என் மலர்tooltip icon

    புதுக்கோட்டை

    5 மாதங்களாகியும் கூலி வழங்காததை கண்டித்து குன்றாண்டார்கோவில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு விவசாய தொழிலாளர்கள் போராட்டம் நடத்தினர்.
    கீரனூர்:

    குன்றாண்டார்கோவில் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஊராட்சிகளில் தேசிய வேலை உறுதித்திட்டத்தில் அரசு அறிவித்த 150 நாள் வேலை அமல்படுத்தப்படவில்லை. சட்டப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட ரூ.203 கூலியும் வழங்கப்படவில்லை. செய்த வேலைக்கு 4, 5 மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை என கூறியும், போராட்டம் நடத்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் மீது போடப்பட்ட பொய் வழக்கை திரும்ப பெற வலியுறுத்தியும் நேற்று குன்றாண்டார்கோவில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு விவசாய தொழிலாளர்கள் போராட்டம் நடத்தினர்.

    போராட்டத்திற்கு அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் ஒன்றிய செயலாளர் மருதப்பா தலைமை தாங்கினார். மாநில செயலாளர் பக்கிரிசாமி கண்டன உரையாற்றி பேசும் போது கூறியதாவது:-

    அரசு விவசாய தொழிலாளர்களின் நிலையை புரிந்துகொள்ளவில்லை. வறட்சியின் காரணமாக 100 நாள் வேலையை 150 நாளாக உயர்த்தி அரசு அறிவித்தது. ஆனால் இது பெரும்பாலான ஊராட்சிகளில் அமல்படுத்தவில்லை. அன்றாடம் கிடைக்கும் கூலியை வைத்தே விவசாய தொழிலாளர்கள் வயிற்றைக் கழுவ வேண்டிய நிலையில் உள்ளனர். இப்படி பாவப்பட்ட மக்களின் கூலியை 5 மாதத்திற்கும் மேலாக நிறுத்தி வைப்பது கொடுமையான செயலாகும். கூலிப்பாக்கியை உடனடியாக செலுத்துவதற்கும், வருடத்திற்கு 150 நாட்கள் வேலை வழங்குவதோடு அரசு நிர்ணயித்த கூலியை குறைக்காமல் வழங்குவதற்கும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    போராட்டத்தில் மாவட்ட தலைவர் துரைச்சந்திரன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஸ்ரீதர், ஒன்றிய செயலாளர் தங்கவேல், கரும்பு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் பீமராஜ் மற்றும் சங்க நிர்வாகிகள் சக்திவேல், கோபால்சாமி ஆகியோர் பேசினர். போராட்டத்தை தொடர்ந்து குன்றாண்டார்கோவில் ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் போலீஸ் அதிகாரிகள் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது.

    பேச்சுவார்த்தையில் 10 நாட்களுக்குள் சம்பள பாக்கியை செலுத்துவது, வேலை தளத்தில் குடிநீர், கொட்டகை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து கொடுப்பது, வியாழக்கிழமை வந்தால் தான் இதர நாட்களுக்கும் வேலை என்ற கெடுபிடியை தளர்த்துவது என அதிகாரிகளால் ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற போராட்டம் விலக்கி கொள்ளப்பட்டது.  
    நார்த்தாமலை முத்துமாரியம்மன் கோவில் தேர்த்திருவிழாவை முன்னிட்டு புதுக்கோட்டை மாவட்டத்தில் 10-ந்தேதி உள்ளூர் விடுமுறை என்று கலெக்டர் கணேஷ் தெரிவித்துள்ளார்.
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம், குளத்தூர் தாலுகா, நார்த்தாமலை கிராமத்தை சேர்ந்த முத்து மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா வருகிற (10-ந்தேதி) அன்று நடைபெறுகிறது. அதனை முன்னிட்டு அன்றைய தினம் புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு அலுவலகங்களுக்கும், கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை எனவும், அதற்கு பதிலாக 22-ந்தேதி சனிக்கிழமை அன்று பணி நாள் எனவும், வழக்கமாக சனிக்கிழமைகளை பணி நாளாக கொண்ட அலுவலகங்களுக்கு 23-ந்தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று பணிநாள் எனவும் அறிவித்தார்.

    இந்த உள்ளூர் விடுறை 1881-ஆம் ஆண்டு செலாவணி முறிச்சட்டத்தின் கீழான விடுமுறை நாள் அல்ல எனவும், இந்த உள்ளூர் விடுமுறை நாளன்று புதுக்கோட்டை மாவ ட்டத்திலுள்ள மாவட்ட கருவூலலும் மற்றும் சார் நிலை கருவூலகங்களும் குறைந்தபட்ச அலுவலர்களுடன் அரசின் பாதுகாப்பினைக் கருதியும் அவசர அலுவலர்கள் மேற்கொள்ளும் பொருட்டும் திறந்திருக்கும் எனவும் அறிவித்தார்.

