என் மலர்tooltip icon

    புதுக்கோட்டை

    புதுக்கோட்டை மீனவர்கள் 8 பேர் இலங்கை கடற்படையால் சிறைப் பிடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
    அறந்தாங்கி:

    புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினத்தில் இருந்து 142 விசைப்படகுகளில் 600க்கும் மேற் பட்ட மீனவர்கள் நேற்று காலை கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.

    இதில் பாலமுருகன் என்பவரின் விசைப்படகில் சென்ற தங்கராசு (வயது 45), குவின்தாஸ் (19), சின்னப்பால் (48), வடிவேல் (35), அப்பு (18) ஆகிய 5 பேரும், ராஜேந்திரன் என்பவரின் விசைப்படகில் சென்ற அழகேந்திரன்(45), முருகானந்தம்(35), சேகர் (45) மற்றும் ராஜேந்திரன் ஆகிய 4பேரும் நேற்றிரவு நெடுந்தீவு அருகே மீன்பிடித்து கொண்டி ருந்தனர். பின்னர் ராஜேந்திரன் படகில் இருந்த 3 பேரும், பாலமுருகன் விசைப்படகில் ஏறி அதில் இருந்த மீனவர்களுடன் சேர்ந்து சாப்பிட்டு கொண்டிருந்தனர்.

    இந்நிலையில் அங்கு படகில் ரோந்து வந்த இலங்கை கடற்படையினர், எல்லைதாண்டி மீன்பிடித்ததாக கூறி பாலமுருகனின் விசைப்படகை சிறைப்பிடித்ததோடு, அதில் 8 பேரையும் கைது செய்தனர். ராஜேந்திரன் இலங்கை கடற்படையிடம் இருந்து தப்பி தனது விசைப்படகுடன் கரை திரும்பி விட்டார். சிறைப்பிடிக்கப்பட்ட 8 பேரையும், இலங்கை கடற்படையினர் விசைப்படகுடன் காங்கேசன் துறைமுகத்திற்கு அழைத்து சென்றனர்.

    இந்நிலையில் கரை திரும்பிய ராஜேந்திரன், 8 மீனவர்கள் சிறைப்பிடிக்கப்பட்டது குறித்து ஜெகதாப்பட்டினம் மீனவர்களிடம் தெரிவித்தார். இதனால் அதிர்ச்சியடைந்த மீனவர்களின் குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்து கண்ணீர் வடித்தனர். ஏற்கனவே கடந்த சில நாட்களுக்கு முன்பு புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் 9 பேரை இலங்கை கடற்படையினர் சிறைப்பிடித்து சென்றனர்.

    இதுவரை புதுக்கோட்டை மாவட்ட மீனவர்களின் 129 விசைப்படகுகள் மற்றும் 50க்கும் மேற்பட்ட மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் சிறைப்பிடிக்கப்பட்டுள்ளனர். அவர்களை மீட்க இன்னும் நடவடிக்கை எடுக்கப்படாமல் உள்ளது. இதனால் விசைப்படகு உரிமையாளர்கள் மற்றும் மீனவர்கள் குடும்பத்தினரின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே மீனவர்களை மீட்க மத்திய - மாநில அரசுகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புதுக்கோட்டை மாவட்ட மீனவ சங்க பிரதிநிதிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    சத்துணவு ஊழியர்கள் தங்கள் வாழ்வாதாரக் கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்ற சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    புதுக்கோட்டை:

    சத்துணவு ஊழியர்கள் தங்கள் வாழ்வாதாரக் கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்ற சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    போராட்த்தில் சத்துணவு ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். குடும்ப பாதுகாப்புடன் மாதாந்திர ஓய்வூதியம் வழங்க வேண்டும். ஓய்வு பெறும் ஊழியர்களுக்கு ஒட்டுமொத்தப் பணிக்கொடை ரூ.3 லட்சம் வழங்க வேண்டும். விலைவாசி உயர்வுக்கு ஏற்ப உணவு மானியத்தை உயர்த்தி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஊழியர்கள் 21 ந்தேதி முதல் தொடர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    புதுக்கோட்டை பழைய பேருந்து நிலையத்தில் நடைபெற்ற சாலை மறியல் போராட்டத்திற்கு தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் காமராஜ் தலைமை வகித்தார்.

    கூட்டத்தில் மாநில துணைத் தலைவர் கு.சத்தி, மாவட்டச் செயலாளள் அன்பு, பொருளாளர் துரை. அரங்கசாமி மற்றும் 171 பெண்கள் உட்பட 230 பேர் கைது செய்யப்பட்டனர். போராட்டத்தை ஆதரித்து தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் நாகராஜன், செயலாளர் ரெங்கசாமி, துணைத் தலைவர் கோவிந்தசாமி உள்ளிட்டோர் பலர் கலந்து கொண்டனர்.

