என் மலர்tooltip icon

    புதுக்கோட்டை

    ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்துவதில் தி.மு.க.வுக்கு தொடர்பு இல்லை என்று நெடுவாசல் போராட்டத்திற்கு நேரில் சென்று ஆதரவு அளித்த மு.க.ஸ்டாலின் கூறினார்.
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் கிராமத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து தொடர் போராட்டம் நடந்து வருகிறது.



    முதலில் கிராம மக்கள் மட்டுமே பங்கேற்ற இந்த போராட்டத்திற்கு நாளுக்கு நாள் ஆதரவு அதிகரித்தது. மாணவர்கள், இளைஞர்கள், வணிகர்களும் ஆதரவு தெரிவித்தனர். அதே போல் அரசியல் கட்சி தலைவர்களும் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து குரல் கொடுத்ததோடு நெடுவாசலில் நடைபெற்ற போராட்டத்திலும் பங்கேற்றனர்.

    இந்த போராட்டத்தில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, மக்கள் நல கூட்டியக்க தலைவர்கள் திருமாவளவன், ஜி.ராமகிருஷ்ணன், முத்தரசன், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் பல்வேறு அரசியல் கட்சியினர் கலந்துகொண்டு பேசினர்.

    தி.மு.க.வும் இந்த போராட்டத்திற்கு ஏற்கனவே ஆதரவு தெரிவித்திருந்தது. போராட்டத்தில் நேரில் கலந்து கொண்டு ஆதரவு தெரிவிப்பதற்காக தி.மு.க. செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று நெடுவாசல் சென்றார். கிராம எல்லையில் அவருக்கு கிராம மக்கள் மற்றும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இளைஞர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

    கிராம எல்லையில் இருந்து போராட்டம் நடைபெற்று வரும் நாடியம்மன் கோவில் வரை நடந்தே சென்றார். பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சென்ற அவரை போராட்டக்குழுவினர் அழைத்து சென்றனர்.

    பின்னர் தரையில் மக்களோடு மக்களாக அமர்ந்து ஆதரவு தெரிவித்தார். போராட்ட நிலவரம் குறித்து அங்குள்ள கிராம மக்களிடம் கேட்டறிந்தார். அப்போது திடீரென மழை பெய்ய தொடங்கியது.

    கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் மு.க. ஸ்டாலின் அங்கு திரண்டிருந்த மக்களிடம் அவர் பேசியதாவது:-

    ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிடக்கோரி மத்திய அரசு நடத்தும் இந்த போராட்டம் ஜல்லிக்கட்டு போராட்டம் போல் கட்டுப்பாட்டுடன், எழுச்சியுடன் நடைபெற்று வருகிறது. இந்த போராட்டம் ஜல்லிக்கட்டு போராட்டம் போல் வெற்றிபெறும்.



    நாம் அனைவரும் தமிழர்கள் என்ற உணர்வை வெளியுலகிற்கு எடுத்துக்காட்டுவதாக இந்த போராட் டம் அமைந்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. பொதுமக்கள், விவசாயிகளை பாதிக்கும் எந்த திட்டத்திற்கும் தி.மு.க. ஆதரவு அளிக்காது.

    விவசாயிகளுக்காக பல்வேறு சலுகைகள், திட்டங்களை அறிவித்தது கலைஞர் ஆட்சியில்தான். இலவச மின்சார திட்டத்தை கொண்டு வந்தவர் தி.மு.க. தலைவர் கலைஞர்தான். அதே போன்று விவசாயிகளின் ரூ.7 ஆயிரம் கடனை தள்ளுபடி செய்ததும் தி.மு.க. அரசு தான்.

    எனவே ஒருபோதும் விவசாயிகளை தி.மு.க. கைவிடாது. ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிட வேண்டும் என்று கோரி டெல்லி சென்று பெட்ரோலியத்துறை அமைச்சரிடம் மனு கொடுக்க இருந்தேன். ஆனால் அவரை சந்திக்க முடியவில்லை. தொடர்ந்து தி.மு.க. எம்.பி.க்கள் திருச்சி சிவா, கனிமொழி எம்.பி. ஆகியோர் மத்திய பெட்ரோலிய துறை அமைச்சரை சந்தித்து மனு கொடுத்தனர்.

    ஆனால் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி டெல்லி சென்று பிரதமரை சந்தித்து 23 கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளித்துள்ளார். அந்த மனுவில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிடுவது குறித்து குறிப்பிடவில்லை. ஆனால் பத்திரிகையாளர்களை சந்திக்கும் போது ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு அனுமதி தர மாட்டோம் என்று கூறுகிறார்.

    தொடர்ந்து இன்று 16-வது நாளாக விவசாயிகள், பொதுமக்கள் போராட்டம் நடத்துகிறார்கள். மத்திய, மாநில அரசுகள் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று திட்டத்தை கைவிடவேண்டும். தமிழக அரசு இதுதொடர்பாக மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும். அதுவரை பொதுமக்கள் நடத்தும் இந்த போராட்டம் தொடரவேண்டும். மக்கள் போராட்டத்திற்கு தி.மு.க. என்றும் துணை நிற்கும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    ஹைட்ரோ கார்பன் திட்ட போராட்டத்தை அரசியலாக்க தி.மு.க. விரும்பவில்லை. அதன் மூலம் ஆதாயம் தேடவேண்டிய நிலையும் தி.மு.க.வுக்கு இல்லை.

    தமிழகத்தில் மீத்தேன் திட்டம் தொடர்பாக ஆய்வு நடத்துவற்காகத்தான் அப்போதைய தி.மு.க. ஆட்சியில் நான் கையெழுத்திட்டேன். திட்டம் கொண்டு வரப்படுவதற்காக அல்ல. அதேபோல் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்துவதில் தி.மு.க.வுக்கு தொடர்பு இல்லை.

    இந்த பிரச்சினை தொடர்பாக சிறப்பு சட்டமன்றத்தை கூட்டி தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். தமிழக முதல்வர் உறுதி அளித்தது போல் மத்திய அரசும் திட்டத்தை கைவிடுவதாக உறுதியளிக்க வேண்டும்.

    இந்த ஹைட்ரோ கார்பன் திட்டத்தால் ஒட்டுமொத்த கிராமமும் பாதிக்கும். ஆனால் தற்போதைய தமிழக அரசுக்கு அதுபற்றி சிந்திக்க நேரமில்லை. பெங்களூர் சிறைக்கு சென்று சசிகலாவை சந்திப்பதற்கு மட்டுமே நேரம் இருக்கிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அதேபோல் பா.ம.க.வும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து இன்று மாநில இளைஞரணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் நாடியம்மன் கோவில் திடலில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டார். அப்போது கிராம மக்களுடன் சேர்ந்து ஹைட்ரோ கார்பன் திட்டத்தை மத்திய அரசு உடனே ரத்து செய்யவேண்டும் என்பதை வலியுறுத்தி பேசினார்.



    இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் டி.ராஜா, மனித நேய மக்கள் கட்சி சார்பில் ஜவாஹிருல்லா ஆகியோரும் போராட்டத்தில் கலந்துகொண்டு ஆதரவு அளித்தனர்.

    நெடுவாசல் கிராம மக்களிடமும் போராட்டக்குழுவினர் நடத்திய பேச்சுவார்த்தையில், ‘ஹைட்ரோ கார்பன் திட்டம் ரத்தாகும் வரை போராட்டத்தை விலக்கிக்கொள்ள மாட்டோம்’ என்று அவர்கள் திட்டவட்டமாக தெரிவித்தனர்.
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் கிராமத்தில் மத்திய அரசு அறிவித்துள்ள ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிரான போராட்டம் இன்று 16-வது நாளை எட்டியுள்ளது.



    பேராட்டத்தில் 100 கிராமங்களை சேர்ந்த மக்களின் பிரதிநிதிகள் பங்கேற்று முன்னெடுத்து செல்கிறார்கள். அவர்களுக்கு ஆதரவாக இளைஞர்கள், மாணவர்கள், வர்த்தகர்கள், மாற்றுத்திறனாளிகள், முதியோர்கள், திரைத்துறையை சேர்ந்தவர்கள் என அனைவரும் ஆதரவளித்துள்ளனர்.

    ஹைட்ரோ கார்பன் திட்டம் தொடர்பாக மத்திய அரசு அளித்த விளக்கத்தை ஏற்க மறுத்த போராட்டக்குழுவை சேர்ந்தவர்கள் ஒருங்கிணைப்பாளர் வேலு தலைமையில் நேற்று முன்தினம் சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனி சாமியை சந்தித்து ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிடக் கோரினர்.

    திட்டத்திற்கு தமிழக அரசு அனுமதி வழங்காது என்று அறிவித்த போதிலும் மத்திய அரசு எழுத்துப்பூர்வமாகவும், அதிகாரப்பூர்வமாகவும் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்வதாக அறிவித்தால் மட்டுமே போராட்டத்தை கைவிடுவோம் என்று திட்டவட்டமாக தெரிவித்தனர்.

    போராட்டம் முடிவுக்கு வரும் என்றிருந்த நிலையில் மீண்டும் தொடர்ந்ததால் புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் கணேஷ் ஆலங்குடியில் உள்ள வட்டாட்சியர் அலுவலகத்தில் அவசர ஆலோசனை நடத்தினார். இதில் போலீஸ் சூப்பிரண்டு லோகநாதன் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

    முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பிற மாவட்டங்களில் இருந்து போலீசாரை வரவழைக்க கலெக்டர் கணேஷ் உத்தர விட்டார். நெடுவாசல் நிலவரம் குறித்து சப்-கலெக்டர் அம்ரித் மூலம் ஆய்வு செய்து அறிக்கை அளிக்குமாறும் அவர் உத்தரவிட்டார்.

    பின்னர் புள்ளான்விடுதி அரசு உயர்நிலைப்பள்ளியில் நடந்த மற்றொரு பேச்சு வார்த்தை கூட்டத்தில் போராட்டக் குழுவினர் மற்றும் விவசாயிகளிடம் தமிழக அரசின் நிலைப்பாடு குறித்து கலெக்டர் கணேஷ் விளக்கி கூறினார். போராட்டத்தை கைவிடுமாறும் அவர் கேட்டுக்கொண்டார்.

    இதையடுத்து போராட்டக் குழுவினர் தஞ்சை மாவட்டம் பேராவூரணியில் உள்ள தனியார் விடுதியில் ஆலோசனை நடத்தினர்.

    கூட்டத்திற்கு பின்னர் நிருபர்களிடம் கூறிய போராட்ட ஒருங்கிணைப்பாளர் வேலு, ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்வது தொடர்பாக புதுக்கோட்டை மாவட்ட கலெக்டரை இன்று சந்தித்து மனு கொடுப்பது, பொதுமக்களை திரட்டி பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடத்த கலெக்டரிடம் அனுமதி கேட்பது என்றும், அதன் அடிப்படையில் போராட்டத்தை கைவிடுவதா, தொடர்வதா என்று முடிவு செய்யப்படும் என்று தெரிவித்தார்.



    இதேபோல் நெடுவாசல் மற்றும் திட்டம் செயல்படுத்தப்படும் கிராம மக்களிடமும் போராட்டக்குழுவினர் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் திட்டம் ரத்தாகும் வரை போராட்டத்தை விலக்கிக்கொள்ள மாட்டோம் என அவர்களிடம் திட்டவட்டமாக தெரிவித்துவிட்டனர். இதனால் இந்த பேச்சு வார்த்தையும் தோல்வி அடைந்தது.

    போராட்டக்குழுவை சேர்ந்தவர்கள் ஒரு பிரிவாகவும், கிராம மக்கள் மற்றொரு பிரிவாகவும் செயல்படுவதாகவும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.



    இதேபோல் நெடுவாசலில் இருந்து சுமார் 8 கி.மீ. தொலைவில் உள்ள கோட்டைக்காடு, நல்லாண்டார் கோவில் ஆகிய கிராமங்களிலும் பொதுமக்கள் தங்கள் போராட்டத்தை தொடங்கி தீவிரப்படுத்தி உள்ளனர். இதில் திருமயம் தொகுதி எம்.எல்.ஏ. ரகுபதி, முன்னாள் எம்.எல்.ஏ. ராஜசேகரன், முன்னாள் அமைச்சர் சந்திரசேகரன் மற்றும் ஏராளமான கிராமங்களை சேர்ந்த பொது மக்களும் கலந்து கொண்டனர்.

    அப்போது அவர்கள் கூறுகையில், நெடுவாசலை விட கோட்டைக்காடு, நல்லாண்டார்கொல்லை கிராமங்களில் தான் சுமார் 11 ஆயிரம் அடி ஆழத்தில் ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தினர் ஆழ்துளை கிணறு அமைத்துள்ளனர். இதனால் எங்களுக்குத்தான் பாதிப்பு அதிகம். எனவே நெடுவாசல் கிராம மக்கள் போராட்டத்தை கைவிட்டாலும் மத்திய அரசு ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிடும் வரை போராட்டம் தொடரும் என்று தெரிவித்தனர்.

    நெடுவாசல் மற்றும் போராட்டம் நடந்து வரும் நல்லாண்டார்கொல்லை, கோட்டைக்காடு, கருக்காக்குறிச்சி ஆகிய கிராமங்களில் அதிக அளவிலான போலீசார் நேற்று மாலை முதல் குவிக்கப்பட்டுள்ளனர்.

