என் மலர்
புதுக்கோட்டை
புதுக்கோட்டை:
தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் புதுக்கோட்டை மாவட்டச் செயற் குழுக்கூட்டம் மாவட்டத் தலைவர் ச.காமராஜ் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் மாநில துணைத் தலைவர் கு.சத்தி, மாவட்டச் செயலாளர் பெ.அன்பு, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் ஆர்.ரெங்கசாமி உள்ளிட்டோர் பேசினர்.
சத்துணவு ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். குடும்பப் பாதுகாப்புடன் மாதாந்திர ஓய்வூதியம் வழங்க வேண்டும். ஓய்வுபெறும் ஊழியர்களுக்கு ஒட்டுமொத்தப் பணிக்கொடை ரூ.3 லட்சம் வழங்க வேண்டும்.
விலைவாசி உயர்வுக்கு ஏற்ப உணவு மானியத்தை உயர்த்தி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சத்துணவு ஊழியர்கள் தொடர்ச்சியாக போராட்டங்களை நடத்தி வருகிறோம்.
இதன் அடுத்தகட்ட நடவடிக்கையாக வருகின்ற மார்ச்.21,22,23 ஆகிய தேதிகளில் புதுக்கோட்டையில் தொடர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபடுவது எனவும், இந்தப் போராட்டத்தில் ஏராளமான ஊழியர்களைப் பங்கேற்க செய்வது எனவும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
புதுக்கோட்டை மாவட்டம் வடகாட்டில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக தொடர்ந்து 9-வது நாளாக இன்று நடந்த போராட்டத்தில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
மேலும் சுந்தரிகொல்லை, வடகுபட்டி, காமராஜர்புரம், குலமங்கலம், கொத்தமங்கலம், கீரமங்கலம், வடகாடு ஆகிய பகுதிகளை சேர்ந்த 5 வய திற்குட்பட்ட குழந்தைகள் பலர் ஹைட்ரோ கார்பன் திட்டத்தின் பாதிப்புகள் பற்றிய பதாகைகளை கையில் ஏந்தியபடி வந்து போராட்டத்தில் பங்கேற்றனர்.
சென்னையில் இருந்து வந்துள்ள கல்லூரி மாணவர்கள் 10 பேர், போராட்டத்தில் தொடர்ந்து தங்கியிருந்து பங்கேற்று வருவதோடு, இன்று காலை அப்பகுதியில் சீமை கருவேல மரங்களை அகற்றும் பணியில் ஈடுபட்ட னர். போராட்டத்தில் பங்கேற்று பேசிய மாணவர்கள், சீமை கருவேல மரங்களாலும் நிலத்தடி நீர் பாதிக்கப்படும். எனவே அதனை அகற்ற வேண்டும் என்றனர்.
நேற்று நடந்த போராட்டத்தில் அப்பகுதி பள்ளி மாணவ, மாணவிகள் ஓடுகளை கையால் உடைப்பது, தீப்பந்தம் சுற்றுவது மற்றும் சிலம்பாட்டம் ஆடி தங்களது வீரத்தை வெளிப்படுத்தினர்.
புதுக்கோட்டை மாவட்டம் வடகாடு, நல்லாண்டார் கொல்லை ஆகிய கிராமங்களில் மத்திய அரசின் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது.
வடகாட்டில் நேற்று 8-வது நாளாகவும், நல்லாண்டார் கொல்லையில் 23-வது நாளாகவும் போராட்டம் நீடித்தது. இதில் வடகாட்டில் நடந்த போராட்டத்தில் கீழாத்தூர், கருக்காக்குறிச்சி, தோழன் பட்டி, கல்லிக்கொல்லை, வாணக்கன்காடு உள்ளிட்ட கிராமங்களில் இருந்து வந்திருந்த ஏராளமான விவசாயிகள், பெண்கள் தங்கள் பகுதியில் விளைந்த பயிர்களை கையில் ஏந்தியவாறு கலந்து கொண்டனர்.
வடகாடு போராட்டம் தொடங்கிய 8-ம் நாளை குறிக்கும் வகையில் அங்கு 8-ம் நாள் துக்கம் அனுசரிக்கப்பட்டது. கொள்ளிப்பானை, கருப்புக் கொடி ஏந்தி கோவணம் அணிந்து அரை நிர்வாணத்துடன் வந்த ஆண்கள் போராட்ட களத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து மொட்டை அடித்துக் கொண்டனர்.