    புதுக்கோட்டை வாலிபர் துபாய் நாட்டில் மர்மமான முறையில் இறந்தது அவரது உறவினர்கள் மற்றும் பரவாக்கோட்டை கிராமத்தில் பெரும் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.
    அறந்தாங்கி:

    புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே உள்ள பரவாக்கோட்டை கிராமத்தைச்சேர்ந்தவர் மாரிமுத்து (வயது 37). இவருக்கு திருமணமாகி காயத்திரி (27) என்ற மனைவியும், இரண்டு குழந்தைகளும் உள்ளனர்.

    விவசாய கூலித்தொழிலாளியாக வேலை பார்த்து வந்த மாரிமுத்து கடந்த 3 மாதங்களுக்கு முன்பு குடும்ப வறுமை காரணமாக துபாய் நாட்டிற்கு ஒப்பந்த அடிப்படையில் சென்றார். அங்கு அரபுடெக் என்ற தனியார் நிறுவனத்தில் கட்டிட தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.

    இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு மாரிமுத்துவின் மனைவி காயத்திரிக்கு துபாயில் இருந்து ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. எதிர்முனையில் பேசிய நபர் உங்கள் கணவர் மாரிமுத்து துபாயில் இறந்து விட்டார் என்றும், அவரது உடல் அங்குள்ள ரசிதியா என்ற தனியார் மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

    இதைக்கேட்டு தலையில் இடி விழுந்தது போல் அதிர்ச்சியடைந்த காயத்திரி கதறி அழுதார். மேலும் இது பற்றி தனது உறவினர்களுக்கும் தகவல் கொடுத்தார். மேலும் அதே ஊரைச் சேர்ந்த துபாய் நாட்டில் வேலை பார்த்து வரும் பூபதி என்பவரது உதவியையும் நாடினர்.

    மாரிமுத்துவின் திடீர் மரணத்திற்கு காரணம் என்ன? உடல்நலக்குறைவு ஏற்பட்டு இறந்தாரா? அல்லது வேறு ஏதாவது காரணமா? என்று விசாரித்து கூறுமாறு கேட்டுக்கொண்டனர். பூபதிக்கும், மாரிமுத்து இறந்த தகவல் மட்டுமே கிடைத்துள்ளது.

    மாரிமுத்து இறந்த தகவல் கேட்டு அவரது மனைவி காயத்திரி மற்றும் உறவினர்கள் கதறி அழுத காட்சி.

    இதற்கிடையே மாரிமுத்துவின் மனைவி காயத்திரி நேற்று புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் கணேசிடம் புகார் மனு கொடுத்தார். அதில் துபாய் நாட்டிற்கு வேலைக்கு சென்ற தனது கணவர் சாவில் சந்தேகம் இருப்பதாகவும், அவர் எப்படி இறந்தார் என விசாரணை நடத்த வேண்டும் என்றும், உடனடியாக கணவர் உடலை சொந்த ஊருக்கு கொண்டுவர ஏற்பாடு செய்யுமாறும், உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் தெரிவித்திருந்தார்.

    மேலும் சிவகங்கை தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் செந்தில்நாதன், இந்திய தூதரகம் மூலம் மாரிமுத்துவின் உடலை மீட்டு கொண்டுவர நடவடிக்கை எடுக்குமாறும் உதவி கோரியுள்ளார்.

    புதுக்கோட்டை வாலிபர் துபாய் நாட்டில் மர்மமான முறையில் இறந்தது அவரது உறவினர்கள் மற்றும் பரவாக்கோட்டை கிராமத்தில் பெரும் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.
    புதுக்கோட்டை மாவட்டம் வடகாட்டில் ஹைட்ரோ கார்பனால் பாதிக்கப்பட்ட நோயாளி போல் சித்தரித்து பொதுமக்கள் போராட்டம் பங்கேற்றனர்.
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் வடகாட்டில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இதில் தினமும் பல்வேறு இடங்களில் இருந்து பொதுமக்கள் கலந்து கொள்கின்றனர். மேலும் நூதன முறையில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

    இருப்பினும் மத்திய, மாநில அரசுகள் கண்டு கொள்ளாததால் அதிருப்தி அடைந்துள்ள அப்பகுதி பொதுமக்கள், அரசுகளின் கவனத்தை ஈர்க்கும் வகையில் போராட்டத்தை தீவிரப்படுத்தியுள்ளனர்.

