என் மலர்tooltip icon

    புதுக்கோட்டை

    புதுக்கோட்டை சிறையில் இன்று கைதிகள் மரத்தில் ஏறி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் சிறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்ட கிளை சிறை கலெக்டர் அலுவலகம் அருகே உள்ளது. இங்கு சுமார் 400 கைதிகள் உள்ளனர். இவர்கள் விசாரணை மற்றும் தண்டனை கைதிகள் ஆவர். சிறையில் கைதிகள் சில பொருள்கள் பயன்படுத்துவதற்கு தடை உள்ளது.

    இந்த நிலையில் சிறையில் உள்ள சில கைதிகள் தங்களுக்கு பீடி வேண்டும் என கேட்டு வந்தனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு இரண்டு கைதிகள் தங்களுக்கு பீடி வழங்ககோரி சிறை வளாகத்தில் உள்ள மரத்தில் ஏறி போராட்டம் நடத்தினர். அவர்களிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி கிழே இறக்கினர்.

    இந்த நிலையில் இன்று காலை மீண்டும் 2 கைதிகள் பீடி கேட்டு அடம்பிடித்தனர். அங்குள்ள மரத்தில் ஏறிய 2 கைதிகளும் மரத்தின் உச்சிக்கு சென்று விட்டனர். அவர்கள் தவறிகிழே விழுந்து விடக்கூடாது என்பதால் அதிகாரிகள் அவர்களை கீழே இறங்கும் படி கூறினர்.

    காலை 7 மணிக்கு மரத்தில் ஏறிய கைதிகள் 2 பேரும் பீடி வழங்கினால் மட்டும் தான் கீழே இறங்குவோம் என அடம்பிடித்தனர். சுமார் 2 மணிநேரம் மரத்தின் உச்சியில் நின்றபடி கைதிகள் போராட்டம் நடத்தினர்.

    கைதிகள் போராட்டத்தால் புதுக்கோட்டை சிறை வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. அந்த வழியாக சாலையில் சென்ற மக்களும் கைதிகள் போராட்டத்தை வேடிக்கை பார்த்தபடி சென்றனர். அதன் பிறகு அதிகாரிகள் சமரசத்தை ஏற்று 9 மணிக்கு கைதிகள் மரத்தில் இருந்து கீழே இறங்கினர்.

    அதன்பிறகு சிறை அதிகாரிகள் அவர்களை எச்சரித்து, சிறை அறையில் பூட்டி வைத்தனர். இந்த சம்பவம் சிறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
    நூறுநாள் வேலைத்திட்டத்தில் வேலை பார்த்த விவசாயத் தொழிலாளர்களுக்கு கூலி வழங்கப்படவில்லை. இதனால் அவர்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை ஒன்றியத்தில் நூறுநாள் வேலைத்திட்டத்தில் வேலை பார்த்த விவசாயத் தொழிலாளர்களுக்கு கடந்த ஆறு மாதங்களாக கூலி வழங்கப்படவில்லை. இதனால் கந்தர்வக்கோட்டை ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடைபெற்றது.

    மேலும் வருடத்திற்கு 150 நாள் வேலை என்ற சிறப்பு கால அளவு மார்ச் மாதத்துடன் முடிவடைந்துள்ளது. கடும் வறட்சியைக் கணக்கில் கொண்டு வரும் ஜூலை மாதம் வரை கால அளவை நீட்டிக்க வேண்டும். நிர்ணயிக்கப்பட்ட ரூ.203 கூலியை குறைக்காமல் வழங்க வேண்டும். கூலியை ரூ.400-ஆக உயர்த்தி வழங்க வேண்டும். கந்தர்வக்கோட்டை ஒன்றியம் முழுவதும் பாதுகாக்கப்பட்ட குடிநீர் தட்டுப்பாடின்றி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளும் போராட்டத்தின் போது தெரிவித்தனர்.

