search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விராலிமலையில் ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கோரி மறியல்: தி.மு.க.வினர் உள்பட 51 பேர் கைது
    X

    விராலிமலையில் ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கோரி மறியல்: தி.மு.க.வினர் உள்பட 51 பேர் கைது

    விராலிமலையில் ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கோரி பொதுமக்கள் மறியல் ஈடுபட்டனர். சிலர் போலீசார் மீது கற்களை வீசினர். போலீசார்-பஸ்கள் மீது கல்வீசி தாக்கிய தி.மு.க.வினர் உள்பட 51 பேர் கைது செய்யப்பட்டனர்.
    விராலிமலை:

    புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் கீரனூர் பிரிவு சாலையில் உள்ள அம்மன் குளத்தில் கிராம மக்கள் சார்பாக ஜல்லிக்கட்டு நடத்துவது வழக்கம்.

    ஆனால் சில காரணங்கள் மற்றும் ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்ட தடை போன்றவற்றால் கடந்த 8 ஆண்டுகளாக ஜல்லிக்கட்டு நடைபெறவில்லை. தற்போது ஜல்லிக்கட்டுக்கான தடை நீக்கப்பட்டதை தொடர்ந்து விராலிமலை பகுதி மக்கள் அம்மன் குளத்தில் இன்று ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி கேட்டு கலெக்டரிடம் மனு அளித்தனர்.

    இதைத்தொடர்ந்து ஜல்லிக்கட்டு நடைபெறும் இடத்தில் தடுப்பு வேலிகள், வாடிவாசல் அமைப்பது உள்ளிட்ட ஏற்பாடுகளை செய்யும் பணியில் கிராம மக்கள் ஈடுபட்டு வந்தனர். அந்த பணிகளை கலெக்டர் கணேஷ் தலைமையிலான குழுவினர் பார்வை யிட்டு ஆய்வு செய்தனர்.

    இந்த நிலையில் நேற்று மாலை திடீரென அம்மன்குளத்தில் ஜல்லிக்கட்டு நடத்த மாவட்ட நிர்வாகம் சார்பில் அனுமதி மறுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் திரண்டு வந்து விராலி மலை சோதனை சாவடி பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    இதையடுத்து அங்கு சென்ற போலீசார், பொதுமக்களிடம் சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். மேலும் மறியலில் ஈடுபட்ட பொதுமக்களில் ஒரு பகுதியினர், விராலிமலை புற வழிச்சாலை இலுப்பூர் பிரிவு சாலையில் உள்ள பாலத்தில் திருச்சி - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர். அங்கு போலீசார் சென்று பேச்சுவார்த்தை நடத்தினர்.

    சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியும், பொது மக்கள் மறியல் போராட்டத்தை கைவிட மறுத்தனர். இதனால் அந்த வழியாக போக்குவரத்து பாதிக்கப்பட்டு வாகனங்கள் அனைத்தும் அணிவகுத்து நின்றன.

    இதைத்தொடர்ந்து மறியலில் ஈடுபட்டவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர். இதனால் பொதுமக்கள் நாலாபுறமும் சிதறி ஓடினர். அப்போது சிலர் போலீசார் மீது கற்களை வீசினர். இதில் சாலையில் நின்ற பஸ்கள் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட வாகனங்களின் கண்ணாடிகள் உடைந்தன. இந்த சம்பவத்தால் விராலி மலை பகுதியில் கடைகள் அடைக்கப்பட்டன.

    இந்த நிலையில் பொது மக்கள் கல்வீசி தாக்கியதில் மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு இளங்கோவன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் அந்தோணி குரூஸ், போலீஸ் காரர்கள் கென்னடி, விஜயகுமார், பாலாஜி, குமரேசன் மற்றும் கரூரை சேர்ந்த அரசு பஸ் கண்டக்டர் கருப்பையா ஆகியோர் காயமடைந்தனர். அவர்கள் அனைவரும் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் அந்தோணி குரூசுக்கு காயமடைந்த பகுதியில் 17 தையல்கள் போடப்பட்டுள்ளது.

    இந்த சம்பவம் தொடர்பாக இன்று காலை 51 பேரை போலீசார் கைது செய்தனர். இதில் சிலர் தி.மு.க. பிரமுகர்கள் ஆவர். அவர்கள் மீது அரசு சொத்துக்களை சேதப்படுத்துதல், கொலை முயற்சி, அரசு ஊழியர்களை பணி செய்ய விடாமல் தடுத்தது, பொதுமக்கள் மீது கொலை வெறி தாக்குதல் உள்பட 12 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    விராலிமலை பகுதியில் தொடர்ந்து பதற்றம் நிலவி வருவதால் 1,500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர். திருச்சி சரக ஐ.ஜி. வரதராஜ் நேற்றிரவு விராலிமலை சென்று சம்பவம் குறித்து விசாரணை நடத்தினார். எஸ்.பி.க்கள் புதுக்கோட்டை லோகநாதன், திருச்சி செந்தில்குமார், பெரம்பலூர் சோனல் சந்திரா, கரூர் ராஜசேகரன் ஆகியோர் தலைமையில் 20 டி.எஸ்.பி.க்கள், 40 இன்ஸ்பெக்டர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் வன்முறை சம்பவத்தில் தொடர்புடைய மேலும் சிலரை கைது செய்ய 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×