    புதுக்கோட்டை மட்டுமின்றி வெளிமாவட்ட போலீசார் அதிக அளவில் வந்துள்ளதால் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர எடுக்கப்பட்ட முயற்சியாக பொதுமக்கள் தெரிவித்தனர்.
    நெடுவாசல் போராட்டத்திற்கு மு.க.ஸ்டாலின் ஆதரவு தெரிவிக்கும் வகையில் நேரில் கலந்து கொண்டார். இதை தொடர்ந்து புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த எம்.எல்.ஏ.க்களும் நேரில் சென்று ஆதரவு தெரிவித்தனர்.
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் கிராமத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து தொடர் போராட்டம் நடந்து வருகிறது.

    இந்த போராட்டத்தில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, மக்கள் நல கூட்டியக்க தலைவர்கள் திருமாவளவன், ஜி.ராம கிருஷ்ணன், முத்தரசன், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் பல்வேறு அரசியல் கட்சியினர் கலந்துகொண்டு ஆதரவு தெரிவித்தனர்.

    தி.மு.க.வும் இந்த போராட்டத்திற்கு ஏற்கனவே ஆதரவு தெரிவித்திருந்தது. அக்கட்சி சார்பில் புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் ரகுபதி, மெய்யநாதன், பெரியண்ணன் அரசு ஆகியோர் நெடுவாசலுக்கு சென்று ஆதரவு தெரிவித்தனர்.

    இந்த நிலையில் நெடுவாசல் போராட்டத்தில் நேரில் கலந்துகொண்டு ஆதரவு தெரிவிப்பதற்காக தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று திடீர் பயணமாக திருச்சி வந்தார். விமான நிலையத்தில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    நீட் தேர்வுக்கு தமிழக மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஆனால் நீட் தேர்வுக்கு தமிழக மாணவர்கள் தயாராக உள்ளதாக பள்ளி கல்வித்துறை அமைச்சர் கூறியுள்ளார்.

    தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பிரதமரை சந்தித்து 23 கோரிக்கைகள் அடங்கிய மனுவை கொடுத்தார். அதில் நீட் தேர்வு பற்றிய கோரிக்கை இல்லை. ஆனால் நீட் தேர்வு குறித்து கோரிக்கை வைத்ததாக தவறான தகவல் பரப்பி வருகின்றனர்.

    ஹைட்ரோ கார்பன் திட்டம் தொடர்பாக மத்திய-மாநில அரசுகளின் உறுதிமொழியை பொதுமக்கள் ஏற்கவில்லை. தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நான் இன்று போராட்டத்தில் பங்கேற்க செல்கிறேன். நெடுவாசல் மக்களுக்கு தமிழக அரசு நம்பிக்கை இல்லை.


    உள்ளாட்சி தேர்தல் கூட்டணி பற்றி தலைமை முடிவு செய்யும்.அதற்கான நாட்கள் இன்னும் உள்ளது. பதவியை தக்க வைக்க முயலும் அமைச்சர்களுக்கு மக்களை பற்றிய அக்கறையில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதையடுத்து அவர் காரில் நெடுவாசல் சென்று போராட்டத்தில் கலந்து கொண்டு ஆதரவு தெரிவித்தார்.

    நெடுவாசல் போராட்டத்தில் தினமும் அரசியல் கட்சி தலைவர்கள், பல்வேறு அமைப்பினர் பங்கேற்று ஆதரவு தெரிவித்து வரும் நிலையில், மு.க.ஸ்டாலின் எப்போது பங்கேற்பார் என்று தெரியாமல் இருந்து வந்தது. இந்நிலையில் இன்று அவர் திடீரென வந்து போராட்டத்தில் பங்கேற்றது பரபரப்பை ஏற்படுத்தியது. 
    நெடுவாசல் போராட்ட குழுவினர் இன்று கலெக்டரை சந்திக்கிறார்கள். அதன் பின்னரே போராட்டம் தொடருமா? வாபஸ் ஆகுமா? என்பது தெரியவரும்.
    கீரமங்கலம்:

    புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் பகுதியில் உள்ள விவசாய நிலத்தில் இயற்கை எரிவாயு எடுக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்ததை தொடர்ந்து அந்த பகுதியில் கடந்த 16-ந்தேதி முதல் போராட் டம் நடந்து வருகிறது.

    இந்த நிலையில் நெடுவாசல் போராட்ட குழு பிரதிநிதிகள் சென்னையில் தமிழக முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து முறையிட்டனர். அப்போது தமிழகத்தில் இயற்கை எரிவாயு எடுக்க அனுமதிக்கமாட்டோம் என்று முதல்-அமைச்சர் உறுதி அளித்தார்.


    இந்த நிலையில் முதல்- அமைச்சரை சந்தித்த நெடுவாசல் போராட்ட குழு பிரதிநிதிகள் தஞ்சை மாவட்டம் பேராவூரணியில் நேற்று கிராம தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினார்கள். அப்போது இன்று(வெள்ளிக்கிழமை) புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் கணேசை சந்தித்து நெடுவாசல் போராட்டம் குறித்து பேசுவது என்று முடிவு செய்தனர்.

    அதன்படி, இன்று காலை 9 மணிக்கு கலெக்டரை சந்திக்கும் போராட்டகுழு பிரதிநிதிகள் அதன் பின்னர் நெடுவாசல் செல்கிறார்கள். அங்கு போராட்ட களத்தில் தங்களது முடிவை அறிவிக்க உள்ளனர். இன்று காலை 11 மணி அல்லது 12 மணி அளவில் அவர்கள் தங்களது முடிவை அறிவிக்க இருப்பதாக தெரிகிறது. போராட்டம் தொடருமா? வாபஸ் ஆகுமா? என அப்போது தெரியவரும்.


    மேலும் இந்த போராட்டத்தை முடிக்கும் போது மிகப்பெரிய அளவில் பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிட்டு இருப்பதாகவும் கூறப் படுகிறது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கும் இன்று கலெக்டரிடம் அனுமதி கேட்க இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

    எது எப்படியோ? நெடுவாசல் போராட்ட களத்துக்கு இன்று விடை கிடைக்கும் என்ற தகவல் வேகமாக பரவி வருகிறது. 
    புதுக்கோட்டை மாவட்டத்தில் ஹைட்ரோ கார்பன் வாயு எடுக்கும் திட்டத்தை மத்திய அரசு முழுமையாக கைவிடும் வரை போராட்டம் தொடரும் என போராட்டக் குழுவினரில் ஒரு பகுதியினர் தெரிவித்துள்ளனர்.
    சென்னை:

    தமிழகத்தில் புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் உள்ளிட்ட சில பகுதிகளில் ஹைட்ரோ கார்பன் எரிவாயு எடுப்பதற்காக மத்திய அமைச்சரவை சமீபத்தில் ஒப்புதல் அளித்தது. இதையடுத்து அப்பகுதிகளில் பெருமளவில் மக்கள் போராட்டம் வெடித்தது. நெடுவாசலில் மக்கள் தொடர்ந்து 15-ம் நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும், தமிழகம் முழுவதும் நெடுவாசல் மக்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகின்றனர்.