அதேபோல் பெண்கள் தலைவிரி கோலத்தில் ஒன்றாக அமர்ந்து ஒப்பாரி வைத்து தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர். பின்னர் கள்ளிக் கொல்லை கிராமத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்காக போடப்பட்டுள்ள ஆழ்துளை கிணற்றின் படத்தை வைத்து அதற்கு படையலிட்டனர். வடகாடு கிராமம் முழுவதும் அனைத்து வீடுகளிலும் கருப்பு கொடி கட்டப்பட்டிருந்தது.
மேலும் போராட்டத்தில் இருந்து திட்டம் கைவிடப்படும் வரை யாரும் பின் வாங்கக்கூடாது. ராணுவம் கொண்டோ, போலீசாரை கொண்டோ தடியடி நடத்தி நம்மை கலைக்க நினைத்தாலும் களத்தில் நின்று போராட வேண்டும் என்று அங்கு கூடியிருந்த அனைவரும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
இதில் பங்கேற்ற ஆலங்குடி தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. மெய்யநாதன் கூறுகையில், வருகிற 16-ந் தேதி கூடும் தமிழக பட்ஜெட் கூட்டத்தொடரில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு மாநில அரசு தடை விதிக்க வலியுறுத்தியும், அவசர சட்டம் கொண்டு வரவும் போராடுவோம் என்றும், உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர உள்ளதாகவும் தெரிவித்தார்.
ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக தினந்தோறும் புதிய யுக்திகளை கையாண்டு வரும் வடகாடு கிராம மக்கள் இன்று 9-வது நாளாக போராட்ட களத்தில் திரண்டு வருகிறார்கள். போராட்டக் குழுவின் ஆலோசனைப்படி அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர்கள் கூறினர்.
புதுக்கோட்டை மாவட்ட தே.மு.தி.க. சார்பில் உட்கட்சி தேர்தல் குறித்து ஆலோசனைக் கூட்டம் மற்றும் உறுப்பினர் சேர்க்கை விண்ணப்பங்கள் வழங்குதல் மாவட்ட செயலாளர் ராமசாமி தலைமையில் மாவட்ட தே.மு.தி.க. அலுவலகத்தில் நடைபெற்றது.
கூட்டத்தில் தேர்தல் பொறுப்பாளர் சாகுல் ஹமீது, மாவட்ட பொருளாளர் கதிரவன், மாவட்ட துணைச் செயலாளர்கள் செந்தில்குமார், ஞானம், கேப்டன் மன்ற செயலாளர் பரமஜோதி மற்றும் ஏராளமான தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூர் அருகே உள்ள பிலிப்பட்டியில் ஏராளமான குடும்பத்தினர் வசிக்கின்றனர். இந்நிலையில் கடந்த சில தினங்களாக இப்பகுதிக்கு சுத்தமான குடிதண்ணீர் வரவில்லை என்று கூறப்படுகிறது. மேலும் இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த இப்பகுதி பொதுமக்கள் சுத்தமான குடிநீர் வழங்ககோரி நேற்று காலை காலிகுடங்களுடன் இலுப்பூர்–பெரியகுரும்பப்பட்டி சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இது குறித்து தகவல் அறிந்த விராலிமலை துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சித்ரா மற்றும் அதிகாரிகள் சம்பந்தபட்ட இடத்திற்கு வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் சுத்தமான குடிநீர் வழங்குவதாக உறுதி அளித்தனர். இதைத்தொடர்ந்து பொதுமக்கள் மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் அரைமணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
புதுக்கோட்டை மாவட்டம் மற்றும் திருவரங்குளம் வட்டார பகுதிகளான கைக்குறிச்சி, மேட்டுப்பட்டி உள்ளிட்ட சுற்றுவட்டார கிராம பகுதிகளில் வளர்ந்து வரும் நவீன அறிவியல் யுகத்தில் குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு நோய்தீர்க்கும் மருந்து என்று அழிந்து வரும் கழுதைகளைக்கொண்டு கடலூர் மாவட்டம் தொழுதூர் பகுதியைச் சேர்ந்தவர்கள் குடும்பத்தோடு இத்தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஒரு சங்கு கழுதை பால் ஐம்பது ரூபாய் என்று கூவி கிராமங்களை நோக்கி விற்பனை செய்து வருகின்றனர். இன்றைய யுகத்தில் இது சாத்தியமா என்றாலும் இத்தொழில் ஈடுபட்டுள்ளோர்களுடைய வாழ்வாதாரம் பிள்ளைகளின் கல்வி பொருளாதாரம் ஆகியவை கேள்விக்குறியாகவே உள்ளது.
