என் மலர்tooltip icon

    செய்திகள்

    சரவணம்பட்டி அருகே வீட்டில் கியாஸ் கசிந்து பயங்கர விபத்து: டி.வி., பிரிட்ஜ் வெடித்து நாசம்
    X

    சரவணம்பட்டி அருகே வீட்டில் கியாஸ் கசிந்து பயங்கர விபத்து: டி.வி., பிரிட்ஜ் வெடித்து நாசம்

    சரவணம்பட்டி அருகே நள்ளிரவில் வீட்டில் கியாஸ் கசிந்து தீ விபத்து ஏற்பட்டது. இதில் டி.வி., பிரிட்ஜ் வெடித்து நாசம் அடைந்தது.
    கணபதி:

    கோவை சத்தி ரோட்டில் வடக்கு விநாயகர்புரம் அருகே உள்ள கம்பர் வீதியை சேர்ந்தவர் கர்ணன்(வயது 35). இவர் பங்குகள் வாங்கி விற்கும் நிறுவனம் நடத்தி வருகிறார். இவரது மனைவி கிரிஜா (30). இவர்களுக்கு பிரதிக்ஷா(6) என்ற மகளும், சச்சின்(4) என்ற மகனும் உள்ளனர்.

    நேற்று இரவு வீட்டில் அனைவரும் ஏ.சி. அறைக்குள் தூங்கிக் கொண்டிருந்தனர். இதற்கிடையே வீட்டில் இருந்த கியாஸ் ஒயரில் இருந்து கசிவு ஏற்பட்டுள்ளது. கியாஸ் கசிந்து வீடு முழுவதும் பரவி இருந்தது.

    நள்ளிரவு 1.30 மணிக்கு சச்சின் எழுந்துள்ளார். உடனே கிரிஜா மின்விளக்கு போடுவதற்காக சுவிட்ச்சை அழுத்தினார். அப்போது வீட்டில் இருந்து பயங்கர சத்தம் கேட்டது.

    அதோடு வீடு முழுவதும் கட்டிடங்களில் விரிசல் ஏற்பட்டது. இதனால் அதிர்ச்சியடைந்த கிரிஜா சத்தம் போட்டவாறு கதவை திறந்தார். அப்போது ஒயர்களில் பிடித்த தீ கிரிஜாவின் முகத்தை தாக்கியது. அவர் அலறித் துடித்தார். உடனே கர்ணன் குழந்தைகளை தூக்கிக் கொண்டு வெளியே ஓடினார்.

    சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினரும் அங்கு திரண்டனர். அவர்கள் சரவணம்பட்டி போலீசாருக்கும், தீயணைப்பு நிலையத்துக்கும் தகவல் தெரிவித்தனர். காயமடைந்த கிரிஜா தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சம்பவ இடத்துக்கு தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று கியாஸ் சிலிண்டரை பத்திரமாக அப்புறப்படுத்தினர்.

    இந்த விபத்தில் வீட்டில் இருந்த டி.வி, பிரிட்ஜ், வாஷிங்மிஷின் உள்ளிட்ட பொருட்கள் வெடித்து நாசமாகின. டி.வி., மின்விசிறி வளைந்து தொங்கியது. ஒயர் இணைப்புகள் அனைத்தும் எரிந்தது.

    வீட்டில் இருந்து சுமார் 1 கிலோ மீட்டர் தூரத்துக்கு சத்தம் கேட்டுள்ளது. அதிர்ஷ்டவசமாக கணவன், மனைவி உள்பட 4 பேரும் உயிர் தப்பினார்கள். நேற்று தான் வீட்டில் கியாஸ் சிலிண்டரை மாற்றி உள்ளனர். அப்போது சரியாக மாட்டாததால் கியாஸ் கசிவு ஏற்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. இதுகுறித்து சரவணம்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    குண்டு வெடித்தது போல சத்தம் கேட்டதாக அக்கம் பக்கத்தினர் தெரிவித்தனர். இந்த காரணமாக அந்த பகுதியில் சுமார் 1½ மணி நேரம் பரபரப்பு நிலவியது.
    Next Story
    ×