    இதையடுத்து, போராட்டக்குழுவினரின் பிரதிநிதிகள் நேற்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து பேசினர். அப்போது மக்களின் கருத்துக்களை அரசு பரிசீலிக்க வேண்டும் எனவும், ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்தை முழுமையாக கைவிடக்கோரி மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்குமாறு முதல்வரை போராட்டக் குழுவினர் வலியுறுத்தினர். இதையடுத்து, ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு தமிழக அரசின் அனுமதி இல்லையெனவும், மக்கள் போராட்டத்தை கைவிட வேண்டும் என முதல்வர் கேட்டுக் கொண்டார்.



    இந்நிலையில், போராட்டக் குழுவினருடன் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் இன்று பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, அனைத்துப் பகுதிகளிலும் மத்திய அரசின் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டம் முழுமையாக கைவிடும் வரை போராட்டம் தொடரும் என போராட்டக் குழுவில் ஒரு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

    போராட்டக் குழுவினரின் இம்முடிவை அடுத்து தமிழக அரசு எந்த மாதிரியான நடவடிக்கை எடுக்கும் என அனைவரின் எதிர்பார்ப்புகளும் அமைந்துள்ளது.
    மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்ததாக அறிவிக்க வேண்டும் என்றும், அதுவரை தங்கள் போராட்டம் தொடரும் என்றும் நெடுவாசல் கிராம மக்கள் திட்டவட்டமாக தெரிவித்தனர்.
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் கிராமத்தில் ஹைட்ரோ கார்பன் எனும் இயற்கை எரிவாயு எடுக்கும் திட்டத்தை மத்திய அரசு கடந்த மாதம் 15-ந்தேதி அறிவித்தது.



    இந்த திட்டத்தை செயல்படுத்தினால் பல ஏக்கர் விவசாய நிலங்கள் பாழாகும், நிலத்தடி நீர்மட்டம் முற்றிலும் பாதிக்கும், நில நடுக்க அபாயம், சரும, புற்று நோய் அபாயங்கள் உள்ளதாக எழுந்த தகவல் நெடுவாசல் மற்றும் இந்த திட்டம் சார்ந்த கிராமங்களான வாணக்கன் காடு, கருக்காக்குறிச்சி, கோட்டைக்காடு உள்ளிட்ட கிராம மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    இதையடுத்து திட்டம் அறிவிக்கப்பட்ட மறுநாளில் (16-ந்தேதி) இருந்து நெடுவாசல் மற்றும் சுற்றுப்புற கிராம மக்கள் போராட்டத்தில் குதித்தனர். அவர்களுடன் இளைஞர்கள் மற்றும் மாணவர்களும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    இதன் எதிரொலியாக தமிழகம் முழுவதும் போராட்டத்தின் தாக்கம் அதிகமானது. ஆங்காங்கே கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக குரல் கொடுத்தனர்.

    கடந்த 18-ந்தேதி முதல் போராட்டம் உச்சக்கட்டத்தை எட்டியது. நெடுவாசலில் திரண்ட சுமார் 100-க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த மக்கள் பிரதிநிதிகள் ஒன்றாக கூடி ஆலோசனை நடத்தினர்.

    இதையடுத்து நேற்று புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் முழு கடையடைப்பு போராட்டம் நடந்தது.

    இந்த நிலையில் போராட்டக்குழுவை சேர்ந்தவர்கள் வேலு என்பவரது தலைமையில் நேற்று சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து பேசினார்கள். அப்போது நெடுவாசல் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிட வலியுறுத்தினார்கள், மத்திய அரசுக்கு இதுதொடர்பாக அழுத்தம் கொடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.

    அப்போது அவர்களிடம் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு அனுமதி வழங்காது என்று உறுதிபட தெரிவித்தார். இதனை ஏற்றுக் கொண்ட போராட்டக் குழுவினர் இன்று காலை இதுதொடர்பாக நெடுவாசல் கிராம மக்களிடம் தெரிவித்தனர்.

    தமிழக அரசின் அறிவிப்பை ஏற்றுக்கொண்ட கிராம மக்கள், மத்திய அரசு இந்த விவகாரத்தில் தொடர்ந்து மவுனம் சாதித்து வருவதற்கு கடும் அதிருப்தியை வெளியிட்டனர். மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்ததாக அறிவிக்க வேண்டும் என்றும், அதுவரை தங்கள் போராட்டம் தொடரும் என்றும் நெடுவாசல் கிராம மக்கள் திட்டவட்டமாக தெரிவித்தனர்.



    எத்தனை நாட்கள் ஆனாலும் இந்த இடத்தை விட்டு நகர மாட்டோம். எங்கள் வாழ்வை அழிக்கும் இந்த திட்டத்தை எப்போதும் செயல்படுத்த விடமாட்டோம் என்பதில் உறுதியாக இருப்பதாக கிராம மக்கள் தெரிவித்தனர்.

    15-வது நாளாக இன்று காலையும் நெடுவாசல் கிராமத்தில் உள்ள நாடியம்மன் கோவில் திடலில் ஏராளமானோர் திரண்டுள்ளனர். அவர்களுக்கு ஆதரவாக பல்வேறு இடங்களில் இருந்து இளைஞர்களும், மாணவர்களும் குவிந்த வண்ணம் உள்ளனர்.

    போராட்டத்தில் ஈடுபட்டுள்ள வெளியூர்களை சேர்ந்த மாணவ, மாணவிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகளை நெடுவாசல் கிராம மக்கள் செய்து கொடுத்துள்ளனர்.

    நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக பல தரப்பினரும் போராட்டம் நடத்தி வரும் நிலையில், உண்மையில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தின் நன்மை, தீமைகளை பற்றி விரிவாக பார்ப்போம்.
    புதுக்கோட்டை:

    எரிசக்தி துறையில் இந்தியா தன்னிறைவு அடைய பிரதமர் மோடியின் கனவு திட்டம் தான் ஹைட்ரோ கார்பன் திட்டம். எரிசக்தி தேவையை பூர்த்தி செய்து கொள்ள 80% கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்து வருகிறது. 2022 ஆம் ஆண்டில் இறக்குமதி அளவினை 10% குறைக்கவே ஹைட்ரோ கார்பன் திட்டம் இந்தியா முழுக்க 31 இடங்கள் தேர்வு செய்யப்பட்டது. 

    அவ்வாறு தேர்வு செய்யப்பட்டதில் தமிழகத்தின் புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் கிராமமும் ஒன்று. இதைத் தொடர்ந்து நெடுவாசல் கிராமத்தில் ஹைட்ரோ கார்பன் எடுக்க கடந்த பிப்ரவரி 15 ஆம் தேதியன்று மத்திய அரசு அனுமதி வழங்கியது. 