    போராட்டத்திற்கு அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் கந்தர்வக்கோட்டை ஒன்றியத்தலைவர் மணி தலைமை வகித்தார். செயலாளர் சித்திரைவேல் முன்னிலை வகித்தார். கோரிக்கைகளை விளக்கி சங்கத்தின் மாநிலச் செயலாளர் சங்கர், மாவட்டத் தலைவர் துரைச்சந்திரன் ஆகியோர் உரையாற்றினர். போராட்டத்தை ஆதரித்து விவசாயிகள் சங்கத் தலைவர் ராமையன், சி.பி.எம். ஒன்றியச் செயலாளர் ரத்தினவேல் மற்றும் தோழமைச்சங்க நிர்வாகிகள் வீராச்சாமி, பன்னீர் செல்வம், முத்துச் சாமி, நாராயணசாமி, இளையராஜா உள்ளிட்டோர் பேசினர்.முற்றுகைப் போராட்டத் தைத் தொடர்ந்து சங்கத் தலைவர்களை அழைத்து கந்தர்வகோட்டை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கருப்பையா, குமாரவேல் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    அப்போது கடந்த மார்ச் மாதம் வரை உள்ள சம்பளப் பாக்கியை ஒரு வாரத்திற்குள் செலுத்துவதற்கு அதிகாரிகள் உறுதியளித்த பின்னர் கலைந்து சென்றனர்.

    புதுக்கோட்டை அருகே கட்டிட காண்டிராக்டர் வீட்டில் பட்டப்பகலில் மர்ம நபர்கள் பூட்டியிருந்த வீட்டை திறந்து 43 பவுன் நகையை திருடி சென்றனர்.
    திருவரங்குளம்:

    புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளம் மேட்டுப்பட்டி ரைஸ்மில் தெருவை சேர்ந்தவர் சோலை (வயது 40). கட்டிட காண்டிராக்டரான இவர் சென்ட்ரிங் தொழிலும் செய்து வருகிறார்.

    தற்போது இவரது ஒப்பந்தத்தில் திருவரங்குளம் மற்றும் புதுக்கோட்டை பகுதியில் பல்வேறு கட்டுமான பணிகள் நடந்து வருகிறது. தினமும் காலையில் வீட்டில் இருந்து புறப்படும் சோலை கட்டிட பணிகளை மேற்பார்வை செய்துவிட்டு மாலையில் வீடு திரும்புவார்.

    இந்த நிலையில் நேற்று காலை வழக்கம்போல் அவர் புறப்பட்டு சென்றார். வீட்டில் இருந்த அவரது மனைவி அருகில் நடைபெற்று வரும் மற்றொரு கட்டிட பணியை பார்ப்பதற்காக சாவி போடாமல் தற்காலிமாக வீட்டு கதவை பூட்டிவிட்டு சென்றார்.

    இதனை நோட்டமிட்ட மர்ம ஆசாமிகள் கதவை திறந்து வீட்டிற்கு புகுந்தனர். பின்னர் அங்கு தனி அறையில் இருந்த பீரோவையும் திறந்து அதில் வைக்கப்பட்டிருந்த 43 பவுன் தங்க நகைகளை கொள்ளையடித்துவிட்டு தப்பி சென்றனர்.

    இரவில் வீடு திரும்பிய சோலை மற்றும் அவரது குடும்பத்தினர் நகை கொள்ளை போயிருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அக்கம் பக்கத்தில் உள்ளவர்களிடம் யாராவது வீட்டிற்கு வந்து சென்றார்களா? என கேட்டனர். ஆனால் யாரும் தங்களுக்கு தெரியாது என்று கூறிவிட்டனர்.

    இதையடுத்து சோலை நள்ளிரவில் புதுக்கோட்டை கணேஷ் நகர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பட்டப்பகலில் வீட்டிற்குள் புகுந்து நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை தேடி வருகிறார்கள்.

    தெரிந்த நபர்களே இந்த செயலில் ஈடுபட்டிருக்க வேண்டும் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் அருகில் வசிப்பவர்கள், உறவினர்கள் மற்றும் அதே பகுதியை சேர்ந்தவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    இந்த துணிகர கொள்ளை சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தி உள்ளது.
    அமைச்சர் விஜயபாஸ்கரின் குவாரியில் 13 மணி நேரம் நடத்தப்பட்ட சோதனை குறித்த முழு விவரங்களை வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று வெளியிட உள்ளனர்.
    புதுக்கோட்டை:

    பல கோடி அளவிலான பணப்பட்டுவாடா புகார் தொடர்பாக சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை தேர்தல் ஆணையம் ரத்து செய்து உத்தரவிட்டது. முன்னதாக பணப்பட்டு வாடாவை தடுக்கவும், இதுவரை பணப்பட்டுவாடா எப்படி நடந்தது என்பதை அறியவும் கடந்த 7-ந்தேதி வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனையில் இறங்கினர்.