    இந்நிலையில் இன்று நடந்த போராட்டத்தில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர். அவர்கள் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக கோ‌ஷம் எழுப்பினர். மேலும் ஹைட்ரோ கார்ப னால் பாதிக்கப்பட்ட நோயாளி போன்று சித்தரித்து பொதுமக்கள் போராட்டத்தில் பங்கேற்றனர்.

    கொடும்பாளூரில் உள்ள சத்திரக்குளத்தை சீரமைத்து தூர்வார வேண்டும், அங்கு போடப்பட்ட பட்டாவை ரத்து செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி காந்தியவாதி செல்வராஜ் செல்போன் டவரில் ஏறி போராட்டத்தில் ஈடுபட்டார்.
    விராலிமலை:

    புதுக்கோட்டை மாவட்டம் கொடும்பாளூரை சேர்ந்த காந்தியவாதி செல்வராஜ்(வயது70). இவர் பொது பிரச்சினைக்காக பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறார். மேலும் சைக்கிள் பயணம், நடைபயணம்மூலம் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்.

    இந்நிலையில் கொடும்பாளூரில் உள்ள சத்திரக்குளத்தை சீரமைத்து தூர்வார வேண்டும், அங்கு போடப்பட்ட பட்டாவை ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி இன்று காலை அங்குள்ள செல்போன் டவரில் ஏறி திடீரென போராட்டத்தில் ஈடுபட்டார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

    இது குறித்த தகவல் அறிந்ததும் விராலிமலை தாசில்தார் சதீஷ், போலீஸ் இன்ஸ்பெக்டர் செழியன் ஆகியோர் அங்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அவர் டவரில் இருந்து கீழே இறங்க மறுத்து விட்டார். இதையடுத்து சம்பவ இடத்திற்கு இலுப்பூர் தீயணைப்பு நிலைய வீரர் களும் வரவழைக்கப்பட்டனர்.

    பின்னர் தீயணைப்பு வீரர்கள், போலீசார், அதிகாரிகள் தொடர்ந்து நடத்திய பேச்சுவார்த்தைக்கு பிறகு செல்வராஜ் டவரில் இருந்து கீழே இறங்கினார். இதைத்தொடர்ந்து அவரை போலீசார் விராலிமலை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். அங்கு அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.


    அரசு விழாவில் அரசியல் பேசியதால் தி.மு.க-அ.தி.மு.க.வினர் இடையே மோதல் ஏற்பட்டது. இதனால் அங்கு பரபரப்பான சூழல் காணப்பட்டது.
    கீரனூர்:

    புதுக்கோட்டை மாவட்டம் கீரனூரில் ரூ.2 கோடியே 67 லட்சம் செலவில் லிப்ட், குளிர்சாதன வசதியுடன் புதிதாக கட்டப்பட்ட மாவட்ட உரிமையியல் நீதிமன்ற கட்டிட திறப்பு விழா நடைபெற்றது. விழாவிற்கு சென்னை ஐகோர்ட்டு புதுக்கோட்டை மாவட்ட பொறுப்பு நீதிபதி செல்வி வேலுமணி தலைமை தாங்கி, புதிய கட்டிடத்தை குத்துவிளக்கு ஏற்றி திறந்து வைத்தார்.

    சென்னை ஐகோர்ட்டு நீதிபதி சுரேஷ்குமார், அமைச்சர் விஜயபாஸ்கர், ஆறுமுகம் எம்.எல்.ஏ., மாவட்ட கலெக் டர் கணேஷ், போலீஸ் சூப்பிரண்டு லோகநாதன், நீதிபதி தமிழ்செல்வி, புதுக் கோட்டை மாவட்ட தலைமை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி அனில்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    விழாவில் அமைச்சர் விஜயபாஸ்கர் பேசும்போது, ‘மாண்புமிகு புரட்சி தலைவி அம்மா...’ என்று பேச்சை தொடங்கினார். அப்போது விழாவில் கலந்து கொண்ட தி.மு.க. வக்கீல்கள் எழுந்து நின்று, அரசியல் பேசாதீர்கள் என்று கூச்சலிட்டனர். அவர்களுக்கு எதிராக அ.தி. மு.க. வக்கீல்கள் மற்றும் அ.தி. மு.க. நிர்வாகிகளும் கோ‌ஷ மிட்டனர்.

    இதனால் தி.மு.க.- அ.தி.மு.க.வினருக்கு இடையே மோதல் ஏற்பட்டது. அப்போது இருதரப்பினரும் ஒருவர் மீது ஒருவர் அங்கிருந்த நாற்காலிகளை தூக்கி வீசினர். இதனால் அங்கு பரபரப்பான சூழல் ஏற்பட்டது. ஆனாலும் அமைச்சர் விஜயபாஸ்கர் பேச்சை நிறுத்தாமல் தொடர்ந்து பேசி முடித்தார்.