    ஹைட்ரோ கார்பன் எடுக்க மத்திய அரசு அனுமதியளித்ததற்கு நெடுவாசல் கிராம மக்கள் கடுமையான எதிர்ப்பு தெரிவித்து கடந்த சில வாரங்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நெடுவாசல் கிராம மக்களின் போராட்டத்திற்கு தமிழகம் முழுக்க பல்வேறு தரப்பினரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். 

    முன்னதாக நெடுவாசல் போராட்ட குழுவினர் தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமியை நேரில் சந்தித்து பேசினர். இதை தொடர்ந்து நெடுவாசல் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு தமிழக அரசு அனுமதியளிக்காது என முதல்வர் உறுதியளித்தார். 

    இந்நிலையில் உண்மையில் ஹைட்ரோ கார்பன் திட்டம் என்றால் என்ன?, இதன் மூலம் ஏற்படும் பாதிப்புகள் என்ன?, ஹைட்ரோ கார்பன் திட்டம் எவ்வாறு செயல்படுத்தப்படுகிறது? என்பனவற்றை தொடர்ந்து பார்ப்போம்.  

    இயற்கை எரிவாயுவை பூமியில் இருந்து எடுக்கும் முறையை ஹைட்ராலிக் ஃபிராக்சூரிங் அல்லது ஃபிராக்கிங் என அழைக்கின்றனர். 

    பூமிக்கு அடியில் இருந்து இயற்கை எரிவாயு எடுக்கப்படுகிறது. இதற்காக பூமிக்கு அடியில் இருக்கும் நீர், மணல் மற்றும் இரசாயனம் ஆகியவற்றை பயன்படுத்த வேண்டும். 

    1940களில் இருந்து ஃபிராக்கிங் வழிமுறை அறியப்படுகிறது. எனினும் கடந்த பத்து ஆண்டுகளில் மட்டுமே ஃபிராக்கிங் வழிமுறை மிகவும் பிரபலமாக மாறியுள்ளது. குறிப்பாக இந்த வழிமுறை அமெரிக்காவில் மட்டும் அதிக பிரபலமாகியுள்ளது.  
     


    இதற்கு காரணம் அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் உள்ள இயற்கை எரிவாயு ஆதாரங்கள் முற்றிலுமாக வற்றி விட்டதே ஆகும். இத்துடன் இயற்கை எரிவாயு மற்றும் இதர எரிபொருட்களின் விலை உயர்ந்து வருகிறது. 

    இதனால் ஃபிராக்கிங் போன்று மிகுந்த பொருட்செலவில் மேற்கொள்ளப்படும் இயற்கை எரிவாயு எடுக்கும் வழிமுறைகள் அதிக பிரபலமாகி வருகின்றன. இதோடு இவை கவர்ச்சிகரமானதாகவும், லாபகரமானதாகவும் உள்ளது. அமெரிக்காவில் மட்டும் இந்த வழிமுறை பத்து லட்சத்திற்க்கும் அதிகமான முறை பயன்படுத்தப்பட்டு விட்டது. 

    சுமார் 60% எண்ணெய் வளங்கள் ஃபிராக்கிங் மூலம் துளையிடப்பட்டு பெறப்பட்டுள்ளன. 

    ஃபிராக்கிங் எவ்வாறு வேலை செய்கிறது?

    முதலில் பூமியினுள் சுமார் 4000 அடி வரை துளையிடப்படுகிறது. பின் குறிப்பிட்ட ஆழத்தில் பாறையில் கிடைமட்டமாக துளையிடப்படுகிறது.   

    அதன் பின் ஃபிராக்கிங் திரவம் அதிக திறனுள்ள பம்ப்களின் உதவியோடு பாறைகளினுள் பாய்ச்சப்படுகிறது. இந்த திரவத்திற்கு சுமார் 8 மில்லியன் லிட்டர் அளவிலான நீர் பயன்படுத்தப்படுகிறது. இந்த அளவு நீரை சுமார் 65,000 பேர் பயன்படுத்த முடியும். அத்துடன் பல்லாயிரம் டன் மணல் மற்றும் 200,000 லிட்டர் இரசாயனங்கள் தேவைப்படுகிறது. 



    இவை பூமிக்கடியில் ஏற்படுத்தப்பட்ட துளையினுள் இருக்கும் பாறைகளில் ஊடுருவி அதிகளவிலான சிறுசிறு விரிசல்களை ஏற்படுத்துகிறது. மணல் இந்த விரிசல்களை மீண்டும் மூடாமல் பார்த்து கொள்கிறது.  

    மேலும் இரசாயனங்கள் பல்வேறு பணிகளை பாறைகளில் மேற்கொள்கின்றன. மற்ற பணிகளை விட அவை நீரை சுருங்க செய்து, கிருமிகளை அழித்து, கனிமங்களை கலைத்து விடும். 

    அடுத்து பெரும்பாலான இரசாயனங்கள் வெளியேற்றப்படுகின்றன. இதன் பின் இயற்கை எரிவாயுவினை எடுக்க முடியும். இயற்கை எரிவாயுவினை முழுமையாக எடுத்துவிட்ட பின் பூமியினுள் இடப்பட்ட துளை முழுமையாக அடைக்கப்பட்டு விடுகிறது. இத்துடன் மீண்டும் இரசாயனங்கள் செலுத்தப்பட்டு அதன் மூலம் துளையடைக்கப்படுகிறது. 

    இத்தனையும் மேற்கொள்ளப்பட்ட பின் ஃபிராக்கிங் வழிமுறை பல்வேறு இதர பாதிப்புகளையும் ஏற்படுத்துகிறது. 

    முதலில் ஃபிராக்கிங் மூலம் குடிநீர் மாசுப்படுத்தப்படுகிறது. அதிகளவு சுத்தமான நீரை பயன்படுத்துவதோடு மட்டுமின்றி அதே அளவு நீர் மாசுப்படுத்தப்படுவதோடு இவை மிகவும் நச்சுத்தன்மை வாய்ந்தது ஆகும். இவ்வாறு மாசுப்படுத்தப்படும் சுத்தமான குடிநீரை எவ்வித வழிமுறையை கொண்டும் சுத்தம் செய்ய முடியாது. 



    இது குறித்து முழுமையான தீமைகள் அறிந்த பின்பும் கவனக்குறைவு காரணமாக அமெரிக்காவில் ஏற்கனவே வளங்கள் அனைத்தும் மாசுப்படுத்தப்பட்டு விட்டது. ஃபிராக்கிங் தாக்கம் சார்ந்து தெளிவான ஆய்வுகள் மேற்கொள்ளப்படாத காரணத்தால் எதிர்காலத்தில் இந்த நீர் எவ்வாறான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது யாருக்கும் தெரியாது. 

