என் மலர்tooltip icon

    செய்திகள்

    புதுக்கோட்டையில் வாடிக்கையாளர்கள் பெயரில் போலி நகைகளை அடகுவைத்து ரூ.65 லட்சம் மோசடி செய்த வங்கி அதிகாரிகள்
    X

    புதுக்கோட்டையில் வாடிக்கையாளர்கள் பெயரில் போலி நகைகளை அடகுவைத்து ரூ.65 லட்சம் மோசடி செய்த வங்கி அதிகாரிகள்

    புதுக்கோட்டையில் வங்கி அதிகாரிகளே வாடிக்கையாளர்களின் பெயரில் போலி நகைகளை அடமானம் வைத்து ரூ.65 லட்சம் மோசடி செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை நகரில் ராஜகோபாலபுரம் பகுதியில் ஸ்டேட் பேங்க் ஆப் திருவாங்கூர் வங்கி செயல்பட்டு வருகிறது. இந்த வங்கியில் சுற்று வட்டாரத்தை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் தங்களது நகைகளை அடகு வைத்து கடன் பெறுவது வழக்கம்.

    மேலும் விவசாய கடன் இங்கு அதிக அளவில் வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இந்த வங்கியின் வாடிக்கையாளர்கள் 31 பேருக்கு வங்கியிலிருந்து ஒரு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அதில் அவர்கள் போலியான நகைகளை அடமானம் வைத்து கடன் வாங்கியதாகவும், கடனை உடனே கட்ட வேண்டும். தவறும் பட்சத்தில் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என கூறப்பட்டிருந்தது.

    இதனால் அதிர்ச்சியடைந்த வாடிக்கையாளர்கள் 31 பேரும் புதுக்கோட்டை ராஜகோபாலபுரம் ஸ்டேட் பேங்க் ஆப் திருவாங்கூர் வங்கிக்கு திரண்டு வந்தனர். அங்கு அதிகாரிகளிடம் நாங்கள் எவ்வித கடனும் பெறவில்லை. பின்பு ஏன் இவ்வாறு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது என கேட்டுள்ளனர்.

    இது குறித்து அதிகாரிகள் முறையான தகவல் தர மறுத்துள்ளனர். இதனால் சந்தேகம் அடைந்த வாடிக்கையாளர்கள் இந்த சம்பவம் குறித்து விசாரித்தனர். அதில் வங்கி மேலாளர் மற்றும் நகை மதிப்பீட்டாளர் சிவக்குமார் ஆகியோர் இணைந்து வாடிக்கையாளரின் பெயரில் போலி நகைகளை அடமானம் வைத்து ரூ.65 லட்சத்திற்கு மேல் மோசடி செய்தது தெரிய வந்தது.

    இந்த மோசடி குறித்து அறிந்த வாடிக்கையாளர்கள் உடனே வங்கியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் போராட்டம் நடத்தியவர்களிடம் இது குறித்து புகார் அளிக்கும் பட்சத்தில் விசாரணை நடத்தி மோசடி செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினர்.

    அதனை தொடர்ந்து வங்கி வாடிக்கையாளர்கள் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவகத்தில் புகார் செய்தனர். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வங்கி அதிகாரிகளே வாடிக்கையாளர்களின் பெயரில் பல லட்சம் மோசடி செய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    Next Story
    ×