    இந்த சம்பவத்தை தொடர்ந்து அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். அவர்கள் அ.தி. மு.க. மற்றும் தி.மு.க. வக்கீல்களுடன் சமரச பேச்சு வார்த்தை நடத்தினர்.

    இந்த நிலையில் தி.மு.க. வக்கீல் தவமணி, நீதிமன்ற கட்டிட திறப்பு விழாவின்போது, அ.தி.மு.க.வை சேர்ந்த பாலசுப்பிரமணியன், கார்த்திக் பிரபாகரன் மற்றும் 20 பேர் கொண்ட கும்பல் தன்னை தாக்கியதாக கீரனூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    முன்னதாக புதுக்கோட்டை வடக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் செல்லப்பாண்டியன் தலைமையில் அந்த கட்சியினர், அமைச்சர் விஜயபாஸ்கர் மீது வழக்குகள் நடந்து கொண்டிருப்பதால், அவர் நீதிமன்ற கட்டிட திறப்பு விழாவில் கலந்து கொள்ளக் கூடாது என்று கூறி அவருக்கு எதிராக கருப்பு கொடி காட்டுவதற்காக கீரனூர் கடைவீதியில் இருந்து ஊர்வலமாக வந்தனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்த கீரனூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, கருப்பு கொடியுடன் ஊர்வலமாக சென்ற செல்லப்பாண்டியன் உள்பட 36 பேரை கைது செய்தனர்.
    குழந்தைகளின் பார்வை இழப்பை தடுக்கும் நோக்கத்துடன் வைட்டமின் ‘ஏ’ திரவம் நாளை 20-ந்தேதி முதல் 25-ந்தேதி வரை புதுக்கோட்டை மாவட்டத்தில் வழங்கப்பட உள்ளது.

    புதுக்கோட்டை:

    தேசிய வைட்டமின் ‘ஏ’ குறைபாட்டு நோய்கள் கட்டுப்பாட்டு திட்டத்தின் கீழ் குழந்தைகளின் பார்வை இழப்பை தடுக்கும் நோக்கத்துடன் வைட்டமின் ‘ஏ’ திரவம் நாளை 20-ந்தேதி முதல் 25-ந்தேதி வரை புதுக்கோட்டை மாவட்டத்தில் வழங்கப்பட உள்ளது.

    6 மாதம் முதல் 60 மாதம் வரை உள்ள குழந்தைகளுக்கு 6 மாதத்திற்கு ஒரு முறை 1 வயதுக்கு கீழ் 1 மில்லியும் 1 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு 2 மில்லியும் வழங்கப்படுகிறது. புதுக்கோட்டை சுகாதார மாவட்டத்தில் உத்தேசமாக 74240 குழந்தைகளுக்கு வைட்டமின் ‘ஏ’ திரவம் வழங்கப்பட உள்ளது. துணை சுகாதார மையங்கள், அங்கன்வாடி மையங்களின் மூலம் கிராம சுகாதார செவிலியர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் உதவியுடன் இத்திட்டத்தை செயல்படுத்த உள்ளனர்.

    5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு வைட்டமின் ‘ஏ’ திரவம் வழங்கி வைட்ட மின் ‘ஏ’ குறைபாட்டு நோய்களிலிருந்தும் பார்வையிழப்பிலிருந்தும் குழந்தைகளை காப்போம். இத்தகவலை புதுக்கோட்டை சுகாதார பணிகள் துணை இயக்குநர் பரணிதரன் தெரிவித்துள்ளார்.

    புதுக்கோட்டை மாவட்டம் நல்லாண்டார்கொல்லை, வடகாட்டில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் நல்லாண்டார்கொல்லை, வடகாட்டில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இப்போராட்டத்தில் தினமும் பல்வேறு இடங்களில் இருந்து ஏராளமான பொதுமக்கள் வந்து கலந்து கொள்கின்றனர்.

    குறிப்பாக பெண்கள் பலர் பங்கேற்று வருகின்றனர். நல்லாண்டார் கொல்லையில் இன்று 31-வது நாளாகவும், வடகாட்டில் 14-வது நாளாகவும் போராட்டம் நீடிக்கிறது.

    போராட்டத்தில் பங்கேற்றுள்ள பொதுமக்கள் கூறியதாவது:-



    ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து நாங்கள் போராடி வருகிறோம். ஆனால் இதுவரை மத்திய, மாநில அரசுகள் செவி சாய்க்கவே இல்லை. நாங்கள் சாகுபடி செய்த கடலை பயிரை தற்போது அறுவடை செய்யும் காலம் இது. ஆனால் இந்த ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக நாங்கள் போராட்டம் நடத்தி வருவதால் அறுவடை பணி நடக்கவில்லை.