    இதில் தமிழக சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கருக்கு சொந்தமான சென்னை, புதுக்கோட்டை உள்ளிட்ட இடங்களில் உள்ள அவருக்கு சொந்தமான வீடுகள், கல்வி நிறுவனங்கள், குவாரிகள், நண்பர்கள், உறவினர்களின் வீடுகள், சகோதரர் கல்லூரி உள்பட 35 இடங்களில் இந்த சோதனை நடத்தப்பட்டது.

    இந்த சோதனையில் சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் இருந்து ரூ.89 கோடி அளவில் பணப்பட்டுவாடா நடந்ததற்கான முக்கிய ஆவணங்களை வருமான வரித்துறையினர் கைப்பற்றினர். இதன் தொடர்ச்சியாக சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமான வரித்துறை அலுவலகத்தில் அமைச்சர் விஜயபாஸ்கர் ஆஜராகி விளக்கம் அளித்தார்.

    இந்த நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் திரு வேங்கைவாசலில் உள்ள அமைச்சர் விஜயபாஸ்கருக்கு சொந்தமான குவாரியில் அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர்.

    மத்திய பொதுப் பணித்துறை அதிகாரிகள் மற்றும் சி.ஆர்.பி.எப். படை பாதுகாப்புடன் வருமான வரித்துறை அதிகாரிகள் 2-வது முறையாக சோதனை நடத்தினர். சென்னையில் இருந்து வந்த அதிகாரிகள் குழு, காலை 7 மணி முதல் இரவு 8 மணி வரை 13 மணி நேரம் குவாரியை அங்குலம் அங்குலமாக கணக்கெடுத்து சோதனை நடத்தினர். எந்த அளவுக்கு கல் வெட்டி எடுக்கப்பட்டுள்ளது என்று ஆய்வு நடத்திய குழுவினர், குவாரி வர்த்தகம் பற்றிய ஆவணங்களையும் சேகரித்தனர். சோதனை முழுவதும் வீடியோவில் பதிவு செய்யப்பட்டது. பின்னர் குவாரியில் உள்ள ஒரு அறைக்கு சீல் வைக்கப்பட்டு சி.ஆர்.பி.எப். படையின் பாதுகாப்பு போடப்பட்டது.

    இந்த சோதனையால் 70-க்கும் அதிகமான லாரிகள் வெளியே செல்ல அனுமதிக்கப்படாமல் குவாரி வளாகத்திலேயே நிறுத்தப்பட்டன. இதுபோல் புதுக்கோட்டை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் முத்துடையான்பட்டி அருகே உள்ள விஜயபாஸ்கரின் கிர‌ஷர் நிறுவனத்திலும் 2-வது முறையாக சோதனை நடந்தது.


    திருவேங்கைவாசலில் உள்ள அமைச்சர் விஜயபாஸ்கரின் குவாரியில் கற்கள் வெட்டி எடுக்கும் பகுதியை ஆய்வு செய்ய அதிகாரிகள் சென்ற காட்சி.

    கல் குவாரியில் சோதனை நடத்திய பின்னணி பற்றி வருமான வரித்துறை வட்டாரங்கள் கூறியதாவது:-

    ஆரம்பத்தில் திருவேங்கைவாசல் சிவன் கோவில் கண்மாய் அருகே 35 ஏக்கர் பரப்பளவில் உள்ள நிலத்தை மட்டுமே விஜயபாஸ்கர் வாங்கியுள்ளார். பிறகு குறுகிய காலத்திலேயே முத்துடையான்பட்டி, பெருஞ்சுனை, இரும்பாளி வரையிலான சுற்று வட்டார பகுதிகளில் பல நூறு ஏக்கர் நிலங்கள் வளைக்கப்பட்டு பெரிய அளவில் குவாரி தொழில் தொடங்கியுள்ளார்.

    இடங்களின் உரிமை ஒருவர் பெயரிலும், கல் குவாரி லைசென்ஸ் வேறு ஒருவர் பெயரிலும் உள்ளது. மேலும் திருவேங்கைவாசல் கல் குவாரி அருகில் உள்ள கண்மாயை படிப்படியாக ஆக்கிரமிக்கும் முறைகேடும் நடந்து வருகிறது.