    மேலும் அரசு பொதுத்தேர்வுகள், அரசு அறிவித்த தேதிகளில் நடைபெறும் என மாவட்ட  கலெக்டர் கணேஷ் தெரிவித்துள்ளார்.
    ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க.வின் 2 அணிகளும் டெபாசிட் கூட பெற முடியாது என திருமண விழாவில் மு.க.ஸ்டாலின் பேசினார்.
    அறந்தாங்கி:

    புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே உள்ள பரிவீரமங்களத்தில் முன்னாள் தி.மு.க. எம்.எல்.ஏ. உதயம் சண்முகத்தின் இல்ல திருமண விழா நடைபெற்றது. இதில் தி.மு.க. செயல் தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க. ஸ்டாலின் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்.

    ஆர்.கே.நகர் சட்டமன்ற இடைத்தேர்தலில் தி.மு.க.வை எதிர்த்து தினகரனின் பெரா அ.தி.மு.க.வும், ஓ.பி.எஸ்.சின் மணல் மாபியா அணியும் போட்டியிடுகின்றன. 2 அணிகளும் ஒன்றாக இருந்தபோதும், தற்போதும் தமிழகத்தை குட்டிச்சுவராக்கி கொண்டிருக்கின்றனர்.

    இவர்கள் மக்களுக்காக சண்டை போட்டு கொள்ளவில்லை. முதல்வர் நாற்காலியை பிடிப்பதற்காக சண்டை போட்டு கொள்கின்றனர். முதல்வர் நாற்காலியை பிடிக்க வேண்டும் என்று பதவி வெறி பிடித்து அலைகின்றனர்.

    முதல்வர் பதவி கிடைத்து விட்டால் ஊழல் செய்யலாம். அதன் மூலம் பல கோடி ரூபாய் சம்பாதிக்கலாம் என்பதற்காகவே போராடுகின்றனர். ஆர்.கே.நகர் தொகுதியில் தி.மு.க. வெற்றி பெறுவது உறுதியான ஒன்று. அ.தி.மு.க.வின் 2 அணிகளும் டெபாசிட் கூட பெற முடியாது.

    உள்ளாட்சி தேர்தலை நடத்த அ.தி.மு.க. அரசு அச்சமடைந்துள்ளது. போட்டியிட்டால் மிகப்பெரிய பின்னடைவு ஏற்படும் என்பதற்காக தேர்தலை நடத்தாமல் காலம் கடத்துகின்றனர். ஆனால் உள்ளாட்சி தேர்தலுக்கு முன்பாகவே சட்டமன்ற தேர்தல் நடக்கும் வாய்ப்பு அதிகம் உள்ளது. சட்டமன்ற தேர்தல் நடைபெற்றால் தி.மு.க. அதிக இடங்களில் வெற்றி பெறுவது உறுதி.


    நான் அடுத்த முதல்வராக பொறுப்பேற்க வேண்டும் என்று தி.மு.க.வினர் மற்றும் பொதுமக்கள் விரும்புகின்றனர். திருமண நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள காங்கிரஸ் சட்டமன்ற குழு தலைவர் ராமசாமி, முன்னாள் எம். எல்.ஏ. சுப்புராம் ஆகியோரும் வலியுறுத்துகின்றனர்.

    முதல்வர் நாற்காலியில் யார் யாரெல்லாமோ அமர்ந்த இடத்தில் நானும் அமர்வதா? என்ற தயக்கம் இருந்தது. இருந்த போதிலும் தமிழ்நாடு மக்களின் நலனை காக்கவும் தமிழகத்தில் ஊழல் இல்லாத ஆட்சி அமையவும் அந்த பொறுப்பை ஏற்பதில் எனக்கு எந்தவித தயக்கமும் இல்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.
    ஹைட்ரோ கார்பன் திட்ட விவகாரத்தில் நெடுவாசல் பகுதி மக்களுக்கு உறுதுணையாக இருப்போம் என போராட்டக்குழுவினரிடம் மு.க.ஸ்டாலின் உறுதி அளித்தார்.
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக போராட்டம் நடத்தி வந்த பொதுமக்கள் தற்போது தற்காலிகமாக ஒத்தி வைத்துள்ளனர்.

    இந்த நிலையில் புதுக்கோட்டை நிகழ்ச்சிகளில் பங்கேற்க வந்த தி.மு.க. செயல் தலைவரும், சட்டமன்ற எதிர்க் கட்சி தலைவருமான மு.க. ஸ்டாலினை, நெடுவாசல் போராட்டக்குழுவை சேர்ந்த தட்சிணாமூர்த்தி, ராமநாதன் ஆகியோர் தலைமையில் 16 பேர் சந்தித்து பேசினர். அப்போது மு.க.ஸ்டாலினிடம் ஒரு மனு அளித்தனர்.