    போராட்டத்தில் விவசாயிகள், வியாபாரிகள், அலுவலர்கள், மாணவ, மாணவிகள் என அனைத்து தரப்பினரும் கலந்து கொள்வதால் இப்பகுதியின் இயல்பு வாழ்க்கையே பாதிக்கப்பட்டுள்ளது. ஆனால் அரசு தரப்பில் எந்தவித பதிலும் இல்லை.

    விளைநிலத்தையும், விவசாயத்தையும் பாதிக்கும் இத்திட்டத்தை மத்திய மாநில அரசுகள் கைவிடும் வரையில் போராட்டம் தொடரும். இனி வரும் நாட்களில் எங்கள் போராட்டத்தின் தன்மை அதிகரிக்கும். ஹைட்ரோ கார்பன் திட்டத்தை மத்திய மாநில அரசுகள் கைவிடும் வரை யாருக்காகவும் எதற்காகவும் எங்கள் போராட்டத்தை கைவிட மாட்டோம் என்றனர்.

    நல்லாண்டார் கொல்லையில் போராட்டம் தொடங்கி 30 நாள் ஆகியும் அரசு இது வரை தங்களது கோரிக்கையை கண்டுகொள்ளாத தால் 30-வது நாள் சடங்கு செய்வது போல் ஹைட்ரோ கார்பன் ஆய்வு ஆழ்துளை குழாயை சுற்றிலும் பானையில் தண்ணீரை வைத்து கொண்டு சுற்றி வந்து பானையை உடைத்தனர்.

    பெண்கள் தலையிலும், மார்பிலும் அடித்துக் கொண்டும் ஒப்பாரி வைத்தும் அழுதனர். இளைஞர்கள் தரையில் உருண்டு புரண்டு அழுது ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராகவும், மத்திய மாநில அரசுகளுக்கு எதிராகவும் கோ‌ஷம் எழுப்பினர்.

    இது பற்றி அப்பகுதி பொது மக்கள் கூறும்போது, கடந்த மாதம் இங்கு ஹைட்ரோ கார்பன் திட்டம் செயல்படுத்தப்படும் என்று மத்திய அரசு அறிவித்தது. அன்று முதல் எங்கள் குடும்பத்தை, குழந்தைகளையும், ஆடு மாடுகளையும் கவனிக்க முடியாமல் தவித்து வருகிறோம். ஏதோ வீட்டில் துக்கம் நடந்தது போல் அழுது புலம்பி கொண்டிருக்கிறோம்.

    ஆனால் மத்திய மாநில அரசுகள் மவுனமாகவே இருந்து வருகின்றன. எத் தனை நாட்கள் ஆனாலும் இத்திட்டத்தை கைவிடும் வரை எங்கள் போராட்டத்தை கைவிட மாட்டோம். எங்கள் உயிரை கொடுத்தேனும் இத் திட்டத்தை தடுத்து நிறுத்துவோம் என்றனர்.
    விராலிமலையில் ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கோரி பொதுமக்கள் மறியல் ஈடுபட்டனர். சிலர் போலீசார் மீது கற்களை வீசினர். போலீசார்-பஸ்கள் மீது கல்வீசி தாக்கிய தி.மு.க.வினர் உள்பட 51 பேர் கைது செய்யப்பட்டனர்.
    விராலிமலை:

    புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் கீரனூர் பிரிவு சாலையில் உள்ள அம்மன் குளத்தில் கிராம மக்கள் சார்பாக ஜல்லிக்கட்டு நடத்துவது வழக்கம்.

    ஆனால் சில காரணங்கள் மற்றும் ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்ட தடை போன்றவற்றால் கடந்த 8 ஆண்டுகளாக ஜல்லிக்கட்டு நடைபெறவில்லை. தற்போது ஜல்லிக்கட்டுக்கான தடை நீக்கப்பட்டதை தொடர்ந்து விராலிமலை பகுதி மக்கள் அம்மன் குளத்தில் இன்று ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி கேட்டு கலெக்டரிடம் மனு அளித்தனர்.

    இதைத்தொடர்ந்து ஜல்லிக்கட்டு நடைபெறும் இடத்தில் தடுப்பு வேலிகள், வாடிவாசல் அமைப்பது உள்ளிட்ட ஏற்பாடுகளை செய்யும் பணியில் கிராம மக்கள் ஈடுபட்டு வந்தனர். அந்த பணிகளை கலெக்டர் கணேஷ் தலைமையிலான குழுவினர் பார்வை யிட்டு ஆய்வு செய்தனர்.