    ஃபிராக்கிங்கிற்கு பயன்படுத்தப்படும் இரசாயனங்கள் வெவ்வேறு பண்புகளை கொண்டுள்ளன. இவை மிகவும் அபாயகரமானது முதல் கொடிய நச்சுத் தன்மை வாய்ந்தது ஆகும். என்னென்ன இரசாயனங்கள் பயன்படுத்தப்படுகின்றன என்பது குறித்து தெளிவான விளக்கம் அளிக்கப்படவில்லை என்றாலும் சுமார் 700க்கும் அதிகமான வெவ்வேறு இரசாயனங்கள் ஃபிராக்கிங்கில் பயன்படுத்தப்படுகிறது. 

    ஃபிராக்கிங்கின் மற்றொரு தீமை இவை வெளியிடும் வாயுக்கள் தான். பெரும்பாலும் இவை மீத்தேன் எனும் வாயுவினை அதிகம் வெளிப்படுத்துகிறது. மீத்தேன் வாயுவானது கார்பன் டை ஆக்சைடு எனப்படும் வாயுவை விட 25% அதிக நச்சு கொண்டதாகும். 



    மேலும் நிலக்கரியை எரிக்கும் போது ஏற்படும் மாசுவை விட இயற்கை எரிவாயில் மாசு குறைவு தான். எனினும் ஃபிராக்கிங் மூலம் ஏற்படும் பாதிப்புகள் மிகவும் அதிகமாகும். 

    ஃபிராக்கிங் செய்ய அதிகளவு மின்சக்தி தேவைப்படும். அடுத்து பூமிக்கடியில் மேற்கொள்ளப்படும் துளைகள் விரைவில் வற்றி விடும். இதனால் அடிக்கடி துளையிட வேண்டிய அவசியம் ஏற்படுகிறது. இத்தகைய வழிமுறைகளுக்கு பின் நமக்கு கிடைக்கும் இயற்கை எரிவாயு உறிஞ்சப்படும் போது 3% வாயு வீணாகி காற்றில் கலக்கிறது. 

    உண்மையில் ஃபிராக்கிங் செய்யும் போது இன்று நமக்கு பயனளித்தாலும், எதிர்காலத்தில் இது எம்மாதிரியான விளைவுகளை நமக்கு ஏற்படுத்தும் என்பதற்கு பதில் இல்லை.

    ஃபிராக்கிங் செயல்முறையை விரிவாக விளக்கும் வீடியோவினை இங்கு பார்க்கலாம்

    ஹைட்ரோ கார்பன் திட்டம் குறித்து மத்திய அரசு செயல்முறை விளக்கம் அழிக்காதது ஏன்? என்று கிராம மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் கிராமத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்தியே ஆகவேண்டும் என்பதில் மத்திய அரசும், இந்த திட்டத்தை ரத்து செய்தே ஆக வேண்டும் என்பதில் நெடுவாசல் கிராம மக்களும் உறுதியாக உள்ளனர்.

    திட்டம் அறிவிக்கப்பட்டு 16 நாட்கள் ஆகியும் இதுவரை ஹைட்ரோ கார்பன் திட்டம் என்றால் என்ன? அதன் மூலம் என்னென்ன பலன்கள், நன்மைகள் என்ன, தீமைகள் என்ன, திட்டம் செயல்படுத்தப்படுவது எப்படி, எந்த மாதிரியான விளைவுகள் ஏற்படும் என்பதை மத்திய அரசு இதுவரை தெளிவாக்க முன்வரவில்லை என்பது நெடுவாசல் கிராம மக்களின் குற்றச்சாட்டு.

    தீங்கு வராது என்று மட்டும் கூறும் மத்திய பெட்ரோலிய துறை அமைச்சகம் அதன் சாதகங்களாக 500 பேருக்கு வேலைவாய்ப்பு, குறைந்த அளவிலான நிலங்களே பயன்படுத்தப்படும் என்று மட்டுமே தெரிவித்துள்ளது.

    அறிவியலாளர்கள், விஞ்ஞானிகளை கொண்டு நெடுவாசல் கிராமத்திற்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களிடம் திட்டம் குறித்த செயல்முறை விளக்கம் அளிக்க முன்வராதது ஏன்? என்றும் கேள்வி எழுப்பியுள்ளனர்.



    ஹைட்ரோ கார்பன் திட்டம் கொண்டுவரப்பட்டால் விவசாய நிலம் அழியும், குடிநீர் ஆதாரம் பாதிக்கப்படும் என்பதுதான் பிரதான குற்றச்சாட்டு. இதற்கு முறையான விளக்கத்தை மத்திய அரசு அறிவிக்காதது ஏன் என்றும் நெடுவாசல் கிராமத்தினர் தொடர்ந்து கேட்டு வருகிறார்கள்.
    ‘ஹைட்ரோ கார்பன்’ திட்டத்தால் வாணக்கன்காடு பகுதியில் 25 பேர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டனர். அவர்களில் 20 பேர் இறந்துள்ளதாக கிராம மக்கள் கூறி உள்ளனர்.
    புதுக்கோட்டை:

    நெடுவாசல் அருகேயுள்ள வாணக்கன்காடு பகுதி கிராம மக்கள் கூறியதாவது:-

    வாணக்கன்காடு பகுதியில் 1991-ம் ஆண்டு மாரிமுத்து என்பவருக்கு சொந்தமான நிலத்தில் ஓ.என். ஜி.சி. நிறுவனத்தால் 14 ஆயிரத்து 500 அடி ஆழத்துக்கு ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டது.



    தொடர்ந்து 1996-ம் ஆண்டு மீண்டும் மாரிமுத்துவிடம் இடம் ஒப்படைக்கப்பட்டது. பின்னர் 2012-ம் ஆண்டு முதல் ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்ட இடத்தில் இருந்து எண்ணெய் மற்றும் வாயு கசிவு ஏற்பட்டது. இந்த வாயுவை சுவாசித்த அந்தப்பகுதி மக்களுக்கு திடீர் மயக்கம், மூச்சுத்திணறல் ஏற்பட்டது.

    மேலும் குடிநீர் ஆதாரமும் பாதிக்கப்பட்டது. இந்த பகுதியை சேர்ந்த 25 பேர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டனர். அவர்களில் நில உரிமையாளர் மாரிமுத்து, ராமன், வேலன், மூர்த்தி, காமாட்சி உள்பட 10 பேர் இறந்து விட்டனர்.

    இப்போது மாரிமுத்து மனைவி அன்னக்கிளி, செல்வம், சின்னாத்தா உள்பட 15 பேர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு, அதற்கான சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் 50-க்கும் அதிகமான கால்நடைகளும் பலியாகியுள்ளன.

