என் மலர்tooltip icon

    செய்திகள்

    விவசாயிகளை திரட்டி மீண்டும் போராட்டம்: நெடுவாசல் போராட்டக்குழுவினர் அறிவிப்பு
    X

    விவசாயிகளை திரட்டி மீண்டும் போராட்டம்: நெடுவாசல் போராட்டக்குழுவினர் அறிவிப்பு

    விவசாயிகளை திரட்டி மீண்டும் ஹைட்ரோ கார்பனுக்கு எதிராக போராட்டம் நடத்துவோம் என்று நெடுவாசல் போராட்டக்குழுவினர் கூறினர்.
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டம் எடுக்க மத்திய அரசு அளித்த அனுமதியை எதிர்த்து தொடர் போராட்டங்கள் நடந்தன. மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் மற்றும் தமிழக அரசின் உறுதி மொழியை ஏற்று போராட்டங்கள் தற்காலிகமாக வாபஸ் பெறப்பட்டன.



    இந்த நிலையில் நேற்று முன்தினம் நெடுவாசல் மற்றும் காரைக்கால் உள்பட நாட்டில் 31 இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு தனியார் நிறுவனங்களுடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. இதனால் நெடுவாசலில் மீண்டும் பதட்டமான சூழல் ஏற்பட்டுள்ளது.

    இதற்கிடையே நெடுவாசல் போராட்டக்குழுவினர் தெட்சிணாமூர்த்தி தலைமையில் நேற்று கலெக்டர் கணேஷிடம் ஒரு மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    கடந்த 1½ ஆண்டுக்கு முன் காரைக்காலில் இருந்து வருகை தந்திருந்த ஓ.என். ஜி.சி. அதிகாரிகள் எங்களுக்கு சொந்தமான விளை நிலத்திற்கு அடியில் பெட்ரோலிய பொருட்கள் இருக்கிறதா என்று ஆய்வு செய்ய வேண்டும். மேலும் 2 அல்லது 3 வருடங்கள் ஆய்வு பணிகள் நடைபெறும்.

    அதுவரை தங்களுக்கு ஏற்படும் வேளாண்மை இழப்பீடு தொகையை நாங்கள் குத்தகையாக தந்துவிடுகிறோம் என கேட்டார்கள். மேலும் தற்சமயம் விவசாய நிலம் எப்படி இருந்ததோ? அப்படியே திரும்ப ஒப்படைத்து விடுவோம் என உறுதியாக சொன்னார்கள்.

    அப்போது பூமிக்கடியில் எந்த மாதிரியான ஆழ்துளை கிணறுகள் அமைக்கப்போகிறோம், பூமிக்கடியில் இருந்து எடுக்கப்போவது பெட்ரோலிய பொருட்களான குருடாயிலா அல்லது மீத்தேன் போன்ற இயற்கை எரிவாயு எடுக்கபோகிறோமா என்பதை விரிவாக எங்களிடம் தெரிவிக்கவில்லை.

    இந்நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் நெடுவாசலில் எங்கள் விளைநிலத்தில் ஹைட்ரோ கார்பன் எரிவாயு எடுக்க போவதாக மத்திய அரசு அறிவித்தது. இந்த எரிவாயு எடுப்பதனால் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்பட்டு எங்களின் விளைநிலங்கள் பாதிப்படைந்து வாழ்வாதாரம் மற்றும் எதிர்கால சந்ததியினரின் வாழ்க்கை கேள்விக்குறியாகி விடும்.

    ஆகவே ஓ.என்.ஜி.சி. நிறுவனம் எங்களிடம் செய்துள்ள குத்தகை ஒப்பந்தத்தை ரத்து செய்து எங்களது நிலத்தை எங்களுக்கு கிடைக்க ஆவன செய்ய வேண்டும்.

    இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தனர்.

    இதைத்தொடர்ந்து நெடுவாசல் போராட்டக்குழுவினர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    நெடுவாசல் பகுதியில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு தனியார் நிறுவனத்துடன் ஒப்பந்தம் போட்டுள்ளது. மேலும் நெடுவாசல் பகுதியில் இன்னும் 6 மாதத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்துவோம் என்று ஜெம்லேபாரட்டிரிஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதனால் இன்னும் ஒரு வாரத்தில் தஞ்சாவூர், புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்ட விவசாயிகளிடம் ஆலோசித்து பெரிய அளவிலான போராட்டம் நடத்த உள்ளோம்.

    இதேபோல நெடுவாசலை சுற்றி உள்ள 70-க்கும் மேற்பட்ட கிராம முக்கியஸ்தர்களும் பேச்சுவார்த்தை நடத்த உள்ளோம். நாளை (வியாழக்கிழமை) சிறப்பு கிராம சபை கூட்டத்தை கூட்டி அதில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற முடிவு செய்து உள்ளோம். மேலும் நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்த விடமாட்டோம்.

    இவ்வாறு அவர்கள் கூறினார்.

    Next Story
    ×