வந்துள்ளார். நேற்று வீட்டில் திடீரென தீப்பற்றி எரிந்துள்ளது. உடனே அக்கம்பக்கம் உள்ளவர்கள் பொன்னமராவதி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளனர். இதன் பேரில் தீயணைப்பு வீரர்கள் சென்று தீயை அணைத்துள்ளனர். ஆனால் இந்த வீட்டில் இருந்த தளாவடப்பொருட்கள் மற்றும் வைக்கோல் எரிந்து சேதமாயின.

    தீப்பற்றி எரிந்த தகவல் கிடைத்த தாசில்தார் மோகன்குமார், ஆர்.ஐ.சேர், வி.ஏ.ஓ.பாண்டியன்,ஊராட்சித்தலைவர் சோலையப்பன் ஆகியோர் சம்பவ இடம் சென்று பார்வையிட்டு அரசின் நிவாரண உதவிகள் வழங்கினர்.

    புதுக்கோட்டையில் வங்கி அதிகாரிகளே வாடிக்கையாளர்களின் பெயரில் போலி நகைகளை அடமானம் வைத்து ரூ.65 லட்சம் மோசடி செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை நகரில் ராஜகோபாலபுரம் பகுதியில் ஸ்டேட் பேங்க் ஆப் திருவாங்கூர் வங்கி செயல்பட்டு வருகிறது. இந்த வங்கியில் சுற்று வட்டாரத்தை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் தங்களது நகைகளை அடகு வைத்து கடன் பெறுவது வழக்கம்.

    மேலும் விவசாய கடன் இங்கு அதிக அளவில் வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இந்த வங்கியின் வாடிக்கையாளர்கள் 31 பேருக்கு வங்கியிலிருந்து ஒரு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அதில் அவர்கள் போலியான நகைகளை அடமானம் வைத்து கடன் வாங்கியதாகவும், கடனை உடனே கட்ட வேண்டும். தவறும் பட்சத்தில் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என கூறப்பட்டிருந்தது.

    இதனால் அதிர்ச்சியடைந்த வாடிக்கையாளர்கள் 31 பேரும் புதுக்கோட்டை ராஜகோபாலபுரம் ஸ்டேட் பேங்க் ஆப் திருவாங்கூர் வங்கிக்கு திரண்டு வந்தனர். அங்கு அதிகாரிகளிடம் நாங்கள் எவ்வித கடனும் பெறவில்லை. பின்பு ஏன் இவ்வாறு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது என கேட்டுள்ளனர்.

    இது குறித்து அதிகாரிகள் முறையான தகவல் தர மறுத்துள்ளனர். இதனால் சந்தேகம் அடைந்த வாடிக்கையாளர்கள் இந்த சம்பவம் குறித்து விசாரித்தனர். அதில் வங்கி மேலாளர் மற்றும் நகை மதிப்பீட்டாளர் சிவக்குமார் ஆகியோர் இணைந்து வாடிக்கையாளரின் பெயரில் போலி நகைகளை அடமானம் வைத்து ரூ.65 லட்சத்திற்கு மேல் மோசடி செய்தது தெரிய வந்தது.

    இந்த மோசடி குறித்து அறிந்த வாடிக்கையாளர்கள் உடனே வங்கியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் போராட்டம் நடத்தியவர்களிடம் இது குறித்து புகார் அளிக்கும் பட்சத்தில் விசாரணை நடத்தி மோசடி செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினர்.

    அதனை தொடர்ந்து வங்கி வாடிக்கையாளர்கள் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவகத்தில் புகார் செய்தனர். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வங்கி அதிகாரிகளே வாடிக்கையாளர்களின் பெயரில் பல லட்சம் மோசடி செய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    திருமயம் அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார்.
    திருமயம்:

    புதுக்கோட்டையை சேர்ந்தவர் அப்துல் ஹமீது வாலிபரான இவர் சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள தெம்மாபட்டியை சேர்ந்த தனது நண்பர் தாரிக் ஆஸிஸ்வுடன் புதுக்கோட்டையிலிருந்து திருப்பத்தூருக்கு இருசக்கர வாகனத்தில் சென்றபோது திருமயம் பட்டணம் முக்கத்தில் உள்ள கண்மாயில் நிலை தடுமாறி விழுந்தார். இந்த விபத்தில் அப்துல் ஹமீது சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தாரிக் ஆஸிஸ் தூக்கி வீசப்பட்டு காயமடைந்தார்.