22-வது நாளாக நெடுவாசல் கிராமத்தில் நாடியம்மன் கோவில் திடலில் நடந்த போராட்ட களத்திற்கு நேற்று இரவு மத்திய மந்திரி பொன். ராதாகிருஷ்ணன் வந்தார். அப்போது அவர் பொதுமக்கள் மத்தியில் பேசியதாவது:-
கடந்த 22 நாட்களாக அறவழியில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அனைவரையும் வணங்குகிறேன். மத்திய அமைச்சராகவோ, அரசியல் கட்சியை சார்ந்தவனாகவோ, சமரசம் செய்யவோ, பேசி விட்டு செல்லவோ நான் இங்கு வரவில்லை. உங்களில் ஒருவனாக வந்துள்ளேன். அதேநேரத்தில் போராட்டத்தில் கலந்துகொள்வதற்காகவும் வரவில்லை.
என்னுடைய கருத்தை பதிவு செய்யவே வந்துள்ளேன். கடந்த 4-ந்தேதி மதுரையில் 4 மணி நேரம் போராட்டக்குழுவிடம் பேச்சு வார்த்தை நடத்தினோம். அப்போது போராட்டக் குழுவினர் விடுத்த தொழில்நுட்பம் சார்ந்த கேள்விகளுக்கு எண்ணெய் நிறுவன அதிகாரிகள் பதில் விளக்கம் அளித்தனர். எந்த திட்டத்தையும் மோடி தலைமையிலான மத்திய அரசு திணிக்காது.
ஒட்டுமொத்த நலன் இருப்பின் நன்மை கருதி அந்த திட்டம் வந்தால் தவறில்லை. நெடுவாசல் பசுமை நிறைந்த பகுதியாகும். விவசாயத்தில் லாப, நஷ்டம் எந்த அளவுக்கு இருக்கும் என்பது எனக்கு தெரியும். இந்த திட்டம் பிரதமர் மோடியால் கொண்டு வரப்பட்டதல்ல. முந்தைய அரசு கொண்டு வந்தாலும் அவர்களை நான் குற்றம் சொல்லவில்லை.
தவறான புரிதல் காரணமாக எதிர்ப்பு உணர்வில் உள்ளீர்கள். மீத்தேன் திட்டம் வேண்டாம் என்று போராடியபோது போராட்டக்காரர்களை மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானை சந்திக்க அழைத்து சென்று பேச்சுவார்த்தை நடத்தினோம். போராட்டக்காரர்களின் உணர்வுகளை புரிந்து அந்த திட்டம் ரத்து செய்யப்பட்டது.
அதேபோல் நெடுவாசல் போராடக்குழுவினர் சம்மதித்தால் வருகிற 15 அல்லது 16-ந்தேதி மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சரை சந்திக்க ஏற்பாடு செய்கிறேன். ஒரு விஷயத்தை மக்களிடம் கூறிவிட்டு எப்போதும் ஏமாற்றமாட்டேன். உங்களை தாயாகவும், சசோதரர்களாகவும், குடும்ப உறுப்பினர்களாகவும் நினைத்து இதை கூறுகிறேன்.

நான் உங்களை நம்புகிறேன். மத்திய அமைச்சரை போராட்டக்குழுவினர் சந்திக்க செல்லும் போது போராட்டத்தை நிறுத்தி விட்டு உங்களை சந்திக்க வந்துள்ளோம் என்று கூறினால் நல்லதா? போராட்டம் தொடர்ந்து நடக்கிறது என்று சொல்வது நல்லதா? என்பதை நீங்கள்தான் முடிவு செய்ய வேண்டும்.
