search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஹைட்ரோ கார்பன் திட்ட விவகாரம்: கிராம மக்களுடன் நடந்த பேச்சுவார்த்தை தோல்வி
    X

    ஹைட்ரோ கார்பன் திட்ட விவகாரம்: கிராம மக்களுடன் நடந்த பேச்சுவார்த்தை தோல்வி

    நெடுவாசல் கிராம மக்களிடமும் போராட்டக்குழுவினர் நடத்திய பேச்சுவார்த்தையில், ‘ஹைட்ரோ கார்பன் திட்டம் ரத்தாகும் வரை போராட்டத்தை விலக்கிக்கொள்ள மாட்டோம்’ என்று அவர்கள் திட்டவட்டமாக தெரிவித்தனர்.
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் கிராமத்தில் மத்திய அரசு அறிவித்துள்ள ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிரான போராட்டம் இன்று 16-வது நாளை எட்டியுள்ளது.



    பேராட்டத்தில் 100 கிராமங்களை சேர்ந்த மக்களின் பிரதிநிதிகள் பங்கேற்று முன்னெடுத்து செல்கிறார்கள். அவர்களுக்கு ஆதரவாக இளைஞர்கள், மாணவர்கள், வர்த்தகர்கள், மாற்றுத்திறனாளிகள், முதியோர்கள், திரைத்துறையை சேர்ந்தவர்கள் என அனைவரும் ஆதரவளித்துள்ளனர்.

    ஹைட்ரோ கார்பன் திட்டம் தொடர்பாக மத்திய அரசு அளித்த விளக்கத்தை ஏற்க மறுத்த போராட்டக்குழுவை சேர்ந்தவர்கள் ஒருங்கிணைப்பாளர் வேலு தலைமையில் நேற்று முன்தினம் சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனி சாமியை சந்தித்து ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிடக் கோரினர்.

    திட்டத்திற்கு தமிழக அரசு அனுமதி வழங்காது என்று அறிவித்த போதிலும் மத்திய அரசு எழுத்துப்பூர்வமாகவும், அதிகாரப்பூர்வமாகவும் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்வதாக அறிவித்தால் மட்டுமே போராட்டத்தை கைவிடுவோம் என்று திட்டவட்டமாக தெரிவித்தனர்.

    போராட்டம் முடிவுக்கு வரும் என்றிருந்த நிலையில் மீண்டும் தொடர்ந்ததால் புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் கணேஷ் ஆலங்குடியில் உள்ள வட்டாட்சியர் அலுவலகத்தில் அவசர ஆலோசனை நடத்தினார். இதில் போலீஸ் சூப்பிரண்டு லோகநாதன் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

    முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பிற மாவட்டங்களில் இருந்து போலீசாரை வரவழைக்க கலெக்டர் கணேஷ் உத்தர விட்டார். நெடுவாசல் நிலவரம் குறித்து சப்-கலெக்டர் அம்ரித் மூலம் ஆய்வு செய்து அறிக்கை அளிக்குமாறும் அவர் உத்தரவிட்டார்.

    பின்னர் புள்ளான்விடுதி அரசு உயர்நிலைப்பள்ளியில் நடந்த மற்றொரு பேச்சு வார்த்தை கூட்டத்தில் போராட்டக் குழுவினர் மற்றும் விவசாயிகளிடம் தமிழக அரசின் நிலைப்பாடு குறித்து கலெக்டர் கணேஷ் விளக்கி கூறினார். போராட்டத்தை கைவிடுமாறும் அவர் கேட்டுக்கொண்டார்.

    இதையடுத்து போராட்டக் குழுவினர் தஞ்சை மாவட்டம் பேராவூரணியில் உள்ள தனியார் விடுதியில் ஆலோசனை நடத்தினர்.

    கூட்டத்திற்கு பின்னர் நிருபர்களிடம் கூறிய போராட்ட ஒருங்கிணைப்பாளர் வேலு, ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்வது தொடர்பாக புதுக்கோட்டை மாவட்ட கலெக்டரை இன்று சந்தித்து மனு கொடுப்பது, பொதுமக்களை திரட்டி பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடத்த கலெக்டரிடம் அனுமதி கேட்பது என்றும், அதன் அடிப்படையில் போராட்டத்தை கைவிடுவதா, தொடர்வதா என்று முடிவு செய்யப்படும் என்று தெரிவித்தார்.



    இதேபோல் நெடுவாசல் மற்றும் திட்டம் செயல்படுத்தப்படும் கிராம மக்களிடமும் போராட்டக்குழுவினர் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் திட்டம் ரத்தாகும் வரை போராட்டத்தை விலக்கிக்கொள்ள மாட்டோம் என அவர்களிடம் திட்டவட்டமாக தெரிவித்துவிட்டனர். இதனால் இந்த பேச்சு வார்த்தையும் தோல்வி அடைந்தது.

    போராட்டக்குழுவை சேர்ந்தவர்கள் ஒரு பிரிவாகவும், கிராம மக்கள் மற்றொரு பிரிவாகவும் செயல்படுவதாகவும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.



    இதேபோல் நெடுவாசலில் இருந்து சுமார் 8 கி.மீ. தொலைவில் உள்ள கோட்டைக்காடு, நல்லாண்டார் கோவில் ஆகிய கிராமங்களிலும் பொதுமக்கள் தங்கள் போராட்டத்தை தொடங்கி தீவிரப்படுத்தி உள்ளனர். இதில் திருமயம் தொகுதி எம்.எல்.ஏ. ரகுபதி, முன்னாள் எம்.எல்.ஏ. ராஜசேகரன், முன்னாள் அமைச்சர் சந்திரசேகரன் மற்றும் ஏராளமான கிராமங்களை சேர்ந்த பொது மக்களும் கலந்து கொண்டனர்.

    அப்போது அவர்கள் கூறுகையில், நெடுவாசலை விட கோட்டைக்காடு, நல்லாண்டார்கொல்லை கிராமங்களில் தான் சுமார் 11 ஆயிரம் அடி ஆழத்தில் ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தினர் ஆழ்துளை கிணறு அமைத்துள்ளனர். இதனால் எங்களுக்குத்தான் பாதிப்பு அதிகம். எனவே நெடுவாசல் கிராம மக்கள் போராட்டத்தை கைவிட்டாலும் மத்திய அரசு ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிடும் வரை போராட்டம் தொடரும் என்று தெரிவித்தனர்.

    நெடுவாசல் மற்றும் போராட்டம் நடந்து வரும் நல்லாண்டார்கொல்லை, கோட்டைக்காடு, கருக்காக்குறிச்சி ஆகிய கிராமங்களில் அதிக அளவிலான போலீசார் நேற்று மாலை முதல் குவிக்கப்பட்டுள்ளனர்.

    புதுக்கோட்டை மட்டுமின்றி வெளிமாவட்ட போலீசார் அதிக அளவில் வந்துள்ளதால் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர எடுக்கப்பட்ட முயற்சியாக பொதுமக்கள் தெரிவித்தனர்.
    Next Story
    ×