    இது குறித்து தகவலறிந்து விரைந்து வந்த திருமயம் போலீசார் விபத்தில் காயமடைந்த தாரிக் ஆஸிஸை மீட்டு திருமயம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

    விபத்தில் பலியான அப்துல் ஹமீது உடலை மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து திருமயம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    புதுக்கோட்டை அருகே கடலில் மூழ்கி 2 மீனவர்கள் பலியான சம்பவம் ஜெகதாப்பட்டினம் பகுதி மீனவர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    அறந்தாங்கி:

    புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினம் அருகே உள்ள ஏம்பவயல் பகுதியில் இருந்து சுமார் 100க்கும் மேற்பட்ட நாட்டு படகுகளில் சுமார் 400 மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.

    அவர்கள் 14 நாட்டிக்கல் மைல் தொலைவில் மீன் பிடித்து கொண்டிருந்த போது ராமநாதபுரம் மாவட்டம் நம்புதாளையை சேர்ந்த குப்பைபிச்சை என்பவருக்கு சொந்தமான நாட்டுப்படகின் அடிப்பகுதியில் கடல் நீர் புகுந்தது.

    படகு மூழ்கவே, அதில் இருந்த குப்பைபிச்சை மகன் ஆறுமுகம் (32), தூ.வில்லாயுதம்(55), சக்காத்து (44), பாலு (55) ஆகியோர் கடலில் குதித்து நீந்தினர். அப்போது ஆறுமுகம் ,வில்லாயுதம் தனியாகவும், சக்காத்து, பாலு தனியாகவும் பிரிந்தனர்.

    கடலுக்கு சென்ற மீனவர்கள் கரை திரும்பாததால் அவர்களது குடும்பத்தினர் மற்றும் மீனவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

    இதனிடையே நேற்றிரவு ஆறுமுகம், வில்லாயுதம் கரை திரும்பினர். அவர்கள் கடலோர பாதுகாப்பு குழும போலீசாரிடம் கூறும் போது, நடுக்கடலில் மீன்பிடித்து கொண்டிருந்த போது எங்களது படகில் தண்ணீர் புகுந்தது. இதனால் கடலில் குதித்து நீந்தி கொண்டிருந்தோம். மேலும் தங்களை காப்பாற்றும்படி கூக்குரலிட்டோம்.

    அப்போது அந்த வழியாக மீன்பிடித்து வந்து கொண்டிருந்த தனிக்கோடி என்பவரின் படகில் ஏறி தப்பினோம். சக்காத்து, பாலு ஆகியோர் கடலில் நீந்தும் போது வலையில் சிக்கிக்கொண்டனர் என்றனர்.

    இதையடுத்து ஜெகதாப்பட்டினம் கடலோர பாதுகாப்பு குழும போலீசார் மற்றும் அப்பகுதியை சேர்ந்த நாட்டுப்படகு மற்றும் விசைப்படகு மீனவர்கள் இன்று காலை 2 பேரையும் தேடி கடலுக்கு சென்றனர். அப்போது 2 மீனவர்களும் கடலில் மூழ்கி இறந்து கிடந்தனர். பின்னர் 2 பேரின் உடல்களையும் மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர்.

    2 மீனவர்கள் பலியான சம்பவம் ஜெகதாப்பட்டினம் பகுதி மீனவர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    புதுக்கோட்டை அருகே போலீஸ் நிலையத்தில் இருந்து விசாரணை கைதி தப்பியோடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் அழியாநிலை இலங்கை அகதிகள் முகாமில் வசிப்பவர் ரத்னகுமார். இவருக்கு பவித்ரா (வயது18), நர்மதா (16) ஆகிய 2மகள்கள் உள்ளனர். இதில் பவித்ராவை அதே முகாமில் வசிக்கும் சுரேஷ்குமார் (25) என்பவருக்கு திருமணம் செய்து வைத்தனர். நர்மதா திருமயம் அருகே அரசு உதவி பெறும் உயர்நிலை பள்ளியில் விடுதியில் தங்கி 10-ம் வகுப்பு படித்து வந்தார்.

