என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்யும் வரை போராட்டம் தொடரும்: கிராம மக்கள் அறிவிப்பு
    X

    ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்யும் வரை போராட்டம் தொடரும்: கிராம மக்கள் அறிவிப்பு

    மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்ததாக அறிவிக்க வேண்டும் என்றும், அதுவரை தங்கள் போராட்டம் தொடரும் என்றும் நெடுவாசல் கிராம மக்கள் திட்டவட்டமாக தெரிவித்தனர்.
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் கிராமத்தில் ஹைட்ரோ கார்பன் எனும் இயற்கை எரிவாயு எடுக்கும் திட்டத்தை மத்திய அரசு கடந்த மாதம் 15-ந்தேதி அறிவித்தது.



    இந்த திட்டத்தை செயல்படுத்தினால் பல ஏக்கர் விவசாய நிலங்கள் பாழாகும், நிலத்தடி நீர்மட்டம் முற்றிலும் பாதிக்கும், நில நடுக்க அபாயம், சரும, புற்று நோய் அபாயங்கள் உள்ளதாக எழுந்த தகவல் நெடுவாசல் மற்றும் இந்த திட்டம் சார்ந்த கிராமங்களான வாணக்கன் காடு, கருக்காக்குறிச்சி, கோட்டைக்காடு உள்ளிட்ட கிராம மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    இதையடுத்து திட்டம் அறிவிக்கப்பட்ட மறுநாளில் (16-ந்தேதி) இருந்து நெடுவாசல் மற்றும் சுற்றுப்புற கிராம மக்கள் போராட்டத்தில் குதித்தனர். அவர்களுடன் இளைஞர்கள் மற்றும் மாணவர்களும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    இதன் எதிரொலியாக தமிழகம் முழுவதும் போராட்டத்தின் தாக்கம் அதிகமானது. ஆங்காங்கே கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக குரல் கொடுத்தனர்.

    கடந்த 18-ந்தேதி முதல் போராட்டம் உச்சக்கட்டத்தை எட்டியது. நெடுவாசலில் திரண்ட சுமார் 100-க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த மக்கள் பிரதிநிதிகள் ஒன்றாக கூடி ஆலோசனை நடத்தினர்.

    இதையடுத்து நேற்று புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் முழு கடையடைப்பு போராட்டம் நடந்தது.

    இந்த நிலையில் போராட்டக்குழுவை சேர்ந்தவர்கள் வேலு என்பவரது தலைமையில் நேற்று சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து பேசினார்கள். அப்போது நெடுவாசல் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிட வலியுறுத்தினார்கள், மத்திய அரசுக்கு இதுதொடர்பாக அழுத்தம் கொடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.

    அப்போது அவர்களிடம் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு அனுமதி வழங்காது என்று உறுதிபட தெரிவித்தார். இதனை ஏற்றுக் கொண்ட போராட்டக் குழுவினர் இன்று காலை இதுதொடர்பாக நெடுவாசல் கிராம மக்களிடம் தெரிவித்தனர்.

    தமிழக அரசின் அறிவிப்பை ஏற்றுக்கொண்ட கிராம மக்கள், மத்திய அரசு இந்த விவகாரத்தில் தொடர்ந்து மவுனம் சாதித்து வருவதற்கு கடும் அதிருப்தியை வெளியிட்டனர். மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்ததாக அறிவிக்க வேண்டும் என்றும், அதுவரை தங்கள் போராட்டம் தொடரும் என்றும் நெடுவாசல் கிராம மக்கள் திட்டவட்டமாக தெரிவித்தனர்.



    எத்தனை நாட்கள் ஆனாலும் இந்த இடத்தை விட்டு நகர மாட்டோம். எங்கள் வாழ்வை அழிக்கும் இந்த திட்டத்தை எப்போதும் செயல்படுத்த விடமாட்டோம் என்பதில் உறுதியாக இருப்பதாக கிராம மக்கள் தெரிவித்தனர்.

    15-வது நாளாக இன்று காலையும் நெடுவாசல் கிராமத்தில் உள்ள நாடியம்மன் கோவில் திடலில் ஏராளமானோர் திரண்டுள்ளனர். அவர்களுக்கு ஆதரவாக பல்வேறு இடங்களில் இருந்து இளைஞர்களும், மாணவர்களும் குவிந்த வண்ணம் உள்ளனர்.

    போராட்டத்தில் ஈடுபட்டுள்ள வெளியூர்களை சேர்ந்த மாணவ, மாணவிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகளை நெடுவாசல் கிராம மக்கள் செய்து கொடுத்துள்ளனர்.

    Next Story
    ×