    அதில், புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில் கடந்த மாதம் 15-ந்தேதி அன்று மத்திய அரசு அறிவித்த ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக நெடுவாசல் பகுதியை சேர்ந்த 70 கிராம மக்கள் மற்றும் விவசாயிகள் பங்கேற்ற போராட்டத்தில் கலந்து கொண்டு ஆதரவு தெரிவித்ததற்கு நன்றியை தெரிவித்து கொள்கிறோம்.

    மேலும் தமிழ்நாடு சட்டமன்றத்தில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து சிறப்பு சட்டம் இயற்ற வேண்டும் என்ற குரல் கொடுத்தமைக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறோம்.

    இந்த ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக போராட்டம் நடந்து கொண்டிருந்த போது மத்திய, மாநில அமைச்சர்கள், கலெக்டர் ஆகியோர் இத்திட்டம் செயல்படுத்தப்படமாட்டாது என்று உறுதிமொழி கொடுத்தனர்.

    இதனை ஏற்று போராட்டம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டது. தற்போது மத்திய அரசும், ஜெம் என்ற தனியார் நிறுவனமும், நெடுவாசல் ஹைட்ரோ கார்பன் திட்டம் செயல்படுத்தப்படுவதாக புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்தது எங்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. ஆகையால் நெடுவாசல் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்தை மத்திய, மாநில அரசுகள் கைவிடும் வரை நீங்கள் அழுத்தம் கொடுத்து இத்திட்டத்தை தடை செய்வதற்கும் எங்களது வாழ்வாதாரம் பாழாகாமல் காப்பதற்கும் உறுதுணையாக இருக்க வேண்டும் என அதில் தெரிவித்திருந்தனர்.


    மனு கொடுத்து விட்டு வந்த நெடுவாசல் போராட்டக் குழுவை சேர்ந்த தட்சிணாமூர்த்தி கூறுகையில், நெடுவாசல் போராட்டத்தில் பங்கேற்று ஆதரவு தெரிவித்ததற்கு தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்தோம். இந்த ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக போராட்டம் நடந்து கொண்டிருந்தபோது மத்திய, மாநில அமைச்சர்கள், கலெக்டர் ஆகியோர் இத்திட்டம் செயல்படுத்தப்பட மாட்டாது என்று உறுதிமொழி கொடுத்தனர்.

    ஆனால் தற்போது இத்திட்டத்திற்கு மத்திய அரசு ஒப்பந்தம் செய்து கையெழுத்திட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. இத்திட்டத்தை கொண்டு வந்தால் விவசாயம் மற்றும் எங்களது வாழ்வாதாரம் பாதிக்கும் என்று எடுத்து கூறினோம். அதற்கு தி.மு.க. செயல் தலைவர் மு.க. ஸ்டாலின், இத்திட்டத்தை செயல்படுத்தக்கூடாது என்று மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்துவேன். உங்கள் போராட்டத்திற்கு உறுதுணையாக இருப்போம் என்று உறுதிமொழி அளித்தார் என்று தெரிவித்தனர்.
    ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு தமிழக அரசு மறைமுகமாக ஆதரவு அளிக்கிறது என்று தி.மு.க. செயல்தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் கூறினார்.
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டையில் இன்று நடைபெறும் நிகழ்ச்சிகளில் பங்கேற்க வந்த தி.மு.க. செயல்தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் நிருபர்களிடம் கூறியதாவது:-



    ஹைட்ரோ கார்பன் திட்ட விவகாரத்தில் மத்திய அரசு இரட்டை நிலைப்பாட்டில் உள்ளது. நெடுவாசலில் அத்திட்டத்தை நிறைவேற்ற மாட்டோம் என்று கூறியுள்ளார்கள். ஆனால் அதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளனர். ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு தமிழக அரசு மறைமுகமாக ஆதரவு அளிக்கிறது. ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக தி.மு.க. சார்பில் போராட்டம் நடத்தப்படும்.



    டெல்லியில் போராட்டம் நடத்தும் விவசாயிகள் பா.ஜனதா தலைவர்கள் கொச்சைப்படுத்தி பேசி வருவது கண்டிக்கத்தக்கது. விவசாயிகளின் கோரிக்கையை மத்திய அரசு நிறைவேற்ற வேண்டும். தமிழக முதல்வர் போராட்டம் நடத்தும் விவசாயிகளை சந்தித்து பேசாதது ஏன்?.

    இவ்வாறு அவர் கூறினார்.
    விவசாயிகளை திரட்டி மீண்டும் ஹைட்ரோ கார்பனுக்கு எதிராக போராட்டம் நடத்துவோம் என்று நெடுவாசல் போராட்டக்குழுவினர் கூறினர்.
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டம் எடுக்க மத்திய அரசு அளித்த அனுமதியை எதிர்த்து தொடர் போராட்டங்கள் நடந்தன. மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் மற்றும் தமிழக அரசின் உறுதி மொழியை ஏற்று போராட்டங்கள் தற்காலிகமாக வாபஸ் பெறப்பட்டன.