    இந்நிலையில் கடந்த 2-ந்தேதி நர்மதாவை சந்தித்த சுரேஷ்குமார், ஆசைவார்த்தை கூறி அவரை கடத்தி சென்றார். இதையடுத்து ரத்னகுமார் மகளை பல்வேறு இடங்களில் தேடிய போது, அவரை மருமகன் சுரேஷ் குமார் கடத்தி சென்றது தெரிய வந்தது.

    இதனிடையே குடும்பத்தினருக்கு வி‌ஷயம் தெரிந்து விட்டதால், நர்மதாவை அழைத்து வந்து மீண்டும் பள்ளி விடுதியிலேயே விட்டு விட்டு சுரேஷ்குமார் தப்பியோடிவிட்டார். இது பற்றி நர்மதா கொடுத்த புகாரின் பேரில் திருமயம் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து சுரேஷ்குமாரை கைது செய்தனர். அதன் பின்னர் பாதுகாப்பு கருதி திருமயம் போலீஸ் நிலையத்திற்கு சுரேஷ்குமார் மாற்றப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.

    இந்நிலையில் சிறுநீர் கழிக்க வேண்டும் என்று சுரேஷ்குமார் கூறியதால் கழிவறைக்கு செல்ல போலீசார் அனுமதித்தனர். அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி சுரேஷ்குமார் தப்பியோடிவிட்டார். இது தொடர்பாக திருமயம் போலீசார் வழக்குப்பதிவு செய்து சுரேஷ்குமாரை தேடி வருகின்றனர்.

    இது குறித்து தகவல் அறிந்த புதுக்கோட்டை மாவட்ட எஸ்.பி. லோகநாதன், பொன்னமராவதி டி.எஸ்.பி. கோபாலசந்திரன் ஆகியோர் திருமயம் போலீஸ் நிலையத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். போலீஸ் நிலையத்தில் இருந்து விசாரணை கைதி தப்பியோடிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    பட்டப்பகலில் ஓட்டல் தொழிலாளி நடுரோட்டில் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அறந்தாங்கி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    அறந்தாங்கி:

    புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே உள்ள பரமந்தூர் வசந்தம் நகரைச் சேர்ந்தவர் ராக்கன்-காளியம்மாள் ஆகியோரின் மகன் தேவதாஸ் (வயது 32).

    தேவதாஸ் பரமந்தூரில் தனது சகோதரர் பாலகிருஷ்ணன், அவரது மனைவி மனிஷா ஆகியோருடன் கூட்டுக்குடும்பாக வசித்து வந்தார். சகோதரர் பாலகிருஷ்ணன் வெளிநாடு சென்றதால், தற்போது அவரது மனைவி மனிஷா, அறந்தாங்கி அருகே உள்ள ஆலங்குடியில் அவரது தாய் வீட்டில் வசித்து வருகிறார்.

    தேவதாஸ் சென்னையில் உள்ள ஒரு இடியாப்ப கடையில் வேலைபார்த்து வந்தார். இந்த நிலையில் தேவதாஸ் கடந்த 10 நாட்களுக்கு முன்பு விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்துள்ளார்.

    நேற்று மாலை தேவதாஸ், பரமந்தூரில் உள்ள அவரது வீட்டின் அருகே உறவினர் வீட்டில் டி.வி. பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது தேவதாஸ் செல்போனுக்கு ஒரு அழைப்பு வந்தது. அந்த அழைப்பை எடுத்து பேசிய தேவதாஸ், செல்போனில் பேசியபடி அறந்தாங்கி-ஆவுடையார் கோவில் மெயின் ரோட்டிற்கு சென்றார்.

    அப்போது அவர் அருகே கார் ஒன்று வந்து நின்றது. தேவதாஸ் அந்த காரின் அருகே சென்றதும், அதிலிருந்து இறங்கிய மர்ம நபர்கள், தேவதாஸின் செல்போனை பறித்துக்கொண்டு, கண்ணிமைக்கும் நேரத்திற்குள் அரிவாளால் தலையில் சரமாரியாக வெட்டிவிட்டு, அதே காரில் தப்பிச் சென்று விட்டனர்.

    மர்ம நபர்களால் வெட்டப்பட்ட தேவதாஸ் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த அறந்தாங்கி போலீஸ் துணை சூப்பிரண்டு செல்லபாண்டியன், ஆவுடையார் கோவில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.