    இந்த நிலையில் நேற்று மாலை திடீரென அம்மன்குளத்தில் ஜல்லிக்கட்டு நடத்த மாவட்ட நிர்வாகம் சார்பில் அனுமதி மறுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் திரண்டு வந்து விராலி மலை சோதனை சாவடி பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    இதையடுத்து அங்கு சென்ற போலீசார், பொதுமக்களிடம் சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். மேலும் மறியலில் ஈடுபட்ட பொதுமக்களில் ஒரு பகுதியினர், விராலிமலை புற வழிச்சாலை இலுப்பூர் பிரிவு சாலையில் உள்ள பாலத்தில் திருச்சி - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர். அங்கு போலீசார் சென்று பேச்சுவார்த்தை நடத்தினர்.

    சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியும், பொது மக்கள் மறியல் போராட்டத்தை கைவிட மறுத்தனர். இதனால் அந்த வழியாக போக்குவரத்து பாதிக்கப்பட்டு வாகனங்கள் அனைத்தும் அணிவகுத்து நின்றன.

    இதைத்தொடர்ந்து மறியலில் ஈடுபட்டவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர். இதனால் பொதுமக்கள் நாலாபுறமும் சிதறி ஓடினர். அப்போது சிலர் போலீசார் மீது கற்களை வீசினர். இதில் சாலையில் நின்ற பஸ்கள் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட வாகனங்களின் கண்ணாடிகள் உடைந்தன. இந்த சம்பவத்தால் விராலி மலை பகுதியில் கடைகள் அடைக்கப்பட்டன.

    இந்த நிலையில் பொது மக்கள் கல்வீசி தாக்கியதில் மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு இளங்கோவன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் அந்தோணி குரூஸ், போலீஸ் காரர்கள் கென்னடி, விஜயகுமார், பாலாஜி, குமரேசன் மற்றும் கரூரை சேர்ந்த அரசு பஸ் கண்டக்டர் கருப்பையா ஆகியோர் காயமடைந்தனர். அவர்கள் அனைவரும் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் அந்தோணி குரூசுக்கு காயமடைந்த பகுதியில் 17 தையல்கள் போடப்பட்டுள்ளது.

    இந்த சம்பவம் தொடர்பாக இன்று காலை 51 பேரை போலீசார் கைது செய்தனர். இதில் சிலர் தி.மு.க. பிரமுகர்கள் ஆவர். அவர்கள் மீது அரசு சொத்துக்களை சேதப்படுத்துதல், கொலை முயற்சி, அரசு ஊழியர்களை பணி செய்ய விடாமல் தடுத்தது, பொதுமக்கள் மீது கொலை வெறி தாக்குதல் உள்பட 12 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    விராலிமலை பகுதியில் தொடர்ந்து பதற்றம் நிலவி வருவதால் 1,500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர். திருச்சி சரக ஐ.ஜி. வரதராஜ் நேற்றிரவு விராலிமலை சென்று சம்பவம் குறித்து விசாரணை நடத்தினார். எஸ்.பி.க்கள் புதுக்கோட்டை லோகநாதன், திருச்சி செந்தில்குமார், பெரம்பலூர் சோனல் சந்திரா, கரூர் ராஜசேகரன் ஆகியோர் தலைமையில் 20 டி.எஸ்.பி.க்கள், 40 இன்ஸ்பெக்டர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் வன்முறை சம்பவத்தில் தொடர்புடைய மேலும் சிலரை கைது செய்ய 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.

    நல்லாண்டார்கொல்லையில் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவத்து இளைஞர்கள் தங்கள் கழுத்தில் தூக்கு கயிற்று மாட்டி போராட்டம் நடத்தினர்.
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து 22 நாட்களாக நடந்த போராட்டம் கடந்த 10-ந்தேதி தற்காலிகமாக வாபஸ் பெறப்பட்டது.

    மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், அமைச்சர் விஜயபாஸ்கர் ஆகியோரின் உறுதிமொழியை ஏற்றும், போராட்டக்குழுவினர் மத்திய பெட்ரோலிய துறை மந்திரி தர்மேந்திர பிரதானை சந்தித்து முறையிடவும் ஏற்பாடு செய்வதாக கூறப்பட்டதை ஏற்றும் இந்த போராட்டம் வாபஸ் ஆனது.

    ஆனாலும் நல்லாண்டார் கொல்லை, வடகாடு கிராம மக்கள் இதனை ஏற்க மறுத்து விட்டனர். ஹைட்ரோ கார்பன் திட்டத்தை மத்திய அரசு ரத்து செய்யும் வரை போராட்டத்தை கைவிட மாட்டோம் என்று உறுதியாக உள்ளனர். 29-வது நாளாக நல்லாண்டார்கொல்லையிலும், வடகாட்டில் 12-வது நாளாகவும் மக்கள் போராடி வருகிறார்கள்.