எனவே ஒருதாய் வயிற்றில் பிறந்துள்ளவர்களாய் நினைத்து நல்ல முடிவை எடுப்பீர்கள் என நம்புகிறேன்.
இவ்வாறு அவர் பேசினார்.
இதையடுத்து அவர் வடகாடு, நல்லாண்டார் கொல்லை ஆகிய பகுதிகளில் எண்ணெய் நிறுவனங்கள் சார்பில் அமைக்கப்பட்டுள்ள ஆழ்துளை கிணறுகள், எரி வாயு குழாய்கள் ஆகியவற்றை பார்வையிட்டார். மேலும் நேற்று முன்தினம் நடந்த ஒப்பாரி போராட்டத்தின்போது மயங்கி விழுந்து இறந்த பொன்னம்மாள் வீட்டிற்கு சென்று அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.
மத்திய அரசு சார்பில் அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் இன்று நெடுவாசல் சென்று போராட்டக்குழுவினரிடையே பேச்சுவார்த்தை நடத்தினார். அதேபோல் தமிழக அமைச்சர்களும் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

அப்போது ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு அனுமதி இல்லை என்று மத்திய, மாநில அரசுகள் சார்பில் உறுதியளித்துள்ளதாக போராட்டக்குழுவினர் தெரிவித்தனர்.
இதனால் தங்களது போராட்டத்தை தற்காலிகமாக வாபஸ் பெறுவதாக தெரிவித்துள்ளனர். மேலும், எங்களது கோரிக்கைகளை முழுவதுமாக ஏற்கவில்லை என்றால் மீண்டும் போராட்டம் தொடரும் என அறிவித்துள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் பகுதியில் ஹைட்ரோ கார்பன் எனும் இயற்கை எரிவாயு எடுக்கும் மத்திய அரசின் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நெடுவாசல், நல்லாண்டார் கொல்லை, வடகாடு ஆகிய பகுதிகளில் கடந்த 22 நாட்களாக தொடர்ந்து பொதுமக்கள், இளைஞர்கள் போராடி வருகின்றனர்.
முதலில் நெடுவாசல் கிராமத்தில் மட்டும் போராட்டம் நடத்தி வந்த வடகாடு கிராமத்தினர் தங்கள் கிராமத்திலேயே போராட்டத்தை தொடங்கியுள்ளனர். இன்று 5-வது நாளாக அவர்கள் பந்தல் அமைத்து போராடி வருகிறார்கள்.
இந்தநிலையில் வடகாட்டில் உள்ள பேருந்து நிறுத்தம் அருகில் இன்றும் போராட்டம் நீடித்தது. போராட்டத்தின் போது இளைஞர்கள், பெண்கள் என 50-க்கும் மேற்பட்டோர் வடகாட்டில் உள்ள மாரியம்மன் ஆர்ச்சில் இருந்து பேரணியாக போராட்ட களத்திற்கு வந்தனர்.
பின்பு அங்குள்ள போராட்ட பந்தலில் தூக்கு கயிற்றை கழுத்தில் மாட்டி தற்கொலை செய்து கொள்ளும் போராட்டம் நடத்தினர். தற்போது ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து தூக்கு கயிற்றை கழுத்தில் மாட்டியுள்ளோம், திட்டம் நிறைவேறினால் தற்கொலை செய்ய தயங்க மாட்டோம் என்பதை உணர்த்தவும், உண்மையிலேயே தூக்கு போட்டு தற்கொலை செய்து கொள்வோம் என்று ஆவேசத்துடன் கூறினர்.
மேலும் எங்களின் போராட்ட குரல் மத்திய அரசின் காதுகளில் விழவேண்டும் என்பதற்காகவே இந்த தூக்கு போட்டு தற்கொலை செய்யும் போராட்டத்தை நடத்தியுள்ளோம் என்று தெரிவித்தனர்.
இதுகுறித்து போராட்டத்தில் பங்கேற்ற பட்டதாரி வாலிபர் ஒருவர் கூறியதாவது:-
நான் பட்டப்படிப்பு படித்து விட்டு வெளியூரில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறேன். ஆனால் எங்கள் வாழ்வின் அடிப்படை ஆதாரம் விவசாயம்தான். எனக்கும், எனது சந்ததிக்கும் விவசாயம் முக்கியம். எங்கள் உடலில் உயிர் உள்ளவரை ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து போராடுவோம் என்றார்.