    இந்த நிலையில் நேற்று முன்தினம் நெடுவாசல் மற்றும் காரைக்கால் உள்பட நாட்டில் 31 இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு தனியார் நிறுவனங்களுடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. இதனால் நெடுவாசலில் மீண்டும் பதட்டமான சூழல் ஏற்பட்டுள்ளது.

    இதற்கிடையே நெடுவாசல் போராட்டக்குழுவினர் தெட்சிணாமூர்த்தி தலைமையில் நேற்று கலெக்டர் கணேஷிடம் ஒரு மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    கடந்த 1½ ஆண்டுக்கு முன் காரைக்காலில் இருந்து வருகை தந்திருந்த ஓ.என். ஜி.சி. அதிகாரிகள் எங்களுக்கு சொந்தமான விளை நிலத்திற்கு அடியில் பெட்ரோலிய பொருட்கள் இருக்கிறதா என்று ஆய்வு செய்ய வேண்டும். மேலும் 2 அல்லது 3 வருடங்கள் ஆய்வு பணிகள் நடைபெறும்.

    அதுவரை தங்களுக்கு ஏற்படும் வேளாண்மை இழப்பீடு தொகையை நாங்கள் குத்தகையாக தந்துவிடுகிறோம் என கேட்டார்கள். மேலும் தற்சமயம் விவசாய நிலம் எப்படி இருந்ததோ? அப்படியே திரும்ப ஒப்படைத்து விடுவோம் என உறுதியாக சொன்னார்கள்.

    அப்போது பூமிக்கடியில் எந்த மாதிரியான ஆழ்துளை கிணறுகள் அமைக்கப்போகிறோம், பூமிக்கடியில் இருந்து எடுக்கப்போவது பெட்ரோலிய பொருட்களான குருடாயிலா அல்லது மீத்தேன் போன்ற இயற்கை எரிவாயு எடுக்கபோகிறோமா என்பதை விரிவாக எங்களிடம் தெரிவிக்கவில்லை.

    இந்நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் நெடுவாசலில் எங்கள் விளைநிலத்தில் ஹைட்ரோ கார்பன் எரிவாயு எடுக்க போவதாக மத்திய அரசு அறிவித்தது. இந்த எரிவாயு எடுப்பதனால் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்பட்டு எங்களின் விளைநிலங்கள் பாதிப்படைந்து வாழ்வாதாரம் மற்றும் எதிர்கால சந்ததியினரின் வாழ்க்கை கேள்விக்குறியாகி விடும்.

    ஆகவே ஓ.என்.ஜி.சி. நிறுவனம் எங்களிடம் செய்துள்ள குத்தகை ஒப்பந்தத்தை ரத்து செய்து எங்களது நிலத்தை எங்களுக்கு கிடைக்க ஆவன செய்ய வேண்டும்.

    இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தனர்.

    இதைத்தொடர்ந்து நெடுவாசல் போராட்டக்குழுவினர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    நெடுவாசல் பகுதியில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு தனியார் நிறுவனத்துடன் ஒப்பந்தம் போட்டுள்ளது. மேலும் நெடுவாசல் பகுதியில் இன்னும் 6 மாதத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்துவோம் என்று ஜெம்லேபாரட்டிரிஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதனால் இன்னும் ஒரு வாரத்தில் தஞ்சாவூர், புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்ட விவசாயிகளிடம் ஆலோசித்து பெரிய அளவிலான போராட்டம் நடத்த உள்ளோம்.

    இதேபோல நெடுவாசலை சுற்றி உள்ள 70-க்கும் மேற்பட்ட கிராம முக்கியஸ்தர்களும் பேச்சுவார்த்தை நடத்த உள்ளோம். நாளை (வியாழக்கிழமை) சிறப்பு கிராம சபை கூட்டத்தை கூட்டி அதில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற முடிவு செய்து உள்ளோம். மேலும் நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்த விடமாட்டோம்.

    இவ்வாறு அவர்கள் கூறினார்.

    வடகாடு கிராமத்தில் ‘ஹைட்ரோ கார்பன்’ திட்டம் அமைக்க மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்காது. தனியார் நிறுவனத்தின் உரிம விண்ணப்பம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக கலெக்டர் கணேஷ் கூறினார்.
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டத்தில் மத்திய அரசின் ஹைட்ரோ கார்பன் எனப்படும் இயற்கை எரிவாயு எடுக்கும் திட்டத்திற்கு எதிராக நெடுவாசல், வடகாடு, நல்லாண்டார்கொல்லை உள்ளிட்ட கிராமங்களில் தொடர் போராட்டம் நடந்தது.



    மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், தமிழக அரசு அளித்த உறுதி மொழியை ஏற்று நெடுவாசலில் கடந்த 9-ந்தேதியும், நல்லாண்டார்கொல்லையில் 24-ந்தேதியும், வட காட்டில் 25-ந்தேதியும் போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டது.