    நல்லாண்டார் கொல்லையில் நேற்று நடந்த போராட்டத்தின்போது ஓ.என்.ஜி.சி. நிறுவனம் சார்பில் அமைக்கப்பட்டுள்ள ஆழ்துளை கிணற்றை சுற்றி நின்றவாறு அந்த குழாயுடன் இணைக்கப்பட்ட தூக்கு கயிற்றை இளைஞர்கள் தங்கள் கழுத்தில் மாட்டினர்.

    பாரம்பரியமாக உழவு, வேளாண் பணி செய்யும் இந்த இடத்தில் விவசாயத்தை நாசப்படுத்தும் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்தக்கூடாது. அதையும் மீறி அடக்கு முறையின் அடிப்படையில் திட்டத்தை நிறைவேற்ற முயற்சித்தால் நாங்கள் தூக்குமாட்டி உயிரை இழக்க தயாராக உள்ளோம் என்று ஆவேசத்துடன் அவர்கள் கூறினர்.

    அதேபோல் பெண்கள் தங்கள் எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் அந்த ஆழ்குழாய் கிணறு அருகே நிலத்தை உழுது நாற்று நட்டனர். மேலும் மத்திய அரசை எதிர்த்து கோ‌ஷங்களும் எழுப்பினர்.

    வடகாட்டில் நடந்த போராட்டத்தில் தெற்குப்பட்டி, பள்ளத்திவிடுதி, பாப்பான்பட்டி, விநாயகம்பட்டி உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் தங்கள் பகுதியில் விளைந்த விவசாய பயிர்களை கையில் ஏந்தியும், தலையில் சுமந்தும் ஊர்வலமாக வந்தனர்.

    கம்மங்கூழ், கேழ்வரகு கூழ் பானைகளை எடுத்து வந்த அவர்கள் விளைநிலமும், விவசாயமும் தான் முக்கியம். கம்மங்கூழை குடித்து உயிர் வாழ்ந்தாலும் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை மட்டும் அனுமதிக்க மாட்டோம் என்றனர். பொன்விளையும் இந்த விவசாய பூமியை எங்களின் அடுத்த சந்ததியினருக்கு எடுத்து செல்வது கடமை. அதற்காக உயிரை கொடுத்தாவது ஹைட்ரோ கார்பன் திட்டத்தை தடுப்போம் என்றும் தெரிவித்தனர்.
    புதுக்கோட்டை அருகே பள்ளி மாணவர்களை ஏற் றிச் சென்ற வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 15-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் காயம் அடைந்தனர்.
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட் டம், திருக்கட்டளை பகுதியை சேர்ந்த மாணவ, மாணவிகள் பலர் புதுக்கோட்டை பகுதியில் உள்ள பள்ளிகளில் படித்து வருகின்றனர். அவர்கள் தனியார் வேன் மூலம் பள்ளிக்கு செல்வது வழக்கம்.

    இந்த நிலையில் இன்று காலை 15-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பள்ளிக்கு வேனில் சென்றனர். வேனை மேட்டுப்பட்டியை சேர்ந்த லட்சுமணன் ஓட்டினார். திருக்கட்டளை மெயின் ரோட்டில் செல்லும் போது எதிரே டிப்பர் லாரி வந்தது.

    அதில் மோதாமல் இருக்க டிரைவர் வேனை திருப்பிய போது, நிலை தடுமாறி சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் வேனில் இருந்த மாணவிகள் கிருஷ்ணபிரியா, கோபிகா, காமாட்சி, மாணவர்கள் சரவணன், வெங்கடசேன், அருண் உள்பட 15-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் காயம் அடைந்தனர்.

    இது குறித்த தகவல் அறிந்ததும் 108 ஆம்புலன்ஸ் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் காயமடைந்த மாணவ, மாணவிகளை மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    விபத்து குறித்த தகவல் அறிந்ததும் குழந்தைகளின் பெற்றோர்கள் பள்ளிக்கும், ஆஸ்பத்திரிக்கு பதறியடித்துக்கொண்டு ஓடிவந்தனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த விபத்து குறித்து கணேஷ் நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சேறும், சகதியும் தான் எங்கள் உயிர். விவசாயிகளின் வாழ்வாதாரத்தை கெடுக்கும் ஹைட்ரோ கார்பன் திட்டம் எங்களுக்கு எப்போதும் வேண்டாம் என்று பொதுமக்கள் போராட்டம் நடத்தினர்.

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் உள்ளிட்ட பகுதிகளில் ஹைட்ரோ கார்பன் எனும் இயற்கை எரிவாயு எடுக்க கடந்த மாதம் (பிப்ரவரி) 15-ந்தேதி மத்திய அரசு அனுமதி வழங்கியது.