    இதில் தேவதாஸ் செல்போன் அழைப்பில் சந்தேகம் ஏற்பட்டது. எனவே அந்த பகுதியில் அதே நேரத்தில் இணைக்கப்பட்ட செல்போன் சிக்னல்களை ஆய்வு செய்தனர். அதில் தேவதாஸ் செல்போனுக்கு கடைசியாக ஆவுடையார் கோவில் உள்ள ஓட்டல் உரிமையாளரின் செல்போல் நம்பரில் இருந்து அழைப்பு வந்துள்ளது தெரியவந்தது.

    இதையடுத்து போலீசார் அந்த ஓட்டல் உரிமையாளர் வீட்டிற்கு சென்றனர். அங்கு அவரது வீடு மற்றும் ஓட்டல் பூட்டிக்கிடந்தது. மேலும் சந்தேகம் அடைந்த போலீசார் அவரது எண்ணை மீண்டும் ஆய்வு செய்தனர். அதில் தற்போது அவர் சிவகங்கை மாவட்டத்தில் பதுங்கியிருப்பது தெரியவந்தது.

    இது குறித்து தேவதாஸின் உறவினர்களிடம் விசாரித்ததில் ஓட்டல் உரிமையாளருக்கும், தேவதாஸிற்கும் ஏற்கனவே முன்விரோதம் இருந்ததும் தெரிய வந்தது. எனவே இந்த கொலை சம்பவத்தில் ஓட்டல் உரிமையாளருக்கு தொடர்பு இருக்கலாம் என்ற கோணத்தில் அவரை பிடிப்பதற்காக தனிப்படை ஒன்று சிவகங்கை மாவட்டத்திற்கு விரைந்துள்ளது.

    பட்டப்பகலில் ஓட்டல் தொழிலாளி நடுரோட்டில் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அறந்தாங்கி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    புதுக்கோட்டை அருகே மலேசிய தொழிலதிபரின் மனைவியை அபகரிக்க முயன்ற கார் டிரைவரை போலீசார் கைது செய்தனர்.
    புதுக்கோட்டை:

    மலேசியா நாட்டின் ஹல்லாதம்மான் பகுதியை சேர்ந்தவர் லிங்கம்மாரி (வயது 39), தொழிலதிபர். இவரது மனைவி ஸ்ரீதேவி (35). இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் 2 மகள்கள் உள்ளனர்.

    லிங்கம் மாரி கடந்த 6.9.2015 அன்று குடும்பத்தினருடன் சுற்றுலாவாக தமிழகம் வந்தார். அப்போது சென்னையில் இருந்து வாடகை காரை புக் செய்து கேரளா, ராமேஸ்வரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்றார்.

    கார் டிரைவராக இருந்த புதுக்கோட்டை மாவட்டம் வடகாட்டை சேர்ந்த உமர் கர்த்தாப் (34) என்பவருக்கும், ஸ்ரீதேவிக்கும் பழக்கம் ஏற்பட்டது. உமர் கர்த்தாப்புக்கு திருமணமாகி மனைவி மற்றும் ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். இருப்பினும் அவர் ஸ்ரீதேவியுடன் பழகி வந்தார். செல்போன் மற்றும் வாட்ஸ் அப் எண்களை பரிமாறி கொண்டதோடு, கேரளாவில் இருவரும் தனியாக நெருக்கமாக புகைப்படமும் எடுத்துக்கொண்டனர்.

    இந்த நிலையில் சுற்றுலா முடிந்து லிங்கம்மாரி குடும்பத்தினருடன் மலேசியா சென்றார். அங்கிருந்து ஸ்ரீதேவி அடிக்கடி உமர் கர்த்தாப்பை செல்போனில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். இதையறிந்த உமர் கர்த்தாப்பின் மனைவி தனது குழந்தைகளை அழைத்துக் கொண்டு பெற்றோர் வீட்டுக்கு சென்றுவிட்டார். பின்னர் உறவினர்கள் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் செய்து வைத்தனர்.

    இதனிடையே சுற்றுலா சென்றபோது எடுத்த புகைப்படங்களை லிங்கம்மாரி பார்த்தபோது அதில் தனது மனைவியுடன் கார் டிரைவர் நெருக்கமாக நிற்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். இது பற்றி மனைவியிடம் கேட்டபோது இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. இதுகுறித்து ஸ்ரீ தேவி உமர்கர்த்தாப்பிற்கு போன் செய்து கண்ணீருடன் நடந்தவற்றை கூறியுள்ளார்.