    அதே போல் கோட்டைக்காடு பகுதியில் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட ஆரோக்கிய மேரி, லியோ ஆரோக்கிய மேரி, நேசா, செபஸ்தியான் உள்பட 10 பேர் இறந்துள்ளனர்.

    இதுதவிர இந்தபகுதியில் பிறக்கும் குழந்தைகள் மூளை வளர்ச்சி குன்றியும், கை கால் முடமாகவும் பிறந்துள்ளன. ஜான்பிரிட்டோ (17), மெட்டிடா மேரி (16) ஆகியோர் மூளை வளர்ச்சியின்றி இருக்கின்றனர். ஆகாஷ் (15) கால் ஊனத்துடன் 10-ம் வகுப்பு படித்து வருகிறார்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    சரவணம்பட்டி அருகே நள்ளிரவில் வீட்டில் கியாஸ் கசிந்து தீ விபத்து ஏற்பட்டது. இதில் டி.வி., பிரிட்ஜ் வெடித்து நாசம் அடைந்தது.
    கணபதி:

    கோவை சத்தி ரோட்டில் வடக்கு விநாயகர்புரம் அருகே உள்ள கம்பர் வீதியை சேர்ந்தவர் கர்ணன்(வயது 35). இவர் பங்குகள் வாங்கி விற்கும் நிறுவனம் நடத்தி வருகிறார். இவரது மனைவி கிரிஜா (30). இவர்களுக்கு பிரதிக்ஷா(6) என்ற மகளும், சச்சின்(4) என்ற மகனும் உள்ளனர்.

    நேற்று இரவு வீட்டில் அனைவரும் ஏ.சி. அறைக்குள் தூங்கிக் கொண்டிருந்தனர். இதற்கிடையே வீட்டில் இருந்த கியாஸ் ஒயரில் இருந்து கசிவு ஏற்பட்டுள்ளது. கியாஸ் கசிந்து வீடு முழுவதும் பரவி இருந்தது.

    நள்ளிரவு 1.30 மணிக்கு சச்சின் எழுந்துள்ளார். உடனே கிரிஜா மின்விளக்கு போடுவதற்காக சுவிட்ச்சை அழுத்தினார். அப்போது வீட்டில் இருந்து பயங்கர சத்தம் கேட்டது.

    அதோடு வீடு முழுவதும் கட்டிடங்களில் விரிசல் ஏற்பட்டது. இதனால் அதிர்ச்சியடைந்த கிரிஜா சத்தம் போட்டவாறு கதவை திறந்தார். அப்போது ஒயர்களில் பிடித்த தீ கிரிஜாவின் முகத்தை தாக்கியது. அவர் அலறித் துடித்தார். உடனே கர்ணன் குழந்தைகளை தூக்கிக் கொண்டு வெளியே ஓடினார்.

    சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினரும் அங்கு திரண்டனர். அவர்கள் சரவணம்பட்டி போலீசாருக்கும், தீயணைப்பு நிலையத்துக்கும் தகவல் தெரிவித்தனர். காயமடைந்த கிரிஜா தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சம்பவ இடத்துக்கு தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று கியாஸ் சிலிண்டரை பத்திரமாக அப்புறப்படுத்தினர்.

    இந்த விபத்தில் வீட்டில் இருந்த டி.வி, பிரிட்ஜ், வாஷிங்மிஷின் உள்ளிட்ட பொருட்கள் வெடித்து நாசமாகின. டி.வி., மின்விசிறி வளைந்து தொங்கியது. ஒயர் இணைப்புகள் அனைத்தும் எரிந்தது.

    வீட்டில் இருந்து சுமார் 1 கிலோ மீட்டர் தூரத்துக்கு சத்தம் கேட்டுள்ளது. அதிர்ஷ்டவசமாக கணவன், மனைவி உள்பட 4 பேரும் உயிர் தப்பினார்கள். நேற்று தான் வீட்டில் கியாஸ் சிலிண்டரை மாற்றி உள்ளனர். அப்போது சரியாக மாட்டாததால் கியாஸ் கசிவு ஏற்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. இதுகுறித்து சரவணம்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    குண்டு வெடித்தது போல சத்தம் கேட்டதாக அக்கம் பக்கத்தினர் தெரிவித்தனர். இந்த காரணமாக அந்த பகுதியில் சுமார் 1½ மணி நேரம் பரபரப்பு நிலவியது.
    ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிடும் வரை இந்த போராட்டம் ஓயாது என கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளர் உதயகுமார் கூறினார்.
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக 14-வது நாளாக பொது மக்கள், மாணவர்கள், விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    இன்று நடந்த போராட்டத்தில் கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளர் உதயகுமார், நடிகர் மன்சூர் அலிகான், ராஜீவ் கொலை வழக்கு குற்றவாளியான பேரறிவாளனின் தாய் அற்புதம்மாள், சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி ஆகியோர் போராட்டத்தில் பங்கேற்று ஆதரவு தெரிவித்தனர்.


    பின்னர் உதயகுமார் நிருபர்களி டம் கூறியதாவது:-

    தமிழகத்தில் அரசியல் நிலையற்ற தன்மையாக உள்ளது. குழப்பங்கள் நிறைந்த சூழல் நிலவி வருகிறது. இதனால் போராட்டத்தை யாரும் கண்டுகொள்ளாத நிலையில் உள்ளனர். இந்த வி‌ஷயத்தில் தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    தஞ்சை, புதுக்கோட்டை மாவட்டம் உணவு ஆதாரமாக உள்ளது. இங்கு ஹைட்ரோ கார்பன் திட்டம் செயல்படுத்தப்பட்டால் நிலத்தடி நீர் வற்றி போகும். மன்மோகன்சிங் அரசு என்றாலும், மோடி அரசு என்றாலும் வெளி நாட்டினருக்கு கைக்கூலிகளாக செயல்படுகின்றனர்.

    அணு உலை , மீத்தேன் என எந்த திட்டமாக இருந்தாலும் பாதிப்பு ஏற்படுத்தாது என்கிறார்கள். ஆனால் அவற்றின் மூலம் மிகப் பெரிய பாதிப்புகள் உள்ளது. அரசியல் வாதிகள் சிலர் நன்மை, தீமை பற்றி அறியாமல் போராட்டம் நடத்தி வருகிறார்கள் என்று கூறுகிறார்கள். இது ஒட்டுமொத்த பொது மக்களை திசை திருப்பும் செயல்.

    15 ஆண்டுகளுக்கு ஹைட்ரோ கார்பன் திட்டம் செயல்படுத்தப்போவதாக ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. இதில் 23 தனியார் நிறுவனங்கள் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. அதில் ஒன்று கர்நாடக மாநிலத்தை சேர்ந்த எம்.பி. ஒருவரது நிறுவனமும் ஆகும். இத்திட்டத்தின் மூலம் ஆண்டுக்கு ரூ.46 ஆயிரம் கோடி கிடைக்கும் என்றும், அதில் 1000கோடி தமிழகத்திற்கு கிடைக்கும் என்றும் கூறுகிறார்கள்.