    நவீன எந்திரங்கள் மூலம் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிக ஆழத்தில் பள்ளம் தோண்டி கற்கள் எடுக்கப்பட்டுள்ளன. ரெடி மிக்ஸ் கான்கிரீட், தார் பிளான்ட், கிர‌ஷர் ஜல்லி, பேவர் பிளாக் கற்கள் ஆகியவை தயாரிப்பில் விதிமீறல் இருக்கிறது. முதல் ரக ஜல்லி ஒரு லோடு ரூ.5 ஆயிரம் என்ற அளவில் தினமும் சராசரியாக 100 லோடு விற்பனை நடத்துவதாகவும், ஆனால் விற்பனை அளவை குறைத்து காட்டும் முறைகேடு நடப்பதாகவும் புகார்கள் உள்ளன.

    இவை தொடர்பான துல்லியமான ஆதாரங்களை திரட்டவே, மீண்டும் சோதனை நடத்தப்பட்டது. இங்கு சோதனை நடவடிக்கைகள் மேலும் சில முறை தொடரும் என அவர்கள் தெரிவித்தனர்.

    இதனிடையே சோதனையை முடித்துக் கொண்டு வெளியே வந்த அதிகாரிகள் கைப்பற்றிய ஆவணங்களை சூட்கேஸ் மற்றும் பைகளில் எடுத்துச் சென்றனர். அப்போது அவர்களிடம் நிருபர்கள் கேட்ட போது, சோதனை தொடர்பான விவரங்கள் இன்று வெளியிடப்படும் என்று கூறி விட்டு காரில் புறப்பட்டு சென்றனர்.
    நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து இன்று காலை 20 இளைஞர்கள் திடீரென நாடியம்மன் கோவில் திடலில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் எனப்படும் இயற்கை எரிவாயு எடுக்கும் திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி வழங்கியது.

    இதனை எதிர்த்து நெடுவாசலில் 22 நாட்களாக நடந்த போராட்டம் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் தமிழக அரசின் உத்திரவாதத்தை ஏற்று தற்காலிகமாக வாபஸ் பெறப்பட்டது.

    இதேபோல் நல்லாண்டார் கொல்லை, வடகாடு ஆகிய ஊர்களில் நடந்த போராட்டங்களும் கலெக்டரின் எழுத்துப்பூர்வமான உறுதிமொழியை ஏற்று விலக்கி கொள்ளப்பட்டது. ஆனால் எதிர்ப்புகளை மீறி மத்திய அரசு ஹைட்ரோ கார்பன் திட்டத்தை நிறைவேற்ற தனியார் நிறுவனங்களுடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.

    எனவே மீண்டும் போராட்டத்தை தொடங்குவது குறித்து நெடுவாசல் பேராட்டக்குழுவினர் இரண்டு கட்ட ஆலோசனை கூட்டங்களை நடத்தினர். அதில் வருகிற 15-ந்தேதி 70 கிராம மக்களை திரட்டி அடுத்த கட்ட போராட்டம் குறித்து அறிவிக்கப்படும் என முடிவு செய்யப்பட்டது.



    இந்தநிலையில் நெடுவாசலில் அந்த ஊரைச் சேர்ந்த இளைஞர்கள் 20 பேர் இன்று காலை திடீரென நாடியம்மன் கோவில் திடலில் அமர்ந்து போராட்டம் நடத்தினர். மத்திய அரசு பொய்யான வாக்குறுதிகளை கூறி, கிராம மக்களை ஏமாற்றி போராட்டத்தை கைவிட செய்துள்ளது.

    மக்கள் எதிர்க்கும் எந்த திட்டத்தையும் நிறைவேற்ற மாட்டோம் என்ற உறுதி மொழியை ஏற்று நாங்கள் போராட்டத்தை கைவிட்டோம். ஆனால் தற்போது திட்டத்தை செயல்படுத்துவதில் தீவிரமாக உள்ளது. எனவே ஹட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்தால் மட்டுமே நாங்கள் போராட்டத்தை கைவிடுவோம் என்று அவர்கள் ஆவேசமாக கூறினர்.

    அப்போது அங்கு வந்த நெடுவாசலை சேர்ந்த போராட்டக்குழுவினர் இளைஞர்களை சமாதானப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டனர். வருகிற 15-ந்தேதி போராட்டம் குறித்த இறுதியான முடிவு எடுக்கும் வரை அமைதி காக்குமாறும், போராட்டத்தை கைவிடுமாறும் கேட்டுக்கொண்டனர்.

    இதனை ஏற்க மறுத்த இளைஞர்களிடம் கிராமத்தினர் தொடர்ந்து பேச்சு வார்த்தை நடத்தி வருகிறார்கள்.