    இதைத்தொடர்ந்து உடனே தமிழகத்திற்கு வருமாறு உமர்கர்த்தாப் கூறவே, ஸ்ரீ தேவி தனது கணவர் மற்றும் குழந்தைகளை உதறி விட்டு தமிழகம் வந்தார். அவரை புதுக்கோட்டையில் உள்ள ஒரு மகளிர் விடுதியில் உமர் கர்த்தாப் தங்க வைத்தார்.

    இதனிடையே தனது நண்பர்கள் உதவியுடன் மனைவியை தேடி புதுக்கோட்டை வடகாட்டுக்கு லிங்கம்மாரி வந்தார். உமர்கர்த்தாப்பை சந்தித்து தட்டிக்கேட்ட போது, நான் ஸ்ரீதேவியை திருமணம் செய்து கொண்டேன். உன்னால் முடிந்ததை பார்த்துக் கொள். எங்களை பிரிக்க நினைத்தால் கொலை செய்துவிடுவேன் என்று லிங்கம் மாரிக்கு மிரட்டல் விடுத்துள்ளார்.

    இது குறித்து ஆலங்குடி போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து உமர்கர்த்தாப்பை கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    மின்சார வாரியத்தில் பல்வேறு நிலைகளில் பணியாற்றும் ஒப்பந்த ஊழியர்களை அடையாளம் கண்டு அவர்களுக்கும் தமிழக அரசு போனஸ் வழங்க வலியுறுத்தி சிஐடியு சார்பில் மின் வாரிய ஊழியர்கள் புதுக்கோட்டையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

    புதுக்கோட்டை:

    மின்சார வாரியத்தில் பல்வேறு நிலைகளில் பணியாற்றும் ஒப்பந்த ஊழியர்களை அடையாளம் கண்டு அவர்களுக்கும் தமிழக அரசு போனஸ் வழங்க வலியுறுத்தி சிஐடியு சார்பில் மின் வாரிய ஊழியர்கள் புதுக்கோட்டையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

    புதுக்கோட்டை மின்சார வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு மின்ஊழியர் மத்திய அமைப்பின் வட்டத் தலைவர் வி.அரசுமுகம் தலைமை வகித்தார். கோரிக்கைகளை விளக்கி சிஐடியு மாவட்டத் தலைவர் க.செல்வராஜ், துணைத் தலைவர்கள் எம்.ஜியாவுதீன், எஸ்.பாலசுப்பிரமணியன், சங்கத்தின் திட்டச் செயலாளர் கு.செல்வராஜ் மற்றும் நிர்வாகிகள் பி.ஆவுடைமுத்து, எம்.கலியபெருமாள், ஆறுமுகம், நடராஜன் உள்ளிட்டோர் பேசினர்.

    மின் உற்பத்திக்கும், மின் விநியோகத்திற்கும், உள் கட்டுமான வளர்ச்சிக்கும் அச்சாணிகளாக உள்ள ஒப்பந்தத் தொழிலாளர்களை தமிழக அரசு புறக்கணிக்கக்கூடாது. பல்வேறு நிலைகளில் பணியாற்றும் அனைத்துத் தொழிலாளர்களையும் அடையாளம் கண்டு அவர்களுக்கும் போனஸ் வழங்க வேண்டும் என முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

    இலங்கை பிரதமர் இந்தியா வருகையை முன்னிட்டு புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் உள்பட 12 தமிழக மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டனர்.
    அறந்தாங்கி:

    புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினத்தில் இருந்து 76 விசைபடகுகளிலும், கோட்டைப்பட்டினத்தில் இருந்து 223 விசைப்படகுகளிலும் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் நேற்று காலை மீன்துறை அலுவலக அனுமதியுடன் கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர்.

    இதில் ஜெகதாப்பட்டினத்தை சேர்ந்த செல்லம் செட்டி என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் தங்கமணி (50), பிரதீப் (23), அருண் (21), சண்முகவேல் (35), கோபு (27) ஆகிய 5 மீனவர்கள் மீன் பிடிக்க சென்றனர்.

    இன்று அதிகாலை அவர்கள் இந்திய கடல் எல்லையான நெடுந்தீவு அருகே மீன்பிடித்து கொண்டிருந்தனர். அப்போது அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் 5 பேரையும் சுற்றி வளைத்தனர். பின்னர் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி 5 பேரையும் விசைப்படகுடன் சிறைப்பிடித்தனர்.