    ஆனால் நிலத்தடி நீர் முற்றிலும் வற்றி, பொதுமக்கள் பாதிக்கப்படுவார்கள். எனவே 8 கோடி தமிழக மக்களும் ஒன்றிணைந்து இத்திட்டத்தை எதிர்த்து போராட வேண்டும். திட்டத்தை கைவிடும்வரை போராட்டம் ஓயாது.


    இவ்வாறு அவர் கூறினார்.

    பேரறிவாளனின் தாய் அற்புதம்மாள் கூறும்போது, ஹைட்ரோ கார்பன் திட் டத்தை மத்திய அரசு கைவிடக்கோரி பொதுமக்கள், மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மாணவர்கள் பங்கேற்றுள்ளது மகிழ்ச்சியை தருகிறது. தமிழகத்தின் உணவு களஞ்சியமாக விளங்கும் இந்த இடத்தில் அத்திட்டம் செயல்படுத்தக்கூடாது என்றார்.
    ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிரான போராட்டம் இன்று 14-வது நாளை எட்டியுள்ளது. இந்தநிலையில் இன்று புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் ஒருநாள் முழு கடையடைப்பு போராட்டம் நடந்து வருகிறது.
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் கிராமத்தில் ஹைட்ரோ கார்பன் எனப்படும் இயற்கை எரிவாயு திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு கடந்த மாதம் 15-ந் தேதி அனுமதி வழங்கியது.



    கடந்த 1991-ம் ஆண்டே இந்த திட்டத்திற்கான பூர்வாங்க பணிகள் தொடங்கியிருந்தாலும் அதன் செயலாக்கம் மற்றும் தாக்கம் குறித்த தகவல் தற்போதுதான் முழுமையாக தெரியவந்துள்ளது.

    இதற்காக ஓ.என்.ஜி.சி. நிறுவனம் விவசாயிகளின் விளைநிலங்களை குத்தகைக்கு எடுத்து அங்கு ஆழ்துளை கிணறுகள் தோண்டியிருப்பதே பிரச்சினைக்கு காரணமாக இருந்தது.

    இயற்கை எரிவாயு திட்டம் குறித்து முழுமையாக அறிந்த நெடுவாசல் மற்றும் அதனை சுற்றியுள்ள கருக்காகுறிச்சி, வாணக்கன்காடு, நல்லாண்டார்கொல்லை உள்ளிட்ட கிராம மக்கள் கொதித்தெழுந்தனர். இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டால் விளை நிலங்கள் அழியும், குடிநீர் ஆதாரம் முற்றிலும் பாதிக்கப்படும் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் போராட்டம் தீவிரமானது.

    கடந்த 16-ந்தேதி போராட்டத்தை தொடங்கிய நெடுவாசல் கிராம மக்களுக்கு ஆதரவாக விவசாயிகள் மட்டுமே பங்கேற்றனர். அதன் பிறகு கடந்த 18-ந்தேதி முதல் போராட்டம் தீவிரம் அடைந்தது. 19-ந்தேதி நெடுவாசல் கிராமத்தை நோக்கி இளைஞர்கள், மாணவர்கள், சென்னையை சேர்ந்த ஐ.டி. நிறுவன ஊழியர்கள், திரைத்துறையினர், அரசியல் கட்சியினர் என அனைத்து தரப்பினரும் ஆதரவு கொடுத்து திரண்டனர்.

    ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக நடந்த போராட்டத்தை போல் நெடுவாசல் கிராமத்திலும் ஒரு தன்னெழுச்சி போராட்டம் உருவானது. இதன் உச்சகட்டமாக 100 கிராமங்களின் பிரதிநிதிகள் ஒன்றாக நெடுவாசலில் கூடி ஆலோசனை நடத்தினர். அப்போது போராட்டத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்வது, இயற்கை எரிவாயு திட்டத்தை கைவிடும் வரை போராட்டத்தை தொடர்வது என முடிவு செய்யப்பட்டது.



    மேலும் வீடுகளில் கருப்பு கொடி கட்டியும், இரவு நேரங்களில் வீடுகளின் முன்பு அகல்விளக்கு ஏற்றியும், நெடுவாசலில் இருந்து புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகம் வரை மனித சங்கிலி நடத்தி எதிர்ப்பை வெளிக்காட்டுவது என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    நேற்று நெடுவாசலில் நடந்த போராட்டத்தில் ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ மற்றும் மக்கள் நல கூட்டியக்க தலைவர்கள் திருமாவளவன், முத்தரசன், ஜி.ராமகிருஷ்ணன் ஆகியோர் கலந்துகொண்டு பொதுமக்களிடையே பேசினர்.

    இயற்கை எரிவாயுக்கு எதிரான போராட்டம் இன்று 14-வது நாளை எட்டியுள்ளது. இந்தநிலையில் போராட்டத்தின் ஒரு பகுதியாகவும், இயற்கை எரிவாயு திட்டத்தை எதிர்த்தும் இன்று புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் ஒருநாள் முழு கடையடைப்பு போராட்டத்திற்கு புதுக்கோட்டை வர்த்தக சங்கம் அழைப்பு விடுத்திருந்தது.

    இதுகுறித்து கடந்த வாரம் தலைவர் சீனுசின்னப்பா தலைமையில் நடந்த அவசர செயற்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. அதன்படி இன்று மாவட்டம் முழுவதும் கடைகள் அடைக்கப்பட்டன.



    குறிப்பாக புதுக்கோட்டை, அறந்தாங்கி, திருமயம், ஆலங்குடி, கீரனூர், விராலிமலை, பொன்னமராவதி, கந்தர்வக்கோட்டை உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. இதனால் கடைவீதிகள் வெறிச்சோடி காணப்பட்டன.

    புதுக்கோட்டை மாவட்டத்தை சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களில் இருந்து விவசாயிகள் காய்கறி, பழங்கள் மற்றும் பூக்களை மார்க்கெட்டுகளுக்கு கொண்டு வருவது இன்று தடைபட்டது. ஒட்டுமொத்த விவசாயிகள் மட்டுமின்றி வணிகர்கள், பொது மக்களும் தங்களை இயற்கை எரிவாயுக்கு எதிரான போராட்டத்தில் இணைத்துக் கொண்டுள்ளனர்.

    இயற்கை எரிவாயுக்கு எதிரான போராட்டத்தால் ஒட்டுமொத்த தமிழகமும் நெடுவாசல் கிராமத்தை திரும்பி பார்க்க செய்துள்ளது. எனவே இனியும் மத்திய அரசு தாமதிக்காமல் உடனடியாக ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிடுமாறு போராட்டக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.
    ×