    புதுக்கோட்டை மாவட்டம் திருவேங்கைவாசலில் உள்ள அமைச்சர் விஜயபாஸ்கருக்கு சொந்தமான குவாரியில் மத்திய அரசு அதிகாரிகள் இன்று சோதனை நடத்தினர்.
    புதுக்கோட்டை:

    தமிழக சுகாதாரதுறை அமைச்சரும், டி.டி.வி.தினகரனின் தீவிர ஆதரவாளருமான விஜயபாஸ்கருக்கு சொந்தமான வீடுகள், கல்வி நிறுவனங்கள், குவாரிகள், நண்பர்கள், உறவினர்களின் வீடுகள், சகோதரர் கல்லூரி உள்பட 35 இடங்களில் கடந்த 7-ந்தேதி வருமான வரித்துறை சோதனை நடத்தப்பட்டது.

    சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள அமைச்சர் விஜயபாஸ்கர் வீடு மற்றும் எழும்பூர் விடுதியில் இருந்து ரூ.89 கோடி அளவில் ஆர்.கே.நகரில் பணப்பட்டுவாடா நடந்ததற்கான முக்கிய ஆவணங்களை வருமான வரித்துறையினர் கைப்பற்றினர். மேலும் ரூ.5 கோடி ரொக்கம் பறிமுதலானது.

    இது தொடர்பாக சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமான வரித்துறை அலுவலகத்தில் அமைச்சர் விஜயபாஸ்கர் நேற்று ஆஜராகி சுமார் 4½ மணி நேரம் விளக்கம் அளித்தார். அவர் அளித்த பதில்கள் திருப்தி தராததால் அவரிடம் மீண்டும் விசாரணை நடத்த வருமான வரித்துறை அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.

    இந்த நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் திருவேங்கைவாசலில் உள்ள அமைச்சர் விஜயபாஸ்கருக்கு சொந்தமான குவாரியில் அதிகாரிகள் இன்று சோதனை நடத்தினர்.



    அமைச்சர் விஜயபாஸ்கர் 15 ஆண்டுகளாக இந்த குவாரியை நடத்தி வருகிறார். அங்கு கற்கள் வெட்டி எடுக்கப்பட்டு ஜல்லி கற்களாக அனுப்பப்படுகிறது. 100-க்கும் மேற்பட்டோர் இந்த குவாரியில் வேலை பார்த்து வருகிறார்கள்.

    கடந்த 7-ந்தேதி வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் கண்டு பிடிக்கப்பட்ட ஆவணங்களை எடுத்து சென்றனர். அதில் விதியை மீறி குவாரியில் கற்கள் வெட்டி எடுக்கப்படுவது தெரிய வந்தது. அதுபற்றி மத்திய பொதுப்பணித்துறைக்கு அறிக்கை அனுப்பினர். அதன் அடிப்படையில் இன்றைய சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

    இதற்காக டெல்லியில் இருந்து மத்திய பொதுப்பணித்துறை அதிகாரிகள் 10 பேர் வந்துள்ளனர். அவர்கள் இன்று காலை 7 மணிக்கு அதிரடியாக குவாரிக்குள் நுழைந்தனர். அங்குள்ள அலுவலகத்தில் பணியில் இருந்த ஊழியர்களிடம் குவாரியின் செயல்பாடுகள், கற்கள் வெட்டி எடுப்பது குறித்து விசாரணை நடத்தினர்.



    குவாரியில் அரசு அனுமதியை மீறி கற்கள் வெட்டி எடுக்கப்படுகிறதா? கனிமவளத்துறையின் விதிகள் முறையாக கடைபிடிக் கப்பட்டு கற்கள் வெட்டப்படுகிறதா? முறைப்படி குவாரி இயங்குகிறதா? என சோதனை நடத்தி வருகிறார்கள்.

    மதியம் 1.30 மணியையும் கடந்து சோதனை நீடித்து வருகிறது.

    கற்கள் வெட்டி எடுக்கப்படும் முறைகள், கற்களின் அளவு, இதுவரை எவ்வளவு ஆழம் வரை கற்கள் வெட்டப்பட்டுள்ளது என்பது தொடர்பாக சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

    நுழைவு வாயிலில் இருந்து சுமார் அரை கி.மீ. தூரத்தில் குவாரி உள்ளது.