    இதையடுத்து அவர்களை இலங்கை காங்கேசன் துறை முகத்திற்கு அழைத்து சென்று மீன் வளத்துறை அதிகாரிக ளிடம் ஒப்படைத்தனர். அதி காரிகள் 5 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தினர்.

    இதனிடையே 5 பேர் சிறைபிடிக்கப்பட்ட தகவலை அறிந்த ஜெகதாப்பட்டினம் பகுதியை சேர்ந்த மீனவர்கள் மற்றும் அவரது குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர். மேலும் 5 பேரையும் மீட்க மத்திய-மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்தனர்.

    புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் சிறை பிடிக்கப்படும் சம்பவங்கள் அடிக்கடி நடைபெற்று வருகிறது. ஏற்கனவே கடலில் மீன்வரத்து குறைந்ததால் கோட்டைப்பட்டினம் மற்றும் ஜெகதாப்பட்டினம் மீனவர்கள் கடந்த வாரம் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. மீன்வரத்து குறைவு காரணமாக இழப்பை கருத்தில் கொண்டு நேற்று 200 விசைப்படகுகளுக்கு பதில் 76 விசைப்படகுகளில் மட்டுமே மீனவர்கள் மீன்பிடிக்க சென்றனர். இந்நிலையில் இன்று அதிகாலை 5 பேரை இலங்கை கடற்படை சிறை பிடித்தது மீனவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    இதற்கிடையே இலங்கை பிரதமர் ரனில் விக்ரமசிங்கே 3 நாள் அரசு பயணமாக இன்று இந்தியா வருகிறார். அவர் பிரதமர் மோடி மற்றும் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜியை சந்தித்து பேசுகிறார்.

    அவர் வரும் சமயத்தில் மீனவர்கள் சிறைப்பிடிக்கப்பட்டது அதிருப்தியை ஏற்படுத்தியது. எனவே சிறை பிடிக்கப்பட்டுள்ள மீனவர்களையும், விசைப்படகையும் விடுவிக்க வேண்டும் என்று புதுக்கோட்டை மாவட்ட விசைப்படகு மீனவர் சங்க தலைவர் ராமதேவன் கோரிக்கை விடுத்தார்.

    இந்தநிலையில் இலங்கை பிரதமரின் இந்தியா வருகையையொட்டி நல்லெண்ண அடிப்படையில் சிறைப்பிடிக்கப்பட்ட ஜெகதாப்பட்டினம் மீனவர்கள் 5 பேரையும், உடனடியாக விடுவிக்க இலங்கை அரசு உத்தரவிட்டது.

    இதேபோல் ஏற்கனவே சிறைப்பிடிக்கப்பட்டு இலங்கை சிறையில் அடைக்கப்பட்டிருந்த தமிழக மீனவர்கள் 7 பேரையும் விடுதலை செய்ய இலங்கை அரசு உத்தரவிட்டது.

    இதையடுத்து மீனவர்கள் 12 பேரும் விடுதலை செய்யப்பட்டு 2 விசைப்படகுகளுடன் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதனை அறிந்த புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
    கூட்டுறவு சங்கங்களில் தலைவர், துணைத்தலைவர் மற்றும் இயக்குநர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளில் இருப்பவர்கள் உள்ளாட்சி தேர்தலில் வேட்பாளர்களாக போட்டியிடுவதற்கு எவ்வித தடையும் கிடையாது. என கலெக்டர் தெரிவித்துள்ளார்.

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் உள்ளாட்சி சாதாரண தேர்தல்கள் 2016 முன்னிட்டு தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கான தினசரி ஆய்வுக்கூட்டம் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட கலெக்டர் கணேஷ் தலைமையில் நடைபெற்றது.

    தமிழகத்தில் உள்ள உள்ளாட்சி அமைப்புகளுக் கான தேர்தல் தேதியினை தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதன்படி மாவட்டத்தில் உள்ளாட்சி சாதாரண தேர்தல்கள் 17.10.2016 மற்றும் 19.10.2016 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெறவுள்ளது. அதனடிப்படையில் மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தலை சிறப்பாக நடத்தும் வகையில் மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதில் தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கான தினசரி ஆய்வுக்கூட்டம் துவக்கி வைக்கப்பட்டுள்ளது.