    இத்திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நெடுவாசலில் நாடியம்மன் கோவில் முன்பு உள்ள மரத்தடியில் அப்பகுதியினர் கடந்த மாதம் 16-ந் தேதி அறவழி போராட்டத்தை தொடங்கினர்.

    கடந்த 9-ந்தேதி போராட்டக்குழுவினருடன் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், அமைச்சர் விஜயபாஸ்கர் ஆகியோர் பேச்சு வார்த்தை நடத்திய பின் நெடுவாசலில் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.

    இருப்பினும் திட்டத்திற்கு எதிராக நல்லாண்டார்கொல்லையிலும், வடகாட்டிலும் போராட்டம் தொடரும் என அப்பகுதி பொதுமக்கள் அறிவித்தனர். அதேபோல 2 இடங்களிலும் தொடர்ந்து போராட்டம் நீடித்து வரும் நிலையில், ஒவ்வொரு நாளும் வித்தியாசமான முறையில் தங்களது எதிர்ப்பை தெரிவித்து அப்பகுதியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

    வடகாடு மற்றும் நல்லாண்டார்கொல்லை பகுதியையொட்டிய பக்கத்து கிராமங்களை சேர்ந்தவர்களும் ஆதரவு தெரிவித்து இப்போராட்டத்தில் பங்கேற்று வருகின்றனர்.

    இந்த நிலையில் வடகாட்டில் பஸ் நிறுத்தம் அருகே நேற்று 9-வது நாளாக தர்ணா போராட்டம் நீடித்தது. வடகாடு மற்றும் பக்கத்து கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் பலர் பலா, மா, வாழை, நிலக்கடலை, மிளகுச்செடி உள்பட தாங்கள் விளைவித்த விளைபொருட்களுடன் கையில் கருப்பு கொடியை ஏந்தியபடி வடகாடு ஊரின் எல்லைப்பகுதியில் இருந்து ஊர்வலமாக போராட்ட களத்திற்கு வந்தனர். ஊர்வலத்தின் போது அத்திட்டத்திற்கு எதிராகவும், மத்திய அரசுக்கு எதிராகவும் கோ‌ஷங்களை எழுப்பியபடி வந்தனர்.

    இதேபோல நல்லாண்டார் கொல்லையிலும் இயற்கை எரிவாயு எடுக்க எதிர்ப்பு தெரிவித்து நேற்று 26-வது நாளாக போராட்டம் நடந்தது. போராட்ட களத்திற்கு ஆடு, மாடுகளை அழைத்து வந்து பந்தல் கம்பத்தில் கட்டி வைத்து பொதுமக்கள் போராட்டத்தில் பங்கேற்றனர். நல்லாண்டார் கொல்லையில் ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தினர் அமைத்துள்ள ஆழ்துளை கிணற்றில் உள்ள இரும்பு குழாய் அருகே இளைஞர்கள் பலர் உடலில் சேறும், சகதியையும் பூசிக்கொண்டு தங்களது எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் நேற்று நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    அப்போது அவர்கள் கூறு கையில், இந்த சேறும், சகதியும் தான் எங்கள் உயிர். விவசாயிகளின் வாழ்வாதாரத்தை கெடுக்கும் ஹைட்ரோ கார்பன் திட்டம் எங்களுக்கு எப்போதும் வேண்டாம் என்றனர்.

    இதில் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டு இத்திட்டத்திற்கு எதிராக கோ‌ஷங்களை எழுப்பினர். திட்டத்தை கைவிடுவதாக மத்திய அரசு அறிவிக்கும் வரை போராட்டம் தொடரும் என போராட்டக்குழுவினர் தெரிவித்தனர்.

    போராட்டக்களத்தில் சிறுவர்கள் பலர், திட்டத்துக்கு எதிரான வாசகங்கள் எழுதிய பதாகைகளை கையில் ஏந்தியிருந்தனர். வடகாட்டில் போராட்ட களத்திற்கு தினமும் பொதுமக்கள் ஏராளமானோர் வருகை தருவதால் போராட்டம் தீவிரமடைந்துள்ளது.

    வடகாடு கிராமத்தில் 10-வது நாளாகவும், நல்லாண்டார்கொல்லையில் 27-வது நாளாகவும் இன்றும் போராட்டம் தொடர்கிறது.

    இயற்கை எரிவாயு திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், தங்கள் பகுதிகளில் ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தால் அமைக்கப்பட்ட ஆழ்குழாய் கிணறுகளை மூடவேண்டும், இதற்காக தமிழக அரசு சட்டமன்றத்தில் அவசர சட்டம் பிறப்பிக்க வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்கள்.

    ×