    மத்திய அரசு அதிகாரிகளின் இந்த அதிரடி சோதனையையொட்டி குவாரியின் நுழைவு வாயிலில் 10-க்கும் மேற்பட்ட சி.ஆர்.பி.எப். போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அந்த பகுதியில் அ.தி.மு.க.வினர் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் திரண்டிருப்பதால் பதட்டமான சூழல் நிலவி வருகிறது.

    புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை அருகே வேன் மீது டிராக்டர் மோதிய விபத்தில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை அருகே உள்ள புதுநகர் பகுதியில் ஒரு வேன் பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்றது. அப்போது வேன் மீது டிராக்டர் ஒன்று பலமாக மோதியது. இதனால் வேன் கடுமையாக சேதமடைந்தது. அதில் பயணம் செய்த 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 6 பேர் காயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

    இதேபோல் விழுப்புரம் மாவட்டம் ரிஷிவந்தியம் அருகே வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் பலியாகினார். 20 பேர் காயமடைந்தனர்.

    குடியாத்தம் அருகே உள்ள லட்சுமணாபுரம் பகுதியில் தீப்பெட்டி ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒரு தொழிலாளி பலியாகினார். 14 பேர் தீக்காயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
    ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து மீண்டும் போராட்டம் நடத்துவது குறித்து நெடுவாசலில் இன்று போராட்டக்காரர்கள், முக்கிய பிரமுகர்கள், கிராம மக்கள் ஆலோசனை நடத்தினர்.
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகேயுள்ள நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்த மத்திய அமைச்சரவை கடந்த பிப்ரவரி மாதம் 15ம் தேதி ஒப்புதல் அளித்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதே போல் வடகாடு, கோட்டைக்காடு மற்றும் நல்லாண்டார் கொல்லையிலும் போராட்டம் நடைபெற்றது.



    இதனை தொடர்ந்து மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், கலெக்டர் கணேஷ் ஆகியோர் போராட்ட குழுவுடன் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர்.

    இதனை தொடர்ந்து கடந்த மாதம் 9ம் தேதி நெடுவாசலில் போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டது. இதனை தொடர்ந்து வடகாடு மற்றும் நல்லாண்டார் கொல்லையிலும் போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டதை தொடர்ந்து அப்பகுதியில் அமைதி நிலவியது.

    இந்நிலையில் கடந்த மாதம் மத்திய பெட்ரோலிய துறை அமைச்சர் தர்மேந்திரபிரதான் நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கு தனியார் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்தார்.

    இதனால் நெடுவாசல் பகுதியில் மீண்டும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து புதுக்கோட்டை மாவட்டத்தில் நடந்த பசுமை வீடுகள் வழங்க பயனாளிகள் தேர்வு செய்ய நடத்தப்பட்ட சிறப்பு கிராம சபை கூட்டத்தில் நெடுவாசல், வடகாடு, கொத்தமங்கலம், அனவயல், கோட்டைக்காடு உட்பட பல்வேறு ஊராட்சிகளில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    இந்நிலையில் நெடுவாசல் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராம பொதுமக்கள் கடந்த 6ம் தேதி வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் பிறந்த தினத்தன்று கரூர் மாவட்டம், வானகத்தில் உள்ள அவரது நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர்.



    இந்நிலையில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக மீண்டும் போராட்டம் நடத்துவது குறித்து இன்று நெடுவாசலில் போராட்டக் குழுவினர் மற்றும் சுற்று வட்டார பொதுமக்கள் ஆலோசனை நடத்தினர். இதில் 75 கிராமங்களை சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றனர். அவர்கள் போராட்டம் நடத்துவதா? என்பது குறித்து ஆலோசனை நடத்தினர். கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் இன்று மாலை அறிவிக்கப்பட உள்ளது.


    பழங்குடியின மக்களுக்கு 2 மாதத்திற்குள் சாதிச்சான்றிதழ் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என புதுக்கோட்டை கலெக்டர் கூறினார்.

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டத்தில் வசிக்கும் பழங்குடி குரும்ப இன மக்களுக்கும், இந்து ஆதியன், காடர், நரிக்குறவர், கூடைபின்னும் குறவர், பன்னியாண்டி, காட்டுநாயக்கன் உள்ளிட்ட இன மக்களுக்கும் கடந்த பல ஆண்டுகளாக எஸ்டி சான்றிதழும் புதிரை வண்ணார் இன மக்களுக்கு எஸ்சி சான்றிதழும் அருந்ததியர் இன மக்களுக்கு எஸ்.சி(ஏ) சான்றிதழும் கிடைக்காமல் அவதிப்பட்டு வருகின்றனர்.

