என் மலர்tooltip icon

    செய்திகள்

    நல்லாண்டார்கொல்லையில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து கழுத்தில் தூக்கு கயிறு மாட்டிய மக்கள்
    X

    நல்லாண்டார்கொல்லையில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து கழுத்தில் தூக்கு கயிறு மாட்டிய மக்கள்

    நல்லாண்டார்கொல்லையில் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவத்து இளைஞர்கள் தங்கள் கழுத்தில் தூக்கு கயிற்று மாட்டி போராட்டம் நடத்தினர்.
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து 22 நாட்களாக நடந்த போராட்டம் கடந்த 10-ந்தேதி தற்காலிகமாக வாபஸ் பெறப்பட்டது.

    மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், அமைச்சர் விஜயபாஸ்கர் ஆகியோரின் உறுதிமொழியை ஏற்றும், போராட்டக்குழுவினர் மத்திய பெட்ரோலிய துறை மந்திரி தர்மேந்திர பிரதானை சந்தித்து முறையிடவும் ஏற்பாடு செய்வதாக கூறப்பட்டதை ஏற்றும் இந்த போராட்டம் வாபஸ் ஆனது.

    ஆனாலும் நல்லாண்டார் கொல்லை, வடகாடு கிராம மக்கள் இதனை ஏற்க மறுத்து விட்டனர். ஹைட்ரோ கார்பன் திட்டத்தை மத்திய அரசு ரத்து செய்யும் வரை போராட்டத்தை கைவிட மாட்டோம் என்று உறுதியாக உள்ளனர். 29-வது நாளாக நல்லாண்டார்கொல்லையிலும், வடகாட்டில் 12-வது நாளாகவும் மக்கள் போராடி வருகிறார்கள்.

    நல்லாண்டார் கொல்லையில் நேற்று நடந்த போராட்டத்தின்போது ஓ.என்.ஜி.சி. நிறுவனம் சார்பில் அமைக்கப்பட்டுள்ள ஆழ்துளை கிணற்றை சுற்றி நின்றவாறு அந்த குழாயுடன் இணைக்கப்பட்ட தூக்கு கயிற்றை இளைஞர்கள் தங்கள் கழுத்தில் மாட்டினர்.

    பாரம்பரியமாக உழவு, வேளாண் பணி செய்யும் இந்த இடத்தில் விவசாயத்தை நாசப்படுத்தும் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்தக்கூடாது. அதையும் மீறி அடக்கு முறையின் அடிப்படையில் திட்டத்தை நிறைவேற்ற முயற்சித்தால் நாங்கள் தூக்குமாட்டி உயிரை இழக்க தயாராக உள்ளோம் என்று ஆவேசத்துடன் அவர்கள் கூறினர்.

    அதேபோல் பெண்கள் தங்கள் எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் அந்த ஆழ்குழாய் கிணறு அருகே நிலத்தை உழுது நாற்று நட்டனர். மேலும் மத்திய அரசை எதிர்த்து கோ‌ஷங்களும் எழுப்பினர்.

    வடகாட்டில் நடந்த போராட்டத்தில் தெற்குப்பட்டி, பள்ளத்திவிடுதி, பாப்பான்பட்டி, விநாயகம்பட்டி உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் தங்கள் பகுதியில் விளைந்த விவசாய பயிர்களை கையில் ஏந்தியும், தலையில் சுமந்தும் ஊர்வலமாக வந்தனர்.

    கம்மங்கூழ், கேழ்வரகு கூழ் பானைகளை எடுத்து வந்த அவர்கள் விளைநிலமும், விவசாயமும் தான் முக்கியம். கம்மங்கூழை குடித்து உயிர் வாழ்ந்தாலும் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை மட்டும் அனுமதிக்க மாட்டோம் என்றனர். பொன்விளையும் இந்த விவசாய பூமியை எங்களின் அடுத்த சந்ததியினருக்கு எடுத்து செல்வது கடமை. அதற்காக உயிரை கொடுத்தாவது ஹைட்ரோ கார்பன் திட்டத்தை தடுப்போம் என்றும் தெரிவித்தனர்.
    Next Story
    ×