வடகாடு கிராமத்தில் இன்று நடந்த போராட்டத்தில் கலந்துகொண்டவர்களின் ஒரு பகுதியை படத்தில் காணலாம்.
வடகாடு கிராமத்தில் இன்று நடந்த போராட்டத்தில் தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் கலந்து கொண்டு ஆதரவு தெரிவித்து பேசினார்.
இதேபோல் நெடுவாசல் கிராமத்திலும் தொடர் போராட்டம் நடந்து வருகிறது. போராட்டம் நடைபெறும் நாடியம்மன் கோவில் அருகே அரசு பள்ளி அமைந்துள்ளது. இன்று 10-ம் வகுப்பு தமிழ் இரண்டாம் தாள் பொதுத்தேர்வு நடை பெறுவதால் அங்கு அமைக்கப்பட்டிருந்த மைக் செட்டுகள் அணைத்து வைக்கப்பட்டிருந்தன.
மேலும் தேர்வு முடிந்ததும் போராட்ட களத்திற்கு பொது மக்கள் திரண்டு வருமாறும் கிராம மக்கள் மற்றும் போராட்டக்குழு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் கிராமத்தில் மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ள ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து கடந்த 21 நாட்களாக விவசாயிகள், பொதுமக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
முழுக்க, முழுக்க விவசாயத்தை மட்டுமே நம்பியுள்ள இந்த கிராமத்தில் நெல், சோளம், கரும்பு, வாழை, கடலை போன்ற பயிர்களும், மா, பலா, பூக்கள் போன்றவைகளும் அதிக அளவில் சாகுபடி செய்யப்படுகிறது.
பல ஆயிரம் ஏக்கரில் விளைவிக்கப்பட்டுள்ள இந்த பயிர்களை முறையாக பராமரிக்க முடியாமல் விவசாயிகள் சிரமப்பட்டு வருகிறார்கள். கடும் எதிர்ப்பின் காரணமாக ஹைட்ரோ கார்பனுக்கு எதிரான போராட்டம் ஓரிரு நாட்களில் முடிவடையும் என்று நினைத்திருந்த விவசாயிகளுக்கு இந்த தொடர் போராட்டம் பெரும் சவாலாக அமைந்துவிட்டது.
தினமும் அதிகாலையிலேயே வயலுக்கு சென்று விடும் விவசாயிகள் தண்ணீர் பாய்ச்சுவது, களை எடுப்பது, மருந்து தெளிப்பது உள்ளிட்ட வேளாண் பணிகளை மட்டுமே கவனித்து வந்த விவசாயிகள் தற்போது காலையிலேயே போராட்ட பந்தலுக்கு வந்து அமர வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
தங்கள் கிராம பிரச்சனைக்காக வெளியூர்களில் இருந்தும், வெளி மாவட்டங்களில் இருந்தும் தினமும் நூற்றுக்கணக்கானோர் வந்து செல்லும் போது சொந்த கிராமத்தை சேர்ந்தவர்கள் இந்த போராட்டத்தை கண்டு கொள்ளாமல் போனால் சர்ச்சையாகிவிடும் என்ற எண்ணத்திலும் தங்கள் முழு கவனத்தையும் போராட்டத்தில் செலுத்தி வருகிறார்கள்.
அத்துடன் தினமும் போராட்டம் குறித்து அரசுக்கு தெரியப்படுத்தவும், வலியுறுத்தும் விதமாகவும் பல்வேறு யுக்திகளையும் கையாண்டு வருகிறார்கள். குறிப்பாக விவசாய பணிகளில் அதிக அளவில் ஈடுபடும் பெண்கள் இந்த போராட்டத்தில் முழுமையாக தங்களை ஈடுபடுத்திக் கொண்டுள்ளனர்.