    இதற்கிடையே கடந்த 25-ந் தேதி போராட்ட களத்திற்கு சென்ற மாவட்ட கலெக்டர் கணேஷ் தலைமையிலான அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினர். பேச்சு வார்த்தையின் முடிவில் நேற்று (திங்கட்கிழமை) கலெக்டர் அலுவலகத்தில் எழுத்துப்பூர்வமான உத்தரவாதம் வழங்கப்படும் என்று கூறியதையடுத்து, போராட்டக்காரர்கள் போராட்டத்தை தற்காலிகமாக கைவிட்டனர்.

    அதன்படி நேற்று மாலை வடகாடு போராட்டக்குழுவினர் புதுக்கோட்டை வந்து கலெக்டரை சந்தித்தனர். கலெக்டர் கணேஷ், வட காடு போராட்டக்குழுவினரிடம் ஒரு கடிதத்தை வழங்கினார். அந்த கடிதத்தில் கடந்த 25-ந்தேதி வடகாடு போராட்டக்குழுவினருடன் சமாதான பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

    அப்போது உதவி கலெக் டர் அம்ரீத் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர். இதைத் தொடர்ந்து போராட்டக்காரர்களின் கோரிக்கைகளின் பேரிலும், நேரடியாக கலந்து ஆலோசனை செய்ததிலும் கீழ்கண்ட முடிவுகள் எடுக்கப்பட்டு உள்ளது. அதன் விவரம் வருமாறு:-

    1) வடகாடு பகுதியில் விவசாயிகளிடம் ஓ.என்.ஜி.சி. நிறுவனம் செய்து உள்ள நில ஒப்பந்தத்தை ரத்து செய்து, மறு சீரமைப்பு செய்து விவசாயிகளிடம் ஒப்படைக்க வேண்டும் என கோரியுள்ளது தொடர்பாக, தொடர்புடைய நிறுவனத்திற்கு உடன் பரிந்துரை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.

    2) ஆலங்குடி தாலுகா, புள்ளான்விடுதி கிராமத்தில் ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தால் அமைக்கப்பட்டுள்ள ஆழ்குழாய் கிணறு மற்றும் கழிவுநீர் தொட்டிகளை மூடவும், இது தொடர்புடைய நிறுவனத்திற்கு பரிந்துரை செய்து 9 மாத காலத்திற்குள் இப்பணிகளை முடிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

    3) அரசாணையில் காவிரி டெல்டா பகுதிகளில் மீத்தேன் வாயு எடுக்கும் நடவடிக்கை கைவிடப்படுகிறது என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதன் அடிப்படையில் வடகாடு அருகே உள்ள புள்ளான்விடுதி கிராமத்திலும் மீத்தேன் வாயு எடுப்பதற்கு மாவட்ட நிர்வாகம் எந்த நிறுவனத்திற்கும் அனுமதி வழங்காது எனவும் தெரிவிக்கப்படுகி றது.

    4) தமிழ்நாடு முதல்-அமைச்சர் செய்தி வெளியீட்டின் அடிப்படையில் வடகாடு மற்றும் வடகாடு அருகே இருக்கும் புள்ளான்விடுதி கிராமத்தில் விவசாயிகளின் வாழ்வாதாரத்திற்கு, ஹைட்ரோ கார்பன் திட்டத்தால் பாதிப்பு ஏற்படும் என்பதாலும், கிராமத்திற்கு சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படும் என்பதாலும் கிராமத்தில் சட்டம்-ஒழுங்கை பாதுகாக்கும் நோக்கத்துடன் இத்திட்டத்திற்கு எந்த ஒரு நிறுவனத்திற்கும் மாவட்ட நிர்வாகத்தால் உரிய அனுமதி வழங்கப்படமாட்டாது என்றும் இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது.

    இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டு உள்ளது.

    வடகாடு போராட்டக் குழுவினரிடம் கடிதத்தை வழங்கிய கலெக்டர் கணேஷ் நிருபர்களிடம் கூறியதாவது:-

    ஹைட்ரோ கார்பன் என்னும் இயற்கை எரிவாயு எடுக்கும் திட்டத்தை செயல்படுத்த அனுமதிக்க மாட்டோம் என்று தமிழக அரசு ஏற்கனவே அறிவித்து உள்ளது. மேலும் இத்திட்டத்தை செயல்படுத்த தனியார் நிறுவனம் சார்பில் சுற்றுச்சூழல் உரிமம் பெறுவதற்கு மாவட்ட நிர்வாகத்திடம் விண்ணப்பம் அளித்து உள்ளது. பொதுமக்கள் இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.

    எனவே பொது மக்கள் எதிர்ப்பு மற்றும் சட்டம் ஒழுங்கை கருத்தில் கொண்டும் தனியார் நிறுவனத்தின் உரிம விண்ணப்பம் மாவட்ட நிர்வாகத்தால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அளித்துள்ள இந்த உறுதிமொழி தங்களுக்கு மிகுந்த நம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளதாக ஹைட்ரோ கார்பன் எதிர்ப்பு போராட்டக்குழுவினர் தெரிவித்தனர்.
    ஹைட்ரோ கார்பன் திட்ட ஒப்பந்தம் இன்று கையெழுத்தாகிறது என்ற தகவல் வேதனையாக உள்ளது. அவ்வாறு நடந்தால் நெடுவாசலில் மக்களை திரட்டி, திட்டம் ரத்தாகும் வரை போராட்டத்தை தொடருவோம் என்று கிராம மக்கள் கூறினர்.
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் எனும் இயற்கை எரிவாயு எடுக்க உள்ளதாக மத்திய அரசு கடந்த பிப்ரவரி 15-ந்தேதி அறிவித்தது.

    இதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து பிப்ரவரி 16-ந்தேதி முதல் நெடு வாசலில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அளித்த உறுதி, மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணனின் வேண்டுகோளின்படி மார்ச் 9-ந்தேதி நெடுவாசல் போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டது.

    ஹைட்ரோ கார்பன் திட்டம் செயல்படுத்தப்பட மாட்டாது என மத்திய, மாநில அரசுகள் நம்பிக்கை தெரிவித்ததால் கடந்த 24-ந்தேதி நல்லாண்டார் கொல்லையிலும், 25-ந்தேதி வடகாட்டிலும் மக்கள் தங்களது தொடர் போராட்டத்தை தற்காலிகமாக கைவிட்டனர்.

    இந்நிலையில் தமிழ்நாட்டில் நெடுவாசல், புதுச்சேரியில் காரைக்கால் உள்பட இந்தியா முழுவதும் 31 இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்க ஒப்பந்ததாரர்களுக்கு விடப்பட்ட ஏலத்துக்கான ஒப்பந்தம் டெல்லியில் தாஜ் மான்சிங் எனும் நட்சத்திர ஓட்டலில் இன்று (27-ந்தேதி) கையெழுத்தாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவல் நெடுவாசல் மட்டுமின்றி புதுக்கோட்டை மாவட்ட மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    மத்திய, மாநில அரசுகள் அளித்த உத்தரவாதத்தின்படி, இந்த திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், அதையும் மீறி இத்திட்டத்தை செயல்படுத்துவதற்கு கையெழுத் திடப்பட்டால், மீண்டும் போராட்டத்தை தொடங்குவோம் என நெடுவாசல் மற்றும் சுற்று வட்டார மக்கள் தெரிவித்துள்ளனர்.



    இதுகுறித்து போராட்டக் குழுவினர் கூறும் போது, ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்தினால் நிலத்தடி நீர்மட்டம் குறையும். அதனால் விவசாயம், குடிநீர் பாதிக்கும். சுற்றுச்சூழலும் பாதிக்கும். எனவே இத்திட்டம் வேண்டாம் என அமைச்சரிடம் தெரிவித்தோம். மனுவாகவும் அளித்தோம். கோரிக்கை மனுவை மாநில அரசுக்கும், மத்திய சுற்றுச் சூழல் துறைக்கும் அனுப்பி வைக்கிறோம்.

    மாநில அரசு மற்றும் பொது மக்களின் ஒத்துழைப்பு இல்லாமல் இத்திட்டத்தை செயல்படுத்த முடியாது. மக்களின் விருப்பத்துக்கு எதிராகவும், மாநில அரசு மற்றும் சுற்றுச்சூழல் துறையின் அனுமதி இல்லாமலும் இத்திட்டத்தை செயல்படுத்த முடி யாது என்று மத்திய அமைச்சர் தெரிவித்திருந்தார்.

    தற்போது ஒப்பந்தத்தில் கையெழுத்து போட உள்ளதாக தகவல் வெளியாகி இருப்பது மிகவும் வேதனையாகவும், அதிர்ச்சியாகவும் உள்ளது. அவ்வாறு நடந்தால் நெடுவாசல் மற்றும் சுற்று வட்டார கிராம மக்களை திரட்டி மீண்டும் போராட்டத்தை தொடங்குவோம். இந்த திட்டம் ரத்தாகும் வரை போராட்டத்தை தொடருவோம் என்றனர்.

    வடகாடு போராட்ட ஒருங்கிணைப்பு குழுவை சேர்ந்த ராஜகுமாரன் கூறும் போது, நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்த ஒப்பந்தம் எடுத்துள்ள தனியார் நிறுவனம் மாவட்ட நிர்வாகத்தின் அனுமதிக்காக ரூ.12 லட்சத்தை புதுக்கோட்டை மாவட்ட கலெக்டருக்கு அனுப்பி உள்ளது.

    இதை கலெக்டர் உடனே திருப்பி அனுப்ப வேண்டும். மத்திய அரசு ஒப்பந்தம் விடப்பட்ட பட்டியலில் இருந்து நெடுவாசலை நீக்க வேண்டும். இதை செய்யாவிட்டால் மீண்டும் போராட்டத்தை தொடங்குவோம் என்றார்.

    இதனால் நெடுவாசல், நல்லாண்டார்கொல்லை, வடகாடு உள்ளிட்ட கிராமங்களில் பரபரப்பான சூழ்நிலை உருவாகியுள்ளது.

    ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக வடகாட்டில் கடந்த 21 நாட்களாக நடந்த போராட்டமானது, கலெக்டர் பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து தற்காலிகமாக விலக்கிக் கொள்ளப்பட்டது.
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் பகுதியில் ஹைட்ரோ கார்பன் இயற்கை எரிவாயு எடுக்க மத்திய அரசு அனுமதி வழங்கியதை கண்டித்து நெடுவாசலில் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், தமிழக அமைச்சர் டாக்டர் விஜய பாஸ்கர் ஆகியோர் நடத்திய பேச்சுவார்த்தையை அடுத்து அப்போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.

    இருப்பினும் வடகாட்டிலும், நல்லாண்டார் கொல்லையிலும் போராட்டம் தொடர்ந்து நீடித்தது. ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிடக்கோரி வடகாட்டில் ஒவ்வொரு நாளும் வெவ்வேறு விதமாக அப்பகுதி மக்களும், சுற்று வட்டார கிராம மக்களும் போராட்டத்தை நடத்தி வந்தனர்.

    இந்நிலையில் கோரிக்கையை நிறைவேற்ற இதுவரை மத்திய, மாநில அரசுகள் செவிசாய்க்கவில்லை எனக்கூறி நேற்று முதல் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினர். உண்ணாவிரதத்தில் ஈடுபட்ட வடகாட்டை சேர்ந்த 5 பேர் திடீரென மயங்கி விழுந்தனர். அவர்கள் ஆலங்குடி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இன்று 2-வது நாளாக உண்ணாவிரதம் போராட்டம் நீடித்தது.

    இயற்கை எரிவாயு திட்டத்தை செயல்படுத்த மாட்டோம், வடகாடு, வாணக்கான்காடு, கோட்டைக்காடு, நல்லாண்டார்கொல்லை உள்ளிட்ட பகுதிகளில் ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தால் அமைக்கப்பட்டுள்ள ஆழ்துளை கிணறுகளை அகற்றிவிடுவோம் என புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் கணேஷ் எழுத்து பூர்வ உத்தரவாதம் அளித்தால் மட்டுமே போராட்டத்தை கைவிடுவோம் என போராட்டக்குழுவினர் தெரிவித்தனர்.

    இந்நிலையில், வடகாடு போராட்டக்குழுவினருடன் இன்று கலெக்டர் கணேஷ் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில், உடன்பாடு ஏற்பட்டதையடுத்து, 21 நாட்களாக நடைபெற்று வரும் போராட்டத்தை தற்காலிகமாக வாபஸ் பெறுவதாக போராட்டக் குழுவினர் அறிவித்தனர்.

    முன்னதாக கலெக்டர் உறுதியளித்ததையடுத்து, நல்லாண்டார் கொல்லையிலும் போராட்ட குழுவினர் போராட்டத்தைக் கைவிடுவதாக தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
    ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வடகாட்டில் 2-வது நாளாக பொது மக்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் பகுதியில் ஹைட்ரோ கார்பன் இயற்கை எரிவாயு எடுக்க மத்திய அரசு அனுமதி வழங்கியதை கண்டித்து நெடுவாசலில் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், தமிழக அமைச்சர் டாக்டர் விஜய பாஸ்கர் ஆகியோர் நடத்திய பேச்சுவார்த்தையை அடுத்து அப்போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.

    இருப்பினும் வடகாட்டிலும், நல்லாண்டார் கொல்லையிலும் போராட்டம் தொடர்ந்து நீடித்தது. ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிடக்கோரி வடகாட்டில் ஒவ்வொரு நாளும் வெவ்வேறு விதமாக அப்பகுதி மக்களும், சுற்று வட்டார கிராம மக்களும் போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.



    இந்நிலையில் கோரிக்கையை நிறைவேற்ற இதுவரை மத்திய, மாநில அரசுகள் செவி சாய்க்கவில்லை எனக்கூறி நேற்று முதல் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினர். போராட்டக்கள பந்தலில் ஏராளமான ஆண்களும், பெண்களும் அமர்ந்து உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இதனிடையே உண்ணாவிரதத்தில் ஈடுபட்ட வடகாட்டை சேர்ந்த சரஸ்வதி (வயது 70), மீனாள் (70), குஞ்சம்மாள் (60), கலா (45), சுமித்ரா (27) ஆகியோர் திடீரென மயங்கி விழுந்தனர். அவர்கள் ஆலங்குடி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு 5 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இயற்கை எரிவாயு திட்டத்தை செயல்படுத்த மாட்டோம், வடகாடு, வாணக்கான்காடு, கோட்டைக்காடு, நல்லாண்டார்கொல்லை உள்ளிட்ட பகுதிகளில் ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தால் அமைக்கப்பட்டுள்ள ஆழ்துளை கிணறுகளை அகற்றிவிடுவோம் என புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் கணேஷ் எழுத்து பூர்வ உத்தரவாதம் அளித்தால் மட்டுமே போராட்டத்தை கைவிடுவோம் என போராட்டக்குழுவினர் தெரிவித்தனர். இதையடுத்து இன்று 2-வது நாளாக உண்ணாவிரதம் போராட்டம் நடக்கிறது.

