search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கூட்டுறவு சங்க பதவியில் இருப்பவர்கள் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட தடை கிடையாது: கலெக்டர் தகவல்
    X

    கூட்டுறவு சங்க பதவியில் இருப்பவர்கள் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட தடை கிடையாது: கலெக்டர் தகவல்

    கூட்டுறவு சங்கங்களில் தலைவர், துணைத்தலைவர் மற்றும் இயக்குநர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளில் இருப்பவர்கள் உள்ளாட்சி தேர்தலில் வேட்பாளர்களாக போட்டியிடுவதற்கு எவ்வித தடையும் கிடையாது. என கலெக்டர் தெரிவித்துள்ளார்.

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் உள்ளாட்சி சாதாரண தேர்தல்கள் 2016 முன்னிட்டு தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கான தினசரி ஆய்வுக்கூட்டம் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட கலெக்டர் கணேஷ் தலைமையில் நடைபெற்றது.

    தமிழகத்தில் உள்ள உள்ளாட்சி அமைப்புகளுக் கான தேர்தல் தேதியினை தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதன்படி மாவட்டத்தில் உள்ளாட்சி சாதாரண தேர்தல்கள் 17.10.2016 மற்றும் 19.10.2016 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெறவுள்ளது. அதனடிப்படையில் மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தலை சிறப்பாக நடத்தும் வகையில் மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதில் தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கான தினசரி ஆய்வுக்கூட்டம் துவக்கி வைக்கப்பட்டுள்ளது.

    இக்கூட்டத்தில் கட்சி சார்புடைய தேர்தல்களுக்கு வாக்குச்சீட்டுகள் அச்சிடுதல் மற்றும் அச்சகங்கள் முடிவு செய்தல், வேட்பு மனு பாதுகாப்பு, முறைகேடுகளை தவிர்த்தல், உரிமம் பெற்ற ஆயுதங்களை திரும்ப பெறுதல், வாக்கு எண்ணும் மையங்களின் கருத்துரு அனுப்புதல், பயிற்சி வகுப்புகள் நடத்துதல், வாக்காளர் சீட்டு விநியோகம், தடுப்பு வேலிகள் அமைத்தல், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் பெறுதல், வாக்காளர் விழிப்புணர்வை ஏற்படுத்துதல் மற்றும் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தால் புதிதாக வெளியிடப்பட்டுள்ள சட்டப்பூர்வ ஆணைகள் குறித்து விவாதித்தல் மற்றும் இதர தேர்தல் தொடர்பான பல்வேறு தகவல்கள் குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

    இந்த ஆலோசனைக் கூட்டத்தில் அனைத்து ஊராட்சி ஒன்றிய பகுதிகளிலும் வாக்காளர்கள் அனைவரும் 100 சதவீதம் வாக்களிக்கும் வகையில் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தால் பரிந்துரை செய்யப்பட்ட தேர்தல் வாசகங்கள் குறித்த சுவரொட்டிகள் மற்றும் பதாகைகள் வைக்கவும், தேர்தல் நடத்தும் அலுவலர்கள் தங்களது பகுதிகளுக்கு தேவையான வாக்குச்சீட்டுகளை ஒதுக்கீடு செய்யப்பட்ட அச்சகத்திலிருந்து அச்சடித்து பெற்றுக் கொள்ளவும், தினசரி பெறப்படும் வேட்பு மனுக்களை அலுவலகங் களில் பாதுகாப்பாக வைக்கவும், தேர்தலை அமைதியாக நடத்தும் வகையில் அனைத்து உரிமம் பெற்ற ஆயுதங்களை ஒப்படைக்க நடவடிக்கை மேற்கொள்ளவும், உள்ளாட்சி அமைப்புகளின் பதவியிடங்களை பொது ஏலம் மூலம் முடிவு செய்வதை கண்காணிக்கவும், வாக்கு எண்ணும் மையம் தொடர்பான கருத்துக்களை உடனடியாக அனுப்பி வைக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    மேலும் அனைத்து வாக்குப்பதிவு அலுவலர்களுக்கும் பயிற்சி வகுப்புகள் நடத்தவும், அதன் தகவல்களை உடனடியாக தெரிவிக்கவும், வாக்காளர் சீட்டுகளை தங்களது அலுவலகங்களில் பாதுகாப்பாக வைத்திருப் பதுடன் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் நிர்ணயம் செய்யும் தேதிகளில் வாக்காளர்களுக்கு வாக்குச்சாவடி அலுவலர் மூலம் விநியோகம் செய்யவும், அனைத்து வாக்கு எண்ணும் மையங்களிலும் உரிய பாதுகாப்பு ஏற்பாடு வசதிகளை செய்வதுடன் அலுவலர்கள் வாக்குச்சாவடிகளை ஆய்வு செய்யவும், நகர்ப்பகுதிகளில் வாக்குப்பதிவிற்கு தேவையான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை பாதுகாப்பாக வைக்கவும் சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

    மேலும் மாவட்டத்தில் கூட்டுறவு சங்கங்களில் தலைவர், துணைத்தலைவர் மற்றும் இயக்குநர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளில் இருப்பவர்கள் உள்ளாட்சி தேர்தலில் வேட்பாளர்களாக போட்டியிடுவதற்கு எவ்வித தடையும் கிடையாது.

    இவ்வாறு கலெக்டர் தெரிவித்தார்.

    கூட்டத்தில் திட்ட இயக்குநர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை சந்தோஷ்குமார், கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் மிருணாளினி, வேளாண்மை இணை இயக்குநர் அண்ணாமலை, உதவி இயக்குநர் ஊராட்சிகள் (பொ) முருகண்னன், தேர்தல் நடத்தும் அலுவலர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×