பெண்களால் மட்டுமே இந்த போராட்டம் இவ்வளவு வலுவடைந்துள்ளது என்று கூறுமளவிற்கு கடந்த 21 நாட்களும் சொந்த வேலைகளை மறந்து இதில் கலந்து கொண்டுள்ளனர். இவர்கள் தவிர நெடுவாசல் கிராமத்தை சேர்ந்த பலர் வெளிநாடுகளில் பணியாற்றி வருகிறார்கள். இதில் ஏராளமானோர் இந்த போராட்டம் குறித்து அறிந்து சொந்த ஊருக்கு திரும்பியுள்ளனர்.
அவர்கள் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வராமல் வெளிநாடு செல்வதில்லை என்ற முடிவில் உள்ளனர். இதனால் அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதோடு, விவசாய பணிகளும் முடங்கியுள்ளன. மேலும் கால்நடைகள் வளர்ப்போர் அதனை மேய்ச்சலுக்கு அழைத்து செல்வது, முறையாக பராமரிப்பது போன்றவைகளும் பாதிக்கப்பட்டுள்ளன.
குறிப்பாக தற்போது நெடுவாசல் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு கடலை பயிரிடப்பட்டது. அதனை அறுவடை செய்யும் பணி தொடங்கியுள்ளது. ஆனால் அதில் ஈடுபடும் பெண்கள் பலர் போராட்ட களத்தில் அமர்ந்திருப்பதால் அறுவடை தடைபட்டுள்ளது. உரிய நேரத்தில் அறுவடை பணியை மேற்கொள்ளா விட்டால் கடலை அனைத்தும் அழுகி சேதமடைந்துவிடும் என்று கவலையுடன் கூறினர்.
கடந்த சில நாட்களாக காலை வேளையில் போராட்டம் நடைபெறும் நாடியம்மன் கோவில் திடலில் குறைந்த அளவிலான கூட்டமே உள்ளது. பலர் விவசாயத்தை கவனிக்க சென்றுவிட்டு பிற்பகலில் போராட்டத்தில் பங்கேற்று வருகின்றனர்.
இதேபோல் காய்கறி பயிரிட்டுள்ள விவசாயிகளும் கவலையடைந்துள்ளனர். குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவதில் இருந்து வீட்டு வேலைகள், விவசாய பணிகள் அனைத்தும் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறும் நெடுவாசல் கிராம மக்கள் இனியும் தாமதிக்காமல் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர மத்திய அரசு ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்வதாக அறிவிக்க வேண்டும் என்றும், விவசாயத்தையும், விளைநிலங்களையும் அழிவில் இருந்து காக்கவேண்டும் என்றும் உரக்க குரல் கொடுத்துள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் பகுதியில் ஹைட்ரோ கார்பன் எனும் இயற்கை எரிவாயு எடுக்க மத்திய அரசு அனுமதி வழங்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் தீவிரமடைந்து வருகிறது. நெடுவாசலில் நாடியம்மன் கோவில் முன்பு மரத்தடியிலும், நல்லாண்டார் கொல்லையில் ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தால் அமைக்கப்பட்டுள்ள ஆழ்துளை கிணற்றின் அருகேயும், வடகாட்டில் பஸ் நிறுத்தம் அருகேயும் போராட்டம் நடந்து வருகிறது.

நல்லாண்டார் கொல்லையில் நேற்று 21-வது நாளாக போராட்டம் நீடித்தது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு எண்ணெய் எடுத்து ஆய்வு செய்வதற்காக அமைக்கப்பட்டுள்ள ஆழ்துளை கிணற்றின் அருகே அமர்ந்து நேற்று காலை பெண்கள் ஒப்பாரி வைத்து போராட்டம் நடத்தினர்.
ஒப்பாரி போராட்டத்தில் கோஷமிட்டபடி இருந்த போது நெடுவாசல் கிராமத்தை சேர்ந்த ஆதவன் மனைவி பொன்னம்மாள் (வயது 65), நல்லாண்டார் கொல்லையை சேர்ந்த லட்சுமி, மலர் ஆகிய 3 பேரும் திடீரென மயக்கமடைந்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

அருகில் இருந்தவர்கள் உடனடியாக தண்ணீர் எடுத்து வந்து மயக்கமடைந்தவர்களின் முகத்தில் தெளித்தனர். இதில் லட்சுமி, மலர் ஆகிய 2 பேரும் சகஜ நிலைக்கு திரும்பினர். ஆனால் பொன்னம்மாள் மயக்கத்தில் இருந்து சகஜ நிலைக்கு திரும்பவில்லை. இதையடுத்து சிகிச்சைக்காக அவரை பொதுமக்கள் காரில் ஏற்றி நெடுவாசல் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்று முதல் உதவி சிகிச்சை அளித்தனர்.