    இந்நிலையில், நல்லாண்டார்கொல்லையில் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த பொதுமக்களிடம் நேற்று இரவு புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் கணேஷ் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, போராட்டக்குழுவின் கோரிக்கையான நல்லாண்டார்கொல்லையில் ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தால் கையகப்படுத்தப்பட்ட நிலங்களை திரும்ப ஒப்படைக்கவும், அங்கு அமைக்கப்பட்டுள்ள ஆழ்துளை கிணற்றை அகற்ற நடவடிக்கை எடுப்பதாகவும் கலெக்டர் உறுதியளித்தார். இதையடுத்து போராட்டத்தை கைவிடுவதாக நல்லாண்டார்கொல்லை போராட்ட குழுவினர் தெரிவித்து அங்கிருந்து கலைந்து சென்றனர். இதையடுத்து 37 நாட்களாக நடைபெற்று வந்த போராட்டம் முடிவுக்கு வந்தது. இதனிடையே வடகாடு போராட்டக்குழுவினருடனும் இன்று கலெக்டர் கணேஷ் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். அதன்பிறகு வடகாடு போராட்டமும் வாபஸ் பெறப்படும் என தெரிகிறது.


    கீரனூர் அருகே மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த தொழிலாளி மீது டிராக்டரில் மூடப்பட்டிருந்த இரும்பு கதவு விழுந்ததில் தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார்.
    கீரனூர்:

    கீரனூர் அருகே உள்ள தாண்டிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் முருகேசன் (வயது 34) கூலித்தொழிலாளி. இவரது மனைவி நதியா. இவர்களுக்கு ஓரு ஆண் குழந்தை உள்ளது.

    சம்பவத்தன்று இரவு தனது மோட்டார் சைக்கிளில் குளத்தூரில் உள்ள தனது மனைவி, குழந்தையை பார்ப்பதற்காக சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே மாங்குடியை நோக்கி ஜல்லிக்கற்களை ஏற்றி கொண்டு டிராக்டர் வந்து கொண்டிருந்தது. எதிர்பாராதவிதமாக டிராக்டரை கடந்து சென்ற போது டிராக்டரில் மூடப்பட்டிருந்த இரும்பு கதவு திறந்து முருகேசனின் மீது விழுந்தது. இதில் தலையில் பலத்த காயமடைந்த முருகேசன் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பலியானார்.

    டிராக்டரை அதே இடத்தில் நிறுத்தி விட்டு டிரைவர் தப்பி ஓடி விட்டார். சம்பவம் குறித்து கீரனூர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கீரனூரில் கைக்குழந்தையுடன் பெண்ணை போலீசார் கைது செய்தனர். இதனை கண்டித்து மகளிரணியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
    கீரனூர்:

    கீரனூர் அருகே உள்ள கடம்புப்பட்டியை சேர்ந்தவர் வெங்கடாசலம், இவரது மனைவி மகாலட்சுமி, இவர்களுக்கு கைக்குழந்தை உள்ளது. இவர் தனது வயலில் கடலை பயிர் நடவை செய்திருந்தார்.

    இந்நிலையில் அதே ஊரைச் சேர்ந்த  சேவியர் என்பவரின் மாடுகள் வெங்கடாசலத்தின் வயலில் மேயவிடப்பட்டதில் இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. இது குறித்து கீரனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து இருதரப்பிலும் ஒருவரை கைது செய்தனர்.

    இதில், வெங்கடாசலபதி இல்லாததால் அவரது மனைவி மகாலட்சுமி என்பவரை கைக்குழந்தையுடன் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    இது குறித்து தகவல் அறிந்த இந்திய தேசிய மாதர் சங்கத்தினர் சார்பில் கீரனூர் காந்தி சிலை முன்பு செயலாளர் லீலா ஆரோக்கிய மேரி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்பாட்டத்தை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய செயலாளர் நடராசன் தொடங்கி வைத்தார்.

    இதில் தேசிய மாதர் சங்க மாவட்ட செயலாளர் சுப்புலட்சுமி, திலகவதி, ஆரோக்ய ஜெனிபர், சிறுமலர் செல்வி, சித்ரா, நூர்ஜகான்,  வெண்ணிலா, பழனியம்மாள்,  பூமதி, வள்ளி, அற்புதமேரி, விமலா, நாகலெட்சுமி, பத்மாவதி, ஆகியோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    ஆர்ப்பாட்டதில் கைக் குழந்தையுடன் மகாலட்சுமி கைது செய்யப்பட்டதை கண்டித்து  போலீசாருக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டன, இந்த ஆர்ப்பாட்டத்தில் 30 பெண்கள் உட்பட 75 பேர் கலந்து கொண்டனர்.
    ×