    இக்கூட்டத்தில் கட்சி சார்புடைய தேர்தல்களுக்கு வாக்குச்சீட்டுகள் அச்சிடுதல் மற்றும் அச்சகங்கள் முடிவு செய்தல், வேட்பு மனு பாதுகாப்பு, முறைகேடுகளை தவிர்த்தல், உரிமம் பெற்ற ஆயுதங்களை திரும்ப பெறுதல், வாக்கு எண்ணும் மையங்களின் கருத்துரு அனுப்புதல், பயிற்சி வகுப்புகள் நடத்துதல், வாக்காளர் சீட்டு விநியோகம், தடுப்பு வேலிகள் அமைத்தல், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் பெறுதல், வாக்காளர் விழிப்புணர்வை ஏற்படுத்துதல் மற்றும் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தால் புதிதாக வெளியிடப்பட்டுள்ள சட்டப்பூர்வ ஆணைகள் குறித்து விவாதித்தல் மற்றும் இதர தேர்தல் தொடர்பான பல்வேறு தகவல்கள் குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

    இந்த ஆலோசனைக் கூட்டத்தில் அனைத்து ஊராட்சி ஒன்றிய பகுதிகளிலும் வாக்காளர்கள் அனைவரும் 100 சதவீதம் வாக்களிக்கும் வகையில் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தால் பரிந்துரை செய்யப்பட்ட தேர்தல் வாசகங்கள் குறித்த சுவரொட்டிகள் மற்றும் பதாகைகள் வைக்கவும், தேர்தல் நடத்தும் அலுவலர்கள் தங்களது பகுதிகளுக்கு தேவையான வாக்குச்சீட்டுகளை ஒதுக்கீடு செய்யப்பட்ட அச்சகத்திலிருந்து அச்சடித்து பெற்றுக் கொள்ளவும், தினசரி பெறப்படும் வேட்பு மனுக்களை அலுவலகங் களில் பாதுகாப்பாக வைக்கவும், தேர்தலை அமைதியாக நடத்தும் வகையில் அனைத்து உரிமம் பெற்ற ஆயுதங்களை ஒப்படைக்க நடவடிக்கை மேற்கொள்ளவும், உள்ளாட்சி அமைப்புகளின் பதவியிடங்களை பொது ஏலம் மூலம் முடிவு செய்வதை கண்காணிக்கவும், வாக்கு எண்ணும் மையம் தொடர்பான கருத்துக்களை உடனடியாக அனுப்பி வைக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    மேலும் அனைத்து வாக்குப்பதிவு அலுவலர்களுக்கும் பயிற்சி வகுப்புகள் நடத்தவும், அதன் தகவல்களை உடனடியாக தெரிவிக்கவும், வாக்காளர் சீட்டுகளை தங்களது அலுவலகங்களில் பாதுகாப்பாக வைத்திருப் பதுடன் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் நிர்ணயம் செய்யும் தேதிகளில் வாக்காளர்களுக்கு வாக்குச்சாவடி அலுவலர் மூலம் விநியோகம் செய்யவும், அனைத்து வாக்கு எண்ணும் மையங்களிலும் உரிய பாதுகாப்பு ஏற்பாடு வசதிகளை செய்வதுடன் அலுவலர்கள் வாக்குச்சாவடிகளை ஆய்வு செய்யவும், நகர்ப்பகுதிகளில் வாக்குப்பதிவிற்கு தேவையான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை பாதுகாப்பாக வைக்கவும் சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

    மேலும் மாவட்டத்தில் கூட்டுறவு சங்கங்களில் தலைவர், துணைத்தலைவர் மற்றும் இயக்குநர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளில் இருப்பவர்கள் உள்ளாட்சி தேர்தலில் வேட்பாளர்களாக போட்டியிடுவதற்கு எவ்வித தடையும் கிடையாது.

    இவ்வாறு கலெக்டர் தெரிவித்தார்.

    கூட்டத்தில் திட்ட இயக்குநர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை சந்தோஷ்குமார், கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் மிருணாளினி, வேளாண்மை இணை இயக்குநர் அண்ணாமலை, உதவி இயக்குநர் ஊராட்சிகள் (பொ) முருகண்னன், தேர்தல் நடத்தும் அலுவலர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    ×