அதன்பின்னர் மேல் சிகிச்சைக்காக பேராவூரணி அரசு மருத்துவமனைக்கு காரில் கொண்டு செல்லும் வழியில் பொன்னம்மாள் பரிதாபமாக இறந்தார். இயற்கை எரிவாயு திட்டத்திற்கு எதிராக தொடரும் போராட்டத்தில் மூதாட்டி ஒருவர் பலியானது நல்லாண்டார்கொல்லை மற்றும் நெடுவாசல் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இப்போராட்டம் இன்று 21-வது நாளை எட்டியுள்ளது.

போராட்டத்தில் இளைஞர்கள், மாணவர்கள், விவசாயிகள், தன்னார்வ அமைப்பினர் மற்றும் அரசியல் கட்சியினர், திரையுலகினர் பங்கேற்று வருகின்றனர்.
ஹைட்ரோ கார்பன் திட்டம் தமிழகத்தில் செயல்படுத்தப்படாது என தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தார். அதே போல் மக்கள் ஏற்காத இந்த திட்டத்தை மத்திய அரசு தமிழகத்தில் செயல்படுத்தாது என மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
இதனால் நெடுவாசல் போராட்டம் முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் போராட்டத்தை விலக்கி கொள்ள போராட்டக்குழு முன்வரவில்லை. நெடுவாசல், வடகாடு, நல்லாண்டார் கொல்லையில் தொடர்ந்து போராட்டம் நீடிக்கிறது.
நேற்று மாலை நெடுவாசலில் இருந்து நல்லாண்டார் கொல்லை வரை பேரணி நடைபெற்றது. போராட்டக் குழுவினர் நிருபர்களிடம் கூறும்போது, நாடாளுமன்ற கூட்டத் தொடர் நாளை தொடங்க உள்ளது.
அப்போது தமிழக எம்.பி.க்கள் ஹைட்ரோ கார்பன் விவகாரம் தொடர்பாக கேள்வி எழுப்ப வேண்டும். மேலும் திட்டத்தை கைவிடவும், ரத்து செய்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடவும் வலியுறுத்த வேண்டும் என்றனர். அதுவரை நெடுவாசலில் போராட்டம் தொடரும் என்று திட்டவட்டமாக தெரிவித்தனர்.
விவசாயிகள் கூறும் போது, ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்யும் விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகள் கைவிட்ட நிலையில் நாங்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம். இயற்கை வளத்தையும் விவசாயத்தையும் பாதிக்கிற பல்வேறு திட்டங்களை மத்திய அரசு தமிழகத்தில் கொண்டு வந்திருக்கிறது. இதனை ஏற்றுக்கொள்ளாத மக்கள், வெகுண்டு எழுந்து பல கட்ட போராட்டங்களை நடத்தி வந்துள்ளனர்.

அதில் பெரும்பாலான திட்டங்கள் மக்களின் எதிர்ப்பு காரணமாக கைவிடப்படுவதும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுவதும் தொடர்கிறது. அந்த வரிசையில் தற்போது ஹைட்ரோ கார்பன் திட்டமும் இணைந்துள்ளது. இந்த திட்டத்திற்கு தடை விதிக்கப்படும் வரை எங்கள் போராட்டம் தொடரும் என்று விவசாயிகள் தெரிவித்தனர்.
ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக வடகாட்டில் இன்று 4-வது நாளாக போராட்டம் நடைபெற்று வருகிறது. நேற்று நடந்த போராட்டத்தில் இலங்கை கடற்படையால் சுட்டுக்கொல்லப்பட்ட தமிழக மீனவருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் மாணவர்கள், இளைஞர்கள், பெண்கள் கையில் மெழுகுவர்த்தி ஏற்றி மவுன அஞ்சலி செலுத்தினர்.