    அதிகாரிகளிடம் பல ஆண்டுகளாக இவர்கள் முறையிட்டும் இதுநாள் வரை சான்றிதழ் கிடைக்க வில்லை. இதனால், தங்களது குழந்தைகளைப் படிக்க வைப்பதற்கும் அரசு நலத்திட்டங்களைப் பெறுவதற்கும் மிகுந்த சிரமப்பட்டு வருகின்றனர்.

    இந்நிலையில். மேற்படி மக்களுக்கு சாதிச்சான்றிதழ் வழங்க வலியுறுத்தி தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் சார்பில் புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.

    ஆர்ப்பாட்டத்திற்கு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்டத் தலைவர் அன்புமணவாளன் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு சட்டப் பேரவை முன்னாள் உறுப்பினரும் தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத் தலைவருமான டில்லி பாபு கண்டன உரையாற்றினார். தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநிலத் துணைத் தலைவர் எம்.சின்னத்துரை, மாநிலக்குழு உறுப்பினர் சி.ஜீவானந்தம்உள்பட பலர் பேசினர்.

    ஆர்ப்பாட்டத்தைத் தொடர்ந்து கோரிக்கை மனுக்களை அளிப்பதற்காக மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு தலைவர்கள் சென்றனர். அங்கு ஆட்சியர் இல்லாததால் அவருக்குக் கீழ் உள்ள அதிகாரிகளிடம் மனுவைக் கொடுத்துவிட்டுச் செல்லுமாறு காவல் துறையினரும், அரசு அலுவலர்களும் தலைவர்களிடம் வலியுறுத்தினர். ஆட்சியர் வந்து தங்களுக்கு தக்க பதில் அளிக்காமல் இடத்தை விட்டு நகரமாட்டோம் எனக்கூறி பழங்குடியின மக்களுடன் ஆட்சியர் அலுவலத்திற்குள்ளேயே தலைவர்கள் காத்திருக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதனைத் தொடர்ந்து வெளியூர் சென்று கொண்டிருந்த கலெக்டர் தனது பயணத்தை ரத்து செய்துவிட்டு கலெக்டர் அலுவலகம் திரும்பியதோடு தலைவர்களை அழைத்து பேச்சுவாத்தையும் நடத்தினார்.

    பேச்சுவார்த்தையில், மாவட்டத்தில் 147 கிராமங்களில் வசிக்கும் குரும்பர் பழங்குடியின மக்கள் வசிக்கும் கிராமங்களுக்குச் சென்று சிறப்பு முகாம்களை நடத்துவது என்றும் மானுடவியல் துறையினரின் ஆய்வுக்கு உட்படுத்தி இரண்டு மாதத்திற்குள் சாதிச்சான்றிதழ் கிடைக்க நடவடிக்கை எடுப்பது எனவும் உறுதியளிக்கப்பட்டது.

    ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து, நெடுவாசல் போராட்டம் குறித்து 8-ந்தேதி ஆலோசனை கூட்டம் நடத்தப்படுகிறது. அனைத்து கிராம மக்களையும் அழைத்து மிகப்பெரிய போராட்டம் நடத்த வேண்டும் என்று தீர்மானித்துள்ளனர்.
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல், நல்லாண்டார் கொல்லை, வடகாடு ஆகிய கிராமங்களில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து பல்வேறு கட்ட தொடர் போராட்டம் நடந்தது.

    இதில் விவசாயிகள், பெண்கள், இளைஞர்கள், மாணவர்கள், திரைத்துறையினர், அரசியல் கட்சியினர் என அனைத்து தரப்பினரும் கலந்து கொண்டு ஆதரவு தெரிவித்தனர். திட்டத்திற்கு எதிராக பாராளுமன்றத்தில் தி.மு.க. உள்ளிட்ட கட்சிகள் குரல் எழுப்பின.

    மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன், அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் தமிழக அரசின் உறுதிமொழியை ஏற்று 3 கிராமங்களிலும் பொதுமக்கள் தற்காலிகமாக போராட்டத்தை வாபஸ் பெற்றனர். மக்களுக்கு எதிரான எந்த திட்டத்தையும் மத்திய அரசு செயல்படுத்தாது என்று உறுதிமொழியும் அவர்களுக்கு அளிக்கப்பட்டது.

    தமிழக அரசு சார்பில் புதுக்கோட்டை மாவட்ட கலெக்டரும் எழுத்துப்பூர்வமாக போராட்டக்குழுவிடம் ஒரு கடிதம் அளித்தார். அதில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்காது என்று தெரிவித்திருந்தார்.

    இந்தநிலையில் மக்களின் எதிர்ப்பை மீறி கடந்த 27-ம் தேதி நாடு முழுவதும் 31 இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்க மத்திய பெட்ரோலிய துறை இணை அமைச்சர் தர்மேந்திர பிரதான் முன்பு 22 நிறுவனங்களுடன் ஒப்பந்தம் கையெழுத்தானது.



    இதனால் அதிர்ச்சி அடைந்த நெடுவாசல் கிராம பொதுமக்கள் மத்திய அரசு இந்த திட்டத்தை மீண்டும் தொடர்ந்தால் மிகப்பெரிய போராட்டம் தொடரும் என்று தெரிவித்தனர். மேலும் இன்று நெடுவாசலை சுற்றி உள்ள 100 கிராம மக்களை ஒன்று திரட்டி ஆலோசனை கூட்டம் மூலம் போராட்டத்திற்கான முடிவு எடுக்கப்படும் என்று தெரிவித்திருந்தனர்.

    ஆனால் இன்று நடத்தப்பட இருந்த ஆலோசனை கூட்டம் 8-ந்தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம மக்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் போராட்ட குழுவினர் நேரில் சென்று துண்டு பிரசுரங்கள் வழங்கியும், சுவரொட்டிகள் ஒட்டியும் கிராம மக்களை நேரில் அழைத்து மிகப்பெரிய போராட்டம் நடத்த வேண்டும் என்று தீர்மானித்துள்ளனர்.

    இதனால் நெடுவாசல் மீண்டும் போராட்ட களமாக மாற உள்ளது.
    கந்தர்வக்கோட்டையில் இன்று சாலையை கடந்த பெண் மீது கார் மோதியது.இதில் அவர் தூக்கி வீசப்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார்.
    கந்தர்வக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை வெள்ளிப்பட்டி பகுதியை சேர்ந்த  மாணிக்கம் மனைவி வசந்தா (வயது 45). இவர் இன்று காலை  வீட்டில் உள்ள குப்பைகளை குப்பை தொட்டியில் போடுவதற்காக  ,  அப்பகுதியில் உள்ள சாலையை கடந்து சென்றார்.

    அப்போது அந்த வழியாக வந்த கார்,  வசந்தா மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர் பலத்த காயமடைந்தார். அவரை அப்பகுதி பொதுமக்கள்மீட்டு கந்தர்வக்கோட்டை  அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி  வசந்தா இறந்தார்.

    இது குறித்து  கந்தர்வக்கோட்டை போலீசார்  விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கோட்பாடுகள், விதிகளை மீறும் அரசியல் கட்சிகள் மீது தேர்தல் ஆணையம் கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும் என ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டையில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுகிறோம் என்ற பெயரில் உத்தரப்பிரதேச அரசு விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்துள்ளது. ஆனால் கடும் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள தமிழக விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்வதற்கு மாநில அரசோ மத்திய அரசோ நடவடிக்கை எடுக்காதது வேதனைக்குறியதாக உள்ளது.

    நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்துவதற்கு மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளதால் மத்திய, மாநில அரசுகள் திட்டத்தை கைவிடவேண்டும். தேவைப்படில் த.மா.கா. விவசாயிகளோடு சேர்ந்து போராட்டம் நடத்தும்.


    தேர்தல் கோட்பாடுகள் விதிமுறைகளை மீறும் அரசியல் கட்சிகள் மீது தேர்தல் ஆணையம் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த தேர்தலிலாவது தேர்தல் ஆணையம் விழித்துக் கொள்ள வேண்டும். நடு நிலையோடு ஆணையம் செயல்பட வேண்டும் என்பது தான் மக்களின் மனநிலை.

    உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி தமிழகத்தில் தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளது. அதை குடியிருப்பு பகுதிகளுக்கு இடமாற்றம் செய்வதற்கு டாஸ்மாக் நிர்வாகம் நடவ டிக்கை எடுத்து வருகிறது. மூடப்பட்ட கடைகள் மூடப்பட்டவைகளாகவே இருக்க வேண்டும். மீண்டும் கடைகளை திறந்தால் மக்களோடு இணைந்து நாங்களும